தலைப்பு

வியாழன், 4 ஏப்ரல், 2019

"காலம்" முழுவதும் பகவான் கையில்

முன்னாள்  பிரதமர் பகதூர் சாஸ்திரி அவர்களின் தனிப்பட்ட   உதவியாளராக இருந்த திரு. தியாகராஜ் அவர்களின் சாயி அனுபவம்:

(30 நாள் கால அவகாசத்தை 30 வருடங்களாக மாற்றினார் பாபா)

சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது, அவரின் தனிப்பட்ட உதவியாளராக இருந்தவர் தியாகராஜ். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பெங்களூருக்கு மருத்துவப் பரிசோதனை பெறச் சென்றார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கேன்சர் நோயாளி என முடிவு செய்தனர். அவர் மூன்று மாத காலம்தான் உயிர்வாழ முடியும் என்று கூறினர். அவரிடம் மேலும் “சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் குறிப்பாக ஒன்று தெரிவிக்கிறோம். உங்கள் வியாதிக்குத் தீர்வு உண்டு. பகவான் சாயிபாபாவின் அருளை வேண்டி, உங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். வேறு எந்த வழியும் இல்லை. பாபாவின் பக்தரான புகழ்பெற்ற விஞ்ஞானி சூரி பகவந்தம் இப்போது சிகிச்சைக்காக இந்த மருத்துவ மனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண ஸ்வாமி நாளை இங்கு வருகிறார். இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கூறினர்.

ஆனால் தியாகராஜ் இந்த அறிவுரையை ஏற்கவில்லை. “நான் பிரதமரின் தனிப்பட்ட உதவியாளன், எந்த பாபாவின் காலிலும் விழவேண்டிய தேவை எனக்கு இல்லை” என்று கூறி, அவர் தன் மனதுக்குச் சரி எனப்பட்டதைப் பின்பற்றி, அங்குமிங்கும் மருத்துவ உதவி நாடிச் சென்றார். இரண்டு மாதம் கழித்து அதே மருத்துவமனைக்குத் திரும்பி வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். முன்பு கூறியது போலவே, மருத்துவர்கள் அவர் ஆயுட்காலம் சுமார் ஒரு மாதம்தான் என்று கூறினர்.

தியாகராஜ் பதற்றத்துடனும், கவலையுடனும் புட்டபர்த்திக்கு அவசரமாகச் சென்றார். அவர் தரிசனத்திற்கு காத்திருந்த போது, பாபா அவரை நெருங்கி “கேன்சர்?” என்று கேட்டார். பாவம், தியாகராஜ் மனமுடைந்து கண்ணீர் விட்டு, பாபாவின் மலர்ப் பாதங்களில் வீழ்ந்தார். பாபா அவருக்கு விபூதி வரவழைத்துக் கொடுத்து, உட்கொள்ளும்படிக் கூறினார். இவ்வாறு மூன்று நாட்கள் கடந்தன. மூன்றாவது நாள் பகவான் ஸ்வாமி அவரிடம் “கேன்சர் இஸ் கேன்சல்டு” என்று கூறினார்.

பிறகு நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில், தியாகராஜிடம் கேன்சரின் ஒரு சுவடு கூடக் காணப்பட வில்லை. இந்தச் சம்பவம் 50 வருடங்களுக்கு முன் நடந்தது. மூன்று மாதம் என்று இருந்த அவரது ஆயுளைச் சுமார் 30 ஆண்டுகள் நீட்டித்தார் சுவாமி. அந்த 30 ஆண்டுகளும் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சனாதன சாரதி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார் தியாகராஜ். காலம் முழுவதும் கருணை மிகு‌ந்த பகவான் கையில் உள்ளது.

ஆதாரம்: பெங்களூரு திரு. பாலசுப்ரமணியன் அவர்களின் நேரடி அனுபவம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக