தலைப்பு

சனி, 13 ஏப்ரல், 2019

ஸ்ரீ ராமனாக சாயிராமன்!


பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னையான ஈஸ்வரம்மா, பெங்களூர் அருகில் அமைந்துள்ள வைட்ஃபில்டில் 1972 ஆம் வருடம் தமக்கு ஏற்பட்ட ஒரு தெய்வீக அனுபவத்தை தன்னுடன் இருந்த பெத்த பொட்டு என அழைக்கப்பட்ட பக்தையிடம் பகிர்ந்து கொண்டார்.
அன்னை ஈஸ்வரம்மா குதூகலத்துடன் பெத்த பொட்டு அம்மையாரிடம், “நான் எனக்கு ஏற்பட்ட மிக உன்னதமான அனுபவத்தை உன்னிடம் சொல்ல வேண்டும். இதை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
என்ன என்று கேட்ட அம்மையாரிடம் “நம் ஸ்வாமி உண்மையிலேயே கடவுள்தான்! எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று சொல்ல, அம்மையார் வாய் விட்டு சிரித்தார். ஈஸ்வரம்மா இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது எனக் கேட்டாள். பெத்த பொட்டு அவருக்கு ஆறுதலாகச் சொன்னார், “இல்லை இல்லை! நீங்கள் சொன்ன வார்த்தைகளை கேட்டு நான் சிரிக்கவில்லை. இந்த உண்மை இப்போதாவது உங்களுக்குத் தெரிந்ததே என்ற சந்தோஷத்தில்தான் சிரித்தேன். சரி அதை விடுங்கள், இந்த உண்மை உங்களுக்கு எப்படி அனுபவமாயிற்று?” என வினவினார். 

ஈஸ்வரம்மா சொன்னார், “உனக்குத் தெரியும் கடந்த நாலு நாட்களாக எனக்கு ஜுரம் அதிகமாக இருந்தது. நேற்று இரவு ஸ்வாமி என்னிடம் வந்தார்.” எனக் கூறும் போது பெத்த பொட்டம்மா குறுக்கிட்டு, “கனவிலா?” எனக் கேட்க, “இல்லை” என்றார் அன்னையார். மேலும் அன்னையார், “என்னால் தூங்க முடியவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். ஸ்வாமி என் அருகில் வந்தார். எனக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டார். எனக்கு உடம்பு முழுவதும் வலி என்று அவரிடம் கூறினேன். அதன் பிறகு நடந்ததை நான் எப்படி சொல்வேன். அவர் நான் தினந்தோறும் காணும் ஸ்வாமி இல்லை. ஒரு கணத்தில் அவர் ஸ்ரீ ராமனாக மாறி விட்டார். தலையில் கிரீடம், கையில் கோதண்டம் என்ற வில்லுடன் அவர் என் பக்கத்தில் நின்றிருந்தார். நான் திகைத்து போனேன். அவரை வணங்கினேன். மிகவும் பிரயாசைப்பட்டு எழுந்து உட்கார முயன்றேன். ஆனால் முடியவில்லை. சில விநாடிகள் பகவான் ஸ்ரீ ராமராக இருந்தவர் நமது ஸ்வாமியாக மாறி விட்டார். மென்மையாக சிரித்த ஸ்வாமி, எனக்கு விபூதி பிரசாதம் கொடுத்து, “கவலைப் படாதே, ஜுரம் மறைந்துவிடும்” என சொல்லிவிட்டு போனார்.” இதைக் கேட்ட பெத்த பொட்டு மகிழ்ந்து, “ஸ்வாமி கொடுத்த இந்த அனுபவம், மறக்க முடியாத ஒன்று” எனக் கூறி மகிழ்ச்சியைத் தெரிவித்தார். 

ஆதாரம் – தபோவனம், பக் – 148, 149


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக