தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

அதே பாபாதான் இவர் -1 (சிஞ்சோலி ராணியின் சாயி அனுபவங்கள்)

அதே பாபா தான் இவர் - 1
(சிஞ்சோலி  ராணியின் சத்ய சாயி அனுபவங்கள்)

நைஜாம் அரசாங்கத்தைச் சேர்ந்த  சிஞ்சோலியின் ராஜா ஷீரடி பாபாவின் பக்தர். அவர் ஷீரடி பாபாவோடு  மாதக்கணக்கில் தங்குவார். அரசர்  காலமான பிறகு, ராணியார்(ராணி லட்சுமி பாய்) அப்போது  15 வயதேயான புட்டபர்த்தி சத்ய நாராயணனை, ஷீரடி பாபாவின் அவதாரம் எனக் கேள்விப்பட்டு புட்டபர்த்தி வந்து அவரை வணங்கி, சிஞ்சோலிக்கு அழைத்துச் சென்றார்.
அவர் அரண்மனையின் அருகே செழித்து வளர்ந்திருந்த வேப்பமரம் பற்றியும் தூர்த்து மூடப்பட்ட ஒரு கிணறு பற்றியும் கேட்டு, தன் முந்தைய மேனியில் இருந்தபோது பார்த்ததாகச் சொல்லி ஆச்சரியப்பட வைத்தார். அதைப் போலவே தாம் ஷீரடி பாபாவாக இருந்தபோது அரசருக்குக் கொடுத்த ஆஞ்சநேயர் விக்ரகத்தைப் பற்றியும் விசாரித்து ராணியை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பிறிதொரு நாளில் அறையைச் சுத்தம் செய்யும்போது ராணியார் பித்தளை கமண்டலம் ஒன்று இருப்பதைக் கண்டு அதை எடுக்க முனைந்தபோது  அதில் நாகம் ஒன்று  சுருண்டு கிடக்கக் கண்டார். அதைத் தொடாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்து விட்டார். பாம்பு ஊர்ந்து வெளியே சென்றதும் அந்தக் கமண்டலத்தை அப்படியே வைத்துவிட்டார்.

பிறகு தசரா சமயத்தில் அவர் புட்டபர்த்தி புறப்பட இருந்தபோது அவர் கனவில் தோன்றி "வரும்போது மறவாமல் அந்தக் கமண்டலத்தையும் எடுத்து வா" என சுவாமி பணித்தார். அவ்வாறு எடுத்துச் சென்றபோது சுவாமி சொன்ன விஷயம் ராணியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நான் அங்கு வந்தபோது ஷீரடி பாபா பற்றியும், என்னைப் பற்றியும்  நான் சொன்ன விஷயங்களில் நீ அவ்வளவாகத் திருப்தி அடையவில்லையோ என்று தோன்றியது. அதனால்தான் நாகசாயியாக  நான் அவதாரம் எடுத்ததை உனக்குத்  தெரியவைக்க அவ்வாறு செய்தேன் என்றவாறே கமண்டலத்தைப் பெற்றுக்கொண்ட பாபா, அந்தக் கமண்டலம் முந்தைய மேனியின்போது தான் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தியது என்பதைத் தெரிவித்து, அதில் இருந்த ஸாபா  என்ற  தேவநாகரி எழுத்துக்களைக் காண்பித்தாராம்...


பின்குறிப்பு: ஷீரடி சாய்பாபா சிஞ்சொலி அரண்மனையை பார்வையிடும்போது பயன்படுத்திய டோங்கா(குதிரை வண்டி)  சிஞ்சொலி ராணியால் சத்திய சாய் பாபாவுக்கு பின்னர் கொடுக்கப்பட்டது. இன்றும் இந்த டோங்கா புட்டபர்த்தியில் உள்ள சைத்தன்ய ஜோதி மியூசியத்தில் போற்றி பாதுகாத்து வருகின்றனர். புட்டபர்த்தி செல்பவர்கள் கட்டாயம் இந்த குதிரை வண்டியை மறவாமல் பார்வையிடுங்கள். 

ஆதாரம்: Sathyam Sivam Sundaram, Vol-I by Prof. N. Kasturi. Published by Sri Sathya Sai Books and Publications Trust, Prasanthi Nilayam.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக