தலைப்பு

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

தூய மனதுடன் அழைத்தால் சாயி பகவான் எங்கும் வருவார்!


சாயிராம். பகவானின் தாமரைப் பாதங்களில் பணிவான வணக்கங்கள்!

இன்று (15.04.2019) எனது இல்லத்திற்கு பகவான் ஒரு பிச்சைக்காரர் (இப்பதத்தை பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும்) வடிவத்தில் நேரில் வருகை புரிந்தார். ஃபிரான்சின் உஸைன்ஸ் சென்டரில் வீட்டிற்குத்  தேவையான
பொருட்களை வாங்கிவிட்டு இல்லத்திற்கு வந்தேன். எனது வீட்டருகே ஒரு வறியவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் “என்ன வேண்டும்?” எனக் கேட்கவும் அவர் உணவு வேண்டும் என்றார். உடனே உள்ளே சென்று பகவானுக்குப் பிரசாதமாகப் படைக்கப்பட்ட உணவை ஒரு நல்ல தட்டில் வைத்து வீட்டினுள் அழைத்து உட்காரச் சொல்லி, பருக நீர் மற்றும் பழச்சாறுடன் அவருக்குக் கொடுத்தேன்.

மிகவும் அமைதியாக அமர்ந்துகொண்டே அவர் நம் பகவானின் படத்தையே உற்று நோக்கினார். பகவானின் படத்தைச் சுட்டிக் காட்டி, “அவரை எனக்குத் தெரியும், மிகவும் பணக்காரர்!” எனக் கூறினார். நான் அவரைப் புன்முறுவலோடு பார்தேன்.  மீண்டும் அவர், “நான் ஒரு பிச்சைக்காரன், அவர் பணக்காரர் ஆனாலும் நாம் அனைவரும் ஒன்றே!” என்றார். முதலில் அவர் கூறியது எனக்கு விளங்கவில்லை.

நான் அளித்த உணவை அப்போதுதான் சாப்பிட்டு முடித்திருந்தார்.

“வேறு ஏதாவது வேண்டுமா?” எனக் கேட்டேன். அதற்கு அவர், தனக்குப் போதும், வேறொருவருக்குச் சில பழங்களைத் தாருங்கள் என்று கேட்டார். மேலும்,  “உள்ளே சென்று சமையலறையிலிருந்து 9 ஆப்பிள் பழங்களை எடுத்து வாருங்கள்” எனக் கூறினார்.

என்னிடம் மிகச்சரியாக 9 ஆப்பிள் பழங்களே இருந்தன. அவை அனைத்தையும் வாங்கிக்கொண்ட அவர், 3 பழங்களை என்னிடமே திரும்பக் கொடுத்தார். “நான் கேட்டதை நீங்கள் தந்தீர்கள், நானோ நீங்கள் கேட்காமலே என்னையே தந்துவிட்டேன்” எனக் கூறி உரத்த குரலில் சிரித்தார். ஆச்சரியத்தோடு எனக்கு சிறிது அச்சம் படர்ந்தது. “எனக்குச் சிறிது தண்ணீர் கொண்டுவாருங்கள்” எனக் கேட்டார்.

உள்ளே சென்று வெளியே வந்தபோது, ஷீரடி சாயிபாபா என் இல்லத்திலிருந்து வெளியேறி, என்னைத் திரும்பிப் பார்த்துக்கொண்டு சிரித்தபடியே சென்று மறைவதைப் பார்த்தேன்!

என் கணவர் வந்தவுடன், “யாராவது நம் வீட்டுக்கு வந்து உணவு வேண்டும் எனக் கேட்டர்களா?” என்று கேட்டார். நடந்தவற்றை முழுவதுமாகக் கூறினேன். அதற்கு அவர், “எனக்கு முன்பின் அறியாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. ‘நான் உங்கள் இல்லத்திற்கு மதிய உணவு சாப்பிட வருகிறேன்’ எனக் கூறி வைத்துவிட்டார். மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை” என்றார்.

நாங்கள் இருவரும் உள்ளே சென்று சுவாமிக்கு நன்றி கூறலாம்  எனப் போனதும், எங்கள் பூஜையறையில் வைத்துள்ள ஷீரடி சாயிபாபா மற்றும் சத்ய சாயி திருவுருவப் படங்களில் விபூதி உருவாகியிருந்தது.
அதன்மூலம் நான்தான் இல்லத்திற்கு வந்திருந்தேன் என்பதை உறுதிப்படுத்தினர்.

11 ஆண்டுகளுக்கு முன், நான் உங்களிடம் ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி ஒன்றைக் கேட்டேன். “சுவாமி தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்களை மட்டுமே ஆசீர்வதிப்பாரா, என் போன்ற சாமானியரை ஆசீர்வதிக்க மாட்டாரா?” எனக் கேட்டேன். நீங்கள் அதற்கு, “நன்கு பிரார்த்தியுங்கள், உள்மனதின் ஆழத்திலிருந்து இறைவனை அழையுங்கள், ஒருநாள் அவசியம் அவர் வருவார்” எனக் கூறினீர்கள்.

என் வாழ்வில் அந்த நாளும் வந்தது!

-Sujatha. R, France.


ஆதாரம்: சாயி சகோதரி திருமதி R.சுஜாதா அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து...

மொழிபெயர்ப்பு: பாலசுப்ரமணியன், பெங்களூரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக