தலைப்பு

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

ஷீரடி பாபா காலத்தில் வாழ்ந்த பெத்த பொட்டு அம்மையாரின் சத்ய சாயி அனுபவங்கள்!

அதே பாபாதான் இவர்  - 4

ஸ்ரீ சத்ய சாயி பக்தர்களுக்கு பெத்த பொட்டு அம்மையாரை (சாரதா தேவி) தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஸ்ரீ சத்ய சாயி விரத கல்ப பூஜையை முதன்முதலில் வழங்கியவர் இவரே. இந்த அம்மையார் ஷீரடி சாயி, சத்ய சாயி என இரு பாபாக்களையும் பார்த்துப் பழகி ஆசி பெற்றவர் ஆவார்.

இவரது பெற்றோருக்கு குழந்தை பேறு இல்லாமல் இருந்தது. ஷிர்டி சாயி பாபாவின் அருளால் 1888ல் இவர் பிறந்தார். ஷிர்டி சாயிதான் இவருக்கு சாரதா தேவி என பேர் சூட்டினார். அவரது நிறத்தை கொண்டு பாபா அவரை ‘கோரி’ என அழைப்பார். கோரி என்றால் தமிழில் ‘சிவப்பி’ என அர்த்தம். அந்த கால வழக்கத்தின்படி இவருக்கு 6 வயதிலேயே திருமணமாகியது. பின்னர் இவருக்கு 6 ஆண் குழந்தைகள் பிறந்தன, ஆனால் அனைவரும் மூன்று நான்கு வயது வரைதன் வாழ்ந்தனர். அதன் பின் வாழ்வில் ஒரு பிடிப்பின்றி வாழ்ந்த சாரதா, தன் கண்வரிடம் வேறு திருமணம் செய்துகொள்ளும்படி கூறிவிட்டு, ஷிரடியில் வந்து தங்கிவிட்டார்.

ஷிர்டி பாபாவின் திருமுன்னிலையில் வாழ்ந்த இவர், பாபா செய்த பல அற்புதங்களை கண்ணாரக் கண்டார். ஒரு முறை சாரதா பாபாவிடம் தனக்கு மந்திர உபதேசம் செய்யுமாறு வேண்டினார். அதற்கு பாபா, “நீ இன்னமும் சிறு பிள்ளைதான். நீ வளர்ந்த பின் உனக்கு உபதேசிக்கிறேன்”என்றார். தனக்கு 29 வயது ஆகும் வரை பொறுத்திருந்த சாரதா, மீண்டும் பாபாவிடம் உபதேசிக்க வேண்டினார். உடனே பாபா “எப்போது பார்த்தாலும் இதே தானா?” என வினவு, மிகவும் கோபம் கொண்டு சாரதாவின் மார்பில் வலது காலால் உதைத்தார். 


அழுது கொண்டே வெளியேறிய சாரதா, ஒரு மரத்தின் கீழ் சென்று அமர்ந்து, பின் அங்கேயே உறங்கிப் போனார். இரவு வெகு நேரம் கழித்து அங்கு வந்த பாபா அவரை எழுப்பி, லெண்டி தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே சென்றபின் பாபா அவரிடம், “குழந்தாய்! நீ இங்கு காலையில் இருந்து வெறும் வயிற்றில் உறங்குவதை கண்ட பின் எனக்கு துவாரகா மாயியில் (பாபா தினமும் உறங்கும் இடம்) உறக்கம் வரவில்லை. மேலும் நான் உன்னிடம் ஒரு விஷயம் கூற வேண்டும். முதலில் சாப்பிடு” என்று கூறிக்கொண்டே தனது வலது கை உள்ளங்கை மேல் நோக்கி உயர்த்தி ‘அல்லா மாலிக்’ எனக் கூறினார். உடனே அவரது கையில் இரண்டு சப்பாத்தியும், எழுமிச்சை அளவிலான ஒரு வகை இனிப்பும் தோன்றியது. அதை சாரதாவிற்கு உண்ணக் கொடுத்தார். பின் மீண்டும் அவர் கையில் ஒரு குடுவையில் தண்ணீர் வந்தது. அதனை சாரதா குடித்தபின் பாபா அவரிடம், “கோரி, என் மேல் கோபமா?” என வினவினார். அதற்கு சாரதா தன் மனதிற்குள் கூறிக்கொண்டார், “இல்லை பாபா, இப்போது எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை. நான் ஒரு அறிவிலி, தங்களின் உதை உண்மையில் எனக்குத் தங்களின் பிரசாதமே. மேலும் தங்களின் தெய்வீகத் திருக்கரங்களால் படைக்கப்பட்ட உணவினை எனக்கு வழங்கியதற்காக என் மனம் நிறைந்த நன்றிகள்”

பின்னார் பாபா சாரதாவிடம், “நான் உன்னிடம் ஒன்று கூற வேண்டும். அதற்கு முன் நீ எனது பாதங்களை பற்றிக்கொண்டு அதனை யாரிடமும் கூற மாட்டேன் என சத்தியம் செய்ய வேண்டும்” என்றார். வெகு காலம் காத்திருந்த மந்திர உபதேசம் பெற விரும்பிய நான் பாபா சொன்னபடி செய்தேன். 



“கோரி, நான் இதே சாயி பாபா என்ற நாமத்துடன், ஆனால் வேறு உருவில், ஆந்திர பிரதேசத்தில் தோன்றுவேன். அப்போது மீண்டும் நீ என்னிடம் வருவாய். நான் உன்னை என்னுடைய அரவணைப்பில் வைத்து, உனக்கு ஆனந்தத்தைக் கொடுப்பேன்” என சாரதையிடம் பாபா உரைத்தார். பேரானந்தம் அடைந்த சாரதா பாபாவிடம், “உண்மையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள். வேறு யாரிடமும் நான் இதை கூற மாட்டேன்” என்றதும் பாபா கூறினார், “இல்லை இல்லை, என்னுடைய மறு அவதாரத்தைக் கண்ட பின் நேரம் வரும் போது மற்றவரிடம் இதை சொல். மேலும் நீ மட்டுமே எனது அடுத்த அவதாரத்தைப் பார்க்க உள்ளாய்” இந்த உரையாடல் 1917 ஆம் ஆண்டில் நடைப்பெற்றது. 1918ல் பாபா மஹா சமாதி அடைந்தார். 

பின் வாழ்வில் பல கட்டங்களைக் கடந்த சாரதா அம்மையார் 1940ல் உரவக்கொண்டாவிற்கு ‘ஹரி கதா’ பிரவசனத்திற்கு வந்தார். அங்கே தனது உறவினரின் இல்லத்தில் தலை நிறைய முடியுடன் இருக்கும் ஒரு சிறுவனின் புகைப்படம் கண்டு, யாரி இவர் என வினவினார். அவரோ, இவர் தான் புட்டபர்த்தி சாயிபாபா என உரைத்தார். 

அப்போது தனது தமயனார் இல்லத்தில் இருந்த பாபாவை சென்று பார்த்தார் சாரதா அம்மையார். இவரை பார்தவுடன் சத்ய சாயி பாபா, “கோரி, வந்துவிட்டாயா, நீ எனக்கு ஷிர்டியில் தர வேண்டிய 16 காசுகளைக் கொடு” என கேட்டார். அதற்கு அமமையார், “பாபா நான் ஷிர்டியில் வாங்கிய அனைத்து காசுகளையும் அப்போதே திருப்பி கொடுத்துவிட்டேன்” என்றார். பாபா, “எனக்குத் தெரியும், நான் யார் என்பதை உனக்கு உணர்த்தவே கூறினேன்”. என்றார். 

பின் பல முறை புட்டபர்த்திக்கு சென்று பகவானை தரிசித்த அம்மையாருக்கு அவரே இவர் என்பதற்கு பல நிகழ்வுகள் காண வாய்ப்பு கிடைத்தது. பின் தன் வாழ்வின் பிபகுதியை பகவானின் அருகாமையிலேயே கழித்து பகவானின் பொற்பாத கமலங்களில் நிரந்தர ஓய்வு கொண்டார்.

(ஆதாரம் – ‘சத்ய சாயி – அன்பின் அவதாரம்’ (ஆங்கிலம்), வெளியீடு –பிரசாந்தி சொஸைட்டி, ஹைதராபாத், பக் – 14 – 16)


பெத்த பொட்டு அம்மாவின் அனுபவங்களை விரிவாக படிக்க.  அவர்களது வாழ்க்கை வரலாறு குறித்து "Autobiography of Peddabothu " என்று புத்தகம் ஒன்று இருக்கிறது.  இது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கிடைக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக