தலைப்பு

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

பகவானின் கருணை - டாக்டர் ராஜ்குமார்

பகவானின்  கருணை 

பிரபல வெல்வெட் ஷாம்பூவின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார். அவருடைய பாட்டனார் ஒரு டாக்டர். படைத்துறையில் பணியாற்றியவர் தாத்தாவைப் போலவே பேரனும் ஒரு டாக்டராக வேண்டும் என்பது அன்னையார் ஹேமா
சின்னிகிருஷ்ணனனின் அடர்ந்த அவா. அதற்காக அவர் 48வாரம், வியாழக்கிழமைகளில், கடும் விரதம் மேற்கொண்டார்! ஓர் இரவு சுவாமி அவர் கனவில் வந்து, கனிவுடன் விபூதி தந்து, ஆசிர்வதித்து மறைந்தார். அதனால் ஹேமாவிற்கு மகன் டாக்டருக்கு படிப்பார் என்று பெரு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

ஆனால் P.U.C. தேர்வில் இராஜுவும், அவருடைய நண்பர்கள் மூவரும்கூடத் தோற்றுவிட்டனர் என்ற செய்தி தொலைபேசி மூலம் தெரியவந்தது. எனினும் சுவாமி கனவில் அருளிய ஆசி பொய்த்துப்போகாது என்ற உறுதியோடு இருந்தார், ஹேமா. மறுநாள் விடியல் கடலூர் சமிதியினர் நடத்திய நகர சங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ளும்படி ராஜூவை எழுப்பி அனுப்பினார். அதற்க்கு அடுத்த நாளே, தோற்றுவிட்டதாகத் தெரிவித்த நால்வரில் இராஜூ மட்டும் தேறியுள்ளதாக தெரியவந்தது.

பிறகு மருத்துவ படிப்பிற்கு முயன்றனர். தேர்வாளர்களில் ஒருவரை கண்டு பேசினார் சின்னிகிருஷ்ணன். இராஜு இரண்டாம் வகுப்பில் தேறியிருந்ததால், மருத்துவத்தில் இடம் கிடைப்பது மிகவும் அரிது என்றும் ஏதாவது அற்புதம் நிகழ்ந்தால்தான் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறிவிட்டார் அந்தத் தேர்வாளர்!.

கணவர் வந்து செய்தியை சொன்னதும், 'அற்புதம்,' என்று சொல்லே  ஹேமாவின் மனதில் ஆழப் படிந்தது. அற்புதம் நிகழ்த்தக் கூடியவர் அண்ணல் ஒருவர் தாமே ! உடனே இராஜுவுடன் புட்டபர்த்திக்குப் போகப் புறப்பட்டார் ! ஆனால் கணவரோ, அதெல்லாம் கிடைக்க வாய்ப்பில்லை, யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எங்கேயும் போக வேண்டாம்,'' என்று உறுதியாக உத்தரவிட்டு விட்டு, வெளியே சென்றுவிட்டார்.

அவர் தலை மறைந்ததும், ஹேமா மகனை அழைத்துக் கொண்டு, புட்டபர்த்திக்குக் கிளம்பிவிட்டார். அங்கு சென்ற பின்னரே, '' கணவரை எதிர்த்து கொண்டு வந்துவிட்டோமே, மகனையும்கூட அழைத்துக்கொண்டு. கோபப்படுவாரே,'' என்று அச்சம் ஏற்பட்டது. அதனால் முதல் தரிசனம் பெற்றதுமே ராஜூவை கடலூருக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.

மறுநாள் தரிசனத்தின் போது, சுவாமி ஹேமாவின் அருகே வந்து, கனவில் காட்சியளித்தது போலவே, கனிவுடன் பார்த்துக் கை தூக்கி ஆசிர்வதித்து, விபூதியும் தந்தருளினார். ஹேமா மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டுக் கடலூர் திரும்பினார். வழியில் காட்பாடியில், எந்த வண்டியில் ஏறுவது என்று கூடத்தெரியாத நிலையில், அறிவுறுத்தவும் யாருமின்றித் தவித்தார் சற்றுநேரம்.

அப்போது ஒரு குடும்பமே அவருக்கு உதவி புரிய அருகே வந்தது. அவர்களும் கடலூர் செல்பவர்கள் தாம். நள்ளிரவு ஒரு மனிக்குக் கடலூர் வந்த அவர்கள், உடன் வந்த ஹேமாவை வீடு வரை கொண்டுவிட்டுச் சென்றனர். இதுவும் பகவான் கருணையே என்று தெளிந்தார் ஹேமா !

மறுநாள் காலையில் கணவரிடம் விபூதி தந்தபோது, அவர் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டார். பகவானிடம் பரிபூரண நம்பிக்கை கொண்டிருந்த ஹேமா அதெற்கெல்லாம் கவலைப்படவில்லை. எப்படியும்  எந்தை பிரான் இராஜூவிரற்கு மருத்துவப் படிப்பு அளித்து விடுவார் என்று உறுதியாக நம்பினார்.

அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. கோபமாகச் சென்ற கணவர் அரை மணி நேரத்தில் வந்து ஹேமாவைக் கூப்பிட்டனுப்பினார். ‘என்னவோ ஏதோ ' என்று கலங்கியபடி சென்ற ஹேமாவிற்குத் தேனினும் இனிய செய்தியே அமுதமாக இனிக்கக் காத்திருந்தது!

புட்டபர்த்திக்குப் போய் வந்தாயே! இதோ பார்! சுவாமி இராஜுவின் மருத்துவப் படிப்புக்கு இடம் தந்துவிட்டார்! "என்று மகிழ்ந்து கூறினார் சின்னி கிருஷ்ணன்.

அந்தத் தேர்வாளர் கூறியபடி ஓர் அற்புதமே நிகழ்ந்திருந்தது ! இறைவரே மனம் வைத்துவிட்ட பிறகு, எத்தகைய தேர்வாளரும் இடம் தந்துதானே ஆக வேண்டும்!

ஆதாரம் :  புத்தகம் - வைரம் - பாகம் 24 

சாய்ராம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக