தலைப்பு

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

சாயி பற்றி சாயி!


"இந்நாள் மட்டுமல்ல, எந்நாளும் யார் முயன்றாலும், எவ்விதம் ஆராய்ந்தாலும், எத்தனை காலம் தவமிருந்தாலும், என் உண்மை தத்துவம் மக்களுக்கு விளங்காது" என்று தன் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் சுவாமி தமது 14ஆவது வயதிலேயே குறிப்பிட்டுள்ளார். ஆயினும் ஆங்காங்கு சுவாமி அருளியிருக்கும் சொற்பொழிவுகளுள் தன் ஸ்வரூபம் குறித்து விளக்கம் தந்ததுண்டு. அதில் வெளிவந்த விபரங்களில் சிலவற்றை அடியிற் காணலாம்:

பெயர்

"எனக்கென்று தனிப்பெயர் ஏதுமில்லை. எல்லாப் பெயர்களுமே என்னுடயவைதான். எந்தப் பெயரால் அழைத்தாலும் நான் உடனேபதிலளிப்பேன். என்னை நீங்கள் அழைக்காவிடினும் உங்களுக்கு நான் தேவைப்பட்டால் உடனே ஓடிவருவேன்."

வயது

"எனக்கு வயதென்பதே இல்லை (வயதிற்கப்பாற்பட்டவன் நான்). என்னுடைய விளையாட்டிற்காக (லீலைக்காக) இந்த பிரபஞ்சத்தை நான்படைத்ததற்கு முன் என்னை புரிந்துகொள்ள எவரும் இல்லை. “ஏகோஹம் பஹுஸ்யாம்” - நான் ஒருவனே பற்பல தோற்றங்களில் காணப்படுகிறேன்."

பெற்றோர்

"என்னுடைய பிறப்பு கர்மத்தின்விளைவாக ஏற்பட்டதல்ல (கர்மஜென்மமல்ல).  'ஆத்மானம்ஸ்ருஜாம்யஹம்' - என்னை நானே தோற்றுவிக்கச்  சங்கல்பம் கொண்டேன். என்னுடைய பெற்றோர் என்ற சிறப்பான உரிமையை பெறும் தகுதியுள்ளோரை நான்தேர்ந்தெடுத்தேன்."

நான் குடியிருக்கும் வீடு

"நான் எல்லா இதயங்களிலும் குடிகொண்டுள்ளேன் (சர்வபூத அந்தராத்மா, ஹ்ருதயநிவாசி). எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருப்பவன்நான். உன்னுடைய இதயத்தைப் பரிசுத்தப்படுத்தி அதை பிரசாந்திநிலையமாக ஆக்கிவிட்டாயானால் நான் அங்கு மிக்க மகிழ்ச்சியுடன் வாசம்செய்யத் தொடங்குவேன். இங்கேயுள்ள பிரசாந்தி நிலையம் பக்தர்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் இதயமே எனக்கான பிரசாந்தி நிலையம்."

சொத்து

"நீங்களே எனது சொத்து அல்லது பொக்கிஷம், நிதி எல்லாம். என்னை நீங்கள் ஏற்காவிடினும், மறுத்தாலும் நான் உங்களுடையவன் (நேனு நீவாடு). என்னுடைய சக்தி எல்லாம் உங்களுடைய உபயோகத்திற்காகவேதான்."

தொழில்

"பக்தர்களுக்கு புக்தி (நல்வாழ்வு) முக்தி (விடுதலைப்பேறு) அளிப்பதே எனது தொழில். பக்தர் என்பவர் யார்? இன்பதுன்பங்களை 'எனையாளும் ஈசன் செயல்' என்று என் ஆதீனமாக்கிச் சமநிலையான மனத்துடன் ஏற்பவர்களே எனது பக்தர்கள்."

தகுதி

"அன்பு ஒன்றே."

என் பொழுதுபோக்கு

"பக்தர்களை ரக்ஷிப்பதுடன் நான் திருப்தியடைந்து விடுவதில்லை. மனித உள்ளங்களில் பக்தி உணர்வை வித்திட்டு, வளர்த்து, அதை நன்கு செழிக்கச் செய்வதிலேயே நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இதனால் அவர்கள் பிறவிச் சுழலிலிருந்து விடுதலை பெற வழிவகுக்கிறேன். பக்தி உணர்வைப்பெருக்கி அவர்களை ரக்ஷிக்கிறேன்."

(தொகுப்பு: ஸ்ரீ என். கஸ்தூரி. ‘சனாதன சாரதி’, பகவான் பாபாவின் 60ஆவது அவதார தினச் சிறப்புமலரிலிருந்து.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக