தலைப்பு

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

ஸ்ரீருத்ர பாராயணம் மட்டும் போதும் - வழிகாட்டி பிணி தீர்த்த பாபா!

சுவாமி கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவரின் அனுபவப் பக்கங்களிலிருந்து...

வேதங்கள் நம் வாழ்வின் வழி காட்டிகள். எங்கெல்லாம் இறைவழிபாடுகள் நடத்தப் படுகின்றனவோ அங்கெல்லாம் வேதங்கள்  முழங்கப்படுகின்றன. வேத கோஷங்கள் முழங்க பகவான் பாபா குல்வந்த் ஹாலில் தரிசனம் தர வரும் காட்சியை அனைவரும் அறிவோம் அல்லவா. இவ்வகையில், யஜுர் வேதத்தில் உள்ள ஸ்ரீருத்ர மந்திரம் ,சிவபெருமானின் பெருமைமிகு நாமங்களை உள்ளடக்கி, நமகம், சமகம் என்ற இரு பிரிவுகளைக் கொண்டதாக உள்ளது. நமகத்தில் சிவபெருமானின் 300 நாமாக்களை , நம: (நமஸ்கரிக்கிறேன்) என்று சொல்லி சமகத்தில் நமக்கு தேவையான பொருட்களை சிவனிடம் யாசிக்கிறோம்... 


 பகவான் பாபா ஸ்ரீருத்ரத்தின் அதிர்வலைகள் அகிலமெல்லாம் பரவிட, புட்டபர்த்தியில் "அதி ருத்ர மஹா யக்ஞ" த்தை 2006ம் ஆண்டு நடத்தினார். 11 யக்ஞ குண்டங்கள் நிறுவப்பட்டு, 121 வேத பண்டிதர்கள்  பங்கேற்க, 138 கலசங்களில் புனித நதிநீர் நிரப்பி, சாஸ்த்ரீய முறைப்படி நடத்தப்பட்ட அந்த யக்ஞம் உலக க்ஷேமத்திற்காக பாபாவால் நடத்தப்பட்டது. அடுத்து சென்னையிலும் 2007 ம் ஆண்டு இதுபோன்ற ஸ்ரீருத்ர யக்ஞத்தை பாபா நடத்தினார். தொடரந்து பல இடங்களிலும் இந்த ஸ்ரீ ருத்ர யக்ஞம் நடைபெற்றது. 


ஸ்ரீ ருத்ரம் எப்படி ஒரு மாணவனது தீராத வியாதியைத் தீர்த்தது என்ற வியப்பான செய்தியை இனி பார்ப்போம்... 👇👇

சுவாமி கல்லூரியில் படித்த ஒரு மாணவர். படித்து முடித்தபின் வெளிநாட்டில் நல்ல ஊதியம் பெறும் ஒரு வேலையில் இருந்தார். சில காலம் அவரது வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென, என்ன வியாதி என்று கண்டு அறிய இயலாத உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. வெளி நாட்டில் மருத்துவ செலவுகள் மிக அதிகமாக இருந்த காரணத்தால் அவர் இந்தியா திரும்பினார். தனது இனம் தெரியாத வியாதிக்காக பல மருத்துவ வல்லுனர்களை கலந்தாய்வு செய்து, மருந்துகள் உட்கொண்டும், பலன் ஒன்றும் கிட்டாததால், அவர் வெறுப்பின் விளிம்புக்கு சென்றுவிட்டார். அப்போது ஆபத்பாந்தவனான சுவாமி அவரது கனவில் வந்து, "ஸ்ரீ ருத்ரம் மட்டும் ஜெபித்து வா. வேறு எதுவும் செய்யவேண்டாம்" என்று கூறினார்.

அலைகடலில் விழுந்து தத்தளித்தனர், அருகில் மிதக்கும் கட்டையை எப்படி உறுதியாய் பற்றுவானோ, அது போல அவர், அன்றுமுதல் விடாமல் தினமும் 22 முறை ஸ்ரீ ருத்ரம் பாராயணம் செய்யலானார். வேறு ஒரு சிந்தனையும் இல்லாமல், பகவான் பாபா தன்னுடனே இருப்பதாக எண்ணி அவர் இந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்தைத் தொடர்ந்தார். சுவாமியின் கருணை. மூன்றே மாதங்களில் அவர் உடல் பிணி 90 விழுக்காடு நீங்கி, நலமுடன் வாழத்  தொடங்கினார். சுவாமி எங்கும் எப்போதும் இருக்கிறார் என்ற பேருண்மை இதன்முலம் ஐயமற நிரூபணமாகிறது அல்லவா?


🌻ஒருமுறை வேதம் ஓதினால், ஒரு நாளில் ஒருவன் புனிதமடைகிறான். ஆனால் ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கத் தொடங்கிய அடுத்த கணமே அவன் புனிதமடைந்து விடுகிறான்.மேலும்  விடாமல் ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்பவர் வசிக்கும் சுற்றுப்புறத்தில்(அது கிராமமோ, நகரமோ) வியாதிகள், பஞ்சமோ, திருட்டோ மற்ற துர் செயல்களோ நடைபெறாது என்பது திடமான நம்பிக்கை. 🌻


தமிழில் தொகுத்தளித்தவர்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக