தலைப்பு

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

மகான்கள் செய்யாத மகிமைகளா..? அவர்களுக்கு இல்லாத சக்தியா.. ? இதில் உங்கள் சத்ய சாயி மட்டும் எவ்வாறு தனித்துவப்படுகிறார்?


அவசியக் கேள்வி. இதற்கான பதில் மகான்களை தாழ்த்தி இறைவனை உயர்த்தும் தவறான புரிதலில் மடைமாற்றம் செய்யாமல் உணர வேண்டும்.

மகான்கள் நிறைய மகிமைகள் புரிந்திருக்கின்றனர். அவர்களுக்கு அளப்பரிய சக்தி இருப்பது உண்மை.
இதில் எங்கிருந்து சத்ய சாயி வேறுபடுகிறார் என்பது உங்கள் கேள்வி.

மகான்களையும் அம்ச அவதாரம் என்பர்.
ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக பிறப்பது.
தவம் இயற்றி மகான்களாவது..
அதாவது தான் இறைவனின் ஒரு பகுதி என உணர்வது.

யோகி.. சித்தர்.. முனிவர்.. ஞானிகள்..  இந்த பிரிவினருக்கான ஒரு பொது அடைமொழியே மகான்.
ஒவ்வொருவரும் வெவ்வேறு வழியில் ஒரே வகையான அனுபூதி அடைவது.
அந்தந்த வழி வந்தவர்களை அந்தந்த உப பெயர்கள் வைத்து அழைப்பர்.
இவர்களை சுவாமிகள் எனவும் அழைப்பர்.
கள் என்பது மரியாதைக்கான சிறப்பு விகுதி.


மகான்கள் தங்களை கடவுள் என்று சொல்லிக் கொண்டதே இல்லை எனப் பார்த்தோம். காரணம் அதுவும் கர்ம கணக்கில் சேர்ந்துவிடும்.
மகான்களுக்கும் கர்மா உண்டு. ஆனால் மனிதரைப் போல் அதை நினைத்து அவர்கள் அலட்டிக் கொள்வதோ.. சங்கடம் அடைவதோ இல்லை. காரணம் அவர்கள் உடலைக் கடந்த நிலை எனும் அனுபூதி அடைந்தவர்கள்.
தங்களின் செய்கை எதுவுமே இல்லை என்ற பேருணர்வில் அவர்கள் இறைவனின் கருவிகளாக செயல்படுபவர்கள்.
ஆகவே அவர்கள் தங்களை கடவுள் எனச் சொல்லிக் கொண்டதில்லை.

இறைவனே ராமனாக.. கண்ணனாக.. ஷிர்டி சாயியாக.. சத்ய சாயியாக.. பிரேம சாயியாக அவதரித்திருப்பதும்..
மகான்கள் மண்ணுலகில் வந்திருப்பதும் ஒன்றல்ல..


யானை வரும் பின்னே
மணி ஓசை வரும் முன்னே என்பது போல்
இறைவன் அவதரிப்பதற்கு முன்னதாக மகான்கள் மண்ணில் தோன்றி அவனின் சத்திய சாட்சியாக இருப்பார்கள்.
அவனின் இருப்பை.. வரவை உறுதி செய்வார்கள்.

இன்றைய மகான்கள் .. நாளைய மகான்களாகிய இன்றைய மனிதர்களுக்கான உதாரண புருஷர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது ஆற்றலுக்கு வருவோம்..
மகான்களுக்கு தீர்க்க தரிசனம் உண்டு...
கூடு விட்டும் கூடு பாய்ந்திருக்கிறார்கள்.
இவை எல்லாம் கடும் தவ நிலையில் அவர்கள் வருடங்கள் பல கடந்து பெற்ற அஷ்ட மா ஸித்திகள்.

இரு வகையாகப் பிரிக்கலாம்..
பெறப்படும் நபர்..
பெறும் பொருள்.
இதில் பெறப்படும் நபர் மகான்..
பெறும் பொருள் இறைவன்.
அந்த பெறும் பொருளே பரம் பொருள்.

இறைவனின் சக்தியால் தான் மகான்கள் செயல்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால் அந்த ஒட்டு மொத்த சக்தியும் அவர்கள் அல்ல..


ஒட்டு மொத்த சூரியன் இறைவன் எனில் சூரிய கதிர்கள் மகான்கள்.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால்...
ஒரு ஆரஞ்சு பழத்தில் ஒரு சுளையை மட்டும் எடுத்து இது தான் முழு ஆரஞ்சு என்று சொன்னால் அது உண்மை இல்லை அல்லவா..
அதைப்போலவே தான்..
மகான்கள் வேறு.. இறைவன் வேறு..
மகான்கள் இறைவனின் ஒரு சிறு பகுதி..

சரி.. இப்போது இறைவன் சத்ய சாயியிடம் வருவோம்..
கர்ப்பப்பையே நீக்கிய பெண்மணிக்கு மகப்பேறு அளிப்பது..
இறந்தவரை உயிர்ப்பிப்பது..
ஒருவரை அப்படியே மறைய வைத்து கடல் தாண்டி அவரின் இருப்பிடத்திற்கு அனுப்புவது...
ஒருவரின் ஆயுளை நீட்டித்து அருள்வது..
ஒருவரின் கர்மாவை மாற்றி அமைப்பது..

இதை எல்லாம் விதிகளுக்கும் அப்பாற்பட்ட செயல் என்று அழைப்போம்..
இவை எல்லாம் இறைவன் சத்ய சாயி அன்றாடம் நிகழ்த்தி வருபவை ...

மகான்கள் குழந்தைகளாக பிறக்கும் போது பரம சாந்தமாக இருந்தார்கள்.. சிறு வயது முதலே தியானத்தில் லயித்திருந்தார்கள்.. எந்தக் குழந்தை பிறக்கையிலும் பிரம்மத்தில் தான் லயித்திருக்கிறது... மனம் என்ற கர்ம பதிவுகள் சேரும் போது பிரம்மம் எனும் இயற்கை இயல்பு மாறுகிறது..
ஒவ்வொரு மகானுக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஞானமும்.. அதற்கான பாதையும் .. அதை அடையும் வழிமுறையும் உதிக்கிறது.

ஆனால் இறைவனுக்கு அப்படி அல்ல..
சத்ய சாயி இறை அவதாரம் ஜனிப்பதற்கு முன்பே வீட்டில் இருந்த இசைக் கருவிகள் தம்மைத் தாமே வாசித்துக் கொண்டன ...
அவதரித்த உடன் பாம்பு பஞ்சணையில் புரண்டு தன் பாத வணக்கத்தை தெரிவித்தது..
இப்படி இறைவனின் அவதாரம் நிகழ்கையிலும் .. அதற்கு முன்னும் இயற்கையே அந்த வைபவத்தை கொண்டாடுகிறது.
எப்படி கிருஷ்ணருக்கு ஆதிசேஷன் குடைபிடித்து கடல் வழிவிட்டது போல்..
இயற்கை அதிசயங்கள் நடக்கும்.
இறைவன் சத்ய சாயி அவதார ஜனனத்திலும் நிகழ்ந்தன..
நீல ஒளியை வயிற்றில் தாங்கியே கரு கொண்டால்  அன்னை ஈஸ்வரம்மா...


அந்த நீல ஒளியை Blue Consciousness என்பர் அக நோக்கு வழிபாடு உடையவர்கள்.
அந்த நீல பிரபஞ்ச மய சக்தியே இறைவன் கிருஷ்ணர். இந்த நீல ஒளியை ஆழமான தியானத்தில் அனுபவிக்கலாம்.

பொதுவாக ஒருவனுக்கு நல்ல காலம் நிகழும் வரை அவன் மகான்கள் பக்கம் வருவதே இல்லை..
அப்படி நல்ல காலம் இல்லாதவர்களை அவர்களும் அழைப்பதில்லை..
கர்மாவை மாற்றி அமைக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை...
ஒருவனை உற்று பார்த்த மாத்திரத்தில் அவன் கர்மாவை உணரும் மகான்கள் அது தீரும் காலத்தையும் உணர்வார்கள்.
அப்படி தீரும் காலம் நெருங்கி வரும் சமயத்தில் தான் அவரவர் பூர்வ புண்ணிய கணக்குப்படி ஒவ்வொரு மகான்களிடம் செல்வர்.
ஆகவே பொதுவாக மகான்கள் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட வட்டத்தையே பக்தராக வைத்திருந்தனர்.
காரணம் இவர்கள் அனைவரும் பூர்வ தொடர்பு உடையவர்கள்.

இறைவன் சத்ய சாயி போல் உலகளாவிய பக்தர்களை ஈர்த்து.. அருகழைத்து கர்மாவை மாற்றி அமைத்து அதையும் சர்வ சகஜமாய் ஆற்றி பக்தராய் மாற்றி அமைத்துக் கொண்ட எந்த மகான்களும் இல்லை...


தவத்தால் ஏற்படும் ஸித்தி சக்தி உபயோகிக்க உபயோகிக்க செலவாகும் மகான்களுக்கு..
இறைவனுக்கு அப்படி இல்லை...

வசிஷ்ட மகரிஷி பெரியவரா? இல்லை இறைவன் கிருஷ்ணர் பெரியவரா? எனக் கேட்பது போல் உங்களின் கேள்வி.
பதில் உங்களுக்கே புரிந்திருக்கும்.

ஒருவகையில் மகான்களும்.. மகான்களின் வாழ்க்கை சரிதமும்.. அவர்களின் உபதேசமும் நம்மை ஆன்ம சாதனையில் நல்வழிநடத்தி இறைவன் சத்ய சாயியை நோக்கி சரணாகதி அடைய வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..

தாய்.. மகள்.. மனைவி ... பேத்தி.. சகோதரி எல்லோருமே பெண்கள் தான் என்ற போதும் வேறுபாடு இருக்கிறதல்லவா ...
அதைப் போல் தான் இறைவனுக்கும்.. மகான்களுக்குமான வேறுபாடு..

அந்த பெண்களின் வரிசையில் தாயே நமக்கு பிரதானமான இல்லத்து தெய்வம்..
மற்றவர்கள் அன்புக்குரியவர்கள் ஆயினும் தாயை நாம் உணரும் விதம் வேறு..
அதைப்போல் மகான்கள் போற்றுதலுக்குரியவர்கள் ஆயினும் நாம் இறைவன் சத்ய சாயியை உணரும் விதம் வேறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக