தலைப்பு

திங்கள், 15 ஏப்ரல், 2019

நம்முடைய ஒவ்வொரு பிரார்த்தனையும் பகவான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்!


”என்னை அடைய ஒரே வழி...தூய உணர்வே!!!”- பகவான் பாபா

பக்தர்களின் ஸகலவிதமான விருப்பங்களையும் தருபவர் பாபா! பாபாவின் பக்தர் ஒருவர் தினமும் அஷ்டோத்திரமும், வியாழக்கிழமைகளில் ஆயிரத்தெட்டு நாமங்கள் ஓதி பாபாவை
வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். 

நாமங்கள் கூறி முடித்த பின் பாபாவின் படத்திற்குமுன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவார். அப்படி வணங்கும் சமயம் பாபா தன் முன் நின்று கொண்டிருப்பது போலவும், அவரது மலர்ப்பாதங்களை தன் இரு கைகளால் பற்றிக் கொள்வது போல கற்பனை செய்து கொள்ளுவார். பாபாவின் பாதங்கள் இருப்பதாக எண்ணும் இடத்தில் தனது கைகளை பதித்துக் கொண்டு வணங்குவார். அந்த நினைவிலே உள்ளம் மகிழ்வார். கண்ணீர் பெருக்குவார். ஒரு முறை புட்டபர்த்திக்கு வந்தபோது “நான் உனக்கு முன்னால் நிற்கிறேன் அல்லவா? இதோ, இப்போது என் பாதங்களைப்பார். தரையில் நான் செளகரியமாக பாதங்களை வைத்துக் கொள்வதற்கு எவ்வளவு இடைவெளி தேவைப்படுகிறது என்பதை நன்றாக கவனித்துக் கொள். நீ உன் கைகளை நெருக்கமாக வைத்துக் கொண்டு வணங்குகிறாய். நீ அப்படி வணங்கும் ஒவ்வொரு முறையும் நான் பாதங்களை நெருக்கிவைத்துக் கொண்டு நிற்க வேண்டி இருக்கிறது. நடுவில் சற்று அதிகமாக இடம்விட்டு கைகளை பதித்து வணங்கு” என்றார் பாபா!

நமது ப்ரார்த்தனையின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் கேட்டு கொண்டு தான் இருக்கிறார். தகுதி உடையதல்ல என்று எதையும் இறைவன் அசட்டை செய்வதில்லை. அது எதுவாயினும் அதை நிறைவேற்றுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக