ஏனென்றால் சுவாமி சிறுவயதிலேயே தன்னுடைய தாயாரான ஈஸ்வரம்மாவுக்கு புட்டபர்த்தியை விட்டு கடல்கடந்து எங்கும் செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தார். அந்த சத்தியத்தை காப்பாற்றவே பகவான் அவருடைய வாழ்நாளில் எந்த ஒரு வெளிநாட்டிற்கும் தன்னுடைய பூத உடலில் சென்றதில்லை. 1968 இல் மட்டும், ஒரே ஒருமுறை கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு தன் தாயாரின் அனுமதியுடன், ஒரு பதினைந்து நாள் சென்றுவந்தார். இதுவே அவரின் முதல் மற்றும் கடைசி வெளிநாட்டு பயணமாகும்.
பள்ளிப்படிப்பே முடிக்காத சுவாமிக்கு எல்லா மொழிகளும் நன்கு தெரியும். உலகில் ஒரே மொழி தான் இருக்கிறது அது அன்புமொழி என்கிற கூற்றுப்படி. ஜப்பானிலிருந்து வரும் பக்தர்களிடம் அவர் ஜப்பானிய மொழியிலும், ரஷ்யாவில் இருந்து வந்திருக்கும் பக்தர்களிடம் ரஷ்ய மொழியிலும் மிக சரளமாக உரையாற்றுவார். எந்த ஒரு சமயத்திலும் பெரும்பாலும் அவர் தனக்கு எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ள மாட்டார். அதேபோல அவருக்கு பகவத்கீதையும், குர்ஆனும் மற்றும் பைபிளும் நன்கு தெரியும்.
அரிதான வேத வேதாந்த உபநிஷத் தத்துவார்த்தங்களின் உட்பொருளை அனாயாசமாகவும் மிக எளிதாகவும் எடுத்துரைப்பார்..ஆச்சர்யப்பட்டுப் போய் எப்படி இதெல்லாம் சாத்தியம் எனக் கேட்டால்.. அந்த வேத வேதாந்த உபநிஷதங்கள் எல்லாம் தாமே என சத்தியப் பிரகடனம் புரிகிறார்.
அந்தப் புத்தகங்களை நன்கு கரைத்து குடித்த சீமான்கள் சிறு தவறை செய்தாலும் கூட பகவான் எதிரில் அவர்கள் செய்த தவறை சுட்டிக் காண்பிப்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற சம்பவங்கள் அவருடைய வாழ்வில் பல நடந்திருக்கின்றன.
இறந்தவர்களை உயிர்ப்பித்திருக்கிறார்... கங்கையை புட்டபர்த்திக்கே வரவழைத்திருக்கிறார்...
விஸ்வரூப தரிசனங்கள் காட்டியிருக்கிறார்...
தாம் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தவர்களின் புகைப்படங்களை வரவழைத்துக் கொடுத்து தாம் பிறப்பு இறப்பற்றவர் என்பதை உணர்த்தி இருக்கிறார்...
புட்டபர்த்தியில் ஓடும் சித்ராவதி நதிக்கரை மணல் வெளியும்... உச்சியில் ஒற்றைக் கால் தவத்திலிருக்கும் கல்பக விருட்சமாய் இன்றும் விரிந்திருக்கும் புளிய மரமும் இறைவன் சத்ய சாயியின் மகிமைகளுக்கு சத்ய சாட்சியாகி இருக்கின்றன...
மொராஜி தேசாய் தொடங்கி இன்றிருக்கும் நரேந்திர மோடி வரை பெரும்பாலும் அனைத்து பிரதம மந்திரிகளும், ஜனாதிபதிகளும் சுவாமியின் பக்தர்கள் தான். யாரும் சுவாமியை ஒரு ஆன்மீக குருவாக பார்க்கவில்லை. அவரை ஒரு பிரபஞ்ச வியாபகமான பரிபூரண அவதாரமாகத் தான் பார்க்கிறார்கள். அப்படி பக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எந்த ஒரு அரசியல் பிரமுகர்களையும் சுவாமி தன்னுடைய சுயநலத்திற்காக ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை. பயன்படுத்த நினைத்தது கூட இல்லை... நாட்டின் சில முக்கியமான முடிவுகளை கேட்க அவர்கள் சுவாமியிடம் வரும்போது கூட, சுவாமியோ இது உங்களுடைய வேலை. இதில் நான் தலையிட மாட்டேன் என்று தீர்க்கமாய் சொல்லியும் விடுவார்...
சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் நேர்காணல் வழங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பக்தர்கள் கொடுக்கும் கடிதங்களை வாசிப்பார் அல்லது பெரும்பாலும் அவர் ஆனந்த சங்கல்பத்தில் ஆழ்ந்து இருப்பார். அவர் தூங்கும் நேரமும் மிகக் குறைவுதான். தூங்குவது போல் பாவனை செய்வார்... அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்து கொள்வார். பாபா நன்கு நடந்து கொண்டிருந்த சமயம் வரை, தன்னுடைய வேலைகளை அவரே தான் கவனித்துக்கொண்டார். உதாரணத்திற்கு குடிக்க தண்ணீர் வேண்டுமென்றாலும் அவரேதான் எடுத்து குடிப்பார். அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைப்பார்.
பரம பக்தர்களை தூர தரிசனத்திற்குப் பழக்கிடவே சக்கரம் பொருத்திய நாற்காலி மற்றும் வாகன ஊர்தியில் தரிசன பவனி தந்ததும்...
ஒருமுறை சுவாமி தனது உள்ளறையில் சக்கர நாற்காலியை விட்டு எழுந்து வேகமாக நடந்து தனக்கு ஒன்றும் இல்லை என்று சில ஆத்மார்த்த மாணவர்களுக்கு காட்டி இருக்கிறார்...
பற்பல சாயி லீலைகளில் அப்படி அமர்ந்து தரிசனம் தந்ததும் ஒரு லீலையே.
சில பக்தர்களுக்கு சுவாமி மோதிரம், வாட்ச் மற்றும் செயின் போன்றவற்றை காற்றில் வரவழைத்து கொடுப்பார். அப்படி அவர் வரவழைத்து கொடுக்கும் பொருட்கள் பக்தர்களுக்கு சரியாக பொருந்தும். உதாரணத்திற்கு நீங்கள் மோதிரத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், ஒவ்வொரு மனிதருக்கும் விரலின் அளவு மாறுபடும். ஆனால் சுவாமி வரவழைத்துக் கொடுக்கும் மோதிரம் அவர்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும். அதேபோல் சுவாமி பல திருமணங்களை முன்நின்று நடத்தி வைத்திருக்கிறார். அப்படி அவர் நடத்தி வைக்கும் 95% திருமணங்களில் பெரும்பாலான திருமணங்களுக்கு அவர் திருமாங்கல்யம் அவரே சிருஷ்டித்துக் கொடுப்பார். அதில் கவனிக்க வேண்டியவை என்னவென்றால் அவர்கள் சமூகத்தில் எவ்வாறு தாலி அணிவார்களோ அதே சாஸ்திர சம்பிரதாயப்படி சிருஷ்டித்துக் கொடுப்பார்.
சுவாமி தன் பக்தர்களுக்கு விரலசைவில் சிருஷ்டி செய்து கொடுக்கும் விபூதியானது சாம்பலே அல்ல. அது அருமருந்து... ஔஷதம்... சஞ்சீவி மகிமை நிறைந்தது... இன்னல்படுபவர்களுக்கும்... நோய்வாய்ப் பட்டவர்களுக்குமே அந்த வைத்திய விபூதியை வரமாய் அளிப்பார்...அந்த விபூதியால் இதுவரை ஆயிரக்கணக்கான பக்தர்களின் குணப்படுத்த முடியாத கொடிய வியாதிகள் குணமாகி உள்ளது. சுவாமி தன்னுடைய ஷீரடி அவதாரத்தில் கூட ஒரு குறிப்பிட்ட சில அற்புதங்களைத் தான் நிகழ்த்தினார் ஆனால் இந்த சத்ய சாயி அவதாரத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணில் அடங்காது. ஒவ்வொரு அற்புதமும் நமக்கு மெய்சிலிர்க்கும். அனைத்தும் அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அவரின் அற்புதங்கள் அனைத்தும் கட்டுக்கதைகள் அல்ல, அனைத்திற்கும் ஆதாரம் இருக்கிறது. அதை அனுபவித்தவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் தங்களின் மற்றும் பிற பக்தர்களின் மெய் சிலிர்க்கும் அனுபவங்களையும் புத்தகமாய் எழுதி இருக்கிறார்கள். சிலர் அந்த அரிய அனுபவங்களை நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்கள்.
பாபாவின் புகழ் பரவத் தொடங்கிய பல ஆண்டுகளுக்கு முன்னரே. சுவாமியை ஆராய்ச்சி செய்து அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டு உலக நாடுகளிலிருந்து பல புகழ்வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் புட்டபர்த்தி வந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்களை சுவாமி ஒருபோதும் உள்ளே வரக்கூடாது என்று சொன்னது கிடையாது. அதற்கு மாறாக அவர்கள் ஆராய்ச்சிக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார். ஏன் பாபாவின் ரத்த மாதிரியை எடுத்தும் கூட சோதனை செய்ய அனுமதித்தார். முடிவில் அனைவருக்கும் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா ஒரு புரியாத புதிராகவே இருந்தார். இப்படி சுவாமியை ஆராய்ச்சி செய்ய வந்த பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் கடைசியில் சுவாமியின் தீவிர பக்தர்களாகவே மாறினார்கள். சில வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் அவர்கள் கண்ட அனுபவங்களையும், அதிசயங்களையும் புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்கள்.பல விஞ்ஞானிகள் இறைவன் சத்ய சாயியின் திருப்பாதங்களில் சரணடைந்தார்கள்...
பாபாவின் புகழைக் கெடுக்க ஒரு சில வெளிநாட்டுக்காரர்கள் திட்டம் தீட்டி கொண்டு சுவாமியை பற்றி சில பொய்யான தகவலை பரப்பினார்கள். இதனை நம்பி பிரபல பி.பி.சி நிறுவனமும் சுவாமியைப் பற்றி ஒரு தவறான ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. அதற்கு பதில் சொல்லும் விதமாக அப்போது இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த வாஜ்பாய் அவர்கள் "இந்திய அரசின்' சார்பாக பி.பி.சி நிறுவனத்திற்கு ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் "பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு எதிராக பொறுப்பற்ற மற்றும் ஒருங்கிணைந்த குற்றச்சாட்டுகளால் நாங்கள் மிகுந்த வேதனை அடைகிறோம். இதுபோன்ற ஒரு மோசடியை வெளியிடுவதற்கு முன்னர் நீங்கள் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து இருக்க வேண்டும். இப்படி எதனையும் ஆராயாமல் பதிவு செய்ததை எங்களால் ஏற்கமுடியாது. உலகளவில் அன்பின் உருவகமாக இருக்கும் ஒரு உயர்ந்த நபரை இவ்வாறு நீங்கள் குற்றம் சாட்டியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய அரசின் சார்பாக அப்போது பிரதம மந்திரியாக இருந்த வாஜ்பாய் அவர்கள் BBCக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதத்தின் நகல்!
சுவாமி கிருஷ்ணராய்.. ராமராய் அவதரித்த போதும் எதிர்கொண்ட சோதனைகள் போலவே இந்த கலியுகத்திலும் எதிர்கொண்டார்...
ஒரு புயல் காற்றால் சூரியனை
ஊதி அணைத்துவிட முடியுமா?
ஸ்ரீ சத்யசாயி பஜனை கூடங்களில், உண்டியலே கிடையாது. பெரிய சாஸ்திர சம்பிரதாயமான, ஜாதிய ரீதியான சடங்குகளும் கிடையாது. எல்லோரையும் ஜாதி மத இன பேதமின்றி, சுவாமி சரி சமமாக பாவித்தார். அதனால்தான் புட்டபர்த்தியில், கிறிஸ்துமஸ் பண்டிகை, முதல் சீனப் புத்தாண்டு, ஜப்பானிய புத்தாண்டு இன்ன பிற மதங்களைச் சார்ந்த பண்டிகைகள் எல்லோராலும் சேர்ந்து கொண்டாடப்படுகிறது. ஆடம்பரமற்ற எளிய ஆத்மார்த்தமான வழிபாடு; அன்பான வழிமுறைகள்; தன்னலமற்ற சேவை; இதுதான் சுவாமியின் அடிப்படை கோட்பாடு.
சுவாமி 2006ஆம் வருடம் வரை குறைந்த காற்றோட்ட வசதி கொண்ட ஒரு சிறு அறையில்தான் தங்கியிருந்தார். அந்த அறையில் ஒரே ஒரு மின்விசிறி மட்டும் தான் இருக்கும். அதுவும் சுவாமி தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்துவார்.
சுவாமி நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பங்களாவில் தங்கி இருந்திருக்கலாம். சுவாமியிடம் நெருக்கமாக இருந்த பல பக்தர்கள் சுவாமிக்கு ஒரு பெரிய பங்களா ஒன்று கட்ட அனுமதி கேட்டபோது, சுவாமி அதனை மறுத்துவிட்டார். சுவாமி கூறினார் "எனக்கு நீங்கள் சொல்வது போன்ற ஆடம்பரம் தேவையில்லை, எனக்கு இதுவே போதுமானது" என்றார்.
சுவாமி சரி என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அவரது பக்தர்கள் 'முழுவதும் தங்கத்தாலான' மிகப்பெரிய ஒரு பங்களாவைக் கட்டிக் கொடுத்து இருப்பார்கள். ஆனால் சுவாமி அதனை விரும்பவில்லை. பின்னர் 2006ஆம் ஆண்டு தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதி அன்றுதான் அவருடைய புதிய இல்லமான யஜூர் மந்திருக்கு மாறினார்.
அதேபோல் சுவாமி பயணிக்கும் கார்களும் அப்படித்தான். பக்தர்களின் விருப்பத்தின் பேரில் தான் அவர் பெற்றிருக்கிறார். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பக்தர்கள் கொடுக்கும் கார்களை கண்டிப்புடன் வாங்க மறுத்துவிட்டார். வேண்டுமென்றால் என்னிடம் பல கார்கள் இருக்கிறது. அந்த கார்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்பார். இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. புட்டபர்த்திக்கு வந்து சுவாமியை தரிசிக்க வரும் அனைவரும் சரிசமமாகவே நடத்தப்படுவார்கள். பல கோடிக்கு அதிபதியாய் இருப்பவனுக்கும், ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பவனுக்கும் ஒரே இருக்கை தான். சுவாமியை பொருத்தவரை, அவர் உள்ளத்தை மட்டும் தான் பார்ப்பார்.
சுவாமி எப்போதும் தன் உடலையும், உடையையும் தூய்மையாக வைத்திருப்பர். தன் பாதங்களைத் தொட்டு வணங்கும் பக்தர்களுக்கு ஏதும் "தொற்றோ, காயமோ" ஏற்படக் கூடாது என்பதற்காக, வாரம் முறையாவது தன்னுடைய கால் நகங்களை வெட்டிக் கொள்வார்.
சுவாமி உண்பதும் மிகவும் குறைவாகத்தான் உண்பார். அதுவும் அரிசி, பால், சர்க்கரை போன்ற உணவுகளை உட்கொள்ள மாட்டார். பெரும்பாலும் அவர் ராகி உருண்டையை விரும்பி உட்கொள்வோர். அதனால்தான் சுவாமியின் எடை எப்பொழுதும் ஒரே மாதிரி, சீராக இருந்தது.
"உங்களின் நெய்வேத்யத்திலேயே என் வயிறும் இதயமும் நிரம்பி விடுகிறது" எனப் பலமுறை சொல்லி இருக்கிறார்.
"அன்னம் பிரம்மா" என்கிறார்.
இதுகுறித்து சுவாமியின் முன்னாள் மாணவர் ஒருவர் கூறுகையில். ஒருமுறை நான் உட்பட ஒரு நான்கு, ஐந்து மாணவர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் மாணவர்களில் ஒருவர் தான் எங்களுக்கு உணவு பரிமாறினார். அப்படி அவர் எனக்கு சப்பாத்தி பரிமாறும் போது அது தவறி கீழே விழுந்து விட்டது. உடனே அந்த மாணவன் அந்த சப்பாத்தியை தனியாக எடுத்து வைத்துவிட்டான். பின்னர் சாப்பிட அங்கு வந்த சுவாமி, யாருக்கும் தெரியாமல் பேச்சுவாக்கில் எங்களிடம் பேசிக்கொண்டே அந்த கீழே விழுந்த சப்பாத்தியை அவருடைய தட்டில் போட்டு சாப்பிட ஆரம்பித்தார். அதே போல் ஒருமுறை பரிமாறும்போது குழம்பு சிந்திவிட்டது. அதனை மாணவர்களான நாங்கள் அதனை சரியாக கவனிக்கவில்லை. ஆனால் அனைத்தும் அறிந்த சுவாமி. வேண்டுமென்றே அவர் சாப்பிட்டு முடித்த பிறகு அந்த குழம்பு சிந்தி இருந்ததற்கு மேல் கால் வைத்தார். ஓ கால் வைத்து விட்டேன்.. என்று சொல்லிக்கொண்டு சுவாமி ஒரே காலில் நொண்டி அடித்துக்கொண்டே பத்து படிக்கட்டுகள் இறங்கி பின்னர் கழுவினார். சுவாமி நினைத்திருந்தால் எங்களை கண்டித்து இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எப்படி பாடம் புகட்டினால் நாங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோமோ, சுவாமி அவ்வாறு பாடம் புகட்டினார். இப்படி ஒரு தவறை நாங்கள் மீண்டும் எங்கள் வாழ்வில் செய்யக்கூடாது என்பதை அன்றே கண்கலங்கி முடிவு செய்தோம். அதுதான் சுவாமி.
சுவாமியை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு சுவாமி ஆனந்தத்தை கொடுத்து தரிசனம் கொடுப்பாரே தவிர, எவரிடமும் தரிசனம் என்ற பெயரில் ஒரு பைசா கூட இதுவரை பெற்றது கிடையாது. அதேபோல் புட்டபர்த்தியில் பணியாற்றும் அதிகாரிகள் கூட சத்ய சாயி டிரஸ்ட்டுக்கு நன்கொடை கொடுங்கள் என்று வாய்திறந்து கேட்க மாட்டார்கள். ஏன் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் தரிசனத்திற்கு வந்தாலும்கூட மற்ற சில ஆசிரமங்களைப் போல அவர்களைத் தனியாக அழைத்துக் கொண்டு 'மூளை சலவை' செய்து வசூல் செய்ய மாட்டார்கள். வரும் பக்தர்கள் தங்குவதற்காக அறைகளும் அப்படித்தான் பெரும்பாலும் இலவசம். ஐம்பது ரூபாய், நூறு ரூபாய்க்கு சகல வசதிகளுடன் கிடைக்கும். அதேபோல் உணவும் அப்படித்தான். இருபது ரூபாய் போதும் வயிறு நிரம்ப சாப்பிடலாம். சுவாமியின் மருத்துவமனை, கல்லூரி, பள்ளி என அனைத்தும் இலவசம். யாரிடமும் எதற்கும் கட்டணம் பெறுவதில்லை. அதுவும் எப்படி அனைத்தும் 'ஹை கிளாஸ்' தான்.
தற்சமயம் நவீன குருமார்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் போல, சுவாமி ஒருபோதும் தான் செய்த எந்த ஒரு நல்ல காரியத்தையும் பேனர் விளம்பரங்கள் மூலமாகவோ, தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது நாளிதழ் மூலமாகவோ விளம்பரப்படுத்தியதே இல்லை. ஏன் அவர் இதுவரை எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் பேட்டி கொடுத்ததே இல்லை. ஏனென்றால் அவருக்கு அப்படி ஒரு விளம்பரம் தேவையும் இல்லை. அவசியமும் இல்லை. இந்தக் கலியுகத்தில் ஒரு பரிபூரண அவதாரம் எப்படி வாழும் என வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதனால்தான் சுவாமி 'என்னுடைய வாழ்வே எனது செய்தி' என்பார்.
சுவாமியை எவரும் புத்தகத்தினால் புரிந்து கொள்ள முடியாது. அனுபவத்தால் மட்டுமே அவரை சாட்சாத் இறைவன் என நாம் உணர்ந்து கொள்ள முடியும். சுவாமி எப்போதும் "என்னை நீங்கள் கண்மூடித்தனமாக நம்புவதற்கு முன்பு, முதலில் என்னுடைய சக்தியை சோதித்துப் பாருங்கள். நீங்கள் என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் நான் உங்களை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பேன்" என்கிறார்.
வெறும் சுவாமியின் புகைப்படங்களை நம்முடைய பூஜை அறையில் வைத்து வழிபட்டால் மட்டும் போதாது. அவர் சொல்வது போல் நாம் எந்த ஒரு கெட்ட எண்ணமும் இல்லாமல் அவர்பால் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி நம்பியவர்களை சுவாமி ஒரு போதும் கைவிடமாட்டார்.
சத்தியம் தான் சாயி அவதாரம்
தர்மமே அவரின் போதனை
பேரன்பே அவரின் ஸ்வரூபம்
🙏 ஜெய் சாய்ராம் 🙏
Great swamy known to modern era. I was fortunate to have had his darshan regularly when he sed to visit Dharma Kshetra, Mumbai. From my office in Andheri i used to go during office hours thanks to kindness of my boss and enjoyed Swamy's music and speech. Green thoughts. gopalan
பதிலளிநீக்கு