தலைப்பு

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

சுவாமி கனவில் அருளிய மருந்து!


திருவனந்தபுரம் நீலாம்பிகையைச் சில நாட்களாக, முதுகிலும், கழுத்துபுறத்திலும், ஒருவலி தோன்றி துன்புறுத்தி வந்தது.அவரால் சற்று நேரம்கூட உட்கார்ந்திருக்க முடிவதில்லை. அவருடைய கணவர், டாக்டர்
இராமசுவாமி பலப்பல மருந்துகளை, மாற்றி மாற்றி தந்து பார்த்தார். அவை எதுவுமே பலனளிக்கவும் இல்லை.

ஒரு நாள்வலி தாங்கொணாததாக இருந்தது. பூஜை அறையில் இறைவன் திருவுருவம் முன்பு சென்று முறையிட்டுக் குமுறி அழுதார். நைந்த நிலையில், மனமுருகப் பகவானிடம் வேண்டினார், தன் வலியைப் போக்கியருளும்படி. பிறகு சோர்ந்துபோய்ப் படுக்கையில் சென்று படுத்து உறங்கினார்.    

உறக்கத்தில் விரிந்தது ஒரு உன்னதக் கனவு. அதில்,அவரும் அவருடைய அண்ணியார் குமாரியும் பஜனை ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்தனர், பஜனையில் மனம் ஒன்றியிருந்தபோது அவர்களருகே ஒருவர் வந்தார். புட்டபர்த்தியிலிருந்து ஒரு பக்தர் வந்திருப்பதாகவும், அவர் நீலாவையும், குமாரியையும் பார்க்க விரும்புவதாகவும் கூறிக் கையோடு இருவரையும் அழைத்துச் சென்றார்.

அவருடன் சென்ற இருவரும், பஜனை மண்டபத்தின் முகப்பில் நின்று கொண்டிருந்த ஒருவரைக் கண்டனர். அவரை நீலாவோ, குமாரியோ அதற்க்கு முன்னர் பார்த்ததில்லை. முன்பே அறிமுகமானவர் போல விரைந்து அருகே வந்த அவர், ''நான் புட்டபர்த்தியிலிருந்து வருகிறேன். சுவாமி இந்த உறையை உங்களிடம் தரச்சொன்னார்,'' என்று கூறி, ஒரு நீண்ட உறையை நீலாவிடம் தந்தார்.

நீலா  அதை உறையைப் பிரித்துப் பார்த்தார். அதில் வீபூதி பொட்டலம் ஒன்று இருந்தது. எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டார். மற்றும் ஒரு துண்டு கடிதமும் இருந்தது, அந்த உறையில். அதையும் பிரித்துப் பார்த்தார். அதில் வடமொழியில் ஒரு ஸ்லோகம் எழுதப் பெற்றிருந்தது. அதை ஒரு முறை ஊன்றிப் படித்தார். மற்றும் அந்த உறைக்குள் சிறிய உறை ஒன்று இருந்தது. அதில் நிறைத்து மாத்திரைகள் இருந்தன. மாத்திரையின் பெயரும் அந்தச் சிறிய உறைமேல் எழுதப்பெற்றிருந்தது. தனக்கு டாக்டர் தந்துவரும் மாத்திரைகளில் ஒன்றாக இருக்குமோ என்று அந்தப் பெயரை ஊன்றிப் படித்தார், நீலா. அந்தப் பெயர் கொண்ட மாத்திரையை அவர் அருந்தியதாகவே நினைவில்லை, சுவாமி தந்தனுப்பியது புதிய மருந்தாக இருந்தது. அதனால் அந்தப் பெயரை பலமுறை படித்தார் ஒவ்வொரு எழுத்தாகக்கூட்டிக் கூட்டிப் படித்தார், டாக்டரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்ற கருத்தோடு.  

அதற்குள் அவருக்கு விழிப்பு வந்துவிட்டது. தான் கண்ட கனவை நினைத்துப் பார்த்தார் நீலா. கனவு மூலமாகச் சுவாமி மருந்து அனுப்பினாரா என்று வியந்தார். பலமுறை எழுத்துக்கூட்டிப் படித்ததால், அந்த பெயர் நன்றாகவே நினைவில் நின்றிருந்தது. உடனே ஒரு தாளில் அந்தப்  பெயரை எழுதி வைத்தார். உறையிலுருந்த ஸ்லோகம் நினைவில்லை. ஒரு முறையே படித்ததால் மறந்தும் விட்டது. 

காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாகக் கணவரிடம் தான் கண்ட கனவைக் கூறி, மருந்தின் பெயரை எழுதி வைத்த தாளையும் தந்தார். டாக்டரும் அது போன்ற ஒரு மருந்தின் பெயரைக் கேளிவிப்பட்டதேயில்லை. எனினும், சுவாமியே தந்தனுப்பியதால், பொய்யாக இருக்க முடியாது, என்ற நம்பிக்கையில், மருந்து கடை ஒன்றில் அதுகுறித்து விசாரித்தார். நீலாவைப் பற்றியிருக்கும் பிணிக்குப் புதிதாக வந்திருக்கும் மருந்து அது, மிகவும் பலனளிக்க வல்லது என்றும், அவர்கள் கூறினார்கள். இறைவனின் திருவருள் லீலையை உணர்ந்து, வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார் டாக்டர்.

நீலா அந்த மருந்தை வாங்கி அருந்தத் தொடங்கினார். 15,20 நாட்களுக்குள்ளாகவே, வலி முழுதும் மறைந்துவிட்டது. அதனால் மருந்து அருந்துவதை நிறுத்தினார். ஒரு வாரத்திற்கெல்லாம் மறுபடியும் வலி தலைகாட்டியது.அண்ணி குமாரியிடம் சென்று முறையிட்டார்.

''சுவாமி அனுப்பிய மருந்திலும் என் வியாதி தீர வில்லையே!'' என்று நொந்தார். குமாரிக்கும் முதலில் வருத்தமாகவே இருந்தது. ஆனால் மறுநொடியே அவருள்ளத்தில், சட்டென்று ஓர் உண்மையும் புலப்பட்டது, சுவாமி தந்தனுப்பியது 100 மாத்திரைகள் அடங்கிய உறை. ஆனால் நீலா 20 மாத்திரைகளே அருந்தியிருக்கிறார். அது போதாது. சுவாமி பணித்தபடி 100 மாத்திரைகளையும் உட்கொண்டால்தானே, பிணி முழுவதுமாக தீர இயலும்? இங்கனம் தன்  உள்ளத்தில் தோன்றியதை, நாத்தனாரிடம் கூறினார் குமாரி. உண்மையை உணர்ந்த நீலா, தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிடலானார். சுவாமி தந்தருளிய மாத்திரைகளை நம்பிக்கையோடு உண்டு முடித்தார். வலியும் அறவே மறைந்தது.

என்னே! எந்தை பிரானார், தஞ்சம் அடைந்தவர்களைத் தக்கவாறு காப்பாற்றியருளும் அருமை!

ஆதாரம் : புத்தகம்- புஷ்பராகம் - அத்தியாயம் 5

சாய்ராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக