தலைப்பு

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

தாலியை கூட தருவேன் .. இதை தரமாட்டேன் என மறுத்த டி.எம்.எஸ் மகள்!


அய்யன் டி.எம்.எஸ் பாடுவதற்கென்றே பிறந்த தனிப்பிறவி. அவரின் இதயக்கூடு ஆறு படையைச் சுமந்த ஏழாம் படை.. அவரின் குரல் ஏழ் ஸ்வரங்களைச் சுமந்த எட்டாம் ஸ்வரம். அவருக்கும் இறைவன் சத்யசாயிக்கும் உள்ள பக்த நெருக்கம் அனைவரும் அறிந்ததே... பல பதிவுகளை சத்ய சாயி யுகத்திலும் பதிவு செய்திருக்கிறோம்.. அதில் இன்னொரு சிறு பதிவு அவரின் வாழ்க்கைப் புத்தகத்தில் வாசிக்க நேர்ந்தது இறைவன் சத்யசாயி சங்கல்பமே!

"நாத வடிவே வேத முடிவே கீத சௌந்தரம் தாராய்" என என் அய்யன் டி.எம்.எஸ் அவர்களை சௌந்தரம் எனச் சுருக்கி (சந்தத்தில் அவ்வளவே இடம் இருந்தது) அடியேன் எழுதிய ஒரு முருகன் பாடல் பதிவானது..
பிறகே தெரியும் இறைவன் சத்ய சாயி என் டி.எம்.எஸ் அவர்களை சௌந்தரம் சௌந்தரம் என பேரன்போடு அழைப்பார் என...
அதை அறிந்து ஆச்சர்யப்பட்டு..
சுவாமியே உள்ளிருந்து எழுதிய அந்த வரிகளை வணங்கினேன்..

அவரின் திரைப்பாடல் வாழ்க்கை சூடு பிடித்து மிக சுறுசுறுப்பாக இயங்கிய காலம் அது.
அவரின் மூத்த மகளான சித்ரலேகா அவர்களுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது.. பல கோளாறுகள் தெரிய ஆரம்பித்தன ...
இதயத்தில் உள்ள "மைட்ரல் வால்வ்" மாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாக பூந்தமல்லியில் ராமராவ் என்ற மருத்துவர் சொல்லியும்.. ஐந்தே வருடம் தான் உயிரோடு இருப்பாள் எனவும் சொல்லி அதிர்ச்சி ஊட்டினார்‌.
அடி தாங்கும் உள்ளம் அது இடி தாங்குமா என்கிற வகையில் அய்யா மிகவும் சங்கடத்தில் ஆழ்ந்தார்.
பல நண்பர்கள் இறைவன் சத்யசாயியை நாடும் படி சொல்லினர்.
தனிவாழ்வில் எவரிடமும் எதையும் எதிர்பார்த்து சென்றதில்லையே என்ற எண்ணமும்..
முருகன் கவனித்துக் கொள்வான் என்ற எண்ணமும் இதயத்தை நகரவிடாமல் லகான் இட்டது.
இருந்தும் மகளின் நோய்க்கு மருந்தும் பெற வேண்டி மனம் மன்றாடியது.


அய்யன் டி.எம்.எஸ் அவர்களின் மதுரை நண்பர் ராமசந்திரன் மற்றும் சென்னை சைனா பஜாரில் ஜவுளிக்கடை தீனதயாளு நாயுடு ஆரம்பித்து பெங்களூர் புரவி நாட்டிய கலைஞர் சுந்தரமூர்த்தி வரை இவரின் நண்பர்கள் யாவரும் இறைவன் சத்ய சாயி பக்தர்கள்...
அவர்கள் இவரை இறைவனிடமே மீண்டும் மீண்டும் செல்லும்படி சொல்லிக் கொண்டிருந்தனர்..

இறைவனை பார்ப்பதற்குத்தான் இத்தனைப் பேரின் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக எண்ணினார் அய்யன்..

புட்டபர்த்தி மண்ணை மிதிக்கிறார் எங்களுக்கும் காலம் வரும் என்று பாடிய எழிலிசை மன்னர் டி.எம்.எஸ்.

சுவாமி அவருக்கு நேர்காணல் அளிக்கிறார் ...
சுவாமி சொல்ல வருவதற்கு முன் மகளின் உடல்நலம் குறித்த விண்ணப்பம் அவரின் திருப்பாதங்களில் வைக்கிறார் அய்யன்.
அவளை அழைத்து வா என்கிறார் ஆண்டவன்.

சித்ரலேகாவுடன் இறைவனை தரிசனம் செய்கிறார் தெய்வப் பாடகர்.
அவள் வயதுக்கு வந்தபிறகு உடல்நலம் சீராகிவிடும் என அருள்கிறார் இறைவன் சத்ய சாயி.
விபூதி மற்றும் தனது திருவுருவம் பதித்த டாலர் போன்றவற்றை அருளுவந்து  சிருஷ்டித்து அதை தினமும் விபூதியில் வைத்தும்.. துளசி தீர்த்தத்தால் பருகச் சொல்லியும் அவரின் மகளுக்கு அளிக்கிறார் பிரபஞ்ச வைத்தியரான சத்ய சாயி ..

சித்ரா வளர்ந்து கொண்டிருந்தாள்.
கோளாறு இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.
ஆனாலும் அவ்வப்போது அவளது நோய் தொந்தரவு கொடுத்தால் .. ஜூரமோ.. கால்முட்டியோ கருப்பாகிவிட்டால்..


விடாப்பிடியாக இறைவன் சத்ய சாயி அளித்த விபூதியையே அளிப்பார் டி.எம்.எஸ் மனைவி சுமித்ரா அம்மையார்.
"பாபா தான் சொல்லியிருக்கிறாரே .. சரியாகிவிடும் " என்று சொல்லி இறைவன் சத்யசாயியை வேண்டுவார்.

திருமதி சுமித்ரா அம்மையாருக்கு அவ்வளவு பக்தி இறைவன் சத்ய சாயி மேல்..
இவரோ பாடல்.. பாடல்... பாடல்.. என பறந்து கொண்டிருந்த காலத்தில் ஆறு பிள்ளைகளை கண்டிப்புடனும் .. கரிசனத்தோடும் வளர்த்தது இவர்களே.

டாக்டர் ஆபிரேஷன் செய்ய வேண்டும் என்றார்.
இறைவன் சத்யசாயியோ ஆபிரேஷனே வேண்டாம் என்றார்.
அவர் சொன்னது போலவே அபிரேஷன் செய்யப்படவில்லை..
எந்தவித தொந்தரவும் இன்றி மகளின் இதய வால்வ் சீரும் சிறப்புமாக இயங்கிக் கொண்டது..

நல்ல இடத்தில் திருமணமாகி குழந்தையும் பிறந்தது..
ஆனால் குழந்தை ஒருநாள் இறந்து போக ..
துடித்துப் போனார் சித்ரலேகா ‌. இறைவன் சத்ய சாயி சமாதானம் சொன்னார்.
அந்த இக்கட்டான நிலையில் அவர்களுக்கு ஆபிரேஷன் செய்ய வேண்டி இருந்தது..
அவரும் சரி என்றார்.

ஆபிரேஷனுக்கு முன்  நகைகளைக் கழட்ட வேண்டும் என மருத்துவர் உத்தரவிட... எந்த நகை வேண்டுமானாலும் கழட்டி தருகிறேன்.. ஏன் தாலியைக் கூட கழட்டி தருகிறேன்.. ஆனால் இதை மட்டும் கழட்டித் தர சம்மதிக்கவே மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.

ஆம் அது தான் இறைவன் சத்ய சாயி  அன்று சிருஷ்டித்து அளித்த அவரது டாலர்.


 டி.எம்.எஸ் அவர்களின் மூத்த மகளான சித்ரலேகா 

டாக்டரே அந்த பக்தியை பார்த்து ஆச்சர்யப்படுகிறார்.

பிறகு ஆபிரேஷன் நடக்கையில் திடீரென மின்சாரத் தடை ஏற்படுகிறது..
அந்த இருள் கவ்விய சூழ்நிலையில் செய்வதறியாத கையைப் பிசைந்த மருத்துவர் ஒரு அதிசயம் கண்டார்..
ஆம், அந்த சுவாமி டாலரிலிருந்து ஒளி ஒன்று புறப்பட்டு அந்த அறையில் சூழ்ந்தது..
ஆபிரேஷன் வெற்றிகரமாக நிகழ்ந்தது..

வெளியே வந்த டாக்டரின் கால்களில் விழப்போனார் அய்யன் டாக்டர்..
என் கால்களில் ஏன் விழுகிறீர்கள்..
பாபாவின் கால்களில் போய் விழுங்கள்.. அவரால் தான் இந்த ஆபிரேஷனே நிகழ்ந்தது என்றார் மருத்துவர்.

இது கட்டுக்கதை இல்லை.. அடியேனே சித்ரலேகா அவர்களின் சகோதரி மல்லிகா மற்றும் சகோதரர் பால்ராஜ் அவர்களிடம் கேட்டு அறிந்து கொண்ட ஆச்சர்யங்கள்.
இறைவன் சத்யசாயியின் லீலா விநோதங்கள்.

இறைவன் சத்யசாயியால் சாதிக்க முடியாததென்ன இந்த ஈரேழு உலகிலும்!!!

இறைவன் சத்ய சாயி சென்னைக்கு வருகிற சமயத்தில் எல்லாம் சுவாமியை மகளுடன் தரிசிக்கச் சென்றுவிடுவார்‌...
இறைவன் சந்நதியில் இறைவனுக்கு முன் பக்திப் பாடல்கள் பாடுவார்.
எப்பேர்ப்பட்ட கொடுப்பினை அது.
எப்பேர்ப்பட்ட பெருங்கருணை பரம்பொருள் சத்ய சாயி அவர் மேல் வைத்திருந்தது...
சுவாமியின் ஆசி பெற்றே வீடு திரும்புவார்.


ஒருமுறை புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் அவர் சௌபாக்கியவதி என்கிற திரைப்படத்தில் ஜெமினி கணேசனுக்கு அவரின் குரலைப் போலவே பாடிய "தில்லை அம்பல நடராஜா" பாடலை
இறைவன் சத்ய சாயி முன் முதல் வரியை பாட‌..
அதை பஜன் என நினைத்து பக்தர்கள் பின்பாட்டும் பாடி இருக்கின்றனர்.

ஒருமுறை இறைவனின் பிறந்த நாள் வைபவம். புட்டபர்த்தி விரைகிறார் அய்யன் டி.எம்.எஸ் தனது வாத்திய குழுவினரோடு...
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவரால் பாட முடியவில்லை.. இருந்தபோதும் தான் கொண்டு வந்திருந்த பத்தாயிரம் ரூபாயை கூட்டி வந்த தன் குழுவினருக்கு திரும்பிச் செல்கையில் பிரித்துக் கொடுக்கிறார்.

தனது இல்லம் வந்து சேர்கிறார்.
தன் பையை எடுத்து பீரோவில் வைக்கும் போது கனமாக இருந்திருக்கிறது..
அந்த பையின் வாயைத் திறந்து பார்க்கிறார்... தன் வாய் திறக்கும் படி ஆச்சர்யப்படுகிறார்..
அந்த பத்தாயிரம் ரூபாய் கட்டு ஒரு நோட்டும் குறையாமல் அப்படியே இருந்தது..

இறைவன் சத்ய சாயி அள்ளித் தரும் காமதேனு .. கருணையைப் பொழியும் கடவுள் என அய்யன் டி.எம்.எஸ் உணர்ந்து கொண்ட உன்னதமான தருணங்கள் அவை...

(ஆதாரம் : டி.எம்.எஸ் ஒரு பண்பாட்டு சரித்திரம்-- ஆசிரியர் : வாமனன். பக்கம் 229)

உடல் நோய் கர்மவினையால் வருகிறது. மீதமான இன்ப துன்பங்களை அனுபவிக்கவே உடல் பிறக்கிறது.. சரியான கணக்கை தீர்க்காவிட்டால் மீண்டும் பிறக்கிறது..
உறவுகளும் அதை ஒட்டிய வாழ்க்கையும் வினைகளின் தொடர்ச்சியே..
இதை புரிந்துணர்ந்து ஏக்கம் விடுத்து..
தான் செய்கிறேன் என்கிற எண்ணமும் விடுத்து இறைவன் சத்யசாயியின் பாதங்களில் சரண் அடைந்தால் பிறவி இல்லா பெருவாழ்வை எய்தலாம்...

நோய்களை மட்டும் குணமாக்குபவர் அல்ல கடவுள் சத்ய சாயி..
பிறவாமை என்கிற ஆரோக்கியத்தையும் அள்ளித் தருபவர் அவரே!

அந்தகன் வரும் போது
அவனியில் யார் துணை?
ஆகையினால் இன்றே
அருமறை பரவிய சத்யசாயி சுந்தரனை
சிந்தனை செய் மனமே -- செய்தால்
தீவினை அகன்றிடுமே

  பக்தியுடன்
வைரபாரதி

1 கருத்து: