தலைப்பு

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

பரம்பொருள் சாயியின் பாரத ரத்னா!


ஆத்ம பக்தர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஜி அவர்களின் சாயி அனுபவப் பதிவு.. 

ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கும்..
ஒரு அரசியல்வாதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும்...
ஒரு பிரம்மச்சாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும்...
ஒரு பக்தன் எப்படி வழிபட வேண்டும் என்பதற்குமான
ஒட்டுமொத்த ஒரே உதாரணம் பாரத ரத்னா ஸ்ரீ அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஜி.

குழந்தை முகம்.. கூர்மையானப் பார்வை.. வைரம் பதிக்கும் பேச்சு.. கள்ளம் கபடமற்ற சிரிப்பு...தைரியம் மிகுந்த செயல்முறை ... திண்மையான நெஞ்சுரம் ... அசாத்திய மனக்கட்டுப்பாடு... ஆத்மார்த்தமான ஆன்மிக வாழ்வு.. பரிசுத்தமான தேசபக்தி.. மிகப் பணிவான அணுகுமுறை... கனிவான இதயம்.. பற்று அற்ற உள்ளம்... அபாரமான கவிதை ஆற்றல் என இத்தனை இதிகாச குணங்களையும் கொண்ட ஒரு தலைவரை  இதற்கு முன் இந்தியா சந்திக்கவே இல்லை...


அனைவரும் இவரை ஒரு மிதவாதி என்பர். ஆம்.. ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் இவர் மிதவாதி இல்லை என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்.. இறைவன் சத்ய சாயியிடம் இவர் காட்டிய பக்தி மட்டும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு போனதே தவிர.. மிதமானதாகவே இருந்தது இல்லை...

நினைத்தாலே புல்லரிக்கும்.. இவருக்கு இப்பேர்ப்பட்ட பக்தியா என...
எண்ணிப் பார்த்தாலே இதெல்லாம் சாத்தியமா எனத் தோன்றும்.. இப்படி எல்லாம் ஒரு பக்தனால்... மாபெரும் தலைவனாக மக்களால் கொண்டாடப்படும் போதும் துளி கர்வமில்லாமல்.... அதே சரணாகதி மனநிலையில் பக்தி செலுத்தமுடியுமா என...  உதாரண புருஷர் தான் அட்டல்ஜி அவர்கள்.


இறைவன் சத்ய சாயியே இவரை ❤️ நா ஆத்ம பக்துடு  என மகிழ்ந்து கூறுவதை விட வேறென்ன பேறு இவருக்கு வேண்டும்?

தனது குடும்பத்திற்கு கொள்ளை அடிக்க வேண்டும் என்ற மன மாசு சூழாமல்.. கடவுளை மட்டுமே கொள்ளை அடித்த மாபெரும் கொள்ளைக்காரர் அட்டல்ஜி.

தனது மனதை மட்டுமே தன் கட்டுப்பாட்டில் நிலைத்து நிற்க வைத்த மாபெரும் சர்வாதிகாரி அட்டல்ஜி ...பேரத்திற்கு நேரமே ஒதுக்காமல்.. இறைவனுக்கே பலமணி நேரம் ஒதுக்கியவர். ஊழ்வினை ஊழலுக்கு இடமே தராமல் இறைவன் சத்ய சாயியின் பாதத்தில் தன் பாரங்களை ஒப்படைத்து அபாரமாய்க் கடமையாற்றிய கர்ம யோகி இவர்.


அரசியல்வாதிகளோ.. ஆன்மிகவாதிகளோ .. சராசரிகளோ இவரின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வதற்கு இன்னும் எத்தனையோ நற்பண்புகளும் .. நற்பாடங்களும் பொதிந்திருக்கின்றன என்பதற்கே இவரின் குணநலம் இப்போது பட்டியலிடப்பட்டன‌..

25 டிசம்பர் 1924லில் குவாலியரில் (மத்திய பிரதேசம்) பிறந்தது இந்த அபூர்வப் பிறவி. கிருஷ்ணா தேவிக்கும்.. கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கும் பிறந்து சத்ய சாயி கிருஷ்ணரிடம் அடைக்கலம் அடைந்த  தேசத்தின் படைக்களம் அட்டல்ஜி.

1970'களிலேயே இறைவன் சத்ய சாயியை அட்டல்ஜி சரணடைந்தவர்.


அதுவரை தேச ஜோதியான ஆர்.எஸ்.எஸ் கர சேவகராய்.. பிரச்சாரகராய்.. ஜனசங்கத்தின் உறுப்பினராய் தனது தேசத் தொண்டையும் .. தெய்வத் தொண்டையும் ஆற்றிக் கொண்டு வந்தவர்.

திருமணம் செய்வது கர்மாவை திசைத் திருப்பிவிடும் என்றும் அது தேசத் தொண்டிற்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கருதியும் திருமணத்தைத் துறந்த தூய ஆத்ம துறவி அட்டல்ஜி. எப்பேர்ப்பட்ட ஞானம்.. இளம் வயதிலேயே ஞானம் வருவது இறைவன் சத்ய சாயி தரும் சிறப்பு அனுகிரஹமே..

நேரடியாக ஆள்காட்டி விரல் மூக்கைத் தொடுவதற்கும்.. அது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்கும் வித்தியாசம் புரிந்திருந்ததால் இந்த பிரம்மச்சர்ய ஞானம் சிறு வயதிலேயே அவருக்கு உதித்திருந்தது இறைவன் சத்ய சாயி அருளே...

வொயிட்ஃபீல்ட்'டில் நடைபெறும் இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் பற்றியதான கோடை சத்சங்கத்தில் (Summer course in Indian culture & spirituality) தவறாமல் கலந்து கொள்ளும் பங்கேற்பாளராகவும் .. 1978ல் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருக்கிறார்.


சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் போது அட்டல்ஜி மொரார்ஜி தேசாய் அரசாங்கத்தின் வெளி உறவுத் துறை அமைச்சராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

எப்பேர்ப்பட்ட சிக்கலான துறை அது.
எப்பணி ஆயினும் இறைவன் பணியே தன் முதற் பணி என்று அவர் வருடம் தவறாமல் கலந்து கொள்வதில் அவரின் ஆத்மார்த்த பக்தியை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்..


சுவாமிக்கு சேவையாற்ற நேரமே இல்லை.. வேலை வேலை வேலை  என்று சொல்பவர்கள் அட்டல்ஜியின் பக்தியையும் .. செயல்முறையையும் நினைத்துக் கொள்ள வேண்டும்..

ஒரு முறை தனது விமானத்தைத் தவறவிட்டபடியால் சுவாமி கல்லூரியில் உள்ள விருந்தினர் அறையில் தங்க வைக்கப்படுகிறார்.

அது மந்திரிகள் தங்க வைக்கப்படும் அறை அல்ல இருந்தாலும் எந்தவிதமான சங்கோஜமின்றி எளிமையாய் மிக திருப்தியாய்த் தங்குகிறார் அட்டல்ஜி.

அது எளிமை வாழ்வுக்கு ஓர் உதாரணம்.


அடுத்த நாள் காலை சுவாமி மாணவர் ஒருவர் கையில் காபியுடன் வந்து பார்க்க அந்த இடத்தில் அட்டல்ஜி இல்லை..

குழப்பம் அடைகின்றனர் அனைவரும்.
எங்கே கிளம்பி இருப்பார்..?
என்ற அச்சமும் தொற்றிக் கொள்கிறது..

அங்கே இங்கே எனப் பரபரப்பாய் தேடப்படுகிறார்.

பலருக்கு கையும் காலும் ஓடவில்லை..

நொடிகள் முட்களாய் அசைகின்றன..

மாணவர்கள் ஆழ்ந்த பெருமூச்சு விடும்படி

தன் அறைக்கு வருகிறார் அட்டல்ஜி..

அருகே உள்ள கிராமத்திற்கு (கடுகோடி --பெங்களூரில் ஓர் கிராமம்.) பக்தர்களோடு நகர சங்கீர்த்தனத்திலும்.. சுவாமி தரிசனத்திலும் கலந்து கொண்டிருக்கிறார்.

எப்பேர்ப்பட்ட பக்தி.


இப்படி ஓர் நாளில் .... இறைவன் சத்ய சாயி அட்டல்ஜியிடம் நீ இந்தியாவின் பிரதம மந்திரியாக உயர்வாய் என்றிருக்கிறார்.

அந்த நேரத்தில் அது அட்டல்ஜியால் கூட நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.

சாத்தியமே இல்லாத சிந்தனை ...
அப்போது அவரது கட்சியான ஜனசங்கம் 545 இடத்தில் 2 இடமே வெற்றி அடைந்திருந்தது.

நாம் என்றால் சுவாமி சொன்ன அந்த சத்திய அசரீரி வாக்கியத்தை சந்தேகப்பட்டிருப்போம்.
ஆனால் அட்டல்ஜியோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டார்.
சுவாமியின் கருணையை எண்ணி கண் கலங்கினார்.

எப்பேர்ப்பட்ட பக்தி!


பல நெருக்கடியான நேரத்திலும்.. பல வேலைப் பலுவின் இடைவெளியிலும் இறைவன் சத்ய சாயியை தரிசனம் செய்ய அவர் தவறியதே இல்லை...

1980களின் மத்தியில் கூட தேர்தலில் தனது சொந்த இடத்திலேயே  தோற்றிருந்தார்..
அப்போதும் கூட இறைவன் சத்ய சாயி கூறிய அந்த சத்திய வாசகத்தைப் பற்றி அவர் சந்தேகப்படவே இல்லை.

தோற்றுப் போனதால் தன் தரிசனத்திற்கான வருகையை அவர் குறைத்துக் கொண்டதும் இல்லை...


எதிர்ப் பார்ப்புகள் இல்லா பக்தி அட்டல்ஜி உடையது.
அது தான் தூய ஆத்மிக சாதகனின் பக்தியும்.

தான் வரைந்த கோட்டில் தான் இறைவன் நிற்க வேண்டும் என்று நினைப்பவன் முதலில் எப்படி பக்தனாவான்?

இறைவன் சத்ய சாயி எதை சங்கல்பிக்கிறாரோ அதைத் துளியும் மறுப்பின்றி முழுதாய் ஏற்பவர்களே பக்தர்கள்.

ஆக... அட்டல்ஜி அவர்கள் இறைவன் சத்ய சாயியை முழுதாக சரணடைந்தவர்.

இந்த சம்பவங்களை சுவாமி மாணவர் ரவிகுமார் அவர்கள் ரேடியோ சாயி மென் ஊடகப் பிரிவில் பதிவு செய்கிறார்.
மேலும் ஒரு முறை அகண்ட பஜன் நிகழ இரவு பத்து மணி முதல் விடிகாலை நான்கு மணி வரை தரையில் (மந்திர் வாசல் அருகில்) ஒரு ஓரத்தில் அமர்ந்து முழு பஜனிலும் பங்கேற்றிருக்கிறார் என்பதை சுவாமி மாணவர் சாய்நாத் பகிர்கிறார்.

எளிமை... அர்ப்பணிப்பு .. ஏற்கும் குணம் இதுவே பக்தியின் அடிப்படை குணம்.
குணவான் அட்டல்ஜி.

ஸ்ரீ அட்டல்ஜி பிரதம மந்திரி ஆகிறார்..
ஆகாமல் எங்கே போய்விடுவார்?
இவ்வுலகில் இறைவன் சத்ய சாயியின் சத்திய வார்த்தைகளே நடக்கின்றன..
அவர் சங்கல்பமே அன்றாடம் நிகழ்கின்றன..
வேறெதுவுமில்லை.. வேறொன்றுமில்லை..இதை உணர்வதும் உணராததும் அவரவர் கர்மா பொறுத்ததே.

அப்போது.. அட்டல்ஜி சுவாமியிடம்..

"சுவாமி ... உங்கள் இல்லத்திற்கு நான் அவ்வப்போது வந்து போகலாமா?" எனக் கேட்கிறார்.
கேட்பது பாரத பிரதமர்.

பிரதமர் என்றால் எத்தனை கடமைகள் இருக்கும்.. ஆனாலும் சுவாமியிடம் அடிக்கடி வர வேண்டும் என்பதே பக்தரின் விருப்பமாக இருக்கிறது.

அதற்கு "இது உன் தாய் வீடு.. நீ எப்போது வேண்டுமானாலும் வந்து போகலாம்" என்கிறார் இறைவன் சத்ய சாயி.

2003ல் ஒரு முறை பாரத பிரதமர் வாஜ்பாய் புட்டபர்த்தி விஜயம் மேற்கொள்கிறார். அவர் வருவதற்கு முன் சுவாமியே அவருக்கான தங்கும் இடத்தை மேற்பார்வை இட வருகிறார்.

அது தான் சுவாமியின் அளப்பரிய கருணை.

ஒரு அறைக் காட்டப்படுகிறது. அதற்கு சுவாமியோ "இல்லை... என் பழைய நண்பனுக்கு இது போதுமானதாக இல்லை.. அவனை என் அறையிலேயே தங்க வைக்க வேண்டும்.. ஏற்பாடு செய்யுங்கள்" என உத்தரவு பிறப்பிக்கிறார்.

அட்டல்ஜி வருகிறார்.
சுவாமியின் அறையிலேயே பக்தரும் தங்க வைக்கப்படுகிறார்.


உணவு பல வகைகளில் உபசரிக்கப்படுகிறது..
ஆனால் எதையும் விரும்பாமல்.. ராகி உருண்டையும்.. சிறிது மோரும் கேட்கிறார்.

சுவாமி அன்றாடம் உண்ணும் உணவு.
இறைவன் உணவே.. பக்தரின் உணவும் ஆகிறது.

இந்த யுகத்தில் குசேலர் கிருஷ்ண சபையில் அவல் வாங்கி உண்பதாய்த் தோன்றுகிறது.


பக்தன் இறைவனுக்கு தன் இதயத்தை வழங்கினால்.. இறைவனோ அந்த பக்தனுக்கு தன்னையே வழங்குகிறான்.

சுவாமி தன் பழைய நண்பன் என அட்டல்ஜியை விவரிப்பது அவர் எவ்வளவு பெரிய புனிதாத்மா எனப் புரிந்து கொள்ள முடிகிறது.

அந்த புனிதாத்மாவே ராகி உருண்டை உண்ட எளியாத்மாவாகவும் இருக்கிறது.

இந்த அரிய சம்பவத்தை சுவாமி மாணவர் பூர்ண சந்திர ராவ் பதிவு செய்திருக்கிறார்.

"சம்சாரத்தால் சிதறிப் போகாமல்  இருப்பதற்காகவே அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை.. அது அழியா பெருவாழ்வுக்கான பயணமல்ல" என அட்டல்ஜியைப் பற்றி சுவாமியே தனது மாணவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

வாஜ்பாய் அரசாங்கத்தில் இந்தியா மேன்மை அடைந்தது. பாதுகாப்பு அடைந்தது. சாலை அடைந்தது..


போக்ரான் அணு ஆயுத சோதனை வெற்றியும்... கார்கில் யுத்த வெற்றியும்... குமரி முதல் இமயம் வரையான சாலைப் பணி வெற்றியும்.. வாஜ்பாய் அரசாங்கத்தின் சுவாமி சங்கல்ப முத்திரைகள்.

பாக்கிஸ்தான் லாஹுருக்கே இந்தியாவிலிருந்து பேருந்து விட்ட சமதர்ம மனசுக்காரர் அட்டல்ஜி.

அந்த சமதர்மம் ஆன்மிகமே தந்தது. அந்தப் பரிபக்குவம் பக்தியே தந்தது. அந்தப் பணிவும் பவ்யமும் என அனைத்தும் இறைவன் சத்ய சாயி சங்கல்பமே.

செப்டம்பர் 1 - 2002 அன்று ஒரு மாணவரிடம் சுவாமி .. "காஷ்மீர் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தன்னை  தரிசனம் செய்ய வந்திருந்ததையும்.. அவர் காஷ்மீருக்கு தன்னை அழைத்ததையும்...காஷ்மீரில் எப்போது ஒற்றுமை திரும்புகிறதோ அப்போதே வருவேன் என்று பேசியதையும் பகிர்ந்து கொள்கிறார்.
மேலும்.. காஷ்மீர் இந்தியாவின் மிக முக்கியமான பகுதி.. அதை எந்தக் காரணம் கொண்டும் விட்டுத் தரவே கூடாது என மிக தீர்க்கமாக வாஜ்பாயிடம் சொன்னதாகவும் தெரிவிக்கிறார்.
இன்றைய காஷ்மீர் வெற்றி என்பது இறைவன் சத்ய சாயியின் அன்றைய சங்கல்பம்.

சுவாமி சங்கல்பப்படியே ஒவ்வொன்றும் மிகச் சரியானபடி மிகச் சரியான காலகட்டத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்படுபவரால் நடந்து கொண்டிருக்கிறது.

காஷ்மீர் பிரச்சனை தீர்வதற்கு வெகு நாள் ஆகுமே சுவாமி என அந்த மாணவர் கூற..
நாட்கள் அல்ல பிரார்த்தனையே முக்கியம்.
நீங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்திக்க வேண்டும் என்கிறார் சுவாமி.

ஃபரூக் அப்துல்லாவின் தந்தையும் தனது பக்தரென்றும் (இறைவனுக்கு யார் தான் பக்தரில்லை!) அவரும் காஷ்மீர் முதலமைச்சராய் (1975 - 1982) இருந்தவர்.
எமர்ஜென்ஸியில் அவர் கைதான போது அந்த இடம் (கோஹினூர் மேன்ஷன்) சென்று அவருக்கு தரிசனம் தந்து பஜனை செய்ததாகவும் தெரிவிக்கிறார்.ஒரு முறை காஷ்மீரில் முதலமைச்சர் கார் முன்பு வெடிகுண்டு வெடித்ததில்  "நீங்களே சுவாமி என்னைக் காப்பாற்றியது..என் மகனையும் உங்கள் காலடியிலேயே ஒப்படைக்கிறேன்" எனவும் ஃபரூக் அப்துல்லாவின் தந்தை தெரிவிக்கிறார்.

இப்படி இறைவன் சத்ய சாயி வழிகாட்டாத தலைவர்களே இல்லை இந்தியாவில்.
வழிகாட்டப்படுகிறவர்கள் அனைவரும் சாட்சாத் இறைவன் சத்ய சாயியின் கருவிகளே.

மார்ச் 2 - 2002 ல் அனில்குமார் சாய்ராமுடன் பேசிக் கொண்டிருந்த சுவாமி .. வாஜ்பாய் அவர்களிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது என அனில்குமார் தெரிவிக்க..

சுவாமியோ "தெரியும்.. வாஜ்பாயே இங்கே வருவதாக நினைத்திருந்தான்.. ஒரு முக்கிய ஆலோசனைக்கு....  நேர சிக்கல் ... ஆகவே கடிதம் வந்திருக்கிறது" என்கிறார்.

இறைவன் சத்ய சாயிக்கு தெரியாததேனும் அண்ட சராசரத்தில் உணடா?

அவர் ஒருவரே அந்தர்யாமி.


2005'ல் அரசியலில் இருந்து விருப்ப ஓய்வு கொள்கிறார் அட்டல்ஜி.

எப்பேர்ப்பட்ட விஷயம்.
இப்படியும் அரசியல் தலைவர்கள் இருக்க முடியுமா?

ஆன்மிகத்தில் தன் நேரத்தை அதிகமாக செலவு செய்கிறார்.

சில உடல் உபாதைகள்.

சுவாமியே அட்டல்ஜியின் இல்லம் செல்கிறார் (ஏப்ரல் --2010). ஒரு
மாலை நேரம் முழுதும் அட்டல்ஜிக்கு  மாதவ நேரம். மா தவ நேரம்.

அப்போது "பார்த்தாயா வாஜ்பாய்.. அன்று உன்னருகே நிறைய பேர் சூழ்ந்திருந்திருந்தனர். இன்று அவர்கள் யாருமில்லை.. ஆனால் இன்றும் நாளையும்.. என்றும் சுவாமி உன் கூடவே  இருக்கிறேன். புரிகிறதா?" என சத்தியம் பேசுகிறார்.

எப்படி அட்டல்ஜி அப்போது கண் கலங்காமல் இருந்திருக்க முடியும்?

அவரின் உடல் மறைவிற்குப் பின் அனைத்து தலைவர்களும் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். மோடிஜி நடந்தே இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

அட்டல்ஜியின் எளிமையான சிறிய வீட்டு அறை முழுதும் இறைவன் சத்ய சாயி புகைப்படங்களே  இல்லத்தையே கோவிலாக்கி இன்றும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

சில அரசியல் தலைவர்கள் .. கலை பிரபலங்கள் தங்கள் பக்தியை வெளிக் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.ஆனால் உண்மையான பக்தி என்பது ஒரு பூ பூப்பதைப் போல்.. மலர்ந்தால் வாசனை வெளியே வரத் தான் செய்யும்.

சுவாமியை அந்தத் தள்ளாத வயதிலும் குனிந்து வணங்கிய அந்தக் கைகள் ...
பாரத முன்னேற்றம் நோக்கி நடந்த அந்தக் கால்கள்.
எழுச்சியையே பேசிக் கொண்டிருந்த அந்தக் குரல்..
பக்தியில் கனிந்து சாறான அந்த இதயம் ...
எல்லாம் சாலை வழி
பரபிரம்ம சத்ய சாயியிடம் சங்கமிக்க இறுதி யாத்திரை சென்றது..

இறைவன் சத்ய சாயியின் பெங்களூர் மருத்துவ மனையை அட்டல்ஜி திறந்து வைக்கவே சுவாமி சங்கல்பித்தார்.

"நீங்கள் எனக்காக காத்திருக்கவில்லை .. பாபாவுக்காகவே காத்திருந்தீர்கள்" என்கிறார் திறப்பு விழாவில் பேசுகிற போது அட்டல்ஜி.


அப்படி பேசுகிற போது அவர் பாரத பிரதமர். துளி அகந்தை இல்லை.
அது தான் பக்தி.
பக்தி சத்தியத்தை மட்டுமே பேசும்.

ஏழைகளுக்கு இலவசமாய் சிகிச்சை அளிக்கும் இது மருத்துவமனை போலவே இல்லை மாளிகையைப் போலவே இருக்கிறது என இறைவன் சத்ய சாயியின் ஒவ்வொரு செயற்கரிய தொண்டுகளையும் தூய மனதால் வியந்து விவரித்துப் புகழ்கிறார்.

இப்பேர்ப்பட்ட தலைவர்கள் அரிதிலும் அரிது.
கடைசி வரை ஒரு தலைவராக இல்லாமல் இறைவன் சத்ய சாயியின் குழந்தையாகவே அவர் வாழ்ந்தது வாழ்க்கையா.. இல்லை அது தவமே...

இல்லத்தில் அட்டல்ஜி நினைவாக (ஆகஸ்ட் -30 -- 2018) சாய் பஜன் வைத்து அவரது நண்பர்களும்.. உறவினர்களும் கலந்து கொண்ட காட்சி இதயத்தைக் கொள்ளை கொள்கின்றது..  அவரது ஜீவ ஆத்மாவும் சுவாமி பதம் ( பாத கதி : ஆகஸ்ட் 16-- 2018) சேர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...

அட்டல்ஜி'யோ நம் அனைவருக்கும் உதாரண புருஷர்.
இறைவன் சத்ய சாயியோ புராண புருஷர்.

அட்டல்ஜியின் பக்தியை உளத்தில் தாங்கி.. அவர் எளிமையை வாழ்வில் தாங்கி.. அவர் நேர்மையை நம் கரத்தில் ஏந்தி..

அந்த சத்திய தேசிய ஜோதியோடு உலா வருவோம்.
இறைவன் சத்யசாயி சங்கல்பத்தோடு இந்தியா நம் ஒவ்வொருவராலும் ஒரு அடி முன்னேற்றம் அடையட்டும்.

"இந்த உலகமானது தன் சுய ஆத்மாவின் விழிப்புணர்விலான ஆர்வத்தில் நடக்கட்டும் என அனைவரும் ஆவல் கொள்வோம்" என்ற அட்டல்ஜியின் பொன்மொழிகளைப் பகிர்ந்தபடி...

 பாரத் சாய் மாதா கி ஜெய்

பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக