தலைப்பு

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

ஹோவர்ட் மர்ஃபட் அவர்களின் முதல் அனுபவம்!


விஞ்ஞானத்தை மீறி இயங்கும் எந்த செயலுமே அற்புதம்தான் என்று சொல்ல வேண்டும்.
"இப்படி நடக்குமா" ? இப்படி முடியுமா  ? என்று கேள்வி கேட்டால் விடை தெரியாது. ஆனால் அற்புதங்களின் சக்தியை உணர்ந்து அனுப்பப்பட்டவர் ஆம் முடியும்  !! ஆம் நடக்கும் !! என்றே பதில் கூறுவர்.

ஒளி வடிவில் உருவம் காட்டுவது, தொலைவில் நடப்பதை கண்டறிவது, சிறிய அளவு உணவை பன்மடங்காக்கிவது,  வியாதியஸ்தரையும் அங்கஹீன ரையும், ஸ்பரிசமாத்திரத்தால் குணப்படுத்துவது, இறந்தவர்களை மீட்பது, மகா பாவிகளை திருத்துவது.. இவையெல்லாம் கிருஷ்ணபரமாத்மாவின் அற்புதங்களாக பகவான் தாஸ் தெரிவித்துள்ளார்.

பகவான் பாபாவும் இவ்வித அற்புதங்களை நிகழ்த்தியுள்ளதாக வயப்பட்ட அன்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஹோவர்ட் மா்ஃபட்  என்ற ஆஸ்திரேலிய அன்பர் முதன்முதலில் பாபாவை பார்த்தபோது ஏற்பட்ட இன்ப அனுபவத்தை விவரிக்கிறார்..
"அவர் வேகமாக, ஆயினும் நளின எழிலோடு என்னை நோக்கி வந்தார். அவரது சீரான வெண்பற்கள் நட்பு வகையில் மலர்ந்தன.
என்னை நோக்கி,
"நீங்கள்தான் ஆஸ்திரேலியரா?"
" ஆம்!"
தெலுங்கில் பேசிய அவர் திடீரென தனது உள்ளங்கையை பூமியை நோக்கி இருக்கும்படி திருப்பி அந்தரத்தில் சிறு சிறு அலைகளாக அசைத்தார். உள்ளங்கையை அவர் மேல் புறமாக திருப்பியபோது கைநிறைய மிருதுவான சாம்பல்(விபூதி). அதை அங்கிருந்த இந்தியர்கள் இருவருக்கும் பகிர்ந்தளிக்க, அவ்விருவரில் ஒருவர் ஆனந்தத்தால் விம்மி அழ, பாபா தாயின் பரிவோடு, தோளிலும் முதுகிலும் இதமாக தடவினார்.

நான்.. அவர் அங்கிக்குள் ஏதோ ஒன்றை மறைத்து வைத்து தான் இந்த வித்தையை செய்கின்றார் என்று எண்ணிக் கொண்டிருந்த அந்த நொடியுள் என் அருகில் வந்து எனது சந்தேக மனத்தை படித்தாரோ என்னவோ தனது அங்கியை முழங்கை வரை மடித்த பின் அவரது உள்ளங்கையில் விபூதி வரவழைத்து அதை என் கையில் போட்டு தட்டினார்.
ஒருகணம் புரியாமல் நின்றேன்.
என் இடப்பக்கம் இருந்த பாப் ரேமர்" அதை சாப்பிடுங்கள் உங்கள் உடல் நலனுக்கு நல்லது" என்றார்.

சாம்பலை உண்ண முடியும் என்று அதுவரை நினைத்ததில்லை..
அந்த சாம்பல் என்னமோ நறுமணத்துடனும் தீஞ் சுவையுடனும் இருந்தது.
பாபா என்னை பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்படியாக செல்கிறது ஹோவர்ட் மர்ஃபட்டின்  அனுபவம்!!

ஆதாரம்: “Sai Baba: Man of Miracles” by Mr. Howard Murphet. Published by Macmillan India Ltd.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக