தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

சர்வாந்தர்யாமி சாயி! - டாக்டர் கதிரி கோபால்நாத்



🎷 டாக்டர். கத்ரி கோபால்நாத்(11 December 1949 – 11 October 2019) அவர்கள் புகழ்பெற்ற சாக்ஸஃபோன் கலைஞரும் பகாவான் பாபாவின் தீவிர பக்தருமாவார். 

"1964ஆம் ஆண்டு எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் புட்டபர்த்திக்கு போய் பாபாவை தரிசித்துவிட்டு வந்தார். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து என் பெற்றொரிடம் தனது தரிசன அனுபவத்தை விவரித்தார். அது என் மனதை மிகவும் கவர்ந்துவிடவே நான் என் பெற்றோரை உடனடியாக புட்டபர்த்திக்கு குடும்பத்துடன் போகலாம் என்று வற்புறுத்தினேன். 1965 ஜூன் மாதம்
கடைசி வாரத்தில் பெற்றோர் மற்றும் சகோதரியுடன் புட்டபர்த்திக்கு போனது நினைவிறுக்கிறது. அப்போதெல்லாம் அங்கே சரியாக தங்கும் வசதி கிடையாது. காலையில் 6 மணியிலிருந்து தரிசன நேரமாக இருந்தது. மந்திருக்கு வெளியே இருக்கும் திறந்த வெளியில் நாங்கள் தங்கியிருந்தோம். அங்கே எல்லோரும் தங்கள் உடைமைகளை வைத்து விட்டுப் போவார்கள், திருட்டு பயமே கிடையாது.

எனக்கு அப்போது 15 வயது. மந்திரைச் சுற்றிலும் நிறையப் பாம்புப் புற்றுகள் பார்த்தோம். பகவான் பாபாவிடம் இன்டர்வியூ பெறவேண்டுமென்று நாங்கள் அங்கே 8 நாட்கள் தங்கினோம். அதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். எட்டாவது நாள் ஆகிவிட்டது. கையிலிருந்த பணமெல்லாம் செலவழிந்து போனதால் அப்பா மிகவும் மனச்சோர்வு அடைந்துவிட்டார்.

9வது நாள் காலை வழக்கம் போல் நாங்கள் போய் தரிசனத்துக்கு உட்கார்ந்தோம். பாபா எங்களை அழைக்கவில்லை. பாபா அறைக்குள் போய்விட்டார். இதனால் விரக்தி அடைந்த என் தந்தையார் அன்றைக்கு ஊர் திரும்பத் தீர்மானித்தார். பாபா அழைக்கக் கூடும் என்று என் உள்ளுணர்வு கூறியது. 9வது நாள் காலையில் பகவானின் அறையிலிருந்து ஒரு தொண்டர் வந்து "தானியப்பய்யா யார் இங்கே" என்று கேட்டார். எங்களை பகவான் கூப்பிட்டுவிட்டார்! எனக்கு ஒரே அதிசயம். என் வாழ்வில் அது ஒரு ஆச்சரியம். அப்பாவின் பெயரை எங்கும் நாங்கள் பதியவில்லை. பாபாவுக்கு எப்படித் தெரியும்? எப்படிச் சாத்தியம்? சிறுவனான என்னை இது வியக்க வைத்தது. பாபா ஒரு சன்வாந்தர்யாமி என்பதை புரிந்து கொண்டேன். அவர் எல்லாமறிந்தவர்.

பகவானின் புனிதமான அறைக்குள் குடும்பமே மிகச் சந்தோஷத்துடன் நுழைந்தது. மிக அழகானதொரு புன்னகையால் ஸ்வாமி எங்களை வரவேற்றார். முதலில் ஸ்வாமி என் பெற்றொரை ஆசிவதித்தார். என் சகோதரியை ஆசிவதித்த பின்னால் ஸ்வாமி என்னிடம் "உனக்கு என்ன வேண்டும், பங்காரு?" என்று கேட்டார். அது என் பூர்வ ஜென்ம புண்ணியம்தான். என் சங்கீதப் பயணத்தில் எனக்கு நல்ல குருமார்கள் அமைய ஆசிர்வதியுங்கள் என்று பிரார்தித்தேன். உடனே ஸ்வாமி தன் கரத்தை என் தலைமீது வைத்து, "சங்கீதத்தில் நீ உலகளாவிய வெற்றியைப் பெறுவாய்" என்றார். என் தலையிலும் நாவிலும் ஸ்வாமி சிறிது விபூதி பிரசாதத்தைத் தூவினார். இந்த சந்தோஷமான தரிசனத்துக்குப் பின் நாங்கள் ஊர் திரும்பினோம்.

பகவான் பாபாவின் சன்னதியில் என் இசை அரங்கேற்றம் நடக்க வேண்டும் என்று நான் எப்போதும் பிரார்த்தனை செய்வேன். ஒரு நாள் 4 புகழ் பெற்ற சங்கீத வித்வான்கள் ஒரு காரில் நானிருந்த பகுதிக்கு வந்து என்னைப் பற்றி விசாரித்தார்கள். நான் அவர்களைத் தக்க மரியாதையோடு வரவேற்றேன்.      அவர்கள், "கதிரிஜீ, நீங்கள் அதிர்ஷ்டசாலி, ஒயிட்ஃபீல்டில் (பகவானின் பெங்களூர் அருகில் அமைந்துள்ள ஆசிரமம்) கச்சேரி செய்ய உங்களை ஆழைத்துவரச் சொல்லி பாபா எங்களை அனுப்பியிருக்கிறார்" என்று கூறினார்கள். சர்வாந்தர்யாமியான ஸ்வாமிக்கு அப்போது நான் வீட்டில் தான் இருக்கிறேன் என்பது தெரியும். என் கனவு நனவானதில் எனக்கு ஒரே சந்தோஷம். ஒவ்வொரு ஆண்டும் அந்தச் சமயத்தில் ஸ்வாமி ஒயிட்ஃபீல்டில் 'சம்மர் கோர்ஸ்' (கோடை பயிற்சி முகாம்) நடத்துவது வழக்கம். அதில் ஸ்வாமியே அருளுரைகள் வழங்குவார். மாலையில் சங்கீதக் கச்சேரிகள் நடக்கும்.

இதைக் கேட்டு எனக்கு சந்தோஷம் ஏற்பட்டாலும் அதே சமயத்தில் பாண்டிச்சேரியில் இரண்டு கச்சேரிகள் செய்ய ஒத்துக்கொண்டிருந்தேன். அது 1991ம் ஆண்டு மே 21ம் தேதியன்று என்பது எனக்கு நினைவில் இருக்கிறது. பக்கவாத்தியக்காரர்கள் இல்லாமல் எப்படி ஒயிட்ஃபீல்டில் கச்சேரி செய்வது? அந்தச் சமயத்தில் என் குரு டாக்டர் டி.வி. கோபாலகிருஷ்ணன் என்னை கொல்லூர் மூகாம்பிகை கோவிலிலிருந்து அழைத்தார். ஏதோ அரசியல் காரணங்களால் அப்போது அவருக்கு எந்த வாகனமும் கிடைக்கவில்லை. நான் மங்களூருவில் இருந்தேன். என்னை வந்து ஆழைத்துப் போகச் சொன்னார். ஒயிட்ஃபீல்ட் கச்சேரிக்கு யார் பக்க வாத்தியம் வாசிக்கப் போகிறார்கள் என்று என் குரு கேட்டார். நான் தேடிக்கொண்டிருப்பதாக பதில் கூறினேன். உடனேயே தான் மிருதங்கம் வாசிப்பதாகக் கூறினார். அதுதான் பகவானின் லீலை. எனக்கு புதுச்சேரியிலிருந்தும் சென்னையிலிருந்தும் அரசியல் கொந்தளிப்புக் காரணமாக என் கச்சேரிகளைக் காலவரையறையின்றி ஒத்தி வைத்திருப்பதாகத் தொலைப்பேசிகள்  வந்தன. மிகவும் மகிழ்ச்சியோடு நான் என் குருநாதருடன் உடனடியாக ஒயிட்ஃபீல்டுக்குப் புறப்பட்டேன்.

ஒயிட்ஃபீல்டு அரங்கத்தில் நுழைந்ததும் பகவான் என்னைப் பார்த்தார்! அந்த அரைநொடியில் அவரது கருணைப் பார்வை என்மீது பதிந்தது. "உன்னுடைய சங்கீதத்தை கேட்க எத்தனை நாளாக காத்திருக்கிறேன் கத்ரி!" என்று கூறினார் ஸ்வாமி. அவர் என் முதுகில் தட்டிக்கொடுத்து, "கத்ரி, நான் சில பாடல்கலைக் கேட்க விரும்புகிறேன். இன்று சாயங்காலம் நீ அவற்றை வாசிக்கலாம்" என்றார். பகவான் என்ன பாடல்களைக் கேட்பாரோ என்று எனக்குச் சற்றே தயக்கம் ஆயிற்று. வழக்கம் போல நான் மாலை கச்சேரி வெற்றிகரமாக அமைய அருளுங்கள் என்று அவரிடமே பிரார்தித்துக்கொண்டேன்.

பகவான் அங்கிருந்த பெருந்திரளான பக்தர்களுக்கு வேதாந்தத்தை சற்று நேரம் விளக்கினார். அதற்குப் பின் என்னை வாசிக்கச் சொன்னார். நான் அழைப்பை எதிர்பார்த்து ஒப்பனை அறையில் காத்திருந்தேன். பக்தர் ஒருவர் வந்து என்னிடம் ஸ்வாமி விரும்பும் பாடல்களின் பட்டியலைக் கொடுத்தார். அதை விரைந்து பார்த்தேன். ஓ பகவான்! என்ன ஒரு வரம்! நான் மிகச் சிறப்பாக வாசிக்கும் பாடல்களே அவை. "நான் இருக்கப் பயமேன்?"  என்று பகவான் எப்போதும் கூறுவதுண்டு. முந்தைய ஜன்மங்களில் நான் செய்த புண்ணியத்தின் பலனாகத்தான் இருக்கவேண்டும் இது. பகவான் பாபாவின் அற்புதங்கள் பலவற்றை நான் அனுபவித்திருக்கிறேன்.

அவர் இன்னமும் நம் இதயங்களில் வசிக்கிறார். ஒவ்வொரு கச்சேரியைத் தொடங்கும் போதும் நான் அவரைப் பிரார்த்திக்கிறேன். எல்லாக் கச்சேரிகளும் எந்தத் தடையுமின்றி, வெற்றிகரமாக நடக்கின்றன. அவருடைய அருளால் எனக்கு 'பத்ம விருதுகள்', இரண்டு டாக்டர் பட்டங்கள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளின் விருதுகள், கேந்திரீய சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் பல சிறப்பான கெளரவங்கள் கிடைத்துள்ளன. பகவான் நமக்கென வகுத்திருக்கும் சமூகப்பணி என்னும் புனிதப் பாதையில் நாம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதுதான் இளைய தலைமுறைக்கும் சாயி அன்பர்களுக்கும் நான் பகிர்ந்து கொள்ளும் செய்தியாகும்."



ஆதாரம்: Radio Sai 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக