தலைப்பு

சனி, 8 ஆகஸ்ட், 2020

காமதேனுவான சாயி கடவுள்!


"நான் செய்யும் அற்புதங்கள் யாவும் எனது தெய்வீக சக்தியை உங்களுக்கு உணர்த்தும் ஒரு சிறு 'விசிடிங் கார்டு ' மட்டுமே". - இறைவன் சத்ய சாயி

திருமதி மங்கா, வயது 33, இவர் ஒரு இல்லத்தரசி. சத்ய சாய்பாபாவின் அநேக அற்புதங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர். அத்தகைய அனுபவங்கள் சிலவற்றை நம்மிடம் தனது சொந்த நடையில் இங்கே விவரிக்கிறார்.

இந்த அற்புதங்கள் எல்லாம் 1995 ஆம் ஆண்டு கடைசியில் ஆரம்பித்தது. பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்ட 1996 ஆம் ஆண்டு புதுவருட காலண்டர் கிடைத்தது. அதை எங்கள் வீட்டில் பொருத்தமான இடத்தில் மாட்டினோம். 1996 ஜனவரி ஒன்றாம் தேதி புதுவருடப் பிறப்பன்று அந்த காலண்டர் படத்திலிருந்து விபூதி கொட்டத் தொடங்கியது. இது குறித்து நாங்கள் யாரிடமும் சொல்லவில்லை.  இருப்பினும் அருகிலுள்ள அக்கம்பக்கத்தினர் அனைவரும் அதை கண்டனர்.

அந்த வருடத்தில் ஒரு நாள்  எனக்கும் என் கணவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது. அதை நினைத்து நான் தனிமையில் உட்கார்ந்து ஆதரவற்ற நிலையில் அழுது கொண்டிருந்தேன். அப்போது பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் புகைப்படத்திலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. குடும்ப பூசலையும் மறந்து என் கணவரை கூப்பிட்டு  காண்பித்தேன்.  நாங்கள் இருவரும் எங்களுக்குள்  இருந்த கருத்து வேறுபாட்டை மறந்து பகவானின் அன்பில் திளைத்து சுமுகமாக வாழத் தொடங்கினோம்.

அதன் பிறகு எனக்குள் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தெய்வீக குரல் கேட்கத் தொடங்கியது. அவர் ஒவ்வொரு முறையும் நானே உனது தாயும் தந்தையும் ஆவேன்.  உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று உறுதி கூறினார். நாங்கள் பகவானுக்கு என்று ஒரு தனி அறையை எங்கள் வீட்டில் உருவாக்கினோம். ஒரு நாள் இரவு எங்கள் மகன் ஸ்ரீ சத்ய சாய்பாபா அந்த அறைக்குள் நடந்து நடந்து செல்வதை கண்டான். பின்னர் பகவான் என் எதிரில் தோன்றி பேசத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் பயந்து கொண்டு இதைப்  பற்றி வெளிநபர்கள் யாரிடமும் நான் சொல்லவில்லை. 1996 ஆம் ஆண்டு எங்கள் வீட்டிலிருந்த விநாயகர் சிலையிலிருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றும் அதைத் தவிர இரண்டு ரூபாய் நாணயம் ஒன்று ஸ்ரீ சீரடி சாய்பாபா சிலையில் இருந்தும் வந்தது.


அதே 1996 ஆம் ஆண்டு எனக்கு கடுமையான உதிரப் போக்கினால் . மிகவும் பலவீனமாக ஆகிவிட்டேன். என் கணவர் அருகில் இருந்த சத்ய சாய் சேவா சமிதிக்கு ரூபாய் 50 நன்கொடையாக தந்தார். அந்த காலகட்டத்தில் இந்தத் தொகையே எங்களுக்கு மிகவும் பெரியதாக இருந்தது. அதன் பிறகு ஆச்சரியப்படும் வகையில் என்னுடைய உதிரப் போக்கு முற்றிலுமாக குணமாகியது.

1998ஆம் ஆண்டு நாங்கள் புட்டபர்த்திக்கு பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தரிசனம் பெறச் சென்றோம். அங்கே நான் பகவானின் கண்கவர் புகைப்படங்கள் சிலவற்றை கண்டேன். அவை ஒவ்வொன்றும் ரூபாய் 300 க்கு குறையாமல் இருந்தது. சுவாமி என்னிடம் அப்படங்களை வாங்குமாறு சூட்சுமத்தில் சொன்னார். ஒரு படம் மருத்துவர் திரு ரவீந்திரநாத் அவர்களுக்கு கொடுக்குமாறும் மற்றொன்றை என்னிடம் வைத்துக்கொள்ள சொன்னார். என்னிடம் பணம் இல்லையே சுவாமி இவற்றை வாங்குவதற்கு என்று கூறினேன். அதற்கு சுவாமி என்னுடைய பர்சை திறந்து பார்க்கச் சொன்னார். அவ்வண்ணமே நான் செய்தபோது  ஏற்கனவே அதில் நான் வைத்திருந்த தொகையை விட அதிகமாக ரூபாய் 600  இருந்தது. அந்த பணத்தைக்கொண்டு நான் இரு படங்களை வாங்கி, ஸ்வாமி சொன்னால் போல் ஒன்றை மருத்துவர் திரு ரவீந்திரன் அவர்களுக்கு தந்துவிட்டேன்.

 2001-ஆம் ஆண்டு எனது சகோதரனின் புற்று நோயைக் குணப்படுத்துவதற்காக சுவாமியை சூட்சுமத்தில் வேண்டிக் கொண்டேன். என் வேண்டுதலை ஏற்று சுவாமி தனது விபூதியின் மூலம் என் சகோதரனை முற்றிலுமாக குணப்படுத்தினார்.

 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாங்கள் புட்டபர்திக்கு சென்றோம். புட்டபர்த்தியில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்குவதாக உத்தேசம் செய்து அதன் வரைபடத்தையும் எடுத்துக் கொண்டு சென்றோம். பக்தர்களுக்கு தரிசனம் தர வெளியில் வந்த சுவாமி தரிசனத்தை தந்து விட்டு எங்களிடமிருந்து அப்பார்ட்மெண்டின் வரை படத்தை வாங்கி தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டார்.  அதே வருடம் சுவாமி என்  வீட்டில் நேரில் தோன்றி தனது பிறந்த நாளுக்காக ஒரு புடவை எடுத்துக் கொள்ளச் சொன்னார்.  அதற்கான தொகை ரூபாய் 5000/- சுவாமியின் படத்தின் முன் கண்டேன்.

இந்த காலகட்டத்தில் புட்டபர்த்தியில் அப்பார்ட்மெண்ட் வாங்குவதற்காக எங்களிடம் ஏற்கனவே இருந்த சில சொத்துக்களை விற்று ரூபாய் 3 லட்சம் சேகரித்தோம். ஆனால் அதுவும் போதவில்லை.  எங்களுக்கு கூடுதலாக மேலும் ரூபாய் 6 லட்சங்கள் தேவைப்பட்டது. அதன்பிறகு ஒருநாள் ரூபாய் 500 எங்கள் வீட்டில் இருந்த சுவாமியின் படத்தின் முன் தோன்றியது.  சுவாமி சூட்சுமத்தில் என்னிடம் ரூபாய் 500ஐ  அப்பார்ட்மெண்ட் வாங்குவதற்கு கொடுக்க வேண்டிய முன்பணமாக வைத்துக் கொள்ளச் சொன்னார். மேலும் பணம் பற்றாக்குறை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அந்த அப்பார்ட்மெண்ட் வாங்குவதற்கான சத்தியை அவரே கொடுக்கப் போவதாகவும் கூறினார்.  சுவாமியின் வார்த்தையின் மீது முழு நம்பிக்கை கொண்ட என் கணவர் ரூபாய் 500ஐ முன்பணமாக அப்பார்ட்மெண்ட் வாங்குவதற்கு கொடுத்தார். சுவாமியின் வாக்குறுதி நிறைவேறும் வண்ணம் எங்களால் தேவையான மொத்த பணத்தையும் கொடுத்து அந்த அபார்ட்மெண்டை வாங்க முடிந்தது. இவ்வாறு நிகழ்ந்தது "முற்றிலும் பகவானது அனுக்கிரகத்தால் மாத்திரமே".

புதுமனை புகுவிழாவிற்கு ஒரு புடவை எடுத்துக் கொள்ளுமாறு சுவாமி ரூபாய் 2000ஐ எனக்கு ஆசீர்வாதமாக தந்தார். ஆனால் தன்னுடைய பிறந்த நாளுக்கு புடவை எடுத்துக் கொள்ளச் சொல்லி ஏற்கனவே எனக்கு தந்திருந்த 5,000 ரூபாயில் நான் புடவை ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை.

சுவாமியிடம் நான்  சூட்சுமத்தில் பேசும்போது சுவாமி நாங்கள் வசிப்பதற்கு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு தந்தீர்கள் 🤗.  ஆனால் அதில் தேவைப்படும் மேசை நாற்காலி போன்றவைகைகள் இல்லை. எனவே  நீங்கள் இதுவரை எனக்குக் கொடுத்த ரூபாய் 7000ஐக்கொண்டு மேசை நாற்காலி போன்றவற்றை வாங்கி விடுகிறேன் என்றேன். சுவாமியும் அதற்கு ஒப்புதல் தந்தார். அவ்வாறே ரூபாய் 7000திற்க்கு மேசை, நாற்காலி இத்யாதிகளை வாங்கினோம்.  2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று புதுமனை புகு விழா மிகவும் சிறப்பாக நடந்தது. சுவாமி அங்கிருந்த பழைய ஏர் கூலரை நீக்கி விட்டு புதிதாக ஒன்றை வாங்கி வைக்குமாறு எங்களிடம் கூறினார். அவ்வண்ணமே நாங்களும் புது ஏர் கூலர் ஒன்றை ஏப்ரல் மாதம் 2004ம் ஆண்டு வாங்கினோம். புதுமனை புகுவிழாவிற்கு சுவாமி எனக்கு ஒரு மோதிரத்தை பரிசாக தந்தார்.

திரு வி சி ராம் அவர்கள் எங்கள் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு வந்தபோது வெள்ளியினால் செய்யப்பட்ட ஒரு காமதேனு விக்ரஹம் அவர் கைகளில் வந்தது. அவர் அதை எங்களுக்கு பரிசாக அளித்தார்.  புதுமனை புகு விழா முடிந்த பிறகு சத்யநாராயண பூஜை செய்ய வேண்டும் என்று நாங்கள் விருப்பப்பட்டோம். எங்கள் விருப்பம் ஈடேறும் வகையில் ஒரு மகா விஷ்ணு விக்கிரகம் பூஜை செய்வதற்கு ஏதுவாக வந்தது.

மார்ச் 30,  2004ம் ஆண்டு சீதா ராமர் கல்யாணத்திற்காக திருமாங்கல்யம் மற்றும் தாம்புராலு என்ற தெலுங்கர்களின் திருமண நிறைவு சம்பிரதாய சடங்கில் அபிஷேகம் செய்யவதற்காக முத்துக்கள் வீட்டில் தானே தோன்றியது.

அற்புதங்கள் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சியாகும் என்ற கூற்றை மெய்படுத்தும் வண்ணம் எண்ணிலடங்கா அற்புதங்கள் எங்கள் வீட்டில் நடந்திருக்கிறது.  ஆனால் இன்று வரை இவை எதையும்  யாரிடமும் சொல்லி நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் இத்தகைய அற்புதங்களை பக்தர்களிடம் பகிர்ந்து கொள்ளும் கருவியாக நாங்கள் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

ஆதாரம்: (As narrated to Mr. B.Parvatala Rao at her own residence at Hyderabad on 27.4.2004).
தமிழாக்கம்: R. வரலட்சுமி, குரோம்பேட்டை, சென்னை

ஓ சாயி...பக்தர்கள் கேட்காமலே அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலே லௌகீக தேவைகளையும் பூர்த்தி செய்பவரே!!! உமக்கு எங்களின் ஆயிரம் கோடி நமஸ்காரம் 🙇‍♂️

ஜெய் ஸ்ரீ சாய் ராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக