தலைப்பு

புதன், 12 ஆகஸ்ட், 2020

இரு சாயியும் ஏக சாயியே என உணர்த்திய அநேக சாயி பால லீலை!


தான் ஷிர்டி சாயியே என பல லீலைகள் வழி இறைவன் சத்ய சாயி உணர்த்திய பால விநோதங்களின் ஆச்சர்யப் பதிவு இதோ...

இரு சாயியும் ஒன்றே.. பெயர் கூட வேறல்ல .. ஒரே பெயர்.
ஷிர்டியில் இறைவனை பக்தர்கள் அறிந்து கொண்டதால் ஷிர்டி சாயி பாபா ...
இதிகாச பாரம்பரியம் இல்லாத இடத்தில் இறைவன் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதே இல்லை..
ஷிர்டியும் அப்படிப்பட்ட ஓர் தலமே ...

புட்டபர்த்தியே காந்தாரி சபித்த கோகுலம் ..
எந்த சாபத்திற்கும் சாப விமோச்சனம் உண்டு என்பது போல் ..
மீண்டும் இறைவன் கண்ணனே வந்து அவதரிக்க.. பாம்பு புற்றாக மண்டிக் கிடந்த கோகுலம் பசுவின் ஊற்றாக வளரும் என்கிறாள் ..

நேரில் பார்த்தது போல் நீ கூறுகிறாயே என சிலர் நினைக்கலாம்.
இறைவன் சத்ய சாயி பற்றி பழம் பெரும் பக்தர்கள் பதிவு செய்த புத்தகங்களில் உங்களின் எல்லா கேள்விகளுக்கும் விளக்கம் இருக்கின்றன..
(ஆதாரம் - ஸ்வாமி -- ஆசிரியர் ரா.கணபதி)

ஷிர்டி சாயி ராமரின் தன்மையோடு .. ஆத்ம சாதனையின் முக்கியத்துவத்தையும்.. மத நல்லிணக்கத்தையும் .. ஆரம்பித்து வைத்தார். இறைவன் சத்ய சாயி கண்ணனின் தன்மையோடு உலகம் முழுதும் பரவலாக்கி சேவையை ஸ்தாபனம் செய்தார்.
இறைவன் பிரேம சாயி ஆத்ம சாதனைக்கு முக்கியத்துவம் அளித்து ஏக உணர்வை உயிர்ப்பிப்பார்.



அந்தக் காலத்திலேயே அறியா ஜனங்களுக்கு இறைவன் சத்ய சாயி தான் ஷிர்டி சாயியா  என பல சந்தேகங்கள் இருக்கவே செய்தன ..
ஆனால் அவர்கள் எப்போது சாயி அனுபவம் பெற்றாலும் அந்த அனுபவத்திலேயே ஆழம் சென்று திடமாக .. விடாப்பிடியாக பக்தி உணர்வில் திளைத்தபடி இருந்தார்கள்.
இருவரும் ஒருவரே என உணர்ந்தார்கள் . ஆனால் இந்த காலத்திலோ தனக்கு நேர்ந்த சாயி அனுபவத்தையே சந்தேகப்படுவது ஒரு வகை ...
தனக்கு நேர்ந்தவற்றை மட்டும் ஒப்புக் கொண்டு .. மற்றவர்களின் சாயி அனுபவத்தை சந்தேகப்படுவது இன்னொரு வகை என மனிதர் பிறழ்ந்து போயிருக்கிறார்கள்.

இந்தத் தொடரும் அதை நிவாரணப்படுத்தி சிறு அணில் சேவை இறைவன் சத்யசாயிக்கு செய்யலாம். அவர் சங்கல்பமின்றி இவ்வுலகில் நிகழ்வது ஏதுமில்லை.

அகில இந்திய சாயி சமாஜத்தின் திருக்கூட்டத்தில் முதன்முறை வந்தபோதும் இறைவன் சத்ய சாயி "நீங்கள் என்னை முதன்முறை தரிசிப்பதாக நினைக்கிறீர்கள்.. ஆனால் நான் இங்கே தான் வெகுகாலமாக இருந்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

பலருக்கு ஷிர்டி சாயியும் தானும் ஒரு சேர இருக்கும் லாக்கட்டுகள்.. ரக்ஷைகள் என பக்தர்களுக்கு வழங்குவது முதல்..
மந்திரில் வைக்கப்பட்டிருக்கும் வெள்ளியிலான இறைவன் ஷிர்டி சாயி திருவுருவச் சிலைக்கு விஜயதசமி மற்றும் சிவராத்திரி வைபவங்களில் விபூதி மழை பொழிய வைத்திருக்கிறார் இறைவன் சத்ய சாயி.


ஏன் தன் சிலைக்கே அவர் விபூதி அபிசேகம் செய்ய வேண்டும் ?
இரு சாயியும் ஒருவரே என உணர்த்தவே இறைவன் சத்ய சாயி அவ்வாறு நிகழ்த்தியது.

காலி குடம் கடவுள் அதில் கைவிட்ட உடன் விபூதி மழை.
அந்தக் குடம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்..
அந்த நேரத்தில் அதைக் கண்டு புல்லரித்துப் போனவர்களை விட அந்த காலிக் குடம் தான் அதிகம் புல்லரித்திருக்க வேண்டும்.
ஆம் .. காலியாய் உள்ளே எண்ணமற்று இருந்தால் மட்டுமே .. நம்மை கருவியாக்கி நிறைய அற்புதங்களை செய்விப்பார் இறைவன் சத்ய சாயி என்பதற்கான இன்னொரு சூட்சும அர்த்தமும் அதில் மறைந்திருக்கிறது.

இறைவனின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒன்றல்ல.. ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன..

"என்னை சந்தித்து ஏதேனும் கேட்பதாக இருந்தால்.. கீழே கிழவரைப் பார்த்து கேட்டுக் கொள்ளுங்கள்" என இறைவன் சத்யசாயி பலரிடம் சொன்னதுண்டு.
இருவரும் ஒன்றே என்பதை உணர்த்தவே .. இதைப் புரிந்தவர்கள் பூரணமாகிறார்கள்.
அடுத்த அவதாரமான இறைவன் பிரேம சாயியை வரவேற்பதற்கான தோரணமாகிறார்கள்.


புட்டபர்த்தி பிரசாந்தி நிலைய உள் மந்திரில் பிரம்மாண்ட இருசாயியின் திருவுருவம் காட்சி அளிப்பது அனைவரும் கண்டு வழிபடுவதே..
அதில் இறைவன் ஷிர்டி சாயி வலது கையை இடது கைப் பற்றி இருப்பது போலவும்.. தலை மேல் உள்ள தலைப்பாகை முடிச்சு இடதிலிருந்து வலதுக்கு மாற்றப்பட்டு வரைந்திருப்பதும் அனைவரும் கண்டிருக்கிறோம்..
இதை வரையும் முன் ஓவியருக்கு இரு சாயியின் படங்களை தானே சிருஷ்டி செய்து தந்து அதை வரைய வைத்திருக்கிறார் இறைவன் சத்ய சாயி.

தன்னை விட தன் செய்கையை எவர் அறிந்திருப்பர் எனும் வகையில் இறைவன் ஷிர்டி சாயி பற்றிய குறிப்புகளும் .. அடையாளமும் இறைவன் சத்யசாயி மட்டுமே நன்கு தெரிந்திருப்பவை.
காரணம் அவரே இவர்.

ஷிர்டி கிராமத்தில் அந்த கிராமத்தினரே அறியாத பல இடங்களை.. பல தடங்களை .. பல தடயங்களை இறைவன் சத்ய சாயி தெரியப்படுத்தி... இங்கிருந்து செல்லும் பக்தர்களைப் பார்க்க வைத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

ஷிர்டி சாயி மூர்த்தயே நமஹ
யச: காய ஷிர்டி வாஸினே நமஹ
பர்த்ரி ஷேத்ர நிவாஸினே நமஹ
என ஷிர்டி சாயியை உணர்த்தும் படி தன் அஷ்டோத்திரத்தில் சேர்க்க சங்கல்பத்திருக்கிறார் இறைவன் சத்ய சாயி.

நீங்கள் தான் ஷிர்டி சாயி என்றால் என்ன நிரூபணம் ? என இறைவன் சத்யசாயியின் இளமைக் காலத்திலேயே இது பலர் கேட்டு கேட்டு சலித்துப் போன கேள்விகள். இறைவனின் தந்தை பெத்த வெங்கப்ப ராஜூ மட்டுமல்ல..
பலர் கேட்டனர்.


அவர் கைகளில் அள்ளிப்போட்ட பூக்கள் ஸாயி பாபா என தெலுங்கு மொழியில் தரையில் நின்று பேசியதைப் போலவே..

இந்த சந்தேகவாதிகளுக்கும்
இறைவன் சத்யசாயி தன் இரண்டு கைகளையும் திறந்து காண்பித்திருக்கிறார்..
அதில் ஒரு கையில் ஷிர்டி சாயி உருவம்‌..
இன்னொரு கையில் சத்ய சாயி உருவம்.
இப்படி இறைவன் தன் உள்ளங்கையில் நிகழ்த்திய உற்சவம் இவை.
28 வருடங்கள் கடந்து ஸ்ரீ கஸ்தூரியிடம் இந்த பகவத் லீலையை நேரில் கண்டவர் வியந்து விவரித்து தன் நினைவலைகளில்  நிறைந்திருக்கிறார்.

(ஆதாரம் : சத்தியம் சிவம் சுந்தரம் -- பாகம் 1. ஆசிரியர் கஸ்தூரி)

இந்த அற்புத கஸ்தூரியே பிரேம சாயிக்கு அன்னையாகும் பெரும் பேறு பெற்றிருப்பது ...

எப்படி சிங்கத் தலையோடு ராமன் அவதரிக்கவில்லையோ...
எப்படி வில்லேந்தி .. மர உரி தரித்து.. பாலம் அமைத்து என கண்ணன் தன் அவதாரத்தை அமைத்துக் கொள்ளவில்லையோ ..
எப்படி மயிற்பீலி புல்லாங்குழலோடு ஷிர்டி சாயி வாழாமல்.. சாதாரண உடையோடு தன் அவதாரத்தை அமைத்தாரோ..
அப்படியே இறைவன் சத்யசாயியும் தன் தோற்றத்தை.. அவதார பிரபாவத்தை தானே அமைத்துக் கொண்டார்.
அப்படித் தான் இறைவன் பிரேம சாயியும் அமைத்துக் கொள்வார்.

சத்ய சாயி உடையோடு .. சுருள் கேசம் கொண்டு தான் பிரேம சாயி என இறைவன் பிரேம சாயி ஒருபோதும் காட்டிக் கொண்டு வாழப்போவதில்லை..
ஒவ்வொரு அவதாரமும் தனித்துவமானவை.. அதே சமயத்தில் இறைத்தன்மையில் ஒன்றானவை என்பதை பக்தர்கள் புரிந்துணர வேண்டும்.

பேராசைக்காரர்களும்...  பயந்தாங்கொல்லிகளும்.. சுயநலவாதிகளுமே போலியானவர்களிடம் போய் சிக்குவார்கள்.
அப்படி பொய் பரப்பி வருபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

இரு சாயி மட்டுமல்ல மூன்று சாயியுமே ஒன்றுதான்.
கோடரியோடு இருந்ததால் தான் பரசு ராமர்..
வில்லோடு இருந்ததால் தான் கோதண்ட ராமர்..
அவதார அடையாளங்களை அவதாரங்களே தேர்ந்தெடுக்கின்றன..
பக்தர்கள் அல்ல..

சத்தியம் வளரும்

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக