பூஜை அறையை எட்டிக்கூட பார்த்திராத என் மனைவியை சுவாமி தன் அற்புதத்தால் பூஜை அறையே கதி என்று மாற்றிய அற்புதக் கதைதான் இது. ஆம் எங்கள் வாழ்வில் நடந்த அந்த மெய்சிலிர்க்கும் நீண்ட அனுபவத்தைச் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் எழுதி உள்ளேன்.
என்னுடைய பெயர் ஜெயகிருஷ்ணன் (Jaykay) என்னுடைய மனைவியின் பெயர் ரூபா. நாங்கள் 1998இல் காதல் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் வசித்து வந்தோம். என் மனைவியை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் அவள் செல்லமாக வசதியாக வளர்ந்த பெண். எங்களுக்கு திருமணமான ஆரம்பத்தில் அவளுக்கு ஒன்றும் தெரியாது. குறிப்பாக சமையல் மற்றும் பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்வது போன்ற அடிப்படை விஷயம் கூட தெரியாமல் இருந்தால். திருமணமான ஒரு வருடத்திற்குள் அனைத்து விஷயங்களும் தானாகக் கற்றுக் கொண்டாள்.
எங்களுக்கு திருமணமான ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு நாங்கள் அஸ்வினி என்ற பெயர் சூட்டினோம். அஸ்வினி பிறந்து ஒரு ஐந்து மாதத்தில், என் நண்பர் தியாகராஜன் மூலமாக சுவாமி ஒரு புகைப்படமாக எங்கள் வீட்டிற்குள் வந்தார். எனக்கு ஆரம்பத்தில் சுவாமியிடம் எந்த ஒரு ஈர்ப்பும், நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன். பின்னர் சுவாமி என் வாழ்வில் நிகழ்த்திய ஒரு அற்புதத்தின் மூலமாக, நான் இனி எனக்கு எல்லாம் அவர்தான் என்று முழுமனதாக ஏற்றுக் கொண்டேன். (அது ஒரு பெரிய கதை).
இப்போது நான் சொல்ல வந்த கதைக்கு வருகிறேன். என் மனைவியை பொறுத்தவரை அவள் மிகவும் நல்லவள். என் குழந்தைக்கு ஒரு நல்ல அம்மாவாகவும் எனக்கு ஒரு நல்ல மனைவியாகவும் இருந்தாள். அப்படி இருந்தும் என் மனைவியிடம் ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது. அவள் பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றும் பழக்கம் சுத்தமாக கிடையாது. இதை குறை என்றும் சொல்ல முடியாது எல்லாம் சரியாக இருக்கும் என் மனைவிக்கு கடவுள் பக்தி இல்லையே என்று ஒரு ஆதங்கம் (அல்லது) வருத்தம் என்று எப்படி வேணாலும் வைத்துக் கொள்ளலாம். எங்களுக்கு திருமணமான முதல் மூன்று வருடத்தில் ஒருமுறை கூட என் மனைவி பூஜை அறைக்கு செல்வதை நான் பார்த்ததே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நானும் அவளிடம் பலமுறை "அம்மாடி ரூபா அக்கம்பக்கத்து மனைவிமார்கள் எல்லாம் எப்படி பயபக்தியுடன் இருக்கிறார்கள் நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிறாய் தயவுசெய்து பூஜை அறைக்கு போய் விளக்கேற்று" என்று பணிவாகவும் கோபமாகவும் பேசியும் எந்த ஒரு பிரயோஜனம் இல்லை. எப்போது கேட்டாலும் ஒரு பதில் ரெடியாக வைத்து இருப்பாள். எனக்கு இதில் interest இல்லை தயவு செய்து வற்புறுத்தாதீங்க என்று சொல்லுவாள். மீறி வற்புறுத்தினால் அதெல்லாம் வயதானவர்கள் செய்யும் பார்மாலிட்டீஸ், நான் வயதான பிறகு செய்கிறேன் என்று பதிலுரைப்பாள். இதனால் நான் சுவாமியிடம் மானசீகமாக தனிப்பட்ட முறையில் ஒரு கோரிக்கை ஒன்று வைத்திருந்தேன் சுவாமி என்னுடைய மனைவியை முழுவதுமாக நீங்கள் மாற்ற வேண்டும். அவளுக்கு உங்களின் மகிமையை புரியவைத்து, பூஜை புனஸ்காரங்களில் நாட்டம் கொண்டு வர வேண்டும் என்று மட்டும் வேண்டியிருந்தேன்.
இப்படி எங்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. 22 மே 2003ல் அதாவது எங்களுடைய மகள் அஸ்வினிக்கு மூன்று வயது இருக்கும்போது ஓர் மாலை நேரத்தில் நாங்கள் எங்கள் மகளை அழைத்துக்கொண்டு வடக்கு பெங்களுருவில் நடைபெற்ற ஒரு பொருட்காட்சிக்கு சென்றிருந்தோம். பொருட்காட்சிக்கு சென்ற அந்த சமயத்தில், என்னுடைய மனைவியிடம் இருந்த எங்கள் குழந்தை எங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் எப்படியோ தொலைத்துவிட்டாள். எங்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இரண்டுபேரும் அழுதுகொண்டே பொருட்காட்சி முழுவதும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக தேடியும் எங்கள் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக வேறு வழி இல்லாமல் இருவரும் அழுதுகொண்டே அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றோம்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எங்களுக்கு முன்னர் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தையையும் பொருட்காட்சியில் காணவில்லை என்று கம்ப்ளைன்ட் செய்திருந்தார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டரோ கடந்த முன்று மாதத்தில் மட்டும் இதுவரைக்கும் 6 குழந்தைகள் அந்த ஏரியாவில் மட்டும் காணவில்லை, ஒரு வடநாட்டு கும்பல் குழந்தையை கடத்தி வெளியூர்களில் விற்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், தாங்கள் மிகவும் தீவிரமாக அந்த கும்பலை தேடி வருவதாகவும் தெரிவித்தார். அவர் சொன்னது எங்களுக்கும் மேலும் பயத்தை அதிகப்படுத்தியது. இறுதியில் நாங்கள் கம்ப்ளைன்ட் பதிவு செய்துவிட்டு, இரண்டு நாட்களாக உணவு உறக்கத்தை மறந்து தெருத்தெருவாக எங்கள் குழந்தையின் புகைப்படத்தை காண்பித்து, தேடி அலைந்து கடைசியில் கவலையுடன் வீடு திரும்பினோம்.
வீடு வந்து சேர்ந்து ஒரு மணி நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. குழந்தைகளை கடத்திய கும்பலை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் அவர்களை சுற்றி வளைக்கும் நேரத்தில் அவர்கள் எங்களிடம் இருந்து தப்பித்து விட்டார்கள். நாங்கள் மிகவும் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறோம். எப்படியும் ஓரிரு நாட்களில் சிக்கி விடுவார்கள் அதனால் கவலை வேண்டாம் என்று சொல்லி சப்-இன்ஸ்பெக்டர் தொடர்பை துண்டித்தார்.
இரண்டு நாட்களாக எங்கள் குழந்தையைத் தேடி அலைந்த களைப்பில் நாங்கள் எங்களையே மறந்து அன்று இரவு தூங்கினோம். அதிகாலை சுமார் ஒரு ஐந்தரை மணி இருக்கும் என் மனைவி அழுதுகொண்டே என்னை எழுப்பினாள். சுவாமி கனவில் வந்தார், நேரில் பேசுவது போன்று மிகவும் தெளிவாக இருந்தது என்று சொன்னாள். சுவாமி என்ன சொன்னார் ரூபா என்று நான் கேட்க? என் மனைவி... சுவாமி சொன்னார் “அம்மா ரூபா அன்று பொருட்காட்சியில் காணாமல் போன இரண்டு குழந்தையின் பெற்றோரும் என்னுடைய பக்தர்கள் தான். ஆனால் விதியோ நான் ஒரு குழந்தையை மட்டுமே காப்பாற்ற வேண்டும் என்று இருந்தது. அதனால் நான் இன்னொரு பெற்றோரின் குழந்தையை காப்பாற்றிக் கொடுத்து விட்டேன். அந்த குழந்தையின் தாய் அனுதினமும் என்னை பூஜையறையில் பூஜித்து ஒவ்வொரு வியாழனன்றும் சமதிக்கு போய் மெய்மறந்து பஜனை பாடுகிறாள். அதனால்தான் நான் அவளின் குழந்தையை காப்பாற்றினேன்” என்று சொல்லி சுவாமி மறைந்துவிட்டார் என்று கூறினாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே நான் போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டுட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்தேன். சார் நான் பொருட்காட்சியில் காணாமல் போன பெண் குழந்தையின் தந்தை ஜெயகிருஷ்ணன் பேசுகிறேன். எங்கள் குழந்தையுடன் காணாமல் போன இன்னொரு குழந்தை கிடைத்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு போலீஸ்காரரோ, சார் அதாவது ... என்று இழுத்தார். அதற்கு நான்.. சார் தயவு செய்து விஷயத்தைச் சொல்லுங்கள் என்று கேட்க, அவரோ சார் நாங்கள் நேற்று அந்த கும்பலை சுற்றி வளைத்த போது இன்னொரு பெற்றோரின் குழந்தையை காப்பாற்றி விட்டோம். உங்கள் குழந்தையை காப்பாற்றும் போது தான் அவர்கள் வேறொரு காரில் எஸ்கேப் ஆகி விட்டார்கள் என்று சொன்னார். கடைசியாக அவர், நாங்கள் தீவிரமாக தேடிக் கொண்டு வருகிறோம் கவலை வேண்டாம் என்று தொலைத் தொடர்பை துண்டித்தார்.
இதை லவுட் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த என் மனைவி ரூபா கதறி அழுது கொண்டு பூஜை அறைக்கு ஓடி விளக்கேற்றி சுவாமியை மனமுருகிப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். நானும் இன்னொரு அறையில் சுவாமியை மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தேன்.
கருணையே வடிவான நம் சுவாமி கருணை காட்ட மாட்டாரா என்ன. ஆம் கட்டினார் அந்த அதிசயமும் நடந்தது. எங்கள் தங்கம் அஸ்வினி குட்டியை எங்கள் வீட்டுக்கு தினமும் வேலைக்கு வரும் சாமுண்டேஸ்வரி என்ற பெண்மணி தூக்கிக் கொண்டு வேகமாக உள்ளே வந்தாள். சார் நம்ம பாப்பா கிடைச்சிருச்சு.. வீட்டுக்கு வெளியில யாரோ விட்டுட்டு போய் இருக்காங்க சார் என்று சொன்னாள். நாங்கள் இருவரும் எங்கள் குழந்தையை கட்டித்தழுவி முத்தமிட்டு சுவாமிக்கு நன்றி தெரிவித்தோம். கடத்தல் கும்பலிடம் இருந்து என் குழந்தையை யார் இங்கு கொண்டு வந்து விட்டது? எப்படி வந்தது... ? எல்லாம் நம் சாயிநாதனை தவிர வேறு யாரால் முடியும். எல்லாம் நம் சாயிநாதன் நடத்திய நாடகம் என்று என்னுடைய மனைவிக்கு புரிந்ததோ இல்லையோ எனக்கு நன்கு புரிந்தது.
அந்தத் தருணத்தில் இருந்து முழுவதுமாக மாறிய என் மனைவி இப்போது எல்லாம் பூஜை அறைக்கு சென்றால் குறைந்தது இரண்டு மணிநேரம் இல்லாமல் வெளியே வரமாட்டாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுவாமியின் அற்புதத்தை என்னவென்று சொல்வது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். இப்பிரபஞ்சத்தை படைத்த நம் சத்ய சாய் நாதன் கரைத்தால் என் மனைவியின் மனம் கரையாத என்ன! ...
🙏 சாய்ராம் 🙏
ஜெய்கிருஷ்ணன் M.S (Jaykay)
சத்ய சாயி யுகம் வாட்ஸ் அப் குருப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக