தலைப்பு

சனி, 22 ஆகஸ்ட், 2020

ஜாம்நகர் மன்னர் திக்விஜய் சிங்கிற்காக போர்களத்திற்கே சென்ற பாபா!


இறைவன் சத்ய சாயிக்கு தேச பேதம் ஏதும் இல்லை என்ற போதிலும் போர் என்று வரின் தர்மத்தின் பக்கமே அவர் நிற்பார். உலகில் ஆயிரம் தேசம் இருக்கலாம் ஆனால் இறைவன் சத்ய சாயிக்கு எங்கு தர்மம் இன்னமும் உயிரோடு இருக்கிறதோ அங்கேயே அவர் தேசம் இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது... 

பாபா கூறுகிறார். நாம் ஓவ்வொருக்கும் அன்னையர் ஐவர். வியப்பாக உள்ளதா? அவர்கள் யார்யார். அவர்கள்தான் (தேஹமாதா, கோமாதா,  பூ மாதா, தேச மாதா ,  வேதமாதா..) ஈன்ற தாய், ஆவினம், நிலமடந்தை, தாய்நாடு, வேத அன்னை ஆகும். இதில் தாய்நாடு பற்றி பாபா மிக உயர்வாகக் கூறுவதாவது.. "நமது தாய்நாடு நமக்கு பாதுகாப்பு, அன்பு, உரிமை , சேவை புரிய வாய்ப்பு இவற்றை அளித்து, நம்மை முழுமையாக மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கிறது." இவ்வாறு தேச பக்தியை உயர்வாகக் கூறிய பாபா தாமே அதற்கு உதாரணமாக செயல்பட்டார் என்ற வியப்பான செய்தியை நீங்கள் அறிந்ததுண்டா? எண்ணம், சொல், செயல் மூன்றையும் ஒருங்கிணைக்கும் மும்மூர்த்தி ஸ்வரூபமான பாபா,  எவ்வாறு நம் நாட்டையும் , வீரர்களையும் அண்டை நாட்டு போர் விமான தாக்கதலிருந்து காப்பாற்றினார் என்ற அற்புத செய்தியை இனி காண்போமா?


1965 ம் ஆண்டு மூண்ட இந்திய பாகிஸ்தான் போர்:

காஷ்மீரை ஆக்கிரமிக்க நினைத்த பாகிஸ்தான், நமது நாட்டின்மீது 1965ம் ஆண்டு போர் தொடுத்தது. அதன் ஒரு பகுதியாக , குஜராத் மாநிலத்தில் உள்ள ஜம் நகரின் மீது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியது.அதன் தாக்கம் மக்களை அச்சுறுத்தியது.


அவ்வமயம் அங்கு வசித்துவந்தனர் ஜம் நகர் சமஸ்தானத்தின் முன்னாள்  மன்னர் திக்விஜய சிங் அவர்களும் அவரது துணைவியாரும். பாபாவின் பரம பக்தர்கள் ஆன அவர்கள் பாபாவிடம் சென்று, நிலைமையைக் கூறி தங்களையும் மக்களையும் காப்பாற்றும்படி வேண்டினர்.


அபய ஹஸ்தத்துடன் அங்கு பாபா தோன்றிய விந்தை:

அவர்களுக்கு ஆறுதல் கூறிய பாபா தாம் இருக்க அஞ்ச வேண்டாம் என்று கூறினார். இந்த அபயச் செய்தியைக் கேள்விப்பட்ட  நமது விமானப் படையினரின் நம்பிக்கை வலுப்பட்டது. அபயச் செய்தி மட்டுமல்ல,  பாபாவின் அபயக்கரமும் ஜம்நகர் வரை நீண்டது. விமானப்படை  வீரர்களிடையே அவர் அங்கங்கு தோன்றி அஞ்சேல் என அபயஹஸ்தம் காட்டி அருள் புரிந்தார் இங்கு உங்களை ஆசீர்வாதிக்க வந்துள்ளேன் என்ற பாபாவின் அமுதக் குரலையும் அவர்களால்  கேட்க முடிந்தது.


மேலும் அவர் ஒரு விமானப்படை  அதிகாரியின் மனைவி முன் தோன்றி ஆசீர்வதித்த அதே நேரத்தில் அவரது கணவர் யுத்த களத்தில் பாபாவால் காப்பாற்றப் பட்டார். பாகிஸ்தான் விமானம் வீசிய குண்டு, அந்த அதிகாரியின் தலையை நோக்கி அதிவேகமாக பறந்து வந்தது . கடைசி நேரத்தில் திசைமாறி  100 கஜங்கள் தள்ளி விழுந்து வெடித்துச் சிதறியது. அதிகாரியும்  உயிர் தப்பினார். இதுபோன்றே பாகிஸ்தான் விமானங்கள் வீசிய பலகுண்டுகள் குறி தவறி , அவர்கள் எல்லையிலே விழுந்து வெடித்தன.

S.S.B.என்ற இலச்சினை பாபாவின் புது விளக்கம்:



அபயக்கர தோற்றம் அளித்த பாபா பிறகு நேர் முகமாகவே ஜம்நகர் வருகை தந்தார். அங்கு குழுமிய ஜவான்களுக்கு அருளாசி வழங்கிய பின், அவர்களது சீருடையில் இருந்த இலச்சினையில் S .S.B . என்ற சொற்களுக்கு என்ன பொருள் என அவர்களைக் கேட்டார். அவர்கள் அது Sainik School Boys என பொருள்படுவதாகக் கூறினர். பாபா கூறினார். " அது Sathya Sai Baba என்பதையும் குறிக்கும் என்று.


ஓம் ஸ்ரீ சாய் பக்த பராதீனாய நமஹ:

தமது சொல்லாலும் , செயலாலும் யாருக்கும் கட்டுப்படாத பாபா ஒரு சுய ஆதீனர். ஆனால் பக்தர்களின் மனம் உருகிய பிரார்த்தனைக்கு கட்டுப்பட்டு "பக்த பராதீனர்" ஆகிவிடுவதை பல சமயம் நாம் பார்த்திருக்கிறோம்.  சிதிலமடைந்த சோம்நாத் சிவன் கோயிலை புனருத்தாரணம் செய்த காலஞ்சென்ற மன்னர் திக் விஜய் சிங் அவர்களின்  இதய நிறைவுக்காகவும், ராஜமாதா- மஹாராணி அவர்களின் பிரார்த்தனையை செவிமடுத்தும், பாபா சோமநாத் சென்றார். அங்கு அவர் மன்னரின் நினைவாகக் கட்டப்பட்ட கவின்மிகு நுழைவாயில் மண்டபத்தை , திக்விஜய் சிங் த்வார், என்ற பெயர் சூட்டி திறந்து வைத்தார்.

ஸ்ரீ சத்ய சாய் திறந்து வைத்த சோம்நாத் கோவிலின் 'திக்விஜய் த்வார்' நுழைவாயில் 

பக்தர்களின் பிரார்தனைக் குரல்கள் எங்கு ஒலிக்கின்றதோ, அங்கு பகவான் பாபா "பங்காரு" என அழைத்தபடி விரைந்து வருகிறார். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்ற வள்ளுவர் வாக்கின் விளக்கமன்றோ பாபா. பாபாவின் புகழ் அண்டத்தைவிட பெரியது. மலையைவிட பிரம்மாண்டமானது.. ஈசனாகிய பாபா  அன்பெனும் பிடியில் அகப்படும்  மலையன்றோ?

ஆதாரம்: Sri Sathya Sai Digvijayam (1926-1985)
தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

பாரதம் ஒரு புண்ணிய பூமி.. அதற்கான ஒரே காரணம் அது மூன்று சாயி அவதாரங்களை சுமந்திருப்பதே ! 
இந்தியா எனும் இந்த தீப கர்ப்பம் பிரசவித்த ஆன்மீகம்.. அந்த ஆன்மீகத்தை பிரசவித்த இறைவன் சத்ய சாயி என எந்த தேசத்திற்கும் இல்லாத சிறப்பு இந்த தேசத்திற்கே.. இந்திய தேசத்திற்கே..
நமக்கு இப்போதைய அவசரத் தேவை ..
இரண்டே இரண்டு..
ஒன்று தேசப் பற்று..
இன்னொன்று இறைவன் சத்ய சாயி மீதான தெய்வப் பற்றும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக