தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

பகவானின் சித்ராவதி நாட்கள் (1942-1953)



நீங்கள் பார்க்கும் இந்த வீடியோவில் பகவான் சித்ராவதி நதிக்கரையில் செய்த அற்புதங்களைப் பற்றி அவருடைய ஆரம்பகால பக்தர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து உள்ளார்கள். ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் இருக்கும் இந்த  வீடியோவில் அவர்கள் சொன்ன  விஷயங்களுடன் ஆங்கிலப் புத்தகத்தில் இருந்து ஒரு சில விஷயங்களையும் சேர்த்து ஒரு கதையாக மொழிபெயர்த்துள்ளேன்...

சத்ய சாயி பாபாவின் சித்ராவதி நாட்கள்(1942-1953):

பகவான் சித்ராவதி நதிக்கரையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு சாயங்காலமும் பக்தர்களை அழைத்துக்கொண்டு பகவான் சித்ராவதி நதிக்கரைக்குச் செல்வார்.  பின்பு பக்தர்களிடமே தான் அமரவேண்டிய இடத்தைக் காண்பிக்குமாறு கேட்பார்.  அவர்களோ சுவாமி அங்கு அமரலாம் என்று ஓரிடத்தைக்  காண்பிப்பார்கள்.  அவர்கள் காண்பிக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு பஜனை மற்றும் போதனைகளைச் செய்வார். பின்னர் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் என்ன வேண்டும் என்று கேட்பார். ஒருவர், சுவாமி எனக்கு சுடச்சுட ஜிலேபி வேண்டும் என்பார்;  இன்னொருவரோ, சுவாமி எனக்கு மைசூர்பாக் வேண்டும் என்பார்; மற்றொருவர், சுவாமி எனக்கு மசால்தோசை வேண்டும் என்பார்.

அப்படி பக்தர்கள் என்னென்ன கேட்கின்றனரோ அவற்றை  ஒன்றன்பின் ஒன்றாக வரவழைத்துக் கொடுப்பார். அதுவும் எப்படி?  முதலில் பகவான் நதிக்கரையில் உள்ள மணலைக் குவித்துக்கொள்வார்.  பின்பு அந்த மணல் குன்றுக்குள் கையை நுழைப்பார். பின்பு என்ன... அதற்குள்ளிருந்து சுடச்சுட நெய் வடியும்  ஜிலேபியும், மசால் தோசையையும் ஒரு துளி மண்ணில்லாமல் எடுத்துக் கொடுப்பார்!

 அவ்வாறு உண்டவர்கள் நாங்கள் அதுபோன்றதொரு சுவையை எங்கள் வாழ்நாளிலே ருசித்தது  இல்லை என்றனர். அப்படி பகவான் வரவழைத்துக் கொடுக்கும் உணவுவகைகள் மிகவும் சூடாக இருக்கும். அதாவது,  அடுப்பில் இருந்து செய்தவுடன் எடுத்துக் கொடுத்தால் எந்தச் சூடு இருக்குமோ அந்தச் சூட்டில் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

வித்தியாசமான சம்பவம்:

சுவாமி ஒரு பெண்மணியைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அந்தப் பெண்மணியோ தன் கணவர் இறந்து பல  வருடங்கள் (அதாவது பாபா பிறப்பதற்கு முன்பே) ஆகிவிட்டன. அவர் நினைவாக ஒரு புகைப்படம்கூட என்னிடம் இல்லை. அவரது புகைப்படத்தை எனக்கு வரவழைத்துத் தாருங்கள் என்று கேட்க, பகவான் மண்ணிலிருந்து அவளும், அவர் கணவரும் சேர்ந்து இருப்பதாக ஒரு புகைப்படத்தை வரவழைத்துக் கொடுத்தார்.

இப்படி ஒரு முறை, இருமுறை அல்ல, பலமுறை பகவான் இதுபோன்ற அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார்.  இன்றும்கூடச்  சாயி பக்தர்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் அந்தச் சித்ராவதி  நதியின் மணற்பரப்பில் அமர்ந்துகொண்டு பஜனைகள் செய்கின்றனர்.  பகவான் நடந்து, அமர்ந்து சென்ற அந்த இடத்தை ஒரு புண்ணிய இடமாகக் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக