தலைப்பு

சனி, 13 ஏப்ரல், 2019

வெவ்வேறு சாதிகளை சேர்ந்த இரு சாயி உள்ளங்களுக்கு திருமணம் செய்து வைத்த சாயி பகவான்!


பகவான், தனது இருபத்தி எட்டாவது அகவையில் நிகழ்த்திய அதி அற்புதம் இதோ! 

இது1954ல் வாரங்கல்லில் நடந்தது. பகவானின் இரு பக்தர்கள்களான அவர்கள் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள். அவர்கள் தத்தம் குடும்ப மூத்த உறுப்பினர்களின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். மிகவும் சீற்றம் கொண்ட இருவரின் பெற்றோர்களும்,
அவர்களை இழப்பதற்கு தயாராக இருந்தார்களே தவிர, அவர்களின் திருமணம் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவர்களிருவரும் பாபாவிற்கு தந்தி அனுப்பி உதவி கோரினார்கள். திருமணம் செய்து கொள்வதில் தீர்மானமாக இருந்த அவர்கள், அத்திருமணத்தை பகவானே நேரில் வந்து சுமூகமாக நடத்தி தர விரும்பினார்கள்.

தந்தி கிடைத்ததும், பாபா பெங்களூர் சென்று, அங்கிருந்து வான்வழியாக ஐதராபாத் சென்று பின்னர் காரில் வாரங்கல் சென்றடைந்தார். சுவாமி, அங்கு அமைச்சர் இராமசந்திர ரெட்டியின் இல்லத்தில் தங்கிக்கொண்டு, திருமணத்தின் பாதுகாப்பிற்கு சில காவலர்களை அனுப்பும் படி கேட்டுக் கொண்டார். ஆர். ஹரி நாராயணன் முப்பது காவலர்கள் அடங்கிய பலம் வாய்ந்த படையுடன், பகவானின் கட்டளைக்கு காத்திருந்தனர். சுவாமி,  அவர்களை திருமண மண்டபத்தில் ஆங்காங்கு நிலையில் நின்று, எதுவும் செய்யாமல் இருப்பது உத்தமம் என்று கூறி இருந்தார்.

சரியாக திருமணத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, இடையூறு செய்ய, மணமகள் தரப்பில் இருந்து நூறு நபர்கள் கைகளில் கம்புடன் வந்தனர். இதை கண்ட உடனே, திருமணம் பாதுகாப்புடன் நடைபெற, மணமகன் தரப்பில் நூறு நபர்கள் குவிந்தனர். பாபா திருமண மண்டபத்திற்குள் வரும் போது கண்ட காட்சியே இது.

 சுவாமி பந்தலில் நேராக சென்று, மணமகன் முன்பு நின்று கொண்டார். ஹரி நாராயணனை அழைத்து, மணமகள் பின்னால் நிற்க கூறினார். தனது கைகளை உயர்த்தி, மாங்கல்ய கயிற்றினை வரவழைத்து, அதை மணமகனிடம் கொடுத்து,  மணமகள் கழுத்தில் கட்டச் சொன்னார். போடப்பட்ட முடிச்சுகளையும், அங்கிருந்த சி.ஐ.யிடம் மேற்பார்வை செய்யச் சொன்னார். இந்த காட்சியானது, குரு ஷேத்திரத்தில், கிருஷ்ணன் இரண்டு போரிடும் பிரிவுகள் மத்தியில் நிற்பது போல இருந்தது. அனைத்து குண்டர்களும், சிலைகளாக பேச்சின்றி பகவானையே பார்த்து கொண்டு நின்றார்கள். பதற்றத்துடன் காணப்பட்ட காவலர்களோ, அடுத்து என்ன நடக்கும் என ஆச்சரியத்துடன் இருந்தனர்.

அப்போது, சுவாமி கம்புடன் நின்ற குண்டன் ஒருவனிடம் அருகில் சென்று, தனது கைகளை மேலே காற்றினில் அசைத்து இனிப்புகளை வரச் செய்தார். இதை கண்ட அந்த குண்டன் உடனே கம்பை கீழே போட்டு விட்டு, இனிப்புகளை கேட்டு சுவாமியிடம் கைகளை நீட்டினான். சில நிமிடங்களில் அனைத்து குண்டர்களும் சுவாமியை சூழ்ந்து கொண்டு இனிப்புகளை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். சுவாமி அசுரர்கள் மத்தியில் நின்ற மோகினி போல காட்சி அளித்தார். சுவாமி அவர்கள் அனைவரையும் அழைத்து, ‘நான் உங்களுக்கு உணவு பரிமாறுகிறேன். வந்து சாப்பிடுங்கள்’ என்றார். இவ்வாறு அந்த திருமணம் பகவான் அருளாள் மிக அமைதியாக, காவலர்களே ஆச்சரியப்பட நடந்தேறியது.  பிறகு தன்னை சுற்றியுள்ளவர்களிடம் சுவாமி, ‘எல்லா மனிதர்களும் ஒன்றே. அவர்கள் கடவுளின் சித்தத்தால் உருவாக்க பட்டனர். மனிதர்களை பிளவு படுத்தும் சாதி, சமய மதங்களோ இல்லை. நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் நேசித்து, நம்மிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும்’ என்று கூறினார். இதனை கண்டு ஈர்க்கப்பட்டு, திரு. ஹரி நாராயணன் பாபாவின் பக்தர் ஆனார் அன்று முதல். அவருடைய அனுபவத்தை அடுத்த முறை கூறுகிறேன்.

இவ்வாறு ஏழை மக்களின் ஆசையை பூர்த்தி செய்து, அவர்கள் திருமணம் இனிதே நடைபெற சுவாமி அருதளித்தார்.

ஆதாரம்:  முன்னாள் அமைச்சர் திரு. இராமசந்திர ரெட்டி அவர்களின் பேரன்  திரு. பாபு  அவர்கள் சாயி சமதியில் ஆற்றிய உரையிலிருந்து. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக