தலைப்பு

சனி, 27 ஏப்ரல், 2019

பஜனை பாட்டிற்கு தாளம் போட்ட சுவாமி!



ஷெனாய் நகர் பிரேமா அவர்கள், தினமும் மாலையில் விளக்கு ஏற்றியதும், ஒரு சிறு வழிபாடு ஆற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார், பிறகு, மூன்று பஜனைப்  பாட்டுக்கள் பாடுவார். அதன் பின்னர் ஆர்த்தியும் எடுப்பார். மூன்று
பாடல்களில், முதலில் கணேசர், அடுத்து குரு, பிறகு எதாவது ஒரு பஜனைப் பாடல், என்று வகுத்துக்கொண்டு, நாள்தோறும்  அங்ஙனமே செய்து வந்தார். 

ஒரு நாள் மாலை அங்ஙனம் விளக்கேற்றி வழிப்பட்ட பிறகு. அஷ்டோத்திரம் ஓதினார். பின்னர் வழக்கமாகப் பாடும் பஜனைகள் பாடவேண்டும். அதற்க்கு முதல் நாள் மாலை, அவர் சுந்தரம் பஜனைக்குச்  சென்றிருந்தார். அங்கிருந்து சில பஜனை கேசட்டுகளை வாங்கி வந்திருந்தார். பஜனை பாட அமர்ந்ததும், '' தினமும் தான் நான் பாடுகிறேனே! இன்று இந்த கேசட்டை போட்டுக் கேட்கலாமே,'' என்று      தோன்றியது.

உடனே ஒரு கேசட்டை எடுத்துப் பெட்டியில் இட்டு ஓடவிட்டார். அது பாடத்துவங்கும்முன் மின் விளக்குகள் அணைந்து விட்டன. ''அடிக்கடி போவதுதானே'' சற்று நேரத்தில் வந்துவிடும் என்று காத்திருந்தார். அங்ஙனமே ஒரு சிலநிமிடங்களில், மின் இணைப்பு வந்துவிட்டது. மறுபடியும் ஓடவிட்டார், கேசட்டை ஆனால் அது நகரவே இல்லை. அடமாக நின்று கொண்டிருக்கிறதே ! இது என்ன விந்தை ! கேசட்டில் ஏதேனும் பழுது இருக்குமோ ? என்று ஐயுற்றார் பிரேமா.

அதற்குள் ஓர் ஒலி வந்து அவரை உலுக்கியது ''தட் தட் தட் தட் தட் தட்’’ என்ற இலயம் தவறாமல் ஓர் ஒலி அங்கிருந்து கேட்டது. ஒரு நொடி நேரம் செயலற்று நின்றார் பிரேமா. கேசட் இயங்காமல் நின்றதற்கு, நேர் எதிர்ப்புறமிருந்து தாள ஒளி வந்தது.

மறுநிமிடமே பிரேமா புரிந்து கொண்டார். கேசட்டில் பாட்டுக் கேட்பது சுவாமிக்குப் பிடிக்கவில்லை. வழக்கம் போல் பிரேமாவே பட வேண்டும் என்று விரும்புகிறார். அதற்காகத்தான் தாளம் போட்டுத் தன்னை ஊக்குவிக்கிறார் என்று தெள்ளத் தெளிய தெரிந்துகொண்டார். உடனே கேசட்டை நிறுத்திவிட்டு வழக்கம்படி ஓம்காரம் ஓதி, கணபதி, குரு பஜனைகளும் மற்றொரு பஜனையும் பாடினார்.  

மூன்று பாட்டுகள் பாடி முடிந்ததும், ''நம்முடைய பாட்டுக்குச் சுவாமியே தாளம் போடுகிறாரே! இன்னும் ஒரு பாட்டுப் பாடலாமே,'' என்று அவாவினார் பிரேமா. அதனால் அடுத்த மற்றொரு பாட்டைத் துவக்கினார். ஆனால் என்ன இது? தாள ஒலி நின்றுவிட்டதே! ஆமாம்! வழக்கப்படி மூன்று பாட்டுகள்  தானே அவர் பாடுவது வழக்கம்!  அவை போதுமே! நான்காவதாக மற்றும் ஒன்று எதற்கு புது வழக்கமாக? அதனால்தான் சுவாமி தாளம் போடுவதை நிறுத்திவிட்டார் போலும்! சுவாமியின் ஒழுக்கக் கட்டுப்பாட்டினை உணர்ந்து, மெய் சிலிர்த்து போனார் பிரேமா.

இறைவா! என் பொருட்டு எழுந்தருளி தாளம் போட்டு உய்வித்து அருளுகிறீர்கள்! இத்தகைய பேற்றினைப் பெற நான் செய்த நல்வினைதான் என்னே! என்று பரவசமாகப் போற்றியபடி வழிபாட்டை முடித்தார், பிரேமா.

சாய்ராம்

ஆதாரம் : புத்தகம் - புஷ்பராகம் - அத்தியாயம் 14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக