நீசர்கள் நிறைந்த சபையில், தனது மானம் காக்க ஆடையை இறுகப் பற்றியபடி, கிருஷ்ணா, மதுசூதனா, ஜனார்த்தனா எனக் கதறி அழுதாள் துரோபதி. உதவிக்கு வரவில்லை அந்த மாயக்கண்ணன். நிலைமை முற்றிவிட, தனது இரு கரத்தையும் மேலே கூப்பி இதயவாசி என அழைக்க, அந்த விநாடியே இளகிய கோவிந்தன், அவள் மானம் காத்து வஸ்த்திரத்தை வளரச் செய்தான். இறை வழிபாடு என்பது, நாமாவளியோ, தோத்திர உச்சரிப்போ அல்ல. அது பரிபூரண சரணாகதியின் வெளிப்பாடு.இதயத்திலிருந்து தாங்க இயலாமல் வெடித்துவரும் ஓலக்குரல். துவாபர யுகக் கதை , கலியுகத்தில் மறு நிகழ்வு. திருமாங்கல்யத்தை திருடன் பறிக்க முயல, அதை எதிர்த்து போராடாமல், பக்தை பாபாவிடம் உரிமை கலந்த கோபத்துடன், "பாபா நீ என்னுடன் இருக்க, ஒரு திருடன் எப்படி இங்கு வரலாம்" எனக் கேட்கிறாள். பக்த பராதீன பாபா எவ்வாறு அவளைக் காக்கிறார். காண்போம் பாபாவின் அந்த அற்புதத் திருவிளையாடலை.