தலைப்பு

வியாழன், 25 ஏப்ரல், 2019

அதே பாபாதான் இவர் - 6: M.S. தீக்ஷித்தின் அற்புத அனுபவம்


M.S.தீக்ஷித் என்பவர் குழந்தையாக இருந்தபோது ஷிர்டி சாயிபாபாவைப் பார்த்திருக்கிறார். அவரது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பகவான் சத்ய சாயிபாபாவுடன் பிருந்தாவனத்தில் வாழ்ந்திருக்கிறார். சிறுவனாக இருந்தபோது பொறுக்க முடியாத ஒற்றைத் தலைவலியால் (மைக்ரெய்ன்)
துன்பப்பட்டிருக்கிறார். ஹரி சீதாராம் தீக்ஷித் அவனுடைய பெரியப்பா, அவர் அவனை ஷிர்டி பாபாவிடம் அழைத்துச் சென்றார். இந்த ஹரி சீதாராம் தீக்ஷித் சாதாரணமாகக் காகாசாஹேப் தீக்ஷித் என்றே அறியப்படுவார். பாபா, எரியும் ‘துனி’யில் இருந்து கொஞ்சம் சாம்பலை எடுத்து அந்தப் பையனின் நெற்றியில் தேய்துவிட்டு, அவனது கன்னத்தில் அடித்து, உடனே அந்த இடத்தை விட்டுப் போகச் சொன்னார். அந்தப் பையன் ஆச்சரியமடைந்தான். தன்னை கன்னத்தில் அடித்து, தயவு தாட்சணியம் இல்லாமல் விரட்டிவிட்டதாக எண்ணினான். இனிமேல் பாபாவைப் பார்க்கப் போகக்கூடாது என்று தீர்மானித்துவிட்டான்.

ஆனால், அவனது பெரியப்பா காகா சாஹேப்தான் அவனைத் தேற்றினார். எதை அவன் கன்னத்தில் அடித்ததாக எண்ணினானோ அது உண்மையில் பாபாவின் ஆசீர்வாதமாகும் என்று எடுத்துக் கூறினார். அதுவும் தவிர பாபா ‘உடனே போக வேண்டும்’ என்று உரத்துக் கூறியது அவனையல்ல, அவனது ஒற்றைத் தலைவலியை என்று விளக்கினார். அத்துடன் அவர் “இங்கிருக்கும் ஒவ்வொருவரும் பாபாவின் கருணைப் பார்வைக்கும் அருளுக்கும் ஏங்கிக் காத்திருக்கிறோம். இங்கிருக்கும் எவருக்காவது இப்படிக் கன்னத்தில் அறை விழுந்தால் அவர் மிகப்பெரிய ஆசி கிடைத்ததாகக் கருதி மகிழ்வார்” என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தப் பையனைத் துன்புறுத்திய ஒற்றைத் தலைவலி மீண்டும் தலைக்காட்டவில்லை!

வருடங்கள் உருண்டோடின. ஷிர்டி பாபா மீண்டும் ஸ்ரீ சத்ய சாயிபாபாவாக அவதரித்திருப்பதாகக் கேள்விப்பட்டு அந்தப் பையன் (M.S.தீக்ஷித்) சில நண்பர்களுடன் புட்டபர்த்திக்குச் சென்றார். அன்று 23 அக்டோபர் 1961 விஜயதசமி. பகவான் M.S.தீக்ஷித்தை இண்டர்வியூ அறைக்கு அழைத்தார். அப்போது தீக்ஷித்தின் சட்டைப்பையில் இருந்த அவரது பெரியப்பா காகா சாஹேப் தீக்ஷித்தின் படத்தைப் பார்த்த பகவான், “இது உன் பெரியப்பா காகா சாஹேப் தீக்ஷித் படமல்லாவா? நான் ஷிர்டியில் இருந்தபோது இவர் எனது பக்தர்” என உரைத்தார். பகவானைப் பற்றி தீக்ஷித்தின் மனதிலிருந்த  சந்தேகங்கள் மறைந்தன.

அவர் எப்போதும் ஷிர்டி பாபாவின் வாயிற் காப்போனாக இருக்க வேண்டுமென விரும்பினார். பகவான் அதனை அறிவார். அதனை நிறைவேற்றும் முகமாக அதே பணியை பிருந்தாவன் ஆசிரமத்தில் அவருக்கு வழங்கினார். தீக்ஷித் அவர்களும் பிருந்தாவன் வாயிற்கதவின் அருகிலிருந்த இல்லத்தில் வசித்து, தனக்கு இடப்பட்ட பணியை நிறைவேற்றி வந்தார். எட்டு வருடங்கள் கழித்து பகவானின் பாதங்களை அடைந்தார்.

(ஆதாரம்: தபோவனம்; பக்கம்: 75&76)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக