தலைப்பு

திங்கள், 22 ஏப்ரல், 2019

பாபாவின் புகைப்படத்தை குப்பைத் தொட்டியில் போட்ட பாவிக்கு பாபா கொடுத்த பரிசு..


இன்று சத்ய சாயிபாபாவின் படத்தை எங்கு பார்த்தாலும் கும்பிட்டு சாயி காயத்ரி சொல்லும் நான் ஒரு காலத்தில் அவரின் புகைப்படத்தை குப்பைத் தொட்டியில் எறிந்திருக்கிறேன். அப்படிப்பட்ட இந்தப் பாவிக்கு அவர் காட்டிய கருணை  சொல்லில் அடங்காது. தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றிருந்த எனக்கு சுவாமி தன்னுடைய அற்புதத்தால் எவ்வாறு காப்பாற்றினார் என்பதை  ஜெயகிருஷ்ணன் (Jaykay) ஆகிய நான் உங்களோடு இந்தப் பதிவில் பகிர்கிறேன்...

என்னுடைய நண்பர் திரு. தியாகராஜன் அவர்கள் தீவிர சத்ய சாயி பக்தர். (இவரைப் பற்றி முன்பே ஒரு பதிவில் விளக்கமாக எழுதி இருக்கிறேன்) என்னுடைய திருமணத்துக்கு முன்பே ஒருமுறை அவர் பாபாவைப் பற்றி என்னிடம் பேச ஆரம்பித்தார். அதற்கு நான் அவரிடம் “தயவுசெய்து அந்த சாமியாரை பற்றி என்னிடம் பேசாதீங்க தியாகு, உங்களுக்கு அவர்மீது நம்பிக்கை இருந்தால் அதை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னை பிரெய்ன்வாஷ் பண்ணாதீங்க” என்று சொன்னேன். அன்றிலிருந்து அவர் பாபாவைப் பற்றி என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.   
1998இல் எனக்குத் திருமணம் ஆயிற்று. திருமணம் ஆன ஒரு ஆறு மாதத்துக்கு பின்னர் சத்ய சாயிபாபாவின் பாக்கெட் சைஸ் புகைப்படம் ஒன்று எங்கள் வீட்டில் தென்பட்டது. எனக்கு அதைப் பார்த்த உடனே கோபம் வந்தது. உடனே மனைவியிடம் யார் இந்தச் சாமியாரின் படத்தை இங்கே கொண்டுவந்து வைத்தது என்று சத்தம் போட்டேன். அதற்கு என் மனைவி ஏதோ ஒரு பழைய புத்தகத்தின் உள்ளே இருந்தது என்று சொன்னாள்.  உடனே அந்த புகைப்படத்தை எங்கள் சமையலறையில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்து டிவி பார்க்க அமர்ந்தேன். உடனே, ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று ஓர் எண்ணம் தோன்றியது.  குப்பைத் தொட்டியில் போட்ட அந்தப் படத்தை மீண்டும் எடுத்து வந்து சமையலறையில் உள்ள பரண்மேல் ஓரமாக வைத்துவிட்டேன். 

ஒரு இரண்டு வாரம் கழித்து எங்கள்  வீட்டைச் சுத்தம் செய்ய என்னுடைய மனைவி ஒரு பெண்மணியை வரவழைத்து  இருந்தாள். அந்தப் பெண்மணி சமையலறையைச் சுத்தம் செய்யும்போது பரண்மேல் இருந்த பாபாவின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தாள்.  “சார், இந்த பாபா படத்தை நான் வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டாள். நான் சரி என்று சொல்லி, சிரித்துக்கொண்டே “என்னம்மா இவருமேல அவ்வளவு நம்பிக்கையா?” என்று நக்கலாகக் கேட்டேன். அதற்கு அவள் “சார், என் குழந்தை இப்ப உயிரோடு இருக்குன்னா அதுக்கு அவருதான் காரணம்” என்று சொன்னாள். நானும் அந்தப் பெண்மணியை விரிவாகக் கேட்டேன். அதற்கு அவள் “சார்  என் பையனோட இதயத்துல  ஓட்டை இருந்துச்சு.  தனியார் ஆஸ்பத்திரில  லட்சக்கணக்கில் காசு கேட்டாங்க. கடைசியில சாயிபாபா ஆஸ்பத்திரிலதான் பாபா புண்ணியத்துல ஒரு பைசா செலவில்லாமல் ஆபரேஷன் பண்ணிவிட்டாங்க” என்று சொன்னாள்.  அதைக் கேட்டவுடனே எனக்கு பாபா மீது முதல்முதலாக ஒரு நல்ல அபிப்ராயம் தோன்றியது. சரி, இப்போது மெயின் ஸ்டோரிக்கு வருவோம். என்னுடைய கல்லூரிக் கால நண்பர் ஒருவர் ஸ்ரீனிவாஸ் என்பவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்.  அவருடைய பேச்சால் நான் ஈர்க்கப்பட்டேன். அவரைக் கண்மூடித்தனமாக நம்ப ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில்தான் அவர் MLM ஒன்றை நடத்திவந்தார். அதுதாங்க இவ்வளவு பணம் போட்டா, இரண்டு, மூன்று மடங்காகும்னு சொல்லுவாங்களே, அந்த பிசினஸ்தான். முதல்ல நான் ரெண்டு லட்சம் போட்டேன்,  போட்ட ரெண்டு மாசத்துலயே எனக்கு நான்கு லட்சம் வந்துச்சு.  அப்புறம் நான்கு இலட்சத்தையும் அப்படியே அதுல போட்டேன்,  இரண்டு லட்சம் சேர்ந்து 6 லட்சமாக வந்துச்சு. அதுக்கப்புறம் புத்திசாலித்தனமா ஆறு லட்சத்தையும் பேங்கில டெபாசிட் பண்ணி வச்சிட்டேன். 

ஒரு பழமொழி சொல்லுவாங்க, உழைக்காத காசு ஒட்டாதுன்னு.  அப்படித்தான் ஆச்சு. எனக்கு வந்த லாபத்தைப் பற்றி என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கும் சொன்னேன். அவர்களையும் வற்புறுத்திப் போடுமாறு சொன்னேன்.  என்னுடைய நோக்கம் என்னவென்றால் எனக்கு லாபம் வந்தது போல் அவர்களுக்கும் வரவேண்டும், அவர்களும் நல்லா இருக்க வேண்டும் என்றுதான்.  இப்படி நான் சொன்னதை நம்பி கிட்டத்தட்ட 24 லட்சம் ரூபாய் பக்கமாக என்னுடைய நண்பர்கள் இன்வெஸ்ட் செய்தார்கள்.  நான் பொதுவாகவே சுயநலம் இல்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். என்னுடைய குணம் என் நண்பர்களுக்கு நன்கு தெரியும்.  அதற்காகவே ஒருசில  நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த நண்பர்களும் நான் சொன்னதை கண்மூடித்தனமாக நம்பி, கடன் வாங்கி எல்லாம் பணத்தை போட்டார்கள். அப்புறம் ஒரு மாசம்தாங்க பணத்தை எடுத்துட்டு அந்த ஸ்ரீனிவாஸ் எஸ்கேப் ஆகிவிட்டார்.

ஸ்ரீனிவாஸ் பணத்தை அடிச்சுட்டுப் போனதுக்கப்புறம்  போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்தோம். அப்படியே ஆறு மாசம் போச்சு. போலீஸால் கண்டு பிடிக்க முடியல. அப்புறம் என்னுடைய எல்லா நண்பர்களும் ஒன்றின் பின் ஒன்றாகப் பணத்தைக் கேட்டு எங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. வந்தவங்க, ஜேகே நீ சொல்லித்தான் பணத்தைப் போட்டோம். நீதான் எங்களுக்குப் பொறுப்பு என்றார்கள். அந்த நேரம் பார்த்து யாரோ ஒருவர் எனக்கும் இதில் தொடர்பு இருக்கு, நானும் ஸ்ரீநிவாஸின் மறைமுகக் கூட்டாளி என்று கதை கட்டிவிட ஆரம்பித்தார்கள். அவர்கள் கட்டிய கதை விபரீதமாகப் போய் முடிந்தது. 

கார்த்திக் என்ற ஒரு நண்பர் என்மீது  போலீஸ் கம்ப்ளெய்ன்ட் கொடுத்தார். இன்னொரு நண்பர் என் ஆபிசுக்கும், என்னுடைய மனைவி ஆபீசுக்கும் மாறி மாறி வந்து முறையிட ஆரம்பித்தார். இப்படி இப்பிரச்சினை என் கழுத்தை நெருக்கியது. அந்த நேரம் பார்த்து என்னுடைய மனைவியின் நகையும் எதுவும் இல்லை ஏனென்றால் ஒரு வருடத்திற்கு முன்பு தான் என்னுடைய பிசினஸுக்கு பெரிய தொகை தேவைப்பட்டதால் எல்லா  நகையையும் வங்கியில் வைத்துப் பணம் பெற்றிருந்தேன். எனக்குத் தேவையோ 24 லட்சம், கையில் இருப்பதோ வெறும் 6 லட்சம். அந்த ஆறு லட்சத்தை எவ்வாறு பிரித்துக் கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவருக்குக் கொடுத்தால் இன்னொருவர் கண்டிப்பாகக் கேட்பார் என்ற காரணத்தினால் அந்த ஆறு லட்சத்தை நான் வங்கியிலிருந்து எடுக்கவே இல்லை. 

பின்னர் எங்கள் ஆபீசுக்கும் வந்து முறையிட ஆரம்பித்தார்கள். இந்த விஷயம் ஆபிஸ் முழுவதும் பரவியது. மிகவும் அவமானப்பட்டேன். நான்கூடப் பரவாயில்லை, என் மனைவியின் ஆபீஸில் வேறுவிதமாகவும் பேச ஆரம்பித்தார்கள்.  அவள் என்னிடம் வந்து கண்ணீர் சிந்திச் சொன்ன சில விஷயங்கள் என் மனதை மிகவும் பாதித்தன. அன்று இரவு நான்  தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முட்டாள்தனமான முடிவு ஒன்றை எடுத்தேன்.  எப்படிச் சாகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில், என் நண்பர் தியாகராஜனிடம் இருந்து தொலைபேசி வந்தது. அவர் “ஜேகே எல்லாம் கேள்விப்பட்டேன், இந்த நேரத்தில் நான் ஒன்று சொன்னா நீ கேப்பியா?” என்று கேட்டார். அதற்கு நான்  “சொல்லுங்க தியாகு, இப்ப எல்லாமே கையை மீறிப் போயிடுச்சு” என்றேன். 

“ஜேகே நீ நினைக்கிற மாதிரி சாயிபாபா சாமியார் கிடையாது. அவர் சாட்சாத் அவதாரம். வெளிநாடே போகாத அவருக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வெவ்வேறு நாட்டில் இருந்து வராங்க, கண்மூடித்தனமான நம்பறாங்க. ஏன்னு தெரியுமா?” என்று கேட்டார்.  அதற்கு நான் “சொல்லுங்க” என்று  பதிலுரைக்க, அவர் “பாபா புட்டபர்த்தியில் இருந்துகொண்டே ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் எத்தனையோ அற்புதங்கள் பண்ணி இருக்காரு, நீ சொல்ற மாதிரி சாமியார் இதப் பண்ண முடியுமா? நீ முதல்ல அவர மனசார நம்பு, மனசார அவர்கிட்ட பிரார்த்தன பண்ணிக்கோ. உன்னோட பிரச்சனை எல்லாத்தையும் பாபா கண்டிப்பா சரி செய்வார்” என்று பேசி முடித்தார். 

அதைக் கேட்ட பிறகு என் மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ஒரு நம்பிக்கையும் தோன்றியது.  அந்த நேரம் பார்த்து பாபாவின் புகைப்படம் என்னிடம் எதுவும் இல்லை. நான் பூஜையறைக்குப் போய், பாபா அங்க இருக்கறாரு அப்படீன்னு மனசுல நினைச்சுட்டு, அவர்கிட்ட பேச ஆரம்பிச்சேன். என் பிரச்சினை எல்லாத்தையும் பாபாகிட்ட கொட்டித் தீர்த்தேன்.  கடைசியில் “பாபா நான் உங்களுக்காக ஒரு வாரம் காத்திருக்கேன். அதுக்குள்ள என்னோட பிரச்சனையைச் சரிபண்ணிக் குடுங்க இல்லைன்னா எனக்கு உயிரை விடுவது தவிர வேற வழி இல்லை” என்று சொல்லிவிட்டுத் தூங்கப் போயிட்டேன். 
ஒரு மூன்று நாள் போனது எங்க ஊர்ல இருந்து தாய்மாமா திடீர்னு வந்தார். மாப்பிள நம்ம பூமி ஒன்னு நல்ல ரேட்டுக்கு கேட்கறாங்க.  வக்கீல் திடீர்னு ஒரு குண்டை தூக்கிப்  போடறாரு. அந்த பூமியில  உங்க அம்மாவுக்கு பங்கு இருக்குன்னு.  நானும் இத்தனை நாளா இது கவனிக்கல,  எங்க அப்பா இது மாதிரி பண்ணி வச்சிட்டு போய் இருக்காரு. உங்க அம்மா  போய் சேர்ந்து பத்து வருஷம் ஆச்சு, வாரிசு நீ மட்டும்தான் அதனால நீ கையெழுத்து போட்டால் தான் விற்க முடியும்னு நம்ம வக்கீல் சொல்றாரு. அப்புறம் உங்க அம்மாவுக்கு வர வேண்டிய பணமான 20 லட்ச  ரூபாய வாங்கிட்டு கையெழுத்து போட்டு கெடுனு சொல்லிட்டு, அவர் கொண்டு வந்த பையிலிருந்து  20 லட்ச ரூபாய்  பணத்தை என் கைல கொடுத்தாரு. எனக்கு அப்படி ஒரு சந்தோஷம், கண்ணுல இருந்து தண்ணிய வந்துடுச்சு. அப்புறம் நான் பணத்த வாங்கிட்டு எங்க மாமா கொடுத்த பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டேன் அவரும் ஊருக்கு போயிட்டாரு.  

அதுக்கப்புறம் இது கனவா, நிஜமான அப்படியே உட்கார்ந்து யோசனை பண்ணிட்டு இருந்தேன்.  நான் செய்த தவறு எல்லாம் ஞாபகம் வந்துச்சு. பாபா என் கிட்ட நெருங்கி வர இரண்டு முறை முயற்சி பண்ணி இருக்காரு. நான் தான் அதை புரிஞ்சுக்குல. ஒருமுறை என் நண்பர் தியாகராஜன் மூலமாக, இரண்டாவது முறையாக ஒரு புகைப்படம் மூலமாக. பாபா பற்றி நான் முழுசா தெரிஞ்சுக்காம இது மாதிரி நான்  பண்ணுனது எவ்வளவு பெரிய பாவம்முனு அப்பத்தான் எனக்கு புரிஞ்சது. உடனே பூஜை அறைக்கு  போய் பாபாவிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டேன்.  பின்பு என்னுடைய காரை எடுத்துக்கொண்டு நேராக என் நண்பர் திரு தியாகராஜன் வீட்டிற்கு சென்று நடந்த எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். அவரோ சத்ய சாய்பாபாவின் "Man of Miracles"  என்ற ஒரு ஆங்கில புத்தகத்தை கொடுத்து முதலில் இந்த புத்தகத்தை படித்து பாபா யார் என்று முதலில் தெரிந்து கொள். அப்புறம் நாம பாபா பத்தி பேசலாம் என்று என்னை வழியனுப்பி வைத்தார். நானும் அன்றிரவே முழுப் புத்தகத்தையும் படித்து முடித்தேன். படித்தபிறகு அதிசயித்தேன் இப்படி ஒரு அவதாரம் பூமியில் இருக்கின்றதா? எப்படி இத்தனை மக்களுக்கும் தெரியாமல் இருந்தது என்று ஒரே ஆச்சரியப்பட்டேன்.

நான் என் நண்பர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் 24 லட்சம்,  என்னிடம் இருப்பதோ 6 லட்சம்,  பாபா என் தாய்மாமா  மூலமாக கொடுத்த  பணம் 20 லட்சம்.  ஆகமொத்தம்  26 லட்சம். நான் சம்பாரித்த பணமான 2 லட்சம் போக மீதமுள்ள 24 லட்சத்தையும் என் நண்பர்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டேன். இதை என்னவென்று சொல்வது எப்படி பாபா கணக்கு போட்டு சரியாக கொடுத்து இருக்கிறார் பாருங்கள். பாபா கடவுள் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டு, அவரை முழுவதுமாக நம்பத் தொடங்கினேன். அப்புறம் என்னங்க அன்று ஆட்கொண்ட சாயி இன்னைக்கு வர அவருடைய ஆசிர்வாதத்தில எங்க குடும்பத்துல எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறோம். எந்த குறையும் இல்லை.  சுவாமி எனக்கு பிச்சை போட்டு காப்பாற்றிய சம்பவத்திற்கு பிறகும் கூட ஒரு சில சந்தேகங்கள் என் மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது. அதற்கு  சுவாமி பின்னாளில் எவ்வாறு பதிலளித்தார் என்பதை பற்றி ஏற்கனவே நம்முடைய சத்ய சாயி யுகம் பிளாகில் பகிர்ந்துள்ளேன்.
சாய்ராம் 🙏 

-ஜெய்கிருஷ்ணன் M.S (Jaykay)
சத்ய சாயி யுகம் வாட்ஸ் அப் குருப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக