தலைப்பு

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

TVS குழுமத்தின் தலைவர் திரு. வேணு ஸ்ரீநிவாசன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


Chairman and Managing Director, TVS Motor Company, India; Former President of Confederation of Indian Industry (CII)

வாழ்க்கை என்பது "நான்" என்பதில் துவங்கி "நானாகவே" வாழ்ந்து "நான்" என்பதில் முடிவதில், மலர்ச்சி பெறுவதில்லை. "நான் யார் " என்று உள் நோக்கி விசாரணையைத் துவங்கினால் , அது தானாகவே இறைவனிடம் நம்மைச் சேர்த்துவிடும்.  பணம், பதவி, பட்டம்  - ஊர், உறவு , சுற்றம்  இவை அனைத்தையும் ஒருவர் வாய்க்கப் பெற்றாலும் , மன அமைதி என்பதை இறை நாட்டத்தில்தான் பெற இயலும். இந்த  வகையில் தம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் பாபா ஏற்படுத்திய மாறுதலை மனம் உருகி சொல்கிறார் திரு. வேணு ஸ்ரீநிவாசன்( TVS குழுமத்தின் தலைவர்). 

T.V.S. என்ற மூன்றெழுத்து Trust, Versatile, Sincerity என்ற மூன்று பண்புகளின்  சேர்க்கை என்றே கூறலாம். 


திருக்குறுங்குடி வெங்கரம் சுந்தரம் ஐயங்கார் அவர்கள் 1978ல் ஒரு சிறிய அளவில் ஆரம்பித்த இந்நிறுவனம்  இன்று ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி இருப்பதன் காரணம் என்ன. ? வணிகத்தின் ஊடே மனித நேயத்தையும் கடைபிடித்ததால் தான். தொழில் நலனின் முக்கிய பங்கு தொழிலாளர் நலம் என்ற கோட்பாடுடன்  இயங்கியதாலும் தான். அக்காலத்தில் மதுரை மாநகரில் இயக்கப்பட்ட TVS பஸ்கள் நிமிடம் தவறாமல் இயங்கின. பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் தங்கள் கைக்கடிகாரங்களின் நேரத்தை, பஸ் வருகையைக் கண்டு திருத்தி வைப்பார்களாம்.நேரம் தவறாமை ஒரு உயர் பண்பு அன்றோ.

இந்நிறுவனத்தின்  தற்போதைய தலைவர் திரு. வேணு ஸ்ரீநிவாசன் அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகி. நமது நாட்டின் மதிப்புக்குரிய பத்மபூஷண் விருதைப் பெற்றவர். பல பந்நாட்டு விருதுகளும் கிடைக்கப் பெற்றவர். டாடா டிரஸ்டின் துணைத்தலைவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் அறக்குழுவின் தலைவர் போன்ற பன்முக செயல்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சுருங்கக்கூறின் வணிக  வியாபகமும், மனித நேயமும்,  ஆன்மீக ஈடுபாடும் கலந்த ஒரு சாதனையாளர் எனலாம். இனி அவரது பாபா பயணம் பற்றி திரு. வேணு ஸ்ரீநிவாசன் கூறுவதைப் பார்ப்போமா?


பர்த்தி வா என்ற பாபாவின் அழைப்பு:

ஸ்ரீ சாயி நாராயண சரணவ் சரணம் பிரபத்யே .. முதற்கண் எனது சாஷ்டாங்க நமஸ்காரத்தை பாபாவின் பொற்பாத கமலங்களில் சமர்ப்பிக்கிறேன்.

அது கிட்டத்தட்ட 30 வருடங்களின் தொடர்கதை. 1992ம் ஆண்டு  திரு. சீனிவாசன்(சாய் நிறுவனங்களின் முன்னாள் அகில இந்திய தலைவர்) இல்லத்திற்கு பாபா வருகை தந்திருந்தார். அங்குதான் முதன்முதலில் நான் பாபாவை சந்தித்தேன். அந்த சந்திப்பு எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  அதன்பின் எனது மாமனாரின் இல்லத்திற்கு வருகை தந்த பாபாவை சந்தித்தேன். பின்னர் சுந்தரம் சென்றோம். அங்கு திரு. சீனிவாசன் அவர்களிடம் , பாபா என்னை சுட்டிக் காட்டி , பர்த்தி வரும்படி  கூறியும், இவர் செவி சாய்க்கவில்லை என்று கூறினார். பாபாவின் இந்த அழைப்பை நான் அவ்வளவு முக்கியமாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மரியாதை நிமித்தமாக பிறகு பர்த்தி சென்றேன். இரண்டு நாட்கள் சென்றன. பாபாவின் அழைப்பு கிட்டவில்லை.இரண்டாம் நாள் மாலை பாபாவை நான் சந்தித்த போது ,பாபா கூறினார். "அவர்( வேணு  ஸ்ரீநிவாசன்) என்னை சந்திக்க வரவில்லை" என்று. பாபா இந்த உரிமை கலந்த நையாண்டியுடன் நிறுத்திவிடாமல்,என்னை கோடைக்கானல் வர அழைப்பும் விடுத்தார்.


கோடைக்கானல் சென்ற எனக்கு அங்குள்ளவர்கள் தந்த வரவேற்பு பிரமிப்பை தந்தது. பாபாவின் விருந்தினர் என்று அங்குள்ளவர்கள்  மிகச் சிறந்த  கவனிப்பை அளித்தனர். அங்குதான் நான் பாபாவின் உபதேசங்களைக் கேட்டேன். அவர் கங்கை பிரவாஹமென, மணிக்கணக்கில் , தங்கு தடையின்றி அனைவரிடையே பேசி அருள் விளக்கம் அளித்தார்.இதன் பிறகு 1994 முதல் 2011 வரை ஸ்வாமி எங்கு சென்றாலும் அங்கு சென்று தரிசித்து வந்தேன்.

கோடைக்கானல் 1994 ஸ்வாமி ஹாரத்தியில் கிடைத்த ஆத்ம அனுபவம்:


1994 ல் மறுமுறையும் கோடைக்கு பாபாவின் தர்சனத்திற்கு சென்றேன். அங்கு தரிசன முடிவில் பாபாவுக்கு ஹாரத்தி அளிக்கப்பட்ட சமயம். என் முற்பிறவிகளின் தவப்பயனோ என்னவோ, இதயம் முழுவதும் ஒருவித பரவசம் ஏற்பட்டது. இதயமே வெடித்துவிடுவது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். ஹாரத்தியைக்கூட முழுமையாக தரிசிக்க இயலவில்லை. அப்போதுதான் பாபாவின் பரிபூர்ணம் புலப்பட்டது.  இதன்பின்னர் எனது பயணம் பாபாவின் திசை நோக்கி மெதுவாகத் திரும்ப ஆரம்பித்தது. இதன்பின் நான் பாபாவை என் குருவாக ஏற்க ஆரம்பித்தேன். வைஷ்ணவ சம்பிரதாயப்படி ஆசார்யன்( குரு) நம்மை நல்வழிப்படுத்தி இறைவனிடம் அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்பு, குரு ஒருவரைத் தேடும் முகமாக 1991 ஆண்டு முதல் சில ஆண்டுகள் , திருவண்ணாமலை சென்று வந்தேன். அங்கு ரமணாசிரமம் மற்றும் கிரிவலம் செல்வதை வழக்கமாகக் கொண்டேன். இறைவனே குருவுமாவார் என்ற ஸ்ரீ ரமணமகர்ஷின் வாக்கு என்னைப் பொறுத்த வரையில் உண்மையானது. இதன்   பிறகு    பாபாவின் உபதேசங்களிலும் அவரைப்பற்றிய இலக்கியங்களிலும்  ஆர்வமுடன் மூழ்க ஆரம்பித்தேன்.

மதுரை சத்ய சாயி மந்திர்:



ஸ்வாமியின் சேவையில் ஈடுபட  எனக்கு ஒரு அறிய வாய்ப்பு 1999ல் கிடைத்தது. மதுரை சத்ய சாயி மந்திர் கட்டுமானப்பணியை மேற்பார்வை இட ஸ்வாமி எனக்கு கட்டளை இட்டார். இது நிமித்தம் நான் மாதம் ஒருமுறை ஸ்வாமியை சந்தித்து கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து விவரிக்கும் பாக்யம் கிட்டியது. இது சம்பந்தமாக ஸ்வாமியிடம் சிலர் கூறிய விமர்சனங்களை புறம் தள்ளிய பகவான் எனக்கு முழு ஆதரவையும் தந்தருளினார். கோயில் திறப்பு விழாவில் தன் அருட்கரத்துடன் , என் கரம் கோர்த்து அங்குமிங்கும் நடை பயின்ற பாபாவின் மாட்சியை என்றும் மறவேன்.

பாபா புகட்டிய பாடம்:

கோயில் திறப்புவிழாவிற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் , தரைப் பகுதிக்கு சிவப்பு நிறத்தில் சலவைக் கற்கள் பதிப்பிக்கப்பட்டு இருந்தன. சிவப்பு நிற தரைப் பகுதி பொருத்தமானதாக இல்லை என எனக்கு தோன்றியது. பாபாவின் வருகைக்கு முன்பு அத்தரையின் மேல் சிகப்பு கம்பளம் போர்த்தி, தரை முழுமையாக வேயப்படவில்லை எனக் கூறினேன். பாபா விழா முடிந்து திரும்பிய உடன் தரையைப் பெயர்த்து வேறு சலவைக் கற்களைப் பதித்தேன்.. இதற்கான செலவை நானே ஏற்றுக் கொண்டேன்.


அடுத்த சந்திப்பில் பாபா கேட்டார். "எவ்வளவு செலவு ஆனது?" நான் சொன்னேன் "தெரியாது ஸ்வாமி" மறுபடியும் அதையே பாபா கேட்க நான் "சொல்லமாட்டேன் ஸ்வாமி" என்றேன். பாபா விடவில்லை. கனிவான குரலில் "பங்காரு. மதுரை மந்திரை நான் கட்டித் தருவதாக வாக்கு கொடுத்துள்ளேன். ஆகவே செலவு முழுவதையும் நான்தான் ஏற்கவேண்டும். அதில் பிறர் பங்களிப்பு வேண்டாம்." என்றார். செலவுத் தொகையை கூறியதும் அதற்கான காசோலையை எனக்கு தர உத்தரவிட்டார். நான் பிரமித்தேன். . கொடுத்த வாக்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற பாடத்தைக்  கற்றேன்.

அன்னைக்கு மட்டுமல்ல எனக்கும் அவன் பிள்ளை - பாபா:

என் அம்மா பாபாவை தரிசனம் செய்ய விரும்பினார்கள். ஸ்வாமியும் அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். 2000 ஆண்டில் பாபா அன்னைக்கு தரிசனமும் , நேர்முகமும் தந்து அருளினார்கள். அன்னை நேர்முகம் முடித்து மகிழ்வுடன் வெளியில் வந்தபோது , பாபா தனது மதுரமான குரலில் "வேணு" என்று என்னை அழைத்தார். இது கண்டு வியந்த என் அன்னையிடம் "வேணு உங்கள் மகன் மட்டுமல்ல , எனக்கும் பையனைப் போன்றவன்" என்றார். இந்தபட்டம் மறுபடியும்  உறுதி செய்யப்பட்டது ஒரு Sports Day அன்று. அந்த Sports Dayல்  எங்கள் TVS மோட்டர்சைகில்களில் மாணவர்கள் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.


இவை யாருடைய பைக்குகள் என பாபா அருகிலிருந்த , ஹீரோ மோட்டர் கம்பெனியின் தலைவரிடம் கேட்க, அவரோ , இவை வேணுவின் TVS  பைக்குகள் என்றார். அப்போது பாபா  "ஆமாம். வேணு ஒரு நல்ல பையன் " என்றார். இது கேட்டு வியந்த அவர் என்னிடம் ," பாபா உங்களை நல்ல மனிதர் என்று கூறாமல் நல்ல பையன் என்று கூறினாரே" என்றார். நான் கூறினேன்". இதைவிட ஒரு பெரிய பட்டம் கிடைக்குமா. இதை நான் பெருமையாகக் கருதுகிறேன்."

வெற்றி தோல்விகளை சமமாக ஏற்கும் பண்பு:


2007 ல் என் குழுமத்திற்கு தொய்வு ஏற்பட்டது. ஆயினும் நான் மன சமன்பாட்டுடன் அதை எதிர் கொண்டேன்.  இது பற்றி ஒருவர் கேட்டார் " நீங்கள் எப்படி சிரித்த முகத்துடன் எப்போதும் காணப்படுகிறீர்கள்." நான் கூறினேன். ஸ்வாமி என் முன் வினைகளின் கர்மாவிலிர்ந்து வெளியே இழுத்து வருகிறார். எப்படி தங்கம் உருக்கப்பட்டு, தட்டப்பட்டு அழகிய நகையாக உருவாக்கப் படுகிறதோ அதைப்போல நம்மை பகவான் மேம்படுத்துகிறார். பகவான் ஒரு ஆனந்த ஸ்வரூபி . அவர் அருகில் வந்தபின் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டுமே தவிர, துக்கத்தை அல்ல.

ஞானப் பாதையும் சேவைப் பாதையும் வெவ்வேறல்ல ..ஒன்றே:

என் ஆன்மீக ஈடுபாட்டுக்கும் பாபாவிடம் சேர்ந்ததிற்கும் ஒரு நிகழ்வு அடித்தளமாக அமைந்தது என நம்புகிறேன். 1992 ஆம் ஆண்டு ஒரு ராமர் கோயில் திருப்பணி செய்ய நேர்ந்தது  அந்த ராமர் வில் மற்றும் எவ்வித ஆயுதமில்லாமல் , சாந்த மூர்த்தியாய் இருந்தார்.அந்த திருப்பணி முடிவுற்ற நிலையில் , திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோயில்களை புனருத்தாரணம் செய்ய கோரிக்கை விடப்பட்டது. பாபாவிடம் இது பற்றி கேட்டேன். அவர் "நீ ஒரு வைஷ்ணவன். உன் கடமையை செய்" என உத்தரவு கொடுத்தார். அந்த கோயில்களின் திருப்பணிகள் செவ்வனே நடைபெற்றன. அப்போது அக்கிராமங்களிலுள்ள மக்களின் பொருளாதார நலிவு என் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்த, பலவேறு நலத்திட்டங்களை அங்கே செயல் படுத்த தொடங்கினோம். இதன்கீழ் 5000 கிராமங்கள் பயன் பெற்றன. அந்த 5000 கிராமங்களில் அரசுத் துறையுடன் இணைந்து ,பள்ளிச் சீரமைப்பு, அங்கன்வாடி, மகளிர் சுய உதவிக்குழு போன்றவற்றின்  மூலம் சேவைகளும் , சிறுதொழில்களும் தொடங்கப்பட்டு, பொருளாதார தற்சார்பு நிலை உருவாக்கப்பட்டது.

செய்பவன் இறைவன் கருவிகள் தான் நாம்:

இந்த கால கட்டத்தில் Times of India வின் தலைவர் திருமதி ஜெயின் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து என் தாயாரை சந்தித்தார். பிறகு என்னிடம் வந்து "இனி நான் உன்னிடம் பேசப் போவதில்லை. நீ இத்தனை பெரிய காரியங்களைச் செய்துவிட்டு அது பற்றி ஒன்றுமே இதுவரை கூறவில்லை. உடனடியாக ஒரு வரைவுக் குறிப்பை தயார் செய்து எனக்கு அனுப்பு" என்றார். என் தாயார் அவருக்கு இது சம்பந்தமான அனைத்து விஷயங்களைமும் கூறி இருக்கிறார் எனத் தெரிந்து கொண்டேன். 


பிறகு இந்த கிராம சேவைகளைப் பற்றி ஒரு விவரமான தகவல் அறிக்கை தயார் செய்து அதை ஸ்வாமியிடம் காண்பிக்க எடுத்துச் சென்றேன். ஸ்வாமி , அது என்ன என்று கேட்க , அது வருடாந்திர அறிக்கை என்று கூறி அருகிலிருந்த மேசைமேல் வைத்தேன். ஸ்வாமி அதை இடது கைவிரல்களால் எடுத்து ஜன்னல் வழியே வீசி எறிந்தார். "இந்த சேவையை நீ செய்தாயா.? சேவையில் நாட்டமில்லாத உன்னை சேவை செய்ய வைத்தது யார்?" பாபாவின் இந்த கேள்வியில் ஒரு உண்மை தெற்றென விளங்கியது. நாம் இறைவனின் கருவிகளே தவிர , செயல்பாடுகள் அனைத்தும் அவருடையதன்றோ.

பறந்தது மலர் மாலை விளைந்தது பாபாவின் ஆசி:


பாபாவின் மகாசமாதிக்குப் பின் நடந்த சம்பவம்.  கிராம சேவா பற்றிய விளக்கக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில்  சாயி நிறுவன மாநிலத் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் நானும் , திரு.ஜோஷி அவர்களும் உரையாற்றினோம். அப்போது பாபா படத்திலிருந்து ஒரு மாலை இரண்டாக துண்டித்து 4 அடி தூரத்தில் உள்ள பாபாவின் நாற்காலியின் இரு பக்கமும் சமமாக விழுந்தது. பாபாவின் ஒப்புதல் பிரசாதமாக அது எனக்கு தோன்றியது

ஆதாரம்:  திரு. வேணு ஸ்ரீநிவாசன் அவர்களின்  யூடியூப் நேர்காணல்
தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

சாய்ராம்.... திரு. வேணு ஸ்ரீநிவாசன் அவர்களின் நேர்முகத்தில் ஒரு சில பகுதிகளை மட்டும் இயன்றவரை தமிழாக்கம் செய்துள்ளோம். பகவானுக்கும் பக்தருக்கும் இடையே உள்ள பந்தம், இதயத்தோடு இதயம் ஒன்றிய பந்தம் (Heart to Heart) வார்த்தைகளில் இங்கே நாங்கள் விவரித்திருப்பது , கடலில் உள்ள நீரை ஒரு குடத்துள் முகரும் முயற்சிதான். பாபா என்னும் கங்கையின் பிரவாகத்தை, தூய்மையை, பயன் பாட்டை சொல்லால் விளக்க இயலுமா. அவரது பக்தர்களின் அனுபவங்களை விளக்க பல சொற்கள் போதுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக