தலைப்பு

சனி, 1 ஆகஸ்ட், 2020

தியானச் சாவியே பிரம்ம வித்தையை திறக்கும்!


பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் கீதையை உள்வாங்கியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அதனை நடைமுறைப் படுத்துபவர்கள் பாக்கியசாலிகள். அவரின் பாதத்தைப் பிடித்தபடியே வாழ்க்கையை எதிர்பார்ப்புகளின்றி வாழ்பவர்கள் முக்திவான்கள் என்பதை அணுஅணுவாய் தியான வாஹினி இதோ வழிகாட்டி தெளிய வைக்கிறது.

மனிதர்கள் மற்றவர்கள் புகழ்ச்சியைப் பெறவும், மற்றவர் இகழ்ச்சியைத் தவிர்க்கவும் முயற்சி செய்கிறார்கள். இதையும் மலினமான, அசுத்தமான வாசனை என்று கருதவேண்டும்.

இவ்வுலகம் ஒரு காக்கைக் கூட்டம். சில புகழ்ந்து கரையவும். சில இகழ்ந்து கரையும். ஆனால் மனிதர்கள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அப்பாற்பட்ட நிலையில் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் புகழ்ச்சியை இலேசானதாக கருது. அவர்கள் அதை உமிழ்ந்திருப்பதாக எடுத்துக்கொள். அப்போதுதான் நீ விடுபட்டு, உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். ஸ்ரீ ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு, பாபா போன்றவர்களும் கூட இகழ்ச்சியிலிருந்து தப்பவில்லை. கடவுளருக்குக்கூட தீய நோக்கங்களையும் செயல்களையும் கற்பித்து அவர்களை பற்றியும் குறைவாகக் கூறுகிறார்கள்.

இத்தகைய கீழ்த்தர மனம் படைத்த மனிதர்கள், சாதாரண மனிதனை கௌரவிப்பார்கள் என்று எவ்வாறு கருத முடியும்? குற்றங்கூற எந்த முகாந்திரமும் போதும். வெள்ளையன் கருப்பனை வெறுக்கிறான். கருப்பன் வெள்ளையனை வெறுக்கிறான். சைவன், வைஷ்ணவனை பற்றி அவதூறாகப் பேசுகிறான். வைஷ்ணவன்  சைவனைப் பற்றி கதைகள் திரிக்கிறான். ஒவ்வொருவனும் தன்னுடைய மதம், தன்னுடைய நாடு, தன்னுடைய வழிபாட்டு முறை, தான், தனது சடங்குகள் இவற்றை நேசிக்கிறான். இத்தகைய அன்பு, தனது சமயத்தைக், கோட்பாட்டை புகழ்ந்தும், பிறர் சமயத்தை இகழ்ந்தும், தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இவையாவும் கடவுளுடன் ஒருவன் கொண்ட உறவுடன் சம்பந்தப்பட்டிருந்தாலும், இவற்றை அசுத்தமான வாசனைகள் என்றே கருத வேண்டும். பரந்த பிரபஞ்ச ஆத்ம ஞானத்தை இதயத்தில் நிரப்புகின்ற அதே ஜபதியானங்களால், அறியாமையால் நிறைந்த இத்தகைய கீழ்த்தரமான மனோபாவங்களை விலக்க வேண்டும். அப்போது இத்தகைய குறுகிய வாசனைகள் மறைகின்றன. அவற்றின் உருவமும் தன்மைகளும் உயர் மாற்றம் பெற்று, புனித வாசனைகளாக மாறுகின்றன. ஏன் மனிதன் தன்னுடைய சக்திகளையெல்லாம் பயன்படுத்தி, வேண்டாத இந்த வாசனைகளை அகற்ற முயற்சிப்பதில்லை என்பதை எண்ணும்போது, மிக அதிசயமாக உள்ளது. இந்த வேண்டாத வாசனைகளை தொடரும் போதுதான், அவனுக்கு வலி, துக்கம், மனவேதனை இவை ஏற்படுகின்றன.

இந்த கீழ்த்தர சுபாவங்கள், மகிழ்ச்சியை பெறுவதற்கு அவன் செல்லும் வழி சரியானது என்ற மயக்கத்தை கொடுக்கின்றன. ஆகவே தான் மனிதன் இவற்றை விடுவதற்கு தயங்குகிறான். இவற்றை இறுகப் பற்றிக்கொள்கிறான். அவன் சிறந்த ஆன்மீக நூல்களைப் படித்தால், அவனது மூளை தெளிவுபெறும். (சாஸ்திரங்களின் சாரத்தையாவது ஓரளவு கிரகிக்க முடியும்).

ஆனால் சாஸ்திரங்களைப் பற்றிய புத்தகங்கள் பல.அவற்றையெல்லாம் படிக்க மனித வாழ்க்கையில் நேரம் போதாது. அவற்றை புரிந்து கொள்வதிலும் பல கஷ்டங்கள் உண்டு. புத்தகங்களை வீணாக படித்துக்கொண்டு, பல்லுடைக்கும் சாஸ்திர விதிகளைப் படித்து, செயல்முறை படுத்தாத பக்தி மார்க்கங்களையும் படித்து, நேரம் செலவழிப்பதில் என்ன பயன்? செயல்முறை படுத்தாமல் படித்துக் கொண்டே இருப்பதும் மலினவாசனையே;இதுவும் வேண்டத்தகாததாக ஒதுக்கப்பட வேண்டும்.

இப்போது கூறுவதை கவனியுங்கள். பரத்வாஜ ரிஷி மும்முறை பிறந்து, மும்முறையும் வேதங்களை கற்றார். நான்காவது பிறவியிலும் படிக்கத் துவங்கினார். இந்திரன் வந்து பிரம்ம வித்தையைக் கற்பித்து, விடுதலைக்கான ரகசியத்தை கற்பித்தார். பரத்வாஜர் படிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, தியானத்தில் முழு கவனமும் செலுத்தி, ஆத்மாவை உணர்ந்தார். சாரத்தைக் கிரகித்து, பயிற்சிக்கு உதவவில்லையானால், படிப்பு பயனற்ற வேலையாகும். எல்லாவிதப் பாடங்களையும், எல்லாத் துறைகளிலும் படிக்க வேண்டும் என்ற பேராசையும் ஆரோக்கியமான சுபாவம் அல்ல. ஒரு காலத்தில் துர்வாசர் என்ற முனிவர், ஒரு வண்டி நிறைய நூல்களுடன் சிவபெருமானைக் காணச் சென்றார். அப்போது நாரதர் அவரை, பொதி சுமக்கும் கழுதைக்கு ஒப்பிட்டார். புத்தகங்களில் அதிக பற்றுதல் கொள்ளுதல், ஒரு துர்வாசனையே ஆகும். அது வேண்டாத பழக்கம். எல்லாத் துறைகளிலும் உள்ள புத்தகங்களை சுமந்தாலும், அவை அனைத்தையும் படித்திருந்தாலும், அவற்றை பற்றிய அனுபவ ஞானம் இல்லாமல், அவற்றிலுள்ள போதனையைக் கிரகிக்க இயலாது. படிக்கிறோம் என்ற கர்வமே வேண்டாத வாசனையாக கர்வமுள்ள சுபாவமாக மாறுகிறது.

இந்த புத்திமதிகளை கேட்ட துர்வாச முனிவர், அறிவில் தெளிவு பெற்று எல்லா புத்தகங்களையும் கடலில் எறிந்து விட்டு, ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார். எப்படி முனிவர்கள் முழு அறிவை அளிப்பதற்கு தியானம் மிக முக்கியமானது என்பதை உணர்ந்தார்கள் என்பதை கவனியுங்கள்.

 ஆத்ம ஞானத்தை, புத்தகங்களைப் படிப்பதாலோ, சாஸ்திரங்களை படிப்பதாலோ,அறிவை கூர்மையாக வைத்திருப்பதாலோ, பலவித வாக்குவாதங்கள் மூலமோ, பெற முடியாது.உத்தாலகரின் மகனான ஸ்வேதகேது உயர்ந்த பண்டிதர். ஒருநாள் தந்தை மகனைக் கூப்பிட்டு, "ஸ்வேதகேது எந்த ஒரு சாஸ்திரத்தை உணர்ந்தால், மற்ற எல்லா சாஸ்திரங்களையும் உணர்ந்ததாக கருதப்படுமோ, அதனைக் கற்றுக் கொண்டாயா?" என்று கேட்டார். ஸ்வேதகேது, தனக்கு அத்தகைய சாஸ்திரம் இருப்பதாக தெரியாது என்றும், தான் அதை கற்க வில்லை என்றும் கூறினான். இதைக் கேட்ட தந்தை, பிரம்ம வித்தையை மகனுக்கு கற்பித்தார். பிரம்ம வித்தை, ஆத்மாவைப் பற்றிய உண்மையறிவைக் கொடுக்கிறது.

 ஆகவே மனிதன் முதலில் தன் மனதின் பழக்கவழக்கங்கள், சுபாவங்கள், மனோபாவங்கள் இவற்றை தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகுதான், அதைக் கட்டுப்படுத்தி, அதன் மேல் ஆதிக்கம் கொள்ளமுடியும். அவனது நினைவுத்திறமை, மன உறுதி, கற்பனைத்திறன் முதலியவற்றை தூய்மைப்படுத்தி வளர்க்க முடியும்.

அங்குமிங்கும் அலைவது மனதின் சாதாரண இயல்பு. அது காற்றைப் போன்றது. ஆகவே அர்ஜுனன் கிருஷ்ணனிடம் இவ்வாறு வர்ணிக்கிறான்.

 சஞ்சலம் ஹி மன: க்ருஷ்ண
   ப்ரமாதி பலவத் த்ருடம்
 தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே
    வாயோரிவ ஸு துஷ்கரம்

க்ருஷ்ணா மனம் சஞ்சலமுடையது. கலக்கத்தை செய்வது. வலிமையுடையது. அடக்க முடியாதது அன்றோ? நான் அதன் அடக்கத்தை, காற்றை அடக்குதல் போல் மிகக் கடினம் என்று கருதுகிறேன். அதற்கு க்ருஷ்ணன், "அர்ஜுனா நீ கூறுவது சரியே. இருந்தாலும் இடைவிடாத கவனத்தாலும், பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும், அதை அடக்க முடியும். ஆகவே முதற்படியாக, தியானத்தை பழகிக்கொள்" என்று கூறினார்.

ஆதாரம்: தியான வாஹினி


🌻பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயிபாபா காட்டிடும் பாதையானது நேரானது.. நேர்மையானது... எளிமையானது .. மிகவும் மகிமையானது.. அவரின் வார்த்தைகளை அப்படியே வாழ்க்கையாக்கினால் போதும் அதுவே அக விடுதலையாகிய முக்தியை தர வல்லது. வேத ரூபமான இறைவன் வேதம்  புரியாத கலி ஜனங்களுக்காக சத்யசாயியாய் வந்திறங்கி புரிய வைத்தும் ...  ஆன்மாவை விரிய வைத்தும் அதனை நமக்கு வாழ்வாக்கவுமே அற்புதம் புரிகிறார். தியான சாதனையே பேரிறைவன் சத்யசாயியின் பாதத்தில் அமர வைக்கும் பிரம்ம வித்தை என்பதை உணர்வோமாக! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக