தலைப்பு

புதன், 24 ஏப்ரல், 2019

பாபாவின் சங்கல்பத்தால் கர்ப்பப்பை இல்லாத தாய்க்குப் பிறந்த அதிசயக் குழந்தை!


நம் சுவாமியின் சங்கல்பம் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் ஆற்றல் கொண்டது. இது ஒரு மாபெரும் அற்புதம்!

ஒரு தம்பதியினர் (இருவரும் Gynaecologist - கர்ப்பப்பை மருத்துவர்கள்) சுவாமியிடம் பல முறை நேர்முகப் பேட்டி கிட்டிய பாக்கியசாலிகள். அவர்களுக்குப் பல வருடங்களாகக் குழந்தை இல்லை. ஒருமுறை நேர்முகப் பேட்டியின்போது சுவாமி அவர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டு கேட்டார்.

அந்தத் தம்பதியினர் பொதுவாகவே ஒவ்வொரு முறை நேர்முகப் பேட்டி முடிந்தவுடனும் சண்டையிட்டுக் கொள்வார்கள். அவர்கள் இருவரிடையே வாக்குவாதம் என்னவென்றால், தங்களுக்கு அடுத்து ஒரு வாரிசு வேண்டும் இதனை சுவாமியிடம் யார் கேட்பது என்பதுதான். கணவன் மனைவியிடம் நீயே சுவாமியிடம் கேட்டிருக்கலாம் என்பார். மனைவி கணவனிடம் நீங்கள்தான் சுவாமியிடம் நெருக்கமாக உள்ளீர்கள், அதனால் நீங்கள்தான் கேட்டிருக்க வேண்டும் என்பார். இதுதான் இவர்களிடையே நடந்த விவாதம். இப்படி நேர்முகப் பேட்டியில் இதுபற்றி சுவாமியே அவர்களிடம் கேட்டபோது அவர்கள் மௌன மானார்கள். தங்களுக்கு எதுவும் வேண்டாம் எனப் பதிலளித்தார்கள்.

ஆனால் சுவாமி விடவில்லை. அவர்கள் இருவரும் வாயைத் திறந்து சொல்லாமலே சுவாமி அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். இதைக் கேட்ட கணவன் சுவாமி இது தற்போது நடக்காது என்று பவ்யமாகக் கூறினார். “ஏன் நடக்காது? நான் உங்களுக்குத் தருகிறேன்” என்று சுவாமி கூறினார். இது நடக்க முடியாததொன்று என்று கணவன் கூற, தான் கட்டாயம் தருவதாக சுவாமி மறுபடியும் கூறினார். அந்தக் கணவன் தனது மனைவியின் கர்ப்பப்பை சில காலம்முன் அகற்றப்பட்டதாகவும் தாங்கள் இருவருமே அந்தத் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் ஆனதால், இது முற்றிலும் நடக்கச் சாத்தியமில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.

சுவாமி அவர்களை ஆசீர்வதித்தார். சில நாட்கள் கழிந்தன. நடக்கவே இயலாது என்று கருதிய மனைவி கர்ப்பம் தரித்தார். கணவன் டாக்டர் என்பதால் அவர் நுட்பமாய்ச் சோதித்ததில், அதிசயத்திலும் பேரதிசயமாக, கர்ப்பப்பை இல்லாமலே தாயின் வயிற்றில் குழந்தை தொப்புள்கொடி இன்றி மிதந்து கொண்டிருப்பதை அந்த தம்பதியினர் அறிந்தனர். குழந்தை தொப்புள்கொடி இல்லாமல் எப்படி உயிர் வாழமுடிந்தது என்பதே மருத்துவர்களான அந்தத் தம்பதியினருக்கு விளங்கவில்லை. இது எப்படிச் சாத்தியமாயிற்று என்பதையும் உணர முடியவில்லை.


இது ஒரு மாபெரும் அதிசயமாக இருந்தது. அடுத்த முறை அவர்கள் சுவாமியைச் சந்தித்துப் பேசியபோது இது எப்படிச் சாத்தியமாயிற்று என்று கேட்டார்கள். அதற்கு சுவாமி புன்முறுவலுடன் “நானே ஒரு உதாரணம்” என்று கூறினார். (அவரது அவதாரமே ஒரு பிரவேசம்). அது சாத்தியம் என்றால் இதுவும் சாத்தியமே. சுவாமி சங்கல்பத்தால் எதுவும் முடியும். அந்த பெண்மணிக்கு சுவாமி அருளியபடி , கணவனே பிரசவம் பார்க்க ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. பிற்காலத்தில் சத்ய சாயி உயர்கல்வி மையத்தில் படித்த அந்த மாணவன் ஒரு சிறந்த மாணவன் ஆனார். (அந்தக் குழந்தைக்கு "சத்யா" என்று சுவாமியே பெயரிட்டார். இந்த அதிசய நிகழ்வினை புட்டபர்த்தியில் குழுமியிருந்த பக்தர்களிடம் சுவாமியின் முன்னிலையில் சத்யாவே கூறினார்.)

ஆதாரம்: அந்த தம்பதிகளின் உறவினரான மும்பையைச் சேர்ந்த திரு M. ஸ்ரீனிவாசன் என்பவரின் நேரடி அனுபவம்.
மொழிபெயர்ப்பு: டி. சதாசிவ குமார், சென்னை. 

இந்த அற்புதம் 'கல்கி' வார இதழில் 1997 இல் ‘சாயி சங்கல்பம்’ என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக