தலைப்பு

புதன், 17 ஏப்ரல், 2019

தர்மம் தலைகாக்கும்!திருப்பதி வெங்கடாசலபதிதான் என் இஷ்ட தெய்வம். அவரே சத்ய சாயிபாபாவாக மனித உருவில் நடமாடுகிறார் என்பது என் நம்பிக்கை. 
1980-ம் வருடம் அலுவலக விஷயமாக ஆந்திராவிலுள்ள விஜய நகரத்தில் தங்கியிருந்தேன். அப்போது என் மேலதிகாரியாக இருந்தவர் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர். அதை பிரயோகித்து எனக்கு தொந்தரவு கொடுத்துக்
கொண்டிருந்தார்.சென்னையில் தங்க விடாமல் எப்பொழுதும் வெளியூர் சுற்ற வேண்டிய பணிகளையே வழங்கினார். வெளியூர் பயணங்களில் கண்ட ஆகாரங்களை சாப்பிட நேரிடுவதால் என் உடல் நிலை பாதிக்கப்பட்டது. மேலும் பயணங்களுக்கான பணம் வழங்குவதிலும் அந்த அதிகாரி பல பிரச்சனைகளை எனக்கு கொடுத்தார். வேண்டுமென்றே என்னை உதாசீனப்படுத்துவார். 

நேர்மையாய், திறமையாய் உழைத்துவரும் எனக்கு இது மிகுந்த மன வேதனையளித்தது. விஜய நகர வேலையை முடித்துவிட்டு சென்னை திரும்பலாம் என்றிருந்த எனக்கு அங்கிருந்தபடியே ஒரிஸ்ஸாவிற்கு பயணிக்குமாறு அந்த அதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது. என்னால் இந்த அதிர்கார துஷ்பிரயோகத்தை தாங்கமுடியவில்லை. நியாயம், தர்மம் என்பதெல்லாம் பொய்தானா? நேர்மையாய், சத்ய வழியில் நடந்தால் அது நம்மை காக்கும் என்பதெல்லாம் வெறும் பிதற்றல் தானா? கடவுள் என்று ஒருவர் நிஜமாகவே இருக்கிறாரா? இல்லை. என் நம்பிக்கை, இது நாள்வரை நேர்மையாய் வாழ்ந்த வாழ்க்கை, எல்லாம் வீண்.
இப்படியெல்லாம் என் மனம் புலம்பியது. மனம் உடைந்த வாழ்வே அர்த்தமற்றதாய்த் தோன்றியது. துக்கம் நெஞ்சைப் பிசைய அழுது கொண்டே தூங்கிப் போனேன். 

விடியற்காலை ஐந்து மணி இருக்கும். என் அருகில் யாரோ அமர்ந்திருப்பது போன்ற உணர்வு. கண் விழித்துப் பார்த்தால்…பகவான் சத்ய சாயிபாபா. சுருள் முடியும், அருள் விழிகளும், ஆரஞ்சு வண்ண அங்கி, தகதகக்கும் மேனியுமாய், மிருதுவாய் என்னைத் தொட்டார். கருணை ததும்பும் கண்களுடன் “படுத்துக்கோ குழந்தாய்” (பண்டுக்கோ நாயனா) என்று தேன் மதுரக் குரலில் அன்பு பீறிடச் சொன்னார்.

ஆச்சரியமும், திகைப்பும் என் வாயை அடைத்துவிட்டன. “மானஸ பஜரே குரு சரணம்” பாடு என்றார். காண்பது நிஜம்தானா என்று ஆச்சரியத்தில் வாயைத் திறக்கமுடியவில்லை. என் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து “கவலைப்படாதே, நான் உன்னுடன் எப்பொழுதும் இருக்கிறேன்” என்றபடி எழுந்தார். திகைத்து எழுந்த என்னை மீண்டும் படுக்கச் சொன்னார். என் கண் எதிரிலேயே அறையின் கூரையைப் பிளந்தபடி ஸ்வாமி மறைந்தார். அறையெங்கும் விபூதி மணம். சுவர்க் கடிகாரம் மணி ஐந்தைக் காட்டியது. நான் கண்டது கனவு இல்லை. நிஜமாகவே ரத்தமும் சதையுமாய் பகவான் என் முன் தோன்றியிருக்கிறார் என்பதை உணர்த்தும் சொல்லவொண்ணாத சந்தோஷம் என்னை ஆட்கொண்டது. 

தைரியமும், நம்பிக்கையும் மேலோங்கியது. உடலெங்கும் ஆனந்தம் அலை அலையாய்ப் பரவியது. கட்வுள் இல்லையென்று கலங்கினோமே, இதோ மனித உருவில் அழைத்த குரலுக்கு ஓடி வந்துவிட்டாரே! இவர் மனிதரல்ல தெய்வம். என் நெஞ்சு விம்மியது. ஒரிஸ்ஸாவிற்கு செல்ல வேண்டிய பயணத்தை ரத்து செய்து சென்னை திரும்பினேன்.

இந்த பயண மாற்றத்தால் வேலையை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை என்ற மனோ நிலையில் நான் இருந்தேன். கடவுள் மனித உருக்கொண்டு சாயி பகவானாய் என்னுடன் இருக்கும்போது, என் வாழ்க்கையைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். என் வாழ்க்கைப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டபின் எனக்கு என்ன பயம்?

வீட்டையடைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக எதிர் வீட்டுக்காரர் சொன்னார். போய் பேசினால், Andrew Yule என்ற கம்பெனியிலிருந்து எனக்கு வேலை கிடைத்திருப்பதாவும் உடனடியாக வந்து சேரும்படியும் சொன்னார்கள். 

இரண்டு வருடங்களுக்கு முன் நான் விண்ணப்பித்த கம்பெனியிலிருந்து இன்று வேலைக்கான உத்தரவு! ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனேன். பகவானைத் தவிர வேறு யாரால் இதைச் செய்ய முடியும்? மறுநாளே பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு Andrew Yule-ல் வேலைக்குச் சேர்ந்தேன். 
நிறைவான வேலை. தரமான பணியாளர்கள். என் வாழ்க்கைப் பாதை மாறியது. உண்மைதான். ‘தர்மம் தலைகாக்கும்’ என்று உணர்ந்தேன்.
சனாதன தர்மத்தின் மீது, மனித வாழ்விற்கு அஸ்திவாரமான நற்பண்புகளின் மீது, நான் கொண்ட நம்பிக்கை ஊசலாடிய போது பகவான் என் முன் தோன்றி, என் நம்பிக்கைகளுக்கு உரமூட்டியிருக்கிறார். நேர்மைப் பாதையிலிருந்து திசை மாறாமல் என்னைத் காத்திருக்கிறார். இவர் தர்மத்தை பரிபாலனம் செய்ய வந்திருக்கும் அவதார புருஷர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது.

- திரு. வி.பி. கோபாலரத்தினம் (இறைவனுடன் இனிய அனுபவங்கள், அத்யாயம் 28)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக