தலைப்பு

சனி, 15 ஆகஸ்ட், 2020

மேஜர் ஜெனரல் S.P. மகாதேவனின் உயிர் உறையும் 'திக்திக்' சாயி அனுபவங்கள்!


Major General S. P. Mahadevan AVSM, Commander of the first Madras Regiment, Former TNPSC chairman, 
Former State President of SSSSO, Tamilnadu. 

இராணுவம் ஒரு கருவியே... இறைவன் சத்ய சாயி அந்தக் கருவியை வைத்தும் பாரதம் காப்பாற்றுகிறார். ஒவ்வொரு வீரர்களையும் அவரே உள்ளிருந்து வழி நடத்துகிறார். தனது ஆத்ம பக்தரான இராணுவ தீரர் மகாதேவன் அவர்களோடு அவரின் குழுவினரையும் எவ்வகையில் எல்லாம் .. எவ்வித இக்கட்டுகளில் எல்லாம் காப்பாற்றினார் என்பதை உயிர் உறையும் படி அந்த திக் திக் நொடிகளைக் காண்போம்... 

ஞானப்பழமாய் முருகன் குடியிருக்கும் பழனியை பூர்வீகமாக கொண்டவர் மேஜர் ஜெனரல் S. P. மகாதேவன். அவர் தனது 21ஆம் வயதில் இந்திய ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமென்டில் கேப்டனாக  பணியில் சேர்ந்தார். வீரம் நிறைந்த S. P. மகாதேவன், வங்காளத்தில் கலவரம் ஏற்பட்டபோது, தேசபிதா மகாத்மா காந்தியுடன் இருந்து, அவரை காப்பாற்றியவர். காஷ்மீர் மகாராஜா, திரு. ஹரிசிங் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, திரு. சர்தார் வல்லபாய் பட்டேல் பிறப்பித்த உத்தரவின்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு படைகளோடு சென்று, பாகிஸ்தானியரை விரட்டி, காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தவர்.

திரு. மகாதேவன்,  இறை நம்பிக்கையும், நல்லொழுக்கமும் கொண்டவர். இவருடன் பணிபுரிந்த நண்பர் ஒருவர் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பெருமைகளைக் கூறி, பகவானின் போட்டோவை இவருக்கு கொடுத்தார். பூர்வ ஜென்ம புண்ணியமோ என்னவோ, பகவான் பால் இவருக்கு அன்பு பெருகியது.


1970களில், ஒரு நேர்காணலில், சுவாமி இவரை ஆசீர்வதித்தார். "நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன். கவலைப்படாதே! , சுவாமி உடலளவில் இங்கு இருக்கும் போது, ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் தன்னுடன் இருப்பாரா ?, என சந்தேகம் கொள்ளாதே, நான் உன்னை கஷ்டங்கள், ஆபத்துகள், நோய் போன்றவற்றிலிருந்து காப்பேன். பூமியிலும், வானத்திலும், நதியிலும், நீ எங்கிருந்தாலும், எல்லா இடங்களிலும், எல்லா ஆபத்துக்களிலிருந்தும், உன்னை காப்பேன்.", என்று உறுதி அளித்தார்.மகாதேவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

1972 ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின்போது; டிராஸ், கார்கில், துர்டுக், காரகோரம், சுசில் வழியாக சீனர்களும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். அந்தப் பகுதிகளை பாதுகாக்கும் பொறுப்பு மகாதேவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. கடல் மட்டத்திலிருந்து 12500 அடி உயரத்தில் பனி சூழ்ந்த  இடத்தில் மகாதேவனின் படை முகாமிட்டிருந்தது. மகாதேவன் தனது tentல் சுவாமியின் படத்தை வணங்கி, "பகவானே ! எதிரிகளின்  இருப்பிடங்களை அடையாளம் காட்டி, அவர்களது ஊடுருவலை தடுக்க, எனக்கு உதவுங்கள்.", என்று தீவிரமாக பிரார்த்தனை செய்தார். 12x24 inch சுவாமியின் வண்ணப் புகைப்படத்தில் விபூதி தோன்றியது. இந்த தெய்வீக சமிக்ஞை அவருக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் திறனையும் தந்தது. அவரும் அவரது குழுவினரும் எதிரிகளை வெற்றிகரமாக விரட்டியடித்தனர்.


1973 ஆம் ஆண்டு, மகாதேவன், காரகோரம் பகுதிகளை பார்வையிட்டு, Lay என்ற இடத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து கொண்டிருந்தார். 18920 அடி உயரத்தில் இருந்த கார்டுங்கா என்ற இடத்தை அவர்கள் கடக்க முயன்றபோது, வானிலை மோசமானதாக இருந்தது. ஹெலிகாப்டரை இயக்க முடியவில்லை. விமானி தடுமாறினார். மகாதேவன் பகவானை தீவிரமாக பிரார்த்தனை செய்தார். விமானி, சிந்து ஆற்றின் கரைப்பகுதியில் மோதி,  வலுக்கட்டாயமாக ஹெலிகாப்டரை லேண்டிங் செய்தார். கடவுளின் தலையீட்டால், மகாதேவனும் விமானியும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.


பங்களாதேஷ் போரின் போது, மகாதேவன் கிழக்கு பாக்கிஸ்தான்,ஜெசோர் மீது, ஒரு ஹெலிகாப்டரில் சென்று உளவு பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, தரையில் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மூலம், அவர்களது ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த முயன்றனர். நிலைமை மோசமாக இருந்தது. விரைந்து தப்ப முடியவில்லை. மகாதேவன், சுவாமியை காப்பாற்றும்படி மனதார வேண்டினார். ஒரு குண்டு ஹெலிகாப்டரை துளைத்து, மகாதேவனின் இதயத்தை நோக்கி நேராக வந்தது. அது, அவரது  இதயத்தை தொலைத்து சென்றிருக்கவேண்டும். நம்பமுடியாத அதிசயமாக அந்த குண்டு இடது தோள்பட்டைக்கு மேலே சென்றது.  சுவாமியின் சங்கல்பத்தால் மகாதேவன் காப்பாற்றப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் சார்பாக, மகாதேவன் படையினர் காங்கோ சென்றனர். அவர்கள் காங்கோவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடினர். சமாளிக்க இயலாமல் கிளர்ச்சியாளர்கள், எலிசபெத்  வெளி, ஜெரோட்ட வெளி இடையிலான  இணைப்பு ரயில் பாலத்தை  தகர்த்து விட்டு தப்பி ஓடினார்கள். பாலத்தின் கீழே கொடூரமான முதலைகள் நிறைந்த லிபரா நதி ஓடிக் கொண்டிருந்தது.


மகாதேவன் பகவானை பிரார்த்தனை செய்துகொண்டு உடைந்துபோன பாலத்தின் ஒரு பகுதியை குரங்கு போல பிடித்துக்கொண்டு அக்கரைக்கு முன்னேறினார். கரணம் தப்பினால் கொடூர முதலைகளுக்கு இரையாக வேண்டும். தெய்வாதீனமாக மகாதேவன் குழுவினர் பாலத்தை வெற்றிகரமாக கடந்தனர். பின்னர் அந்த பாலம்  உடனடியாக அவர்களால் சீர் செய்யப்பட்டது.

1975 ஆம் ஆண்டு, சியாச்சின் பகுதியில், ரோந்து சென்று விட்டு, ஒரு ஹெலிகாப்டரில் மகாதேவன் வந்து கொண்டிருந்தார். அப்போது கீழே  நமது ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து கிடப்பதை கண்டார். உடனடியாக மகாதேவன் ஹெலிகாப்டரை கீழே இறக்கி, காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வீரர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அவரது ஹெலிகாப்டரில் அனுப்பினார். அவர்களை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தம்மை அழைத்துப் போகுமாறு மகாதேவன் கட்டளை இட்டிருந்தார். ஆனால்  ஹெலிகாப்டர் வர தாமதம் ஆனது. எனவே மகாதேவனும் அவரது உதவியாளரும் கார்டுங்கா வழியாக தமது இருப்பிடத்திற்கு நடந்தனர்.


அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான டன் பனி சரிந்து அவர்களை நோக்கி வந்தது. மகாதேவன், "சாய்ராம்!", என கத்தினார். இறைவனைப் பிரார்த்திக்குமாறு உதவியாளரிடம் கூறினார். யாரோ திடீரென அவர்களை தள்ள, சறுக்கியது போல் சென்று நூலிழையில் உயிர் தப்பினார்கள்.

பகவான் மகாதேவனுக்கு பின்னர் அளித்த நேர்காணலில், "ஹெலிகாப்டர் விபத்தின் போதும்  பனிச்சரிவில்  சிக்கிய போதும், எதிரிகளின் தோட்டாக்கள் துளைத்த போதும், லிபரா நதியிலும், நான் உன்னை காப்பாற்றினேன்!", என்று கூறி, நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே தெரிவித்தார். மகாதேவன் தனது கண்ணீரால் பகவானுக்கு நன்றி கூறினார்.


ஒருமுறை சுவாமி, ஸ்ரீ சத்ய சாய் விகாஸ் பள்ளி திறப்பு விழாவிற்காக ஊட்டி வந்திருந்தார். தற்செயலாக திரு. மகாதேவன் அவர்களும் வெலிங்டன் ராணுவ கல்லூரியை இன்ஸ்பெக்சன் செய்ய ஊட்டிக்கு வந்து இருந்தார். பகவான் இருப்பதை அறிந்த மகாதேவன் சுவாமியை சென்று பார்த்து, "சுவாமி! தாங்கள் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வந்து ராணுவ வீரர்களை ஆசீர்வதிக்க வேண்டும்.", என பணிவுடன் கேட்டுக் கொண்டார். "Yes", என்று கூறிய ஸ்வாமி, மறுநாள் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு சென்றார். கட்டுக்கோப்பாக நின்றிருந்த ராணுவ வீரர்கள், சுவாமியை கண்டதும் வேகமாக ஓடிவந்து,  ஒரே நேரத்தில் பாத நமஸ்காரம் பெற முயன்றனர். சுவாமி மகா தேவனிடம், " பக்தியின் முன் ராணுவ ஒழுக்கம் பின்னால் சென்று விட்டது பார் .", எனக் கூறி சிரித்தார். "ஆம், சுவாமி!", என மகாதேவனும் கூறி சிரித்தார்.

சாயி வாக்கு, சத்திய வாக்கு! அவதார புருஷர், தான் கூறியபடி, பூமியிலும், வானத்திலும், நதியிலும், மேஜர் ஜெனரல் மகாதேவனை காப்பாற்றி அருள் செய்து உள்ளார்.

அபிராமி  பட்டருக்கு இடர் வந்த போது, வானில் சுடராக வந்து காத்திட்டாள்   பராசக்தி அன்னை!
மகாதேவனுக்கு வானில் இடர் வந்த போது கருணை சுடராய் தடுத்து  காத்திட்டாள் சாயி அன்னை!

ஆதாரம்: Articles in, Sai Vandana, Times of India & Loksatta Vyakhtivedh
தொகுத்தளித்தவர்: S. Ramesh, Ex-Convenor, Sai Samithi, Salem.

🌻 தான் படைக்கின்ற உயிரை அழிக்கின்ற உரிமை இறைவன் சத்யசாயிக்கே உரித்தது.. ஆயினும் அந்தந்த உயிர்களின் நியாய தர்மம் கருதி.. காலத்தின் விதி நெறிகளையும் கணக்கில் கொண்டே அவர் செயல்படுவார்.. ஆனால் அந்த உயிர் தன்னிடம் சரணாகதி அடைந்துவிடுமாயின் எப்பேர்ப்பட்ட இன்னல் அந்த உயிருக்கு நேர்ந்தாலும் .. அப்படி நேர்வதற்கு முன்னும் .. அதற்காக பிரபஞ்ச விதியையே மாற்றி அமைக்கும் முழு சுதந்திரம் இறைவன் சத்ய சாயி ஒருவருக்கே இருக்கிறது... 



மேஜர் ஜெனரல் S.P. மகாதேவன் சுவாமியுடன்  இருக்கும் சில அரிய புகைப்படங்கள்:
👇 👇 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக