பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற அற்புதப் படைப்புகளை படைத்த காலம்சென்ற திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஒரே மகனும், தற்போது கல்கி குழுமத்தை நிர்வகித்து வரும் திரு. கல்கி ராஜேந்திரன் அவர்களின் சாயி அனுபவங்கள்...
பல ஆண்டுகளுக்கு முன் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிறந்த தினத்தன்று, அவரைக் காண புட்டபர்த்தி சென்றிருந்தேன். பிரசாந்தி நிலையத்தின் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தேன். பூரண அமைதி. பகவான் தோன்றி அனைவருக்கும் சற்று நேரம் தரிசனம் தந்து ஆசி வழங்கினார். சிலரிடம் கடிதங்கள் பெற்றுக் கொண்டார். சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்து, உள் அறைக்கு வருமாறு ஜாடை காட்டினார். என்னைப் போலவே வேறு ஓரிருவர் அந்த பாக்கியம் பெற்றனர்.
உள் அறையில் தமது ஆசனத்தில் அமர்ந்து, “என்ன, கல்கி காரு!” என்றார். எனக்கு ஆச்சர்யம்! என்னை அவர் இதற்குமுன் பார்த்ததேயில்லை. என் எதிரே கை நீட்டிச் சுழற்றி, விபூதி வரவழைத்துக் கொடுத்தார். மறுபடி அவ்வாறே செய்து மோதிரம் வரவழைத்து, "See, made to order! correct fitting!'' என்று கூறியவாறே அணிவித்தார்! நான் பிரமித்தேன் என்பது நிஜம். ஆயினும் சொன்னேன்: “என்னை நீங்கள் தவறாக நினைக்கக்கூடாது; எனக்கு இதுபோன்ற அற்புதங்களில் நம்பிக்கை இல்லை.”
பகவான் புன்னகை புரிந்தார். “கடவுளிடம் நம்பிக்கை உண்டா?” என்று கேட்டார். “உண்டு” என்றேன். “அவரை நீ அறியமாட்டாய்; ஆனால் நம்புகிறாய்! இந்த விபூதியும் மோதிரமும் எப்படி வந்தன என்பதை நீ அறியமாட்டாய்; ஆனால் நம்ப மறுக்கிறாய்! நமக்குப் புரியவில்லை என்பதால், நம்பிக்கை இல்லை என்பது தவறு. நம்பிக்கையில்தானே உலகமே இயங்குகிறது” என்றார். நான் தலையாட்டி, அவர் கருத்தை ஏற்பதாகச் சொன்னேன். அது முதல் பாடம்.
“ஆனால், இந்த அற்புதங்கள் முக்கியமல்ல” என்று ஒரு போடுபோட்டார், பாபா. நான் வியந்து நிமிர்ந்து நோக்க, அவர் தொடர்ந்தார்: “என் உள்ளத்திலிருந்து அன்பு பிரவகிப்பதை நீ உணர்கிறாயா?” என்றார். “உணர்வது மட்டுமல்ல; கல்வி நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் கிராமப் பணிகளிலும் அந்த அன்பைக் கண்கூடாகக் காண்கிறேன்” என்றேன். “அந்த அன்புதான் முக்கியம். மற்றவை, மக்களை என்பால் ஈர்த்து, பின்னர் அவர்களை நல்வழிப்படுத்த உதவும் உபாயங்கள்” என்றார். “அன்பே சிவம்” என்று இரண்டாவது பாடம் கற்றேன்.
பாபாவின் அந்த மனிதாபிமானப் பேரன்பு, பல்லாயிரக்கணக்கான சென்னைவாசிகளுக்கு குடிநீராக இன்றும் பிரவகித்துக் கொண்டிருக்கிறது. என்றும் பெருகி வரும்.
சுந்தரத்திலும் இருக்கிறேன்:
சென்னையில் உள்ள ‘ சுந்தரத்தை‘ அறியாத சாய் பக்தர்கள் இருக்க முடியாது. ‘சுந்தரத்தில்’ நிகழ்ந்த சில அற்புதங்கள்.
“மார்ச் 27, 2011. அன்றுதான் பகவான் உடல் நலம் சரியில்லாமல், புட்டபர்த்தியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் (மார்ச் 28) முதல் ‘சுந்தரத்தில்’ இருக்கும் பாபாவின் பெரிய படத்திலிருந்து விபூதி கொட்ட ஆரம்பித்தது. அவர் மஹா சமாதி அடைந்தது ஏப்ரல் 24ஆம் தேதி. அதற்கு அடுத்த நாள் (ஏப்ரல் 25) முதல் உள்ளே இருக்கும் பகவானின் படத்திலிருந்து விபூதி நிற்காமல் கொட்டிக்கொண்டே இருக்கிறது.”
கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி, மாலை 3 மணி... எப்போதும்போல பெண்மணிகள் ‘சுந்தரத்தில்’ பெருக்கி, துடைத்து, துப்புரவு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். திடீரென உள்ளே நுழைவது போன்ற foot printsஐ அவர்கள் பார்த்தார்கள். அந்த பாதச் சுவடுகள் எல்லாமே நிதான நடையாக கட்டை விரலை விரித்து பகவான் எப்படி நடப்பாரோ அப்படியே, தோன்றி இருக்கின்றன. பாபா சுந்தரத்துக்கு வந்திருக்கும் அடையாளம் அல்லாமல் வேறு என்ன அது? என்ன மழை கொட்டினாலும், எவ்வளவு வெயில் அடித்தாலும் சரி, இந்த பாதச் சுவடுகள் அப்படியே இருக்கின்றன.”
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சமீபத்தில் நடந்த அனுபவம் இது. சிறு வயது முதலே புட்டபர்த்தி சென்று, பாபாவிடம் ஆசி வாங்கி வருபவர் அவர். முக்கியமான பதவி ஏற்றுக்கொள்ளும்போதும் அப்படித் தான். கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு பெரிய பொறுப்பை ஏற்க வேண்டி வந்தது. அதற்குமுன், புட்டபர்த்திக்கு செல்ல வேண்டும் என நினைத்தார். ஆனாலும், அவரால் போக முடியவில்லை. மிகுந்த மன வேதனையுடன் தூங்கினார். அன்று இரவே அவரது கனவில் தோன்றிய சாயி, “ஏன் புட்டபர்த்திக்கு போக முடியலேன்னு கவலைப்படறே? நான் ‘சுந்தரத்துல’ இருப்பது உனக்கு தெரியாதா?” என்று கேட்டார். தவிர, “சுந்தரத்துல, மாடில இருக்கும் என் ரூம்ல, படுக்கையை சுத்தம் பண்ணும்போது, என் தலகாணியை வைக்காம போய்ட்டாங்க. அதை சரி பண்ணச் சொல்லு” என்றும் சொல்லி இருக்கிறார். ‘சுந்தரத்தின்’ மாடியில் பாபாவின் அறை இருப்பது, அன்றுவரை அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குத் தெரியாது. மறுநாள் ‘சுந்தரம்’ வந்த அவர், பாபா கனவில் சொன்ன விஷயங்களை அங்கிருப்பவர்களிடம் சொன்னார். “ஆம். பாபாவின் அறை மாடியில் இருக்கிறது” என்ற அவர்கள், பாபாவின் அறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கே படுக்கையின் மீது தலகாணி இல்லை. கப்போர்டில் இருந்தது. படுக்கையை சுத்தம் செய்ய வந்தவர்கள், அந்த தலகாணியை அங்கே எடுத்து வைத்திருக்கிறார்கள்.”
இத்தனை அதிசயங்களையும் சொல்லும் சாயி பக்தர்கள், இப்போது சொல்லுங்கள்... ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்பதை பாபா உணத்திக்கொண்டுதானே இருக்கிறார்” என்றும் கேட்கிறார்கள்..
ஆதாரம்: 27 நவம்பர் 2011 அன்று 'உங்களோடு இருக்கின்றேன்' என்னும் தலைப்பில் வெளிவந்த 'கல்கி' வார இதழ்க் கட்டுரையிலிருந்து...
I think there is a mistake bin Baba's mahasamadi date. I.e 24th April 2011.
பதிலளிநீக்கு