தலைப்பு

சனி, 20 ஏப்ரல், 2019

சாப்பாடு ரெடியா? / தாயும் நானே



மீனாட்சி அது தான் என் பெயர். என் கணவர் ஸ்ரீ.ஸங்கம் எங்களை ''ஸங்கம்ஸ்'' என்று நண்பர்கள் குறிப்பிடுவர். 1960ல் பம்பாயில், வடாலா என்ற பகுதியில் இருந்தோம். ஸங்கம் ஒரு புகழ் பெற்ற கம்பெனியின் பாக்டரியில் வேலை பார்த்து வந்தார்.

சாப்பாடு ரெடியா?

ஒரு நாள் காலையில், என் கணவர் வேலைக்குச் சென்று விட்டார். குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றுவிட்டனர். வேறுயாரும் வீட்டில் இல்லை. அப்போது ஸ்வாமி படத்திலிருந்து ஒரு கடிதம் விழுந்தது, பகவானே நேரடியாக படத்திலிருந்து டெலிவரி செய்தார்.

அந்த கடிதத்தில், ''நான் இன்றைக்கு லஞ்சுக்கு வரேன்'' என்று எழுதியிருந்தது. எனக்கு உடம்பெல்லாம் பதறிவிட்டது. கைகால் ஓடவில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த கட்டடத்தில் இருக்கும் மற்ற குடும்பத்தார்களிடம் ஓடிச் சென்று கடிதத்தைத் காண்பித்தேன். அவர்கள் எல்லோரும் சந்தோஷத்துடன்.''கவலை படாதே. நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஜமாய்த்து விடுவோம்'' என்று கூறினர்.

அனைவரும் ஒன்று சேர்ந்து பகவானுக்கு எல்லாவற்றையும் சமைத்து வைத்து பஜனை செய்தோம். ஆரத்திக்குப் பின்பு ஸ்வாமி அவருக்காக நாங்கள் வைத்திருந்த நைவேத்யத்தை ரசித்து உண்டதைக் கண்டு கண்கள் குளமாக அமர்ந்திருந்தேன். வேறு ஒருவர் கண்களிலும் பாபா தென்படவில்லை.

என் ஒன்றரை வயதுக் குழந்தை ஸவிதா, எழுந்து போய் ஸ்வாமி கொடுத்த வடை விள்ளலை வாங்கிக் கொண்டு வந்தாள். அப்போது தான் அவள் கண்களிலும் ஸ்வாமி தெரிந்திருக்கிறார் என்று எங்களுக்குப் புரிந்தது.

அன்று சாயங்காலம், வீட்டிற்கு வந்த என் கணவரும் என் இரண்டு மகன்களும் தங்களுக்கு அந்த  பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ஏங்கினர். நான்கு நாட்கள் கழித்து, இன்னொரு கடிதம் போட்டார் பாபா. அவ்வளவு தான் ! அன்றைக்கு எல்லோரும் லீவ் போட்டுவிட்டனர். சமையல் எல்லாம் முடிந்து ஸ்வாமியின் முன் பிரசாதத்தை வைத்து பஜனை செய்ய ஆரம்பித்தோம்.

ஒரு சந்நியாசி தானாகவே வந்து பஜனையில் அமர்ந்தார். ஆடி, ஆடி கை தட்டி ஆனந்தமாய் பஜனையை ரசித்தார். அனைவரும் அவ்வப்போது ''இவர்தான் ஸ்வாமியோ'' என்று ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக் கொண்டிருந்தோம்.

பஜனை முடிந்ததும் இலை போட்டு எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறினேன். ஸ்வாமியை போலவே சந்நியாசியும் அறிவுரைகள் அளித்தார். விபூதியும் கொடுத்தார். என்னிடம், ''எல்லோருக்கும் கடவுள் இருக்கிறார். ஆனால், மகளே! உனக்கு மட்டும் உன் கணவன் தான் கடவுள்'' என்றார்.

பிறகு, எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார். எல்லாரும் விரைந்து இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோம். கீழே சென்றவர் வெகுநேரம் வெளியே வரவே இல்லை. உடனே அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து அவரைத் தேடினோம். அவரை எங்கும் காணவில்லை. இனம் புரியாத பூரிப்பில் வீட்டிற்கு வந்தோம், ஆரத்தித் தட்டில் விபூதியும், குங்குமமும் இருந்ததை கண்டு மகிழ்ந்தோம்.

தாயும் நானே:

ஸவிதாவிற்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும் போது ஸ்கூலிற்கு லஞ்ச் எடுத்துச் செல்வது என் வழக்கம்.
ஒரு நாள் வேலை எல்லாம் சீக்கிரம் முடிந்து விட்டது. நான் ஸ்கூலிற்கு போகும் முன் கொஞ்சம் இளைப்பாறிவிட்டுப் போகலாம் என்று சற்று படுத்தேன். ஆனால், நான் நன்றாக தூங்கி விட்டேன். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்து பார்த்தால் எப்போதோ லஞ்ச் டைம் முடிந்து விட்டு இருந்தது. குழந்தை பசியில் துடித்துப் போயிருப்பாளே என்று ஆற்றாமையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ளச் சென்றேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தை வந்துவிட்டால். கீழ் வீட்டு மாமி, ''ஸவிதா, மத்யானம் ஸ்கூலில் சாப்பிட்டாயாம்மா? என்று கேட்க என் மகள் சாப்பிட்டேன்'' என்றாள். ''யார் கொடுத்தா?'' என்று கேட்க ''அம்மா தான் என்று பதில் வந்தது.

''என்ன கொடுத்தா''? ''கீரை மிளகு கூட்டு, ரசம் எல்லாம் கொடுத்தா என்றாள்.

எனக்கு ஓரே ஆச்சரியம். அன்று எங்கள் வீட்டுச்சமையல் அதுவே.குழந்தை தொடர்ந்தாள். ''தயிர்சாதம் தான் கொஞ்சம் மீதம் வைத்து விட்டேன். அப்புறம் அம்மா எனக்கு காட்பரீஸ் சாக்லேட்  வாங்கித் தந்தாள்'' என்று காட்டினாள்.

ஸ்கூல் பேக்கை குடைந்தால் இரண்டு விபூதி பாக்கெட்டுகள் இருந்தன. தன் விளையாட்டிற்கு ஒரு தடயம் விட்டு விட்டுப் போயிருந்தார் ஸ்வாமி. ''உன் குழந்தை என் குழந்தை இல்லையா? என் குழந்தை பட்டினி கிடப்பதை நான் பொறுப்பேனா'' என்று தாயாய் என் உருவில் வந்த ஸ்வாமியின் கருணைக்கு வரம்பேது?

புத்தகம் - இறைவனுடன் இனிய அனுபவங்கள் (117)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக