தலைப்பு

செவ்வாய், 1 டிசம்பர், 2020

1-50 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!


இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

📝 நிகழ்வு 1:

ஒரு தடவை  என்னுடைய அம்மா பழைய மந்திரத்தில் மோர் குடிப்பதற்காக உள்ளே சென்றாள். அப்பொழுது கையிலே மோர் டம்ப்ளரை வைத்துக்கொண்டு மனதுக்குள்ளே புலம்பினாள்:  இத்தனை நாட்கள் இங்கு  இருந்தும்  சுவாமி தனக்கு சாதனை செய்வது சம்பந்தமாக எந்த ஒரு பாடமும் கற்பிக்கவில்லை ,  தனது சொந்த ஊரான மைசூருக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என்று.  திடீரென  சுவாமியின் வார்த்தைகள்  அவள் காதுகளில் இவ்வாறாக விழுந்தன. “அம்மாயி, அழ வேண்டாம். எல்லாவற்றிற்கும் நேரம் ஒன்று உண்டு அது அமைய வேண்டும். மோட்சத்தை  வேண்டுவதும்  ஒரு விதமான ஆசைதான். ஆகையால் எதற்கும் ஆசைப்படாமல் எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிரு. உனக்கு மோட்சம் கிட்டும்". இதனைக் கேட்ட என் அம்மா திரும்பிப் பார்க்க, அங்கே  தன் கண்ணில் ஒரு சிறு நீர் துளியுடன் சுவாமி நின்று கொண்டிருப்பதை பார்த்தாள்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 2:


பழைய மந்திரத்தில் ஒரு நாள் என் அம்மா பஜனை ஆரம்பிப்பதற்கு சற்று முன்னால் பூஜைக்கான பொருட்கள் மற்றும் ஆரத்தி தட்டு ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். அப்பொழுது திடீரென்று,” இப்படியா எல்லாவற்றையும் தாறுமாறாக எடுத்து வைப்பது? ஏன் உன்னால் இவற்றை ஒழுங்காக எடுத்து வைக்க முடியாதா?”என்று சுவாமி கோபத்துடன் கேட்பது காதில் விழுந்தது. இதனைக் கேட்ட என் தாய் அதிர்ச்சி அடைந்தாள். இதுவரை இவ்வாறு கோபத்துடன் பேசியதே கிடையாது. வருத்தத்துடன் திரும்பி பார்க்கையில் அவளுக்கு மற்றொரு சந்தோஷமாக அதிர்ச்சி காத்திருந்தது. சர்வாலங்கார பூஷிதையாக அம்பாளின் தரிசனத்தை சாமி அவளுக்கு மட்டும் அளித்தார். தன்னுடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு கடிந்து கொண்டது போல் பேசினார் என்பதை புரிந்து கொண்டாள்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 3:


ஒரு தடவை பழைய மந்திரத்தில் ஒரு கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாம் முடிந்த உடனே அவர்கள் கொண்டு வந்திருந்த உபகரணங்கள் எல்லாம் திரும்ப எடுத்து போவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அச்சமயம் முதியவர் ஒருவர் அங்கு வந்து தன் கண்களை பரிசோதிக்கும் படி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார். அங்கிருந்த இரண்டு மருத்துவர்கள் , உபகரணங்கள் எல்லாம் கட்டி வைக்கப்பட்டதால் தங்களால் பார்க்க முடியாது என்று கூறிவிட்டனர். உடனே இந்த முதியவர் மூன்றாவது மருத்துவரிடம் சென்றார். அந்த மருத்துவர் இவரிடம் பரிதாபம் கொண்டு இவரது கண்களைப் பரிசோதித்தார். பிறகு அவருக்கு தேவையான மருந்துகளையும் எடுத்துக் கொடுத்தார். மேலும் இந்த முதியவரை “சாயிராம்” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் படி அறிவுரை கூறினார். மறுநாள் இந்த மருத்துவர்கள் மற்றும் சக ஊழியர்கள் அனைவரும் பிரசாந்தி நிலையம் மந்திரத்தில் சுவாமியின் பாத நமஸ்காரத்திற்கு அமர்ந்திருந்தனர். சுவாமி நேராக இந்த மூன்று மருத்துவர்களை நோக்கி வந்தார். தங்களிடம் வந்த அந்த முதியவரிடம் நீங்கள் என்ன கூறினீர்கள் என வினவினார். முதல் இரண்டு மருத்துவர்கள், தங்களிடம் உபகரணங்கள் இல்லாததால் அவரை பரிசோதிக்காமல் அனுப்பி விட்டதாக கூறினர். மூன்றாவது மருத்துவர், அவரை பரிசோதித்து மருந்துகள் கொடுத்து அனுப்பியதாக உரைத்தார். இதனைக்கேட்ட சுவாமி, “மேலும் நீ அவரை சாய்ராம் எனும் மந்திரத்தை உச்சரிக்க சொன்னாய் அல்லவா?” என்றார். அந்த மருத்துவரை பாத நமஸ்காரம் செய்துகொள்ளும்படி அன்புடன் கூறினார். மேலும் விபூதி வரவழைத்து அவரது நெற்றியில் பூசினார். ஒரு மோதிரம் கூட வரவழைத்து அவரது விரலில் போட்டார். பின்னர் அந்த மருத்துவர்களை பார்த்து, ”அந்த முதியவர் யார் என்று நினைத்தீர்கள்? அவர் நானேதான்!” என்று கூறினார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 4:


ஒரு தடவை நாங்கள் வீட்டிலே சுவாமிக்காக போளி தயார்செய்து புட்டபர்த்தி க்கு எடுத்துச் சென்றிருந்தோம். மாலை நேரம் அங்கு சென்று அடைந்தவுடன், நேராக மந்திரத்தில் மாடி அறைக்குச் சென்று சுவாமியை தரிசித்து, நாங்கள் கொண்டு வந்திருந்த போளியை சுவாமியிடம் சமர்ப்பித்தோம். மறுநாள் காலை அங்கு சென்றபோது ஒரு மேசையின் முன்னால் சுவாமி உட்கார்ந்து இருந்ததை பார்த்தோம். அந்த மேஜையின் மீது ஒரு காகிதம் விரிக்கப்பட்டு அதன்மேல் ஒரு போளிவைக்கப்பட்டு இருந்தது. அந்த போளியின் விளிம்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்தன. சுவாமி அதன் நடு பாகத்தை மட்டும் உண்டு கொண்டு இருந்தார். எங்களைப் பார்த்தவுடன், ”உங்களது போளி எப்படி இருக்கிறது என்று நீங்களே பாருங்கள். கண்ணம்மா! உன்னுடைய அம்மா இதனை தயார் செய்து கொண்டிருந்த போது, எவ்வளவு மெல்லியதாக முடியுமோ அவ்வளவு மெல்லியதாக தயார் செய்யும்படி நீ அவளிடம் கூறினாய். ஆனால் உன் அம்மா உன் வாயை மூடிக் கொள்ளும் படி உரைத்தார். மேலும், எப்படியும் சுவாமி இனிப்பு பண்டம் சாப்பிடப் போவதில்லை. ஆகையால் அது எப்படி இருந்தாலும் எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை” என்று உனக்கு பதிலளித்தார். நான் இப்பொழுது எனக்கு பிடிக்காத விதத்தில் தயார் செய்த ஒன்றை உண்ண வேண்டியிருக்கிறது. அதனால் தான் நான் நடு பாகத்தை உண்டு கொண்டு இருக்கிறேன்”, என்றார். உடனே என் அம்மா,” சுவாமி! நீங்கள்தான் இனிப்பு உண்பது இல்லையே?” என்றார். உடனே சுவாமி, ”அதைப்பற்றி உனக்கென்ன கவலை? நீ அவற்றை சரியாக செய்திருக்க வேண்டும். மற்றவற்றை என்னிடம் விட்டுவிடு” என்றாார். எங்களால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. சுவாமியும் எங்களுடன் சேர்ந்து வாய்விட்டு சிரித்தார். நாங்கள் அனைவரும் பாத நமஸ்காரம் செய்துவிட்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் அகன்றோம்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 5:

ஒரு தடவை  சாஸ்திரி என்ற ஒரு பக்தர் சுவாமியை பார்க்க  மந்திரத்தில் மாடிக்கு சென்றார். சுவாமியை தரிசித்து விட்டு திரும்பும் போது, ஜன்னல் மேடையில் இரண்டு பழங்கள் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தார். உடனே சுவாமியிடம் இவற்றை தான் எடுத்துக் கொள்ளலாமா  என்று கேட்டார்.  சுவாமி  அவரிடம்  அந்த பழங்களை கொடுத்து, ”நானாக  கொடுத்தால், அது ஒரு வரம், நீயாக கேட்டால், அது ஒரு ஆசை” என்று கூறினார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 6:


ஒரு நாள் புட்டபர்த்தியில் என் அம்மாவும் பாட்டியும் சுவாமிக்கு பாத பூஜை செய்தார்கள். அப்பொழுது சுவாமி.. "கமலாம்பா நா சிந்த தீர்ச்சவம்மா”(கமலாம்பா என் கவலைகளை தீர்த்து வை) என்ற பாட்டை பாடினார். உடனே என் பாட்டி, ”சுவாமி! உங்களுக்கு எப்படி இந்த பாட்டு தெரியும்?” என வினவினார். அதற்கு சுவாமி, ”நீ தினமும் கடவுளுக்கு விளக்கு ஏற்றி விட்டு சமையலறையின் கதவிற்கு பின்னால் அமர்ந்துகொண்டு இந்த பாட்டை பாடுவாய் அல்லவா?” என்றார். பிறகு பூஜை முடிந்தவுடன், நான் விதவை ஆதலால் ஆரத்தி எடுக்க மாட்டேன் என்று என் பாட்டி கூறினார். அதை கேட்ட சுவாமி, “நீங்கள் அனைவரும் என் குழந்தைகள். நான் விதவைகளுக்கும் மற்றவர்களுக்கும் இடையே பாகுபாடு செய்பவன் அல்ல. ஆகையால், நீயே ஆரத்தி எடு” என்று என் பாட்டியிடம் சொன்னார். அதன் பிறகு என் பாட்டி சுவாமிக்கு ஆனந்தமாக ஆரத்தி எடுத்தார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 7:


ஒரு நாள் சுவாமி மந்திரத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அச்சமயம் அங்கு நானும் மேலும் சில பக்தர்களும் இருந்தோம். சுவாமி எங்களை நோக்கி,” ஒரு பெண்மணி, விஷம் கலந்த வடைகளை எனக்கு வழங்கினார். அவற்றை உண்டுவிட்டு மந்திரத்திற்கு வந்து வாந்தி எடுத்து விட்டேன்” என்றார். உடனே நான்,” சுவாமி, அப்படிப்பட்டவர்களை ஏன் மந்திரத்திற்குள் அனுமதிக்கிறீர்கள்? மேலும் நீங்கள் அவரது வீட்டு நிகழ்ச்சிக்கு உதவும் படியாக பெரிய பாத்திரங்களை அனுப்பி இருக்கிறீர்கள்” என்று கேட்டேன். அதற்கு சுவாமி, ”அம்மாயி, இந்த மந்திரம் விஷத்திற்கு மறு உபகாரமாக அமிர்தத்தை கொடுக்கும். இங்கு வருவதற்கு யார் ஆசைப் படுகின்றாரோ அவரை நான் தடுக்கமாட்டேன். மக்களில் எவர் நல்லவர் எவர் கெட்டவர் என்று நான் பிரித்துப் பார்ப்பதில்லை. என்னை பொருத்தவரை எல்லோரும் ஒன்று தான்” என்று பதிலளித்தார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 8:


1961இல் சுவாமி பக்தர்களுடன் ஹரித்வார் சென்றிருந்தார். ஒரு நாள் மாலை, அனைவரும் அறையில் மௌனமாக உட்கார்ந்து இருந்ததை கவனித்தார். அவர்களை நோக்கி, *”ஏன் இவ்வாறு மௌனமாக உட்கார்ந்திருக்கிறீர்கள்?”* என்று வினவினார். அப்போது ஒரு பக்தர், ”நாங்கள் என்ன செய்வது?” என்று கேட்டார். அதற்கு சுவாமி, ”நீங்கள் புனித யாத்திரை செல்லும்பொழுது ஞாபகார்த்தமாக ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும். நான் உங்களுக்கு பணம் கொடுக்கிறேன்” என்றார். சுவாமி ஒவ்வொருவருக்கும் 100 ரூபாய் வழங்கினார். தனது உடல்ரீதியான உறவினர் கிஷ்டப்பாவிடமும் பணம் கொடுத்து அனுப்பினார். அனைவரும் சென்று திரும்பியவுடன், ஒவ்வொருவரும் என்ன வாங்கி வந்திருக்கிறார்கள் என்று சுவாமி பார்க்க ஆரம்பித்தார். கிஷ்டப்பாவிடம் கேட்டபொழுது அவர் தன்னிடமிருந்து பணத்தை யாரோ ஒரு பிக்பாக்கெட் பேர்வழி திருடிச் சென்று விட்டதாக அறிவித்தார். உடனே சுவாமி, ”அவன் ஒரு தொங்கா (திருடன்) என்றால் , நான்ஒரு கஜ தொங்கா( மகா திருடன்). இதோ, இந்த பணத்தை எடுத்துக்கொள்” என்று கூறி, தொலைந்துபோன அதே ரூபாய் நோட்டை திரும்பி கொடுத்தார்!

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 9:


ஒரு நாள், ஒரு பக்தருடைய திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுவாமி புட்டபர்த்தியில் இருந்து வெளியே செல்ல வேண்டி இருந்தது. பழைய மந்திரத்தில் இருந்த பக்தர்கள் இதனை அறிந்தவுடன் வருத்தமுற்றனர். சுவாமி சீக்கிரம் வந்துவிடுவதாக வாக்களித்துவிட்டு, அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் பக்தர்களை கவனித்துக்கொள்ள அறிவுறுத்தினார். மறுநாள் அந்த மேற்பார்வையாளர், சுவாமி அங்கு இல்லாததை மிகவும் மனதில் நினைத்துக்கொண்டு, சத்யபாமா கோயில் அருகே அமர்ந்து சுவாமியை எதிர்நோக்கி இருந்தார். மதியம் 12 மணி வாக்கில் சித்ராவதி நதியை நோக்கி பார்த்துகொண்டிருந்தார். அப்போது தூரத்தில் ஒரு ஆரஞ்சு நிற அங்கி தெரிந்தது. ஆமாம், சுவாமி தான் வெறும் கால்களுடன் சூடான மணலின் மீது நடந்து கொண்டிருந்தார். அவரது கருணையை என்னென்று சொல்வது?

இதனை பார்த்த மேற்பார்வையாளர் உடனே மந்திரத்தின் உள் சென்று சுவாமியின் வருகையை அனைவருக்கும் அறிவித்தார். பாத பூஜைக்கும் ஆரத்திக்கும் ஏற்பாடு செய்யும்படி சொல்லிவிட்டு சுவாமியின் பாதரட்சைகளை எடுத்துக்கொண்டு ஓடினார். சுவாமி அவைகளை அணிந்துகொண்டு மந்திரத்தை வந்தடைந்தார். அவர் பக்தர்களை நோக்கி ”என் காலில் முளைத்திருக்கும் கொப்புளங்களை பாருங்கள். நான் ரிசப்ஷனுக்கு தங்கவில்லை. யாரிடமும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஏனென்றால் நீங்கள் அனைவரும் எனது சீக்கிர வரவிற்காக இடைவிடாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தீர்கள்” என்றார். பிறகு மந்திரத்தில் உள்ள விக்ரகங்களுக்கு ஆரத்தி கொடுக்கச் சொன்னார். பிறகு அங்கிருந்த ஓம் என்று சொல்லப்படும் கல்லின் மீது நின்றுகொண்டார். பிறகு நாங்கள் அவருக்கு ஆரத்தி கொடுத்தோம். அப்போது சுவாமி, ”நன்னூ பாலிம்ப நடச்சி ஒச்சிதிவோ”( எங்களைக் காப்பாற்ற நீ நடந்து வந்தாயோ) என்கிற தியாகராஜர் கீர்த்தனையை, கருணை ததும்பும் முகத்துடன் எங்களை நோக்கி பாடினார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 10:


ஸ்வாமி எங்கள் இருவரையும் ஒருசில நொடிகள் உற்று நோக்கிவிட்டு, பிறகு எங்களிடம் “இன்னமும் நீங்கள் இப்படியே இருந்தால், நான் எப்பொழுது உங்கள் சித்தத்தினுள் புகுவது? நீங்கள் இன்னும் சற்றே அதிகமாக உங்களை சரிசெய்து கொள்ளவேண்டும்” என்றார். நாங்கள் உடனே, “ ஸ்வாமி! நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்களே கூறுங்கள். நாங்கள் உங்களை சரண் அடைந்துவிட்டோம்” என்றோம். அதற்கு ஸ்வாமி, “நானே எல்லாவற்றையும் செய்துவிட்டால், உங்களுக்கு செய்வதற்கு என்ன இருக்கிறது ?” என்றார். அதற்கு நான், “ஸ்வாமி, நாங்கள் உங்களுடையவர்கள்” என்றேன். ஸ்வாமி, “ஆமாம், நீங்கள் என்னுடையவர்களாதலால், ஒரு சிறிய தவறுக்குக் கூட நான் உங்களை தண்டிப்பேன். நான், மற்றவர்களை, பெரிய தவறுகள் செய்தால்கூட, தண்டிக்க மாட்டேன். ஒரு அன்னை தன் குழந்தைகளை மட்டுமே தண்டிப்பாளே தவிர, மற்ற குழந்தைகளை அல்ல.” என்று விளக்கினார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 11:


ஒருநாள் சில பக்தர்கள் கூடி ஸ்வாமிக்குப் பாதபூஜை செய்துகொண்டிருந்தனர். அச்சமயம் ஸ்வாமி, ”பாதபூஜை செய்யும்போது நீங்கள் பாடவேண்டும்” என்றார். தங்களுக்குப் பாடத் தெரியாது என்று பதிலளித்தனர். நான் அப்போது ஸ்வாமிக்கு அருகில் அமர்ந்திருந்தேன். ஸ்வாமி என்னைப் பாடச்சொன்னார். நான் கன்னடத்தில், “கலியுகதல்லி ஹரிநாமவ நெனெதெரே குலகோடிகளு உத்தரிஸுவவு" (கலியுகத்தில், ஹரியின் நாமத்தை நினைப்பதால் பல தலைமுறைகள் உய்விக்கப் படுகின்றன) என்ற பாட்டைப் பாடினேன். ஸ்வாமி நன்கு உன்னிப்பாகக் கேட்டுவிட்டு, “பார்த்தீர்களா! புரந்தரதாஸர் கூட, இறைவன் நாமத்தை நினைவில் கொள்வது ஒன்றே போதுமானது , என்று சொல்லியிருக்கிறார். நானும் உங்களுக்கு அதையே சொல்கிறேன். இறைவன் நாமம் ஒன்றே போதும்” என்று உரைத்தார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 12:


ஒரு நாள் சுவாமி பழைய மந்திரத்தின் பின்புறம் உள்ள வராண்டாவில் உட்கார்ந்திருந்தார். அச்சமயம், வசதிபடைத்த ஒரு பெண் பக்தை, சுவாமியிடம் வந்தாள். அவள் கொண்டு வந்திருந்த தின்பண்டத்தை சுவாமியிடம் கொடுத்து ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினாள். இந்த தின்பண்டம் சுவாமிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சுவாமி அதனை வாங்கிக்கொண்டார். ஆனால், அதனை மிகவும் சாதுரியமாக ஒரு துண்டைப் போட்டு மறைத்து விட்டார். அதற்கு பதிலாக பாக்கு தூள்களை மென்றுகொண்டிருந்தார். தின்பண்டத்தை கொடுத்த பெண்மணி அதனை கவனிக்கவில்லை. அவள் கொடுத்த தின்பண்டம் மிக நன்றாக இருக்கிறது என்று வேறு அவளிடம் கூறினார். ஒரு தட்டில் சில தின்பண்ட துண்டுகளை எடுத்துவைத்து, அவற்றை பிரசாதமாக எடுத்துக் கொள்ளும்படி கூறினார். அவள் சென்ற பிறகு சுவாமி, “இந்த தின்பண்டத்தை தயார் செய்ய வீட்டில் இருக்கும் ஊழியர்களை மிகவும் கடினமாக வேலை வாங்கினாள். இத்தகைய படையல்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறினார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 13:


செட்டியின் வீட்டில் காணப்பட்ட, தியானம் செய்யும் பாணியில் அமைந்திருந்த அவரது புகைப்படத்தைப் பார்த்து குறிப்பிடுகையில், சுவாமி, "நான் ஒரு யோகியா என்ன? நான் ஏன் தியானம் செய்ய வேண்டும்? அந்த புகைப்படத்தை அகற்றும்படி சொன்னேன். அதைப் பார்க்கும் மக்கள், சுவாமி கூட தியானம் செய்வார் என்று நினைப்பார்கள்!" என்றார். ஜபம் செய்வதற்கான சரியான முறையை சுவாமி செய்துகாண்பிக்கும்போது, பெங்களூரில், ஒரு பக்தரால் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. நாங்கள், "சுவாமி!, பூஜை செய்வதற்கு எங்கள் வீட்டில் அதே புகைப்படத்தைப் பயன்படுத்துகிறோம்!" என்று கூறினோம். அவர் உடனடியாக "அந்த புகைப்படத்தை அகற்று" என்றார். நாங்கள், "சுவாமி!, எந்த புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்த வேண்டும்?" என்று கேட்டோம். சுவாமி, "நீங்கள் விரும்பும் வேறு எந்த புகைப்படத்தையும் வைத்துக்கொள்ளலாம்" என்றார். நான் அறையில் ஒரு புகைப்படத்தை சுட்டிக்காட்டி இது நன்றாக உள்ளது என்று சொன்னேன். அந்த புகைப்படத்தில், சுவாமி, மந்திரின் பஜன் மண்டபத்தில், ஷீர்டி பாபா மற்றும் பர்த்தி பாபாவின் புகைப்படங்களுக்கு இடையில், ஒரு வெள்ளி குடையுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்,. உடனே சுவாமி, "நாங்கள் இருவரும் இருப்பதால் தானே?" என்று கேட்டார். நான் சொன்னேன்: "இல்லை சுவாமி, வெள்ளி குடையின் கீழ் அரியணையில் அமர்ந்திருப்பது மிகவும் பிரமாதமாக இருக்கிறது". அதற்கு பதிலளித்த சுவாமி "அப்படியானால், நீங்கள் உங்கள் இடத்திற்குச் செல்வதற்கு முன்பு அதை உங்களுக்குக் கொடுப்பேன்" என்றார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 14:


ஒருதடவை பழைய மந்திரத்தில் ஸ்வாமி , சிவராத்திரி நாள் அன்று தான் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்து பிக்ஷை கேட்கப்போவதாக அறிவித்தார். அப்போது அங்கு 30 முதல் 40 குடும்பங்கள் வரை தங்கியிருந்தனர். அன்று உபவாசம் ஆதலால், எல்லோரும் ஒருசில உணவுகளே தயார் செய்திருந்தனர். ஆனால், என் அம்மாவோ என் தங்கை ராதாவிற்காக, சாதமும் சாம்பாரும் செய்திருந்தார். ஸ்வாமி, ஒவ்வொரு குடும்பத்திடமும் வந்து, தான் நீட்டிய கையில் பக்தியுடன் அளிக்கப்பட்ட கைப்பிடி உணவை அன்புடன் ஏற்று அருந்தினார். பின்னர், தன் உள்ளங்கைகளில் ஊற்றப்பட்ட நீரைக் குடித்துவிட்டு கைகளைக் கழுவினார். என் அம்மாவிடம் வந்து, சாதத்தையும் சாம்பாரையும் நன்கு கலந்து மூன்று கைப்பிடி கொடுக்கச் சொன்னார். பிறகு அதேபோல் நீர் அருந்தி கைகளைக் கழுவினார். ஒரு பக்தர் ஸ்வாமியிடம், “ஸ்வாமி, உங்களால் எப்படி அனைவரிடமுமிருந்து உணவு வாங்கி உண்ணமுடிகிறது ?” என்று கேட்டார். அதற்கு ஸ்வாமி, “உங்கள் அனைவராலும் என் வயிற்றை நிரப்பமுடியுமா என்ன? சிவராத்திரி அன்று, சிவன் எல்லோர் வீட்டிற்கும் வந்து பிக்ஷை கேட்பார்” என்றார். பக்தர்கள் ஸ்வாமிக்கு பிக்ஷையளிப்பதை விரும்பவில்லை என்றாலும், அவரது ஆணைக்கு அடிபணிந்தனர். இதன்மூலம் ஸ்வாமியும் பக்தர்களும் ஆனந்தம் அடைந்தனர்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 15:


ஒருநாள், புட்டப்பர்த்தியில் வேதபாடசாலையில், ஆசிரியர்கள் யோகாசனங்கள் கற்பித்துக் கொண்டிருந்தனர். சுரேஷ் சிரசாசனம் செய்துகொண்டிருந்தான். இந்த ஆசனத்தில் கால்கள் இரண்டும் நேராக மேல்நோக்கி இருக்கவேண்டும். ஆனால், அவனது கால்கள் மேலே சிறிது மடங்கியிருந்தன. அப்போது அங்கு வந்த ஸ்வாமி, அவனது கால்களைத் தன் கைகளால் நேராகப் பிடித்துக்கொண்டார். ஸ்வாமி தன் கால்களைப் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த சுரேஷ் பயந்துபோய்விட்டான். அவன் ஸ்வாமியிடம், “ஸ்வாமி, நீங்கள் என்னருகில் நின்றிருப்பதை நான் கவனிக்கவில்லை. என்னை மன்னிக்கவேண்டும்” என்று வேண்டினான். ஸ்வாமி, “ஆமாம், நீ என்னைப் பார்க்கவில்லை. நீ விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் உன் கால்களைப் பற்றிக்கொண்டேன்“ என்றார். ஸ்வாமியின் ப்ரேமையை என்னென்று சொல்வது ? 
(சுரேஷ் என்பவர் , ஸ்ரீமதி. கருணாம்பா அவர்களின் மகனாவார்).

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 16:


ஒருநாள் ஸ்வாமி வேதபாடசாலையின் தாழ்வாரத்தைக் கடந்து அச்சகத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவ்விடத்தில் மாணவர்கள் தங்கள் நோட்டுப் புத்தகங்களை விட்டுச் சென்றிருந்தனர். அவை அங்கும் இங்குமாகச் சிதறிக்கிடந்தன. இதனைப் பார்த்த ஸ்வாமி, ஒன்றின் மீது கூட தன் கால்கள் படாமல் மிகவும் ஜாக்கிரதையாக நடந்துசென்றார். கல்வி சம்பந்தப்பட்டவைகளான புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் மீது கால்களை வைத்தல் கல்விக் கடவுளான ஸரஸ்வதி அன்னையை அவமதிப்பதற்கு ஒப்பாகும் என்ற உண்மையை நமக்கு உணர்த்தும் வகையில் தான் நடந்து காட்டி நமக்கு போதித்தார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 17:


மற்றொரு நாள் மாலை பஜனைக்குப் பிறகு அனைவரும் உணவு எடுத்துக்கொண்டு மந்திரத்திற்கு அருகில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது ஸ்வாமி, எங்களிடையே வந்து அமர்ந்து ஒரு சம்பவத்தை விவரித்தார்: 

“ஒரு யோகி இமயமலையின் அடிவாரத்தில் த்யானம் செய்துகொண்டிருந்தார். அவரைப் பின்பற்றும் மக்கள் பலர் இருந்தனர். ஒருநாள் அவர் த்யானத்தில் இருந்தபோது, விஷ்ணு சங்குசக்ரதாரியாக அவர்முன் தோன்றி, “நான் தென்னிந்தியாவில் தங்கியுள்ளேன். அங்கு வந்து என்னைப் பார்” என்று கூறி மறைந்தார். யோகியும் பல இடங்கள் சுற்றித் திரிந்து பெங்களூர் வந்து சேர்ந்தார். ஒரு தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது, அவர் மக்கள் கூட்டம் ஒன்றை ஒரு வீட்டில் பார்த்தார். அப்போது அவர், நான் படிக்கட்டில் கீழே இறங்கிவருவதைப் பார்த்தார். உடனே நான்தான் அவரது த்யானத்தில் வந்ததாக உணர்ந்தார். அவ்ர் உடனே என்னை நோக்கி ஓடிவந்து என்னை கட்டி அணைத்துக்கொண்டார். இனி ஒருநொடி கூட தன்னால் என்னைவிட்டு பிரிந்து இருக்கமுடியாது என்றும், தன்னை என் கூடவே வைத்துக் கொள்ளும் படியும் வேண்டினார். திடீரென்று அப்படி செய்தால் அவரைப் பின்பற்றுபவர்கள் அனாதைகளகிவிடுவர் ஆதலால், தன்னுடைய ஆஸ்ரமத்திற்கே திரும்பிச் சென்றுவிடுமாறு அறிவுறுத்தினேன். மேலும் அங்கே சில காலம் தங்கியிருக்கும்படியும், பிறகு நான் கூப்பிட்டு அனுப்புகிறேன், என்றும் சொன்னேன். நான் பிறகு அவரை சமாதானப் படுத்தி அனுப்பினேன். என்னைச் சுற்றியிருந்த பக்தர்களுக்கு இந்த சம்பவத்தின் முக்கியத்துவம் புரிபடவில்லை. அவர்களுக்கு நான் விவரமாகச் சொல்லவேண்டியதாயிற்று.”

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 18:


ஒருநாள் மாலை, ஸ்வாமி ப்ரசாந்திநிலையத்தில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தார். அப்போது, சுவற்றில் இருந்த பென்சிலால் எழுதப்பட்டிருந்த சில குறிப்புகளைப் பார்த்தார். (நான் ஞாபகார்த்தத்திற்காக, எவ்வளவு பால் வாங்கியிருக்கிறேன் என்பதைக் குறித்துவைத்திருந்தேன்). ஸ்வாமி அவற்றை அழித்துவிடுமாறு பணித்தார், அதற்கு பதிலாக ஒரு நோட்டுப்புத்தகத்தைப் பயன்படுத்தச் சொன்னார். மேலும் அவர், “தலைமுடி, நகம், தூசி, ஒட்டடை, சிகரெட்புகை, சுவற்றில் கிறுக்கல்கள் ,போன்றவை துர்தேவதைகளை வரவேற்பவைகளாகும். கடவுள் எப்போதும் சுத்தமான இடங்களில்தான் வசிப்பார்” என்று விளக்கினார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 19:


ஒரு தடவை ஸ்வாமி, எங்களையும் மற்றும் சிலரையும் இன்டெர்வியுவிற்கு 
அழைத்தார். அவர்களில் ஒரு வயதான தம்பதியரும் அவர்களுடைய மகனுடன் வந்திருந்தனர். அந்த அறையில், இந்த தம்பதியினர் முதலில் பாதநமஸ்காரம் செய்தனர். பின்னர், அவர்களது மகன் பாதநமஸ்காரம் செய்ய முற்படுகையில், ஸ்வாமி, தன் கால்களைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு, மிகக் கடுமையான முகத்துடன் அவனை நோக்கி , “என்னைத் தொடாதே!” என்று கூறினார். இதனைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். “ஏன் ஸ்வாமி ?” என்று அழுது வினவினார் அவனது அம்மா. அதற்கு ஸ்வாமி, “தாய்தந்தையரை யார் மதிக்காமலும் மற்றும் அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமலும் இருக்கின்றார்களோ அவர்களை எனக்குப் பிடிக்காது. அவர்கள் பாதநமஸ்காரம் செய்ய அருகதையற்றவர்கள்” என்றார். உடனே தந்தையும் தாயுடன் சேர்ந்துகொண்டு, ஸ்வாமியிடம் “ஸ்வாமி, தயைகூர்ந்து அவனை மன்னித்து, அறிவுரை கூறுங்கள், அவனுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து அவனைக் காத்து அருளுங்கள்“ என்று வேண்டினார். அவரது மகனும், “ஸ்வாமி, இனிமேல் இத்தகைய தவறுகளை நான் செய்யமாட்டேன். நான், அவர்களை மதித்து, அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்வேன். இதுவரை நான் செய்த தவறுகளை மன்னித்து, பாதநமஸ்காரம் செய்துகொள்ள அனுமதியுங்கள்” என்று மனமார வேண்டினான். ஸ்வாமி, “இனிமேல் ஒழுங்காக நடந்துகொள்வேன் என்று சத்தியம் செய்கிறாயா? அப்படியென்றால், முதலில் உனது பெற்றோரின் கால்களில் விழுந்து என் முன்னால் அவர்களிடம் மன்னிப்புக் கேள். பிறகு பார்க்கலாம்” என்றார். இவ்வாறு ஸ்வாமி, அவனைத் தன் தீயசெயல்களுக்காக வருத்தம் தெரிவிக்கச் செய்து பெற்றோரின் கால்களில் விழச் செய்தார். அதன் பிறகே அவனை பாதநமஸ்காரம் செய்ய அனுமதி அளித்தார். மூவரும் நன்றி உணர்வுடன் கூடிய ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 20:


ஒரு தடவை ஸ்வாமி எங்களிடம், “கடவுள் பக்தர்களிடமிருந்து விலகி இருக்க முடியாது. க்ருஷ்ணர் ஒரு நிமிடமாவது தன் பக்தர்களிடமிருந்து விலகி இருந்தாரா? அவரது முழு வாழ்க்கையும் தன் பக்தர்களின் மத்தியில் தான் செலவிடப்பட்டது. நானும் எப்போதும் என் பக்தர்களின் அருகில் இருந்து தான் காலம் கழிக்கிறேன். பலருக்கு இது தெரிவதில்லை. இப்போது ஒரு மாதமாக, நான், என்னுடைய ப்ரேமை எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை அவர்கள் உணர்வில் கொள்ளவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளேன். நிர்மலமான ப்ரேமையுடன் யார் வேண்டுமானாலும் என்னிடம் வேண்டட்டும். நான் அவ்ர்களிடம் எவ்வளவு அருகாமையில் உள்ளேன் என்பதை உணரச் செய்வேன். நீங்கள் அடிக்கடி,“ ஸ்வாமி, நீங்கள் எங்களை மறந்துவிட்டீர்கள்” என்று சொல்கிறீர்கள். அது உண்மையாயின், நீங்கள் இப்போது என் முன்னால் உட்கார்ந்து, இவ்வாறு புகார் கூறிக்கொண்டு இருக்க மாட்டீர்கள். என்னுடைய ப்ரேமையே உங்களை என்னிடம் வரவழைத்துள்ளது. இன்னொன்று சொல்லவிரும்புகிறேன். தினமும், பகலில் நீங்கள் எவ்வளவு நேரம் என்னைத் த்யானிக்கிறீர்களோ, அத்தனை நேரம் இரவில் நீங்கள் பரமாத்மாவுடன் (என்னுடன்) ஒன்றியிருப்பதற்கு நான் சலுகை வழங்குகிறேன். அதன் நிரூபணத்தை எவ்வாறு அறிந்துகொள்வது என்றால், காலையில் எழுந்தவுடன் உங்கள் மனம் உலகவிஷயங்களில் செல்லாமல் கடவுளைப் பற்றியே நினைக்கும், மேலும் உங்கள் உடல் மிகவும் லேசாகவும் , எந்தவிதமான வலிகளும் மற்ற தொந்தரவுகளும் இல்லாமல் இருக்கும்.” என்று அருளுரை வழங்கினார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 21:


கோடையில், ஒரு நாள், பௌர்ணமி அன்று, புட்டப்பர்த்தியில், ஸ்வாமி , அங்கிருந்த சுமார் 50 பக்தர்களை , கலந்த சாதம் மற்றும் சில சிற்றுண்டிகளையும் தயார் செய்துகொண்டு ப்ரசாந்தி மந்திரத்திற்கு முன்னால் காத்திருக்கப் பணித்தார். நாங்களும் சூரியன் மறையும் வேளையில் அவ்வாறே தயாராக இருந்தோம். ஸ்வாமியும் அங்கு வந்து, மந்திரத்தின் முன் வட்டவடிவில் எங்களை அமரச்செய்தார். அவர் அதன் நடுவில் அமர்ந்தார். மிருதுவான அந்த சந்திரனின் வெளிச்சத்தில், பக்தர்களுடன் அன்புடன் அளவளாவினார். ஒவ்வொருவரிடமும் நகைச்சுவையாகப் பேசினார்; அவர்களுடைய கேள்விகளுக்கும் பதிலளித்தார். பின்னர் ஒருசில பக்தர்கள் மற்ற எல்லோருக்கும் உணவு பரிமாறினர். ஸ்வாமியும் எங்களுடன் சேர்ந்து உணவு அருந்தினார். அதன் பிறகு எங்கள் எல்லோரையும் வராண்டாவில் உட்காரச்செய்து எங்களுக்கு ஏற்கனவே அவர் சொல்லிக்கொடுத்திருந்த சிவ ஸ்தோத்திரத்தைப் பல தடவை சொல்லச் செய்தார்:

ஈச கிரீச நரேச பரேச

மஹேச சுரேசய பூஷண போ

சாம்பசதாசிவ சம்போ சங்கர

சரணம் மே தவ சரணயுகம்

தன்னுடைய அறைக்குச் செல்வதற்கு முன்னர், “எப்போதும் இவ்வாறு உங்களை ஆசீர்வதிப்பதற்கு என்னிடம் வேண்டிக்கொள்ளுங்கள்” என்று ப்ரேமையுடன் கூறினார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 22:


ஒருநாள், ஸ்வாமி, ப்ரசாந்தி மந்திரத்தின் பால்கனியில், நின்றுகொண்டு , கீழே நின்றுகொண்டிருந்த சில பக்தர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கிராமவாசி, தன் மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டு மந்திரத்தைத் தாண்டி ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி கோவிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். (அன்றைய நாட்களில் மந்திரத்தைச் சுற்றி மதில்சுவர் இல்லை). ஸ்வாமி , கோவில் அருகே எந்தத் திசையில் அவர் திரும்பவேண்டும், என்று அந்த கிராமவாசியிடம் கூறினார். சற்றுநேரம் கழிந்தபின்னர், அந்த மாட்டுவண்டி தவறான திசையில் திரும்புவதைக் கவனித்த ஸ்வாமி பக்தர்களிடம், “இப்போது நான் கிராமவாசியின் மனத்துள் புகுந்து வேலைசெய்து, நான் ஏற்கனவே சுட்டிக்காட்டிய திசையில் அவர் திரும்பும்படி செய்யவேண்டும்” என்றார். இதனை ஸ்வாமி சொல்லிமுடிப்பதற்குள், அந்த வண்டிக்காரர் திடீரென்று தன் திசையை மாற்றிக்கொண்டு, ஸ்வாமி சொன்ன சரியான திசையில் செல்வதை கவனித்தனர்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 23:


சாயங்கால வேளைகளில் ஸ்வாமி பக்தர்களை ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் சென்றுவிட்டுத் திரும்புகையில் சிறுத்தைகள் நதியின் அருகில் உள்ள குன்றின்மேலிருந்து பாதி தூரம் கீழே நதியை நோக்கி இறங்கத் தொடங்கின. சில பக்தர்கள் அரண்டுபோய், மந்திரத்தை நோக்கி ஓடத் தொடங்கினர். தான் அருகில் இருக்கையில் சிறுத்தைகள் யாரையும் தாக்கப்போவதில்லை என்றுகூறி அவர்களை அமைதிப் படுத்தினார். ஆனால் சிலர் மிகுந்த பயத்தினால் ஸ்வாமியின் பேச்சைக் கேட்காமல் ஓடினர். ஸ்வாமி அந்தச் சிறுத்தைகளை நோக்கி ஒரு சில கணங்கள் உற்றுப் பார்த்தார். அந்தச் சிறுத்தைகள் அப்படியே நின்று பார்த்துவிட்டு, கீழே இறங்காமல், மேல்நோக்கி நடந்து, குன்றின் மறுபக்கம் சென்றுவிட்டன.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 24:


ஒரு நாள் ஸ்வாமி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாங்கள் அவரைச் சுற்றி நின்றிருந்தோம். தன்னிடம் மிகுந்த சுதந்திரத்துடன் பேசும் பக்தர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் , “நான் உங்களிடம் மிகவும் சுதந்திரமாகவும் சாதாரணமாகவும் பேசினாலும், நீங்கள் அதே தோரணையில் என்னிடம் பேசக்கூடாது. உங்களுடைய சில சொற்களுக்கு என்னிடமிருந்து எத்தகைய எதிர்வினைகள் இருக்கும் என்று முன்னரே அறிவது கடினம். ஒரு மஹாத்மா, பாம்பு அல்லது ஒரு நதிக்கரை அருகில் இருக்கும்போது நீங்கள் எப்போதும் அதிகம் ஜாக்கிறதையாக இருத்தல் அவசியம்” என்றார். 

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 25:


சாஸ்திரி என்னும் ஒருவர் பர்த்தியில் சிலகாலம் தங்கி இருந்தார். ஒருநாள் அவர் ஸ்வாமியைப் பார்ப்பதற்கு மந்திரத்தின் முதல் மாடிக்குச் சென்றார். ஸ்வாமி அவரிடம் தன்னுடைய ஒரு போட்டோவைக் கொடுத்து, அதனை வைத்துக்கொள்ளுமாறு கூறினார். அவரும் அதனைத் தன் சூட்கேஸில் வைத்துக்கொண்டார். ஒரு தடவை அவரது மகள் பர்த்திக்கு வந்தபோது அந்த போட்டோவைப் பார்த்தவுடன் தான் எடுத்துக்கொண்டு சென்றார். அவர் அதனைத் தன் வீட்டில் சமயல் அறையில் உள்ள திறந்த அலமாரியில் வைத்தார். அதன் பிறகு தினமும் சாஸ்திரி, ஸ்வாமியின் அறைக்குச் சென்ற போதெல்லாம் அவரது மகளின் வீட்டில் அன்று சண்டை நடந்ததாகவும், மகளுக்கும் மாமியாருக்கும் இடையே எத்தகைய காரசாரமான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்ற எல்லா விவரங்களையும் ஸ்வாமி அவரிடம் விவரிப்பது வழக்கமாகியிருந்தது. அப்போதெல்லாம் சாஸ்திரி அவர்கள் ஸ்வாமியிடம், “இவற்றையெல்லாம் ஏன் என்னிடம் விவரிக்கிறீர்கள்? அவை அவர்களுக்கு இடையில் உள்ள தனிப்பட்ட விஷயம். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும்” என்பார். ஸ்வாமி உடனே, “இல்லை இல்லை, உனக்குத் தெரியப்படுத்துகிறேன், அவ்வளவுதான்” என்று கூறுவார். சிலநாட்களுக்குப் பின் அவரது மகள் பர்த்திக்கு வந்தார். அவர் தன் தந்தையிடம், வீட்டில் நடந்த வாக்குவாதங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்தார். சாஸ்திரி அவர்கள், ஸ்வாமி தன்னிடம் இவை அனைத்தையும் அப்படியே தன்னிடம் கூறியிருந்ததை நினைந்து மிகுந்த வியப்பில் ஆழ்ந்தார். அன்று அவர் ஸ்வாமியிடம் சென்றிருந்தபோது, ஸ்வாமி சிரித்துக்கொண்டே, “நான் என்ன, உன் மகள் வீட்டின் சமையல் அறையில் சும்மா உட்கார்ந்திருந்தேன் என்று நினைத்தாயா? அங்கு நடக்கும் எல்லா சண்டைகளையும் பார்த்துக்கொண்டுதானிருந்தேன்” என்றார்!

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 26:


பர்த்தியில் இருக்கும் எங்களது நண்பர்களில் ஒருவரான ஸ்ரீமதி. நாகமணி வயிற்று வலியால் அவதிப் பட்டுக்கொண்டிருந்தார். ஸ்வாமி அவரது மகளின் கனவில் தோன்றி, அம்மாவிற்கு அறுவை சிகிச்சை செய்துவிட்டு, ஒரு பெரிய புழுவை மகளிடம் கொடுத்து அதனைத் தூக்கிப் போடச்சொன்னார். மறுநாள் , தனது அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை மிகுந்த ஆச்சரியத்துடன் நோக்கினார். தனக்கு வந்த கனவை மிகுந்த சந்தோஷத்துடன் அம்மாவிடம் விவரித்தார். அன்று வரை, அவரது அம்மா வலியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். மேலும் சிகிச்சைக்காக அபரிமிதமான தொகையைச் செலவிட்டிருந்தார். ஸ்வாமி இவ்வாறு மிகுந்த கருணையுடன் தன் அம்மாவை குணப்படுத்தினார் என்று எங்களிடம் வந்து ஆனந்தமாக விவரித்தார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 27:


ஒருநாள், வியாபாரத்தைத் தொழிலாகக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பழைய மந்திரத்திற்கு வந்தனர். தங்களுக்குச் செல்வம் கொழிக்கவேண்டும் என்று ஸ்வாமியிடம் வேண்டினர். அவர்கள் புறப்படுவதற்கு முதல்நாள் ஸ்வாமி ஒரு தேங்காயை ஸ்ருஷ்டித்து, அதனுள் லக்ஷ்மிதேவியின் தங்க விக்ரஹம் இருப்பதாகக் கூறினார். அவர்கள் வேண்டுதல் நிறைவேற அந்த தேங்காயை தினமும் பூஜை செய்யும்படி அறிவுறித்தினார். மேலும், அந்தத் தேங்காயை உடைத்துவிடக் கூடாது என்று எச்சரித்தார். ஸ்வாமி அதைக் குலுக்கியபோது உள்ளே ஏதோ ஒன்று நகரும் சப்தத்தை அவர்கள் கேட்டனர். மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் புட்டப்பர்த்தியை விட்டு நீங்கி பெனுகொண்டா ரயில் நிலையத்தை அடைந்தனர். உள்ளே இருக்கும் விக்கிரஹத்தைப் பார்த்துவிடவேண்டும் என்ற அளவுகடந்த பேராசையுடன், அந்தத் தேங்காயை அங்கேயே உடைத்தனர். ஒரு சிறிய தங்கத்தினால் ஆன லக்ஷ்மி விக்கிரஹம் உடனே அதிலிருந்து வெளிப்பட்டு, மேல்நோக்கிப் பறந்து வானில் சென்று மறைந்துவிட்டது. இதனை எதிபாராத அவர்கள் மிகுந்த சோகத்துடன் திரும்பவும் புட்டப்பர்த்திக்கு விரைந்தனர். நடந்த எல்லாவற்றையும் அவர்கள் ஸ்வாமியிடம் விவரித்தனர். “இத்தகைய தவறை மீண்டும் செய்யமாட்டோம், ஸ்வாமி அதனை திரும்பப் பெற்றுத் தரவேண்டும்” என்றும் வேண்டினர். ஸ்வாமி , “நீங்கள் எனது எச்சரிக்கையை மதிக்கவில்லை. ஆதலால், அதனைத் திரும்பவும் உங்களுக்குக் கொடுக்கமாட்டேன்” என்று கூறிவிட்டார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 28:


ஓருநாள், ஸ்வாமி பக்தர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இரண்டு பக்தர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதற்கு ஸ்வாமியிடம் அனுமதி வேண்டினர். அவர்களைப் பார்த்துக்கொண்டே ஸ்வாமி, “மஞ்சிதி கானி" (நல்லதே நடக்கட்டும்) என்றார். பக்தர்கள் ஸ்வாமி இவ்வாறு சொல்வதை இதுவரை கேட்டதில்லை. அவர்கள் கிளம்பிய பிறகு, சில பக்தர்கள், ஏன் அவ்வாறு கூறினீர்கள் என்று ஸ்வாமியிடம் வினவினர். ஆனால் ஸ்வாமி அதற்கு பதில் அளிக்கவில்லை. சில நேரம் கழித்து, அந்த இருவரும் , வேகமாக திரும்ப வந்து, ஸ்வாமியின் கால்களில் விழுந்தனர். “ஸ்வாமி, நீங்கள் தான் நிச்சயமாக எங்களை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளீர்கள். நாங்கள் ஒரு சிறிய மேட்டில் ஏறிக்கொண்டிருந்தோம். அதன் உச்சியை நெருங்கியவுடன் திடீரென்று மேட்டின் மறுபக்கத்திலிருந்து ஒரு பெரிய நாகம் படமெடுத்ததைப் பார்த்தோம். அப்போது அதன் தலை எங்கள் முகங்களிலிருந்து ஒரு சில அங்குல தூரமே இருந்தது. அது மட்டும் எங்களைத் தீண்டியிருந்தால் நாங்கள் நிச்சயமாக உயிரிழந்திருப்போம். நாங்கள் உடனே “ஸ்வாமி! ஸ்வாமி!” என்று உரக்கக் கூவினோம். உடனே அந்த நாகம், கீழே இறங்கிச் சென்றது” என்று கூறினர். ஸ்வாமி, “அதனால்தான், நல்லது நடக்கட்டும் என்று சொன்னேன்” என்றார். மேலும் அவர் பக்தர்களை நோக்கி, “எப்போதும் யாரேனும் உங்கள் வீட்டை விட்டுச் செல்லும்போது, நீங்கள் அவர்களுக்கு நன்மைகள் நடக்கட்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 29:


ஒரு தடவை ஸ்வாமி தன்னைச் சுட்டிக்காட்டிக்கொண்டு, என் தாயாரிடம் “இந்தப் பழம் எதிர்காலத்தில் மைசூர் ராஜ்யத்தில் சன்னப்பட்டனா என்ற ஏரியாவில் பிறக்கும். நீ ஏன் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறாய்? உன் இரண்டு குழந்தைகளையும் காப்பது என்னுடைய பொறுப்பு. நீ இறந்தால் உனது சொத்துக்களை அவர்கள் இருவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுப்பேன். இனி நிம்மதியாக இரு” என்றார். சிறிது நேரம் கழித்து, “நாமகிரியம்மா, ராதாம்மாவும், கண்ணம்மாவும் யாருடைய குழந்தைகள் ?” என்று கேட்டார். அதற்கு அவர், “என் குழந்தைகள்” என்றார். ஸ்வாமி வியப்பான முகத்துடன், “ஓ அப்படியா? நான் என் குழந்தைகள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றார். என் தாயார் மிகவும் வெட்கித்துப் போனார். அப்போது எங்களால் அவரது வார்த்தைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. பலவருட அனுபவங்களுக்குப் பின் அவர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதைப் புரிந்துகொண்டோம்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 30:


ஒரு தடவை ஸ்வாமி கீழ்க்கண்ட நிகழ்வை எங்களுக்கு விவரித்தார்:

“ஏலூரு என்ற ஊரிலிருந்து ஒரு நோயாளி வந்திருந்தார். பல மருத்துவர்களை அணுகிப் பல லட்சங்களை செலவு செய்தும் எந்த பலனும் கிட்டவில்லை. இறுதியாக இங்கு வந்தார். மருத்துவர்களிடம் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தார் என்று சோதிக்க நினைத்தேன். ஸ்ரீ ஸத்யஸாயி மருத்துவமனையின் மெடிகல் ஆஃபீஸரான டா.வரத ப்ரம்மனிடம் அந்த நோயாளிக்குத் தேவையான ஊசியை செலுத்தச் சொன்னேன். அந்த நோயாளி , அடிக்கடி இரத்தவாந்தி எடுக்கும் ஒருவகை நோயினால் அவதிப் பட்டுக்கொண்டிருந்தார். ஊசியுடன் வரும் டாக்டரைப் பார்த்தவுடன், அவர் “நீங்கள் இங்கிருந்து சென்றுவிடுங்கள். நான் இங்கு ஊசி போட்டுக்கொள்வதற்காக வரவில்லை. ஏற்கனவே நூற்றுக்கணக்கான ஊசிகள் என் உடலைத் துளைத்துள்ளன. நான் இப்போது, ஸ்வாமியின் அனுக்ரஹம் என்னும் ஊசிக்காகவே இங்கு வந்துள்ளேன். எனக்கு வேறு எந்த ஊசியும் தேவையில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார் .டாக்டர் இதனை என்னிடம் கூறிய பின்னர், அவரை என்னிடம் அழைத்துவரச்சொன்னேன். நான் அந்த நோயாளியைப் பார்த்தவுடன் , சிரித்தேன். என் சிரிப்பைப் பார்த்த டாக்டர், “ உங்கள் சிரிப்பைப் பார்த்தவுடன் எனக்குப் புரிந்துவிட்டது அவ்ர் குனமாகிவிடுவார் என்று. அதனால் நான் இனி எந்த மருந்தும் தரமாட்டேன் “ என்றார். டாக்டரும் நோயாளியும் என்மீது நம்பிக்கை வைத்திருந்ததால், நான் ஒரு மருந்து பாட்டிலை ஸ்ருஷ்டித்தேன். அது என்ன மருந்து என்று தெரியுமா? விபூதி கலந்த நீர்.. இதைத் தெரிந்து அவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க, ஒவ்வொரு தடவையும் இரண்டு துளிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளச் சொன்னேன். அவ்வாறு எடுத்துக்கொண்ட இரண்டு வாரத்திற்குள்ளேயே அவர் தானாகவே மந்திரத்திற்கு வர ஆரம்பித்தார். அவர் முற்றிலும் பூரணமாக குணமாகிவிட்டார்.”

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 31:


ஹிந்து ஆசார விதிகளின்படி விதவைகள் குங்கும அர்ச்சனை செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டிருப்பதால், ஒரு பெண் பக்தை சுமங்கலிகளை மட்டும் பூஜைக்கு உட்காருவதற்கு அனுமதித்து கொண்டிருந்தார். இதனை கவனித்த ஸ்வாமி, “இங்கே பார், விதவைகள் எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான்தான் அவர்களின் மாஸ்டர். பெருமை மிகுந்த, தைரியசாலிகளான பாண்டவர்கள், திரௌபதி அவமானப்படுத்தப் படும்போது, அமைதியாக அமர்ந்திருந்தனர். அப்போது க்ருஷ்ணர் அல்லவோ அவரைக் காப்பாற்றினார் ?ஆகையால், அனைவரையும் பூஜைக்கு அமர அனுமதி கொடு. கடவுளை நினைப்பவர் எவரும் விதவைகள் ஆகமாட்டார்கள். அவரை நினைக்காதவர்கள் மட்டுமே விதவைகளாகக் கருதப்படுவர்” என்றார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 32:


என் அம்மா: மனம் த்யானம் செய்ய அனுமதிப்பதில்லை. மனத்தைக் கட்டுப்ப்படுத்த எங்களுக்கு போதுமான சக்தி இல்லை. எப்படி அதனைச் செய்வது? அதற்கு உங்களுடைய அனுக்ரஹம் தேவை.

ஸ்வாமி: உன் மனதைக் கட்டுப்படுத்துவதற்கு பலம் இல்லை என்று கவலைப் படவேண்டாம். மனம் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். எண்ணங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்காதே. நீர் நிரம்பிய பானை ஆடும்போது, சிறிதளவு நீர் வெளியே சிந்தும், ஆனால், மீதமிருக்கும் நீர் தெளும்பாது. நாமஸ்மரணை செய். உடல்தான் பானை, மனம் தான் நீர். நாமஸ்மரணை என்பது, நீர் நிரம்பிய பானையை, அசுத்தங்களை நீக்குவதற்காக நெருப்பின் மீது கொதிக்க வைப்பதைப் போன்றதாகும். அதனால் மனத்தில் உள்ள அனைத்து அசுத்தங்களும் நீங்கி மனம் தூய்மைப்படும். இதுதான் மனம் பற்றிய ரகசியம் ஆகும்.

அம்மா: ஸ்வாமி , மேற்கொண்டு இன்னும் கூறுங்கள்.

ஸ்வாமி: நற்கர்மங்களைச் செய்.

அம்மா: நாங்கள் என்ன செய்யவேண்டும்?

ஸ்வாமி: கேள். நீ ஒரு பசுமையான புல்தரையை வளர்க்கிறாய். அதில் வளரும் புல், பசுவிற்குச் சொந்தமானது, உனக்கு அல்ல. தனது பசியைத் தீர்துக்கொள்வதற்கு பசு அங்கே வரும்போது நீ அதை அடித்து விரட்டுகிறாய். ஆனால் நீ வெறுமனே அந்த புல் தரையைப் பார்த்து சந்தோஷப்படுகிறாய். ஆனால் அந்த பசு பசியால் வாடுகிறது. பிறரின் வருத்தத்தில் நீ ஆனந்தப்படக்கூடாது. ஒருவரின் சந்தோஷம் மட்டும் முக்கியமானது அல்ல. பிறருக்கு சந்தோஷம் விளயும் என்றால், சில கஷ்டங்களை ஏற்றுக்கொள்வது மிகவும் உசிதமானது.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 33:


என்னுடைய தாய்மாமன் கல்யாணவரதய்யா ஒரு கோபக்காரர். அவர் கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் இருந்தார். நீரிழிவு நோய் பாதிப்பில் இருந்ததால், மிகுந்த உணவுக் கட்டுப்பாட்டில் இருந்துவந்தார். அதனால், அவரது மனைவிக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அவரது கஷ்டங்களை என் அம்மாவிடம் கொட்டித் தீர்த்தார். அவரிடம் அம்மா, நம் ஸ்வாமியைப் பற்றி நிறைய எடுத்துச் சொன்னார். இதனை ஒட்டுக்கேட்ட என் மாமா தன் மனைவியுடன் புட்டப்பர்த்தி செல்ல முடிவெடுத்தார். ஒரு சில தடவைகள் சென்று வந்த பின்னர், தசரா பண்டிகையின்போது அங்கு தங்க நினைத்தனர். அப்போது ஸ்வாமி எல்லா பக்தர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்திருந்தார். அந்நாட்களில் ஸ்வாமியே தன் கரங்களால் அனைவருக்கும் இனிப்பு பரிமாறுவார். அவ்வாறு ஒருநாள் சர்க்கரைப் பொங்கல் ப்ரசாதம் செய்யப்பட்டிருந்தது. இதை ஸ்வாமி என் மாமாவிற்கும் பரிமாறினார். அவர் உடனே அதனைத் தன் இலையிலிருந்து தள்ளிவைத்துவிட்டு, “ஸ்வாமி, எனக்கு நீரிழிவு நோய் இருப்பதால், நான் இனிப்பு சாப்பிடமுடியாது” என்றார். ஸ்வாமி உடனே மிகவும் கடுமையாக, “அந்த இனிப்பை மரியாதையாக உன் இலைக்குள் வை. உனக்கு நீரிழிவு நோய் இருப்பதால்தான், நான் இனிப்பு பரிமாறியுள்ளேன்” என்றார். அவர் ஸ்வாமியிடம் கோபம் கொள்ளமுடியாதாகையால், அதனை எடுத்து இலையில் வைத்து, பின் அமைதியாக சாப்பிட்டுவிட்டார். தன் ஊருக்குத் திரும்பி வந்தபின், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். அப்போதுதான் எல்லோருக்கும் ஆச்சரியம் தரும் வகையில், பரிசோதனைகளின் முடிவுகளில், நீரிழிவுநோயின் சுவடே காணப்படவில்லை! நீரிழிவு நோயிலிருந்து ஸ்வாமி அவரை முற்றிலும் குணமாக்கியிருந்தார்!!

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.



📝 நிகழ்வு 34:

ராமச்சந்திர செட்டி என்பவருடைய மனைவி ஸ்வாமியிடம், “ஸ்வாமி, எங்களால் உங்களுடன் பத்ரிக்கு வரமுடியவில்லை. நீங்கள் தயவு செய்து எங்களுக்கு கங்கை நீரை வரவழைத்துக் கொடுக்கவேண்டும்” என்றார். ஸ்வாமி ஒரு டம்ப்ளர் கொண்டுவரச் சொன்னார். அவர் ஒரு சிறிய வெள்ளி டம்ப்ளரைக் கொண்டுவந்து கொடுத்தார். ஸ்வாமி அந்த டம்ப்ளரைத் தன் உள்ளங்கையால் ஒரு கணம் மூடினார். அந்தோ! ஆச்சர்யம்!! புதிய துளசி மற்றும் வில்வ இலைகளும், அடியில் நவரத்தினங்களும் சேர்ந்த கங்கை நீர் டம்ப்ளர் முழுதும் நிரம்பியது!!! விசால மனம் கொண்ட நண்பர் செட்டி அவர்கள் அந்த புனிதநீரை அங்கு இருந்த அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். மற்றும் மாலையில் அவர் ,”ஸ்வாமி, உங்களைத் தவிர எனக்கு வேறு எதுவும் வேண்டாம். நான் யாரிடமும் உதவி கேட்க விரும்பவில்லை. உங்களிடம் திடமான நம்பிக்கை கொண்டிருந்தால், நீங்கள் எங்கள் நலன்களைப் பார்த்துக்கொள்வீர்கள் அல்லவா?” என்றார். அதற்கு ஸ்வாமி, “கடவுள் எப்போதும் தான் நேராக வந்து மக்களுக்கு உதவ மாட்டார். அவர் தனது திட்டங்களை வேறு மனித ரூபங்களின்மூலமாகவும் நிறைவேற்றுவார் ( தைவம் மானுஷ ரூபேண). சிலநேரங்களில் உனக்கு ஒரு பிச்சைக்காரர் மூலம் கூட உதவி அமையலாம். ஆகையால், பிறரிடமிருந்து எனக்கு உதவி தேவையில்லை என்று நீ எக்காலும் சொல்லக்கூடாது” என்றார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 35:


1990களில் நான் பர்த்தியில் இருந்தபோது இலங்கையைச் சேர்ந்த சில பெண்மணிகளிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தமிழில் பேசினார்கள்.

“எங்களுடைய கடந்த பர்த்தி வருகையின்போது நாங்கள் ஸ்வாமியிடம்,” ஸ்வாமி, எங்கள் நாட்டிற்குத் திரும்பிபோவதற்கு பயமாக இருக்கிறது. எப்போது, மற்றும் எங்கு வேண்டுமானாலும் நாங்கள் கொல்லப்படலாம். எங்கள் வீடுகள் எரிக்கப்படலாம். நாங்கள் எப்படி அங்கே வாழ்வது ?” என்று வேண்டினோம். ஸ்வாமி உடனே ஓர் அங்குலம் உயரமுள்ள கணேசர் விக்ரஹங்களை ஸ்ருஷ்டித்து ஒவ்வொருவருக்கும் அளித்தார். நாங்கள் ஒருவித கலக்கத்துடன், “ஸ்வாமி, எங்களால் இந்த விக்ரஹங்களுக்கு தினமும் பூஜை செய்யமுடியும் என்று தோன்றவில்லை” என்றோம். அதற்கு அவர், “நீங்கள் தினமும் பூஜை செய்யத் தேவையில்லை. இவைகளை உங்கள் கைப்பைகளில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் காக்கப் படுவீர்கள்”, என்றார். நாங்கள் அவ்வாறே செய்து பல அபாய நிலைகளிலிருந்தும் உயிர் மிரட்டல்களிலிருந்தும் தப்பித்தோம். அந்த விக்ரஹங்களை என்னிடம் காண்பித்தனர்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 36:


ஒரு தடவை என் அம்மா பழைய மந்திரத்தில் தங்கியிருந்தபோது, ஸ்ரீ ரமண மகரிஷியின் சீடர்கள் சிலர் அங்கு வந்திருந்தனர். அப்போது மந்திரத்தில் இருந்த எல்லா பக்தர்களுமே தெலுங்கு பேசுபவர்களாக இருந்தனர். ஆனால் தமிழ் மட்டுமே பேசுபவர்களாக இருந்ததால் யாராலும் இவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால், மந்திரத்தின் பின்புறம் இருந்த ஒரு தமிழ் பேசுபவரிடம் அனுப்பிவைத்தனர். அவர்கள் அங்கு இருந்த என் அம்மாவை அணுகி அவரிடம் பேசினர். அவர்களின் வருகைபற்றிய காரணத்தை அம்மா வினவினார். தாங்கள் ஸ்ரீ ரமண மகரிஷியின் சீடர்கள் என்றும் ரமணாஸ்ரமத்திலிருந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் கூறினர். தாங்கள் அவரைப் பார்க்கச் சென்றபோது, அவர், “இங்கு ஏன் வந்தீர்கள்? கடவுள் ஆந்திரப்ரதேசத்தில் ஒரு குக்கிராமத்தில் அவதாரம் செய்துள்ளார். அங்குசென்று அவரை தரிசியுங்கள்“ என்று கூறியதாகத் தெரிவித்தனர். அம்மா அவர்களிடம் “மகரிஷி அவர்கள் , இங்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறித்தினார்?” என வினவினார். அதற்கு அவர்கள் இதே கேள்வியை மகரிஷியிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் , ”நீங்கள் வேறு எதுவும் செய்யவேண்டாம். ஸ்வாமியுடன் பஜனை நடக்கும்போது நீங்கள் அங்கு உட்கார்ந்துகொள்ளுங்கள்” என்றதாகவும் பதிலளித்தனர்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 37:


ஓருதடவை வைகுண்ட ஏகாதசியில் போது நாங்கள் அனைவரும் வைட்ஃபீல்டுக்கு சென்றோம். மாலையில் ஸ்வாமி அங்குள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் அமர்ந்தார். பக்தர்கள் அவரைச் சுற்றி குழுமியிருந்தனர். அப்போது அவர் இரண்டு லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார். அதனை மூன்று தடவை தலைகீழாகத் திருப்பினார். அதில் எதுவும் இல்லை. பிறகு அதைக் கீழே வைத்துவிட்டு அதனுள் எதையோ கலக்குவதுபோல தன் கையைவிட்டு அசைத்தார். அவர் அவ்வாறு கலக்கிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பாத்திரத்தில் அமிர்தம் நிரம்பிக் கொண்டிருந்தது. அங்கு கூடியிருந்த அனைத்து பக்தர்களையும் பல வரிசைகளாக அமரச் சொன்னார். ஒவ்வொருவரின் வாயிலும் ஒரு சில துளிகளை அவரே தன் கைகளால் விட்டார். அப்போது அவர் “அம்ருதத்வம்(சாவாமை) கிடக்கும்வரை இந்த அமிர்தத்தைப் பருகிக் கொண்டிருங்கள்” என்றார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 38:

ஓருநாள் பர்வதம்மா என் அம்மாவிடம் வந்து, “அம்மா, நான் என் சொந்த ஊருக்கு செல்லப் போகிறேன்” என்றார். அதற்கான காரணத்தைக் கேட்டதற்கு அவர், “நான் மந்திரத்திற்கு ஸ்வாமி தரிசனம் செய்ய சென்றிருந்தேன். ஸ்வாமி என்னை இன்டர்வியூவிற்கு அழைத்தார். நீ ஏன் சாரதாம்மாவுக்கு வேலை செய்துகொண்டிருக்கிறாய் என்று கேட்டார். என்னை என் ஊருக்குப் போகச் சொல்லிவிட்டு, என்னை என்றும் காத்து அருள்வதாக உறுதி அளித்தார். மேலும் அவர், “நான் தான் உனக்கு உன் ஊரிலேயே தினமும் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தபோது இங்கு ஏன் வந்தாய்?” என்று கேட்டார். ஆகவே நான் ஊருக்குத் திரும்பிச் செல்கிறேன்” என்றார். முன்பு அவர், பிரசித்திபெற்ற அருள்மிகு குருவாயூரப்பன் கோவிலில் வேலை செய்துவந்ததாகத் தெரிவித்தார். பிராகாரங்களை சுத்தம் செய்வதும், கோலங்கள் இடுவதும் அவரது வேலைகளாக இருந்தனவாம். மேலும் அவர், “க்ருஷ்ணர் (குருவாயூரப்பன்) எப்போது வெளியே செல்வார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவர் தினமும் தன்னுடைய கருவறைக்குத் திரும்பும்போது தான் நான் அவரைப் பார்ப்பேன். அங்கிருந்து அவர் என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூப்பார்” என்று கூறியதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 39:


எனது தங்கை ,”ஸ்வாமி, இங்கு அடிக்கடி வருவதற்கு நீங்கள் அருள்புரிய வேண்டும்” என்றார். ஸ்வாமி, “ ஆமாம், நீங்கள் முயற்சி எடுத்தால் மட்டுமே கடவுள் அருள் கிட்டும். நான் உங்களை அடிக்கடி இங்கு வருவதற்கு வழி செய்கிறேன். உங்களுக்கு தர்ஷன், ஸ்பர்ஷன், ஸம்பாஷன் (பார்த்தல், தொடுதல், பேசுதல்) மூன்றும் கொடுக்கிறேன். ஜெனரேட்டரும், பல்பும் இணைக்கப் பட்டிருந்தாலும், ஸ்விட்ச் போடவில்லை என்றால், பல்பு ஒளிராது. அதேபோல, நான் உங்களுள் ஆன்மீகசக்தியை நிரப்பி உங்கள் ஊருக்கு அனுப்புகிறேன். கடவுள், உங்கள் இதயத்தில் உள்ள ஏக்கத்தை விரும்புபவரே தவிர உங்கள் வெளித் தோற்றத்திற்கு மயங்குபவர் அல்ல. 
யாரேனும், “இறைவா! நீ என் வேண்டுதல்களைக் கேட்கமாட்டாயா?” என்று இறைஞ்சினால், கண்டிப்பாக செவி சாய்ப்பார். 

யார் ஒருவர், “உன்னுடைய அன்பும் கருணையும் மிகுந்த கண்களால் நீ என்னைப் பார்க்கக்கூடாதா?” என்று கேட்கிறாரோ அவரைத் தன் பார்வையிலிருந்து நீங்காது வைத்துக்கொள்வார்.

யார் ஒருவர், “நான் உங்கள் கால்களை இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறேன், என்னைக் கைவிட்டுவிடாதே” என்கிறாரோ, அவருக்குத் தன் இரண்டு கால்களையும் கொடுப்பார்.

யார் ஒருவர், “தங்களது அபயக் கரங்கள் என்னை எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் காக்கட்டும்” என்று வேண்டுகிறாரோ, அவருக்குத் தன் கைகளை அளிப்பார்.

நீங்கள் எப்படி நினைக்கின்றீர்களோ அப்படியே கடவுளும் அருள் புரிவார். அவருக்காக ஏங்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் எந்த அளவுக்கு ஏங்குகின்றீங்களோ அந்த அளவுக்கு அவரது அருள் உங்களை நோக்கிப் பாயும்“ என்று உபதேசித்தார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.



📝 நிகழ்வு 40:


ஓருநாள் என் அம்மா, குளித்துவிட்டு பழைய மந்திரத்தில் உள்ள முற்றத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தார். மற்றவர்கள் அந்த இடத்தைக் கடந்து சென்று (ஆசார ரீதியாக) அசுத்தப் படுத்தியிருப்பார்கள் என்ற நோக்கில், தன் முன்னால் தண்ணீர் தெளித்துக் கொண்டே நடந்தார். அப்போது ஸ்வாமி இதனைப் பார்த்து நீ ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவர், “ஸ்வாமி, இந்த இடம் அசுத்தம் ஆகியிருக்கும் என்பதனால் செய்கிறேன்” என்றார். இதைக் கேட்ட ஸ்வாமி வாய்விட்டுச் சிரித்து, தன் இரு கால்களையும் காண்பித்து, “சங்கும் சக்கரமும் என் கால்களில் உள்ளன. நான் இந்த இடத்தில் நடந்து கொண்டிருக்கிறேன். இங்கு இருக்கும் ஒவ்வொரு இடமும் புனிதமானது. இத்தகைய கேலிக்கூத்தான செயல்களைச் செய்வதை இனிமேல் நிறுத்திவிடு” என்று பதிலளித்தார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 41:

ஸ்வாமி மந்திரத்தினுள் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார். சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீ லக்ஷ்மிநாராயண சாஸ்திரி என்பவர் தன் உபன்யாஸத்தை ஆரம்பித்தார். அவர், கோதூளி லக்னத்தில் அக்ரூரர் க்ருஷ்ணரைச் சந்தித்ததாகச் சொன்னார். ஸ்வாமி உடனே, “துல்லியமாக அந்த நேரத்தில்தான் சந்தித்தார் என்று உனக்கு எப்படித் தெரியும்” என்றார். அதற்கு சாஸ்திரி அவர்கள், “ ஸ்வாமி, என்னுடைய அறிவு எல்லாம் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டவை. நான் இதனைப் பலதடவை உங்களிடம் ஒப்புக்கொண்டுள்ளேன். இது நடந்த அந்த காலகட்டத்தில், நான் அங்கு இல்லை. ஆனால் நீங்கள் இருந்துள்ளீர்கள். நான் தவறாகச் சொன்ன பின்புதான் நீங்கள் கடந்த யுகங்களில் நடந்த உண்மைகளை எடுத்து உரைப்பீர்கள்” என்று பதிலளித்தார்! 

ஸ்வாமி, “நீ அக்ரூரரைப் பற்றிப் பெசிக்கொண்டிருக்கிறாய். என் பக்தர்களுக்கு கோபிகைகளைப் பற்றி எடுத்துக்கூறு” என்றார். அவர், “ஸ்வாமி, அதனை உங்களிடமே விட்டுவிடுகிறேன். உங்களுக்குத்தான் அவர்கள் எவ்வாறு க்ருஷ்ணருக்காக ஏங்கினார்கள் என்று தெரியும். உங்களிடமிருந்து அறிந்துகொள்வது மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கும். புத்தகங்களில் எழுதியிருப்பதைத் தவிர வேறு என்ன எனக்குத் தெரியும்?” என்று கூறினார்.
ஸ்வாமி அப்போது பதில் ஏதும் கூறவில்லை. சாஸ்திரி அவர்கள் தன் உபன்யாசத்தை மேலும் தொடர்ந்தார். அப்போது அவர், க்ருஷ்ணர் தன் எட்டாவது வயதில் மதுராவிற்குச் சென்றதாகத் தெரிவித்தார். உடனே ஸ்வாமி மறுபடியும் குறுக்கிட்டு, "அது எப்படி சரியாகும்? அவர் தன் பதிநான்கு வயதில் அல்லவா சென்றார் ?” என்று கேட்டார். அதற்கு சாஸ்திரி, “ஸ்வாமி, எனக்கு என்ன தெரியும்? பாகவதம் அப்படித் தான் சொல்கிறது. உங்களுக்குத் தான் சரியாகத் தெரியும். நீங்கள் தான் மதுராவிற்குச் சென்றீர்கள். இப்போது உங்கள் ரகசியங்களை நீங்களே அவிழ்த்துவிடுங்கள்” என்றார்! ஸ்வாமி சிரித்துவிட்டு, பக்தர்களை நோக்கி கதை சொல்லத் தொடங்கினார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 42:

ஓருதடவை ஸ்வாமி கூறினார்: “கல்பங்கள், மன்வந்தரங்கள், சதுர்யுகங்கள் ஆகியவை ஏற்கனவே வந்துள்ளன, மேலும் வரப்போகின்றன. இதுவரை பல சதுர்யுகங்கள் வந்துள்ளன. அவற்றில் தசாவதாரங்கள் தோன்றியுள்ளன. நடக்கும் சதுர்யுகத்தில் கல்கி அவதாரம் ஷிர்டி ஸாயி, ஸத்யஸாயி, ப்ரேம்ஸாயி என்று மூன்று ரூபங்களாகப் பிரிந்துள்ளது. இது முன்பு நடந்ததில்லை. இந்தக் கலியுகத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு நிகழ்வு. ஸாயி அவதாரங்கள் கடந்த கலியுகங்களில் தோன்றவில்லை, இனி வரப்போகும் கலியுகங்களிலும் தோன்றப்போவதில்லை. ஷிர்டி அவதாரத்தின்போது நான் உணவு தயாரித்தேன். ஸத்யஸாயி அவதாரத்தில் நான் உணவைப் பரிமாறிக்கொண்டிருக்கிறேன். ஷிர்டிபாபா அதிகம் கோபப்படுவார் என்கின்றனர் மக்கள். உணவு தயாரித்துக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் தொந்தரவு செய்தால் அவர் கோபப்படமாட்டாரா என்ன? ப்ரேமஸாயி அவதாரத்தில் அனைவரும் அந்த தெய்வீகமான உணவின் பலனை அனுபவிப்பார்கள்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 43:

ஒருநாள் ஸ்வாமி பக்தர்களை சித்ராவதி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். அவர் மணலில் இருந்து ஒரு சில சிவலிங்கங்களைத் தோண்டி எடுத்தார். அவற்றை சில பக்தர்களிடம் கொடுத்தார். ஒரே ஒரு லிங்கம் மட்டும் மீதமிருந்தது. அதனைத் துண்டு ஒன்றில் சுற்றி ராதாவின் கணவரிடம் கொடுத்து, “பத்திரமாக வைத்துக்கொள்; மந்திரத்தில் வந்து என்னிடம் கொடு” என்றார். மந்திரத்திற்குத் திரும்பிச் செல்கையில் அவர் லிங்கத்தைத் தன் நெஞ்சருகில் வைத்து அணைத்துக்கொண்டு நடந்தார். மந்திரத்தைச் சென்று அடைந்தவுடன் ஸ்வாமி அதனைத் திருப்பிக் கேட்டார். துண்டைப் பிரித்துப் பார்த்தால் அதில் லிங்கத்தைக் காணவில்லை! உடனே ஸ்வாமி அவர் அதை எங்கேயோ ஒளித்துவிட்டதாகக் கடிந்தார். ஆனால் சிறிது நேரம் கழித்து, அவர் வேடிக்கையாகக் கடிந்துகொண்டதாகவும் அந்த லிங்கம் தன்னிடம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.



📝 நிகழ்வு 44:

ஸ்வாமியை தரிசனம் செய்த பிறகு, கேரளத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவருக்கு ஸ்வாமியை மிகவும் பிடித்துவிட்டது. அவர் ஸ்வாமியிடம் ,”ஸ்வாமி, நான் உங்கள் ஆஸ்ரமத்தில் இருந்துகொண்டு மருத்துவப் பணியை மேற்கொள்ள விரும்புகிறேன்” என்றார். அதற்கு ஸ்வாமி, “இல்லை, பங்காரு! நீ உன் ஊரிலேயே தொடர்ந்து பணி செய். உன்னுடைய மனம் தான் என் அருகில் இருக்கவேண்டுமே தவிர உன் உடல் அல்ல. ஈக்களும் கொசுக்களும் என் உடல்மீது உட்கார்கின்றன. அவைகளுக்கு முக்தி கிட்டுமா என்ன ?” என்று ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த பதில் அளித்தார்.

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.




📝 நிகழ்வு 45:


தன் கால்களைத் தானே பிடித்துவிட்டுக்கொண்டு ஸ்வாமி சொன்னார்: “நான் சென்றவிடமெல்லாம் அங்கிருந்த எல்லா பக்தர்களுக்கும் பாதநமஸ்காரம் அளிக்க வேண்டியிருந்தது. நானே பிரசாதமும் கொடுக்க வேண்டியிருந்தது. ஆகவே என் முழு உடலும் வலிக்கிறது. நான் எங்கு சென்றாலும் எனக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஆனால் புட்டப்பர்த்தி பரவாயில்லை. சிறிதளவு ஆவது எனக்கு ஓய்வு கிடைக்கும். நான் இன்று இன்டெர்வியூ கொடுக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டு அங்கே சும்மா இருக்கலாம்.”

ஆதாரம்: ஸ்ரீமதி. கருணாம்பா ராமமூர்த்தி என்கின்ற சாயி பக்தை எழுதிய "ஸ்ரீ ஸத்யஸாயி ஆனந்ததாயி" என்கின்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 46:

மிகவும் பருமனான உடலமைப்பு கொண்ட ஒரு பக்தர் , ஒருநாள் தன் கூப்பிய கரங்களுடன் ஸ்வாமியிடம், ”நான் உங்களுடன் ஒன்றிவிடலாமா ஸ்வாமி?” என வினவினார். அதற்கு ஸ்வாமி ஒரு சிறிய மின்னல் கலந்த பார்வையுடன் அவரை நோக்கி, “ஆனால் நீ பெருத்த உடலைக் கொண்டவன். நானோ சிறிய உடலை உடையவன். நீ எங்ஙனம் ஸ்வாமியோடு ஒன்றிட முடியும்?” என்று நகைச்சுவையாகக் கேட்டார். உடனே சுற்றியிருந்த அனைவரும் சிரித்தனர். இதனைக் கேட்ட பக்தர் ஒருநிமிடம் திகைத்துப் போனார். தான் உண்மையாகச் சொல்லவந்ததை ஒரு நகைச்சுவையுடன் தொடங்கி, ஒரு கணப்பொழுது கழித்து , மீண்டும் ஒரு புன்முறுவலுடன் அந்த பக்தரை நோக்கி, ஸ்வாமி, “நீ என்னிடம் ஒன்றிட வேண்டுமானால்….நீ என்னைப் போலாகிவிடு” என்றார்.

ஆதாரம்: Wit and Wisdom of Sri Sathya Sai, compiled by Sri. P. Gurumoorthy.


📝 நிகழ்வு 47:

திரு. ராமப்ரம்மம் அவர்கள் உயரமும் பருமனும் சேர்ந்த நல்ல உடற்கட்டு உடையவர். ஒருநாள் ஸ்வாமி தன் ஆரஞ்சு நிற அங்கியை அவரிடம் கொடுத்து அதனை அணியச் சொன்னார். வேறு யாரேனும் அவர் நிலைமையில் இருந்திருந்தால் ஸ்வாமி வேடிக்கை செய்வதாக நினைத்திருப்பார். ஆனால் ராமப்ரம்மம் அதனைப் பணிவுடன் வாங்கிக்கொண்டு ஸ்வாமியை ஒரு நொடி நோக்கினார். ஸ்வாமி அவரைப் பார்த்து, “ஆம், அணிந்துகொள்” என்றார். ராமப்ரம்மம் பயபக்தியுடன், “ஸ்வாமி, நான் முயற்சி செய்கிறேன். ஆனால் என்னுடைய பெரிய தலையும் கைகளும் எவ்வாறு உள்ளே செல்லும் என்று எனக்குத் தெரியவில்லை” என்றார். ஆனால் ஸ்வாமியோ மீண்டும் வற்புறுத்தினார். அவர் தன் தலையை எப்படியோ கஷ்டப்பட்டு உள்ளே நுழைத்துவிட, அந்த அங்கி மெதுவாகத் தானாகவே தன் உடலின் பருமனுக்கு ஏற்பப் பெரிதாகிக்கொண்டு, இறுதியில் தனக்கு ஏற்ற அளவில் அமைந்ததைப் பார்த்து மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். 
“எப்பொழுது நீ ஸ்வாமி சொல்வதை முழுமனதுடன் ஏற்று, அதனை செயல்படுத்த உண்மையாக முயல்கிறாயோ அப்பொழுது நீ அந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு ஸ்வாமி சிறிதும் தவறாமல் உனக்கு உதவுவார்" என்ற உண்மையை ராமப்ரம்மம் அவர்கள் , இந்த அனுபவத்தின்மூலம் புரிந்துகொண்டார்.

ஆதாரம்: Wit and Wisdom of Sri Sathya Sai, compiled by Sri. P. Gurumoorthy.



📝 நிகழ்வு 48:

ஸ்வாமி, ஸ்ரீராமருக்கும் ஸ்ரீக்ருஷ்ணருக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை விவரித்தார்:

“தூண்டப்பட்டால் மட்டுமே சண்டையிட்டவர் ஸ்ரீராமர். ஆனால் மற்றவர்களை சண்டையிடத் தூண்டியவர் ஸ்ரீக்ருஷ்ணர். ஸ்ரீக்ருஷ்ணர் பெண்மணிகளை அழவைத்தார். ஆனால் ஸ்ரீராமரோ ஒரு பெண்ணிற்காக(சீதை) அழுதார். ஒரு பணியை முடித்த பின்னரே ஸ்ரீராமர் அதனைக் கொண்டாடினார். ஆனால் ஸ்ரீக்ருஷ்ணர் பணியை ஆரம்பிப்பதற்கு முன்னரே கொண்டாடினார். ராமர் எதைச் செய்தாரோ அதனை நீங்கள் செய்யவேண்டும். ஆனால் க்ருஷ்ணரைப் பொறுத்தவரையில், அவர் எதைச் சொன்னாரோ அதைச் செய்யவேண்டும்”.

ஆதாரம்: Wit and Wisdom of Sri Sathya Sai, compiled by Sri. P. Gurumoorthy.




📝 நிகழ்வு 49:

ஆசைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பற்றின்மையை வளர்த்தல் என்பவைகளைப் பற்றிய கருத்துப் பரிமாற்றம் நடக்கையில், ஹ்ருஷீகேஷில் இருந்த ஒரு சாதுவின் கதையை ஸ்வாமி எடுத்துரைத்தார்:

அந்த சாது தினமும் தன் உணவைப் பிச்சை எடுப்பார்; உடனே மிகவும் அவசரமாக, பாறைகள் நிறைந்த பகுதியில், ஆற்றுநீரில் நீட்டிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த ஒரு பாறையின் மீது அமர்ந்து உணவை உண்பார். ஆனால், ஒரு நாள் மட்டும் பிச்சை எடுத்து முடிக்க சிறிது தாமதமாகிவிட்டதால், தனது பிடித்தமான இடத்தை அடைய சற்றே அதிக நேரம் ஆயிற்று. அதற்குள் வேறு ஒரு சாது இவருக்கு முன்னால் அங்கே வந்து அவரது இடத்தில் அமர்ந்து உணவு உண்டுகொண்டிருப்பதைப் பார்த்த இவருக்கு மனவேதனையும் கோபமும் வந்தது. உடனே இவர் அந்த சாதுவை நோக்கி கோபத்துடன், “ நீ இங்கே அமர்ந்திருக்கக் கூடாது, இது என்னுடைய இடம்!” என்றார்!” இந்தக் கதையை சொல்லிவிட்டு முடிவாக, ஸ்வாமி, “சாதுக்கள் கூட எல்லாவற்றையும் துறந்த பின்பும் சிலநேரங்களில், ஒரு கல்பாறையுடன் உறவுகொண்டாடுகின்றனர்!” என்றதும் அனைவரும் சிரித்துவிட்டனர்.

ஆதாரம்: Wit and Wisdom of Sri Sathya Sai, compiled by Sri. P. Gurumoorthy.



📝 நிகழ்வு 50:

ஓருதடவை, ஆஸ்லோ(நார்வே) நகரைச் சேர்ந்த ஜொஹான்சன் டைடுமேன் என்னும் வெளிநாட்டவர் மும்பையிலிருந்து பெங்களூரு வழியாக புட்டப்பர்த்தி வந்தடைந்தவுடன் ஸ்வாமியின் அறைக்குச் சென்றார். தலையிலிருந்து கால்கள்வரை அவரது உடல்வாகினை நோட்டமிட்ட ஸ்வாமி, “நீ மிகவும் ஃபிட் ஆகவும், ஃப்ரெஷ் ஆகவும் இருக்கிறாய்” என்றார். அத்துடன் நில்லாமல், “உன் பார்வையில் நான் எப்படி இருக்கிறேன்?” என்று கேட்டார். எதிர்பாராத இந்தக் கேள்வியால் திகைத்த அந்த வெளிநாட்டவர், சிறிய ஒரு தடுமாற்றத்துடன், “ஸ்வாமி, நீங்கள் ஃபிட் ஆகவும், ஃப்ரெஷ் ஆகவும் இருக்கிறீர்கள்” என்று பதிலளித்தார். வேறு வார்த்தைகளால் விவரிப்பதற்கு நேரமில்லாமல், ஸ்வாமி சொன்ன சொற்களையே திரும்பச் சொன்னார். ஸ்வாமி மேலும் அவரை நோக்கி மற்றுமொரு கேள்விக்கணையைத் தொடுத்தார்! இப்போது, “ கஸ்தூரி எப்படித் தோன்றுகிறார்?” என்று. உடனே அங்கு நின்றிருந்த கஸ்தூரி அவர்கள், தான் நன்றாக இருப்பதுபோல் தோன்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் தன்னை சரிசெய்துகொள்வதுபோல் பாவனை செய்தார். ஜொஹான்சன் டைடுமேன் சிறிது நேரம் அவரை உற்றுநோக்கிவிட்டு, திரும்பவும் அதே வார்த்தைகளில் பதிலளித்தார். இதைக் கேட்ட ஸ்வாமி, “ஏன் தெரியுமா? நீங்கள் என்னுடைய பிரதிபிம்பங்கள்” என்றார். 

ஆதாரம்: “விட் அண்ட் விஸ்டம் ஆஃப் ஸ்ரீ ஸத்ய ஸாயி “ என்ற ஸ்ரீ பி. குருமூர்த்தி அவர்களின் (ஆங்கிலத்)தொகுப்பிலிருந்து.


2 கருத்துகள்:

  1. பெயரில்லா11 மே, 2023 அன்று PM 6:01

    Aumsairam.
    While i was reading from 1 to 50, tears were rolling down my cheeks.
    How Swami was closed to the devotees during the period..
    I wish i could go back and travel along with Swami in that time zone and seeing hearing and feeling swami always like some lucky devotees.
    He is the one guiding us even at this moment as He is reciding in our heart always.
    I love you saimaa.

    பதிலளிநீக்கு