தலைப்பு

வியாழன், 25 ஏப்ரல், 2019

சத்ய சாயிபாபாவின் மிகப்பெரிய அற்புதம் - கல்கி ராஜேந்திரன்


ஸ்ரீ சத்ய சாயிபாபா எத்தனையோ அற்புதங்களைச் சாதிக்கிறார், பார்க்கிறோம்; கதை கதையாகக் கூறக் கேட்கிறோம். அவற்றிலெல்லாம் மிகப்பெரிய அற்புதம், அவரது தரிசனத்துக்காகக் காத்திருக்கும் மக்களிடையே காணப்படுகிற கட்டுப்பாடுதான். கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யப்போகும் மக்கள்
எப்படியெல்லாம் வளவளவென்று பேசி அரட்டை அடிக்கிறார்கள். பகவானைக் கும்பிடும் போது கூட எப்படி 'முருகா' என்றோ 'கோவிந்தா' என்றோ கூவி அழைக்கிறார்கள்! அதே மக்கள் பிரசாந்தி நிலைய வாசலில் எவ்வாறு மணற்பரப்பில் ஊசி விழுந்தால்கூடக் கேட்கும் அளவுக்கு அமைதி காக்கிறார்கள்! இந்தக் கட்டுப்பாடு அதிகாரத்தினால் உருவானதல்ல, அன்பினால் தன்னியல்பாக ஏற்பட்டிருப்பது அற்புதத்திலும் அற்புதம்!

எளிய உதாரணங்களால் பெரிய உண்மைகளைக் கூறுகிறார் பாபா என்றால் காரணம், தத்துவார்த்தமாகத் தடபுடல் ஆங்கிலத்தில் அவருக்குப் பேசத்தெரியாது என்பதல்ல. அப்படிப் பேச, எழுத வேண்டிய இடத்தில் செய்வார். ஒரு சமயம் சொன்னார்:

Duty without love is deplorable; Duty with love is desirable; Love without duty is Divine.”

முதல் இரண்டு அம்சங்களை எளிதிலேயே புரிந்து கொள்ள முடிந்தாலும் மூன்றாவது தெய்வீக விஷயத்தை எனக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதென்ன கடமையில்லாத அன்பு? கடமையைச் செய்யாமல் அன்பு மட்டுமே காட்டினால் போதுமா? இது பற்றி பாபாவிடமே கேட்டேன். கருணையோடு விளக்கினார்:

கடமை என்ற உணர்வேயின்றி அதையே அன்பு மயமாகிச் செய்துவிடுவதைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறேன். உதாரணமாகத் தாய் குழந்தைக்குப் பாலூட்டுவது அவள் கடமைதான். ஆனால் கடமை என்று நினைத்து அவள் அதைச் செய்வதில்லை. அன்பு மயமாகிப் பாலூட்டுகிறாள். தெய்வநிலைக்கு உயர்கிறாள். அப்படி நமது கடமைகளையும் அன்பு மயமாகிச் செய்யக்கூடுமானால் கடமை சுமையாகத் தெரியாது. அந்தப் பரிபக்குவத்தை எய்தும்போது நாம் கடவுள் தன்மையை எய்தியவர்களாவோம். புரிகிறதா? கடமை உணர்வு வெளியே இருந்து உள்ளுக்குப் பாய்வது, அன்புணர்வு உள்ளேயிருந்து பிரவகிப்பது!”

இன்னொரு பொன்மொழியை உதிர்க்கிறார் பாபா:

நேற்று என்பது நடந்து முடிந்து போன கதை. அதை எண்ணி ஏங்குவதாலோ திருப்தி அடைந்து விடுவதாலோ ஒரு பிரயோசனமும் இல்லை. நாளை என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாது. எனவே, அதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை. ஆனால் நல்ல விளைவுகளை எதிர்நோக்கி இன்று நீ செயல்படுகிறாய் அல்லவா? இந்த நிகழ்காலம்தான் முக்கியம். எனவே இப்போது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாயோ அதனை முழுக் கவனத்துடன் அன்பு மயமாகிச் செய்!”

நான் நிகழ்த்தும் அற்புதங்கள் எதுவும் முக்கியமில்லை” என்கிறார் பாபா. 

என் அன்பை நீ உணர்கிறாயா? அந்த அன்புதான் இந்த சாதனைகளையெல்லாம் நிறைவேற்றியது. அந்த அன்புதான் நிலையானது.”

இந்தக் கணத்தில் பாபா எனக்கும் பகவான் ஆனார்.  ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்று தாம் எழுதிய காந்திஜீயின் வாழ்க்கை வரலாற்றுக்குத் தலைப்புத் தந்தார் கல்கி. காந்தியைத் தெய்வமாக்க வேண்டுமா?” என்று சிலர் கேட்கவும், காந்தியை மனிதர் என்போமானால், நம்மையெல்லாம் என்னவென்று கூறிக்கொள்வது?” என்று திருப்பிக் கேட்டார் கல்கி. அந்த அர்த்தம் பொதிந்த மெலிதான நகைச்சுவை இப்போது எனக்கு நினைவு வந்தது.  

ஆதாரம் : 24-11-1985 'கல்கி' இதழில் அதன் ஆசிரியர் திரு. கல்கி ராஜேந்திரன் அவர்கள் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக