தலைப்பு

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

தற்காலத்தில் பரவலாக ஆன்லைனில் கூட பஜனை செய்கின்றனர் பல சாயி பக்தர்கள்.. ஆனால் அதில் பலர் தியானத்திற்கு முக்கியத்துவமோ.. இல்லை அதில் ஆர்வமோ காட்டுவதில்லையே ஏன்?


அதற்கு காரணம் தியானத்தின் அருமை தெரியவில்லை என்பதால் தான்.. மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதால் தான்.. தனக்கு எல்லாம் தியானம் நிகழாது என்கிற தமோ குணத்தால் தான்...  தியானம் செய்ய நேரமே இல்லை என்கிற வறட்டு பிடிவாதத்தினால் தான்...
தவறான நம்பிக்கையில் பிடிமானம் மிக்கவர்கள் அதிலேயே உழன்று.. அதுவே சரி என்று மனதை சமாதானப்படுத்துவதால் தான்...

 இப்போது பஜனைக்கு வருவோம்..
முடியப்போகிற கலியில் நாமஸ்மரணை என்பது மிகவும் எளிமையானது இறைவன் சத்யசாயியை அடைய...ஆனால் அது யம .. நியம.. பிரத்யாகாரம் .. தாரணை போன்ற படிகளில் அதுவும் ஒரு படியே..
பல ஆண்டுகளாக அன்றாடம் பஜனை செய்கிறோம் ஆனால் மனம் அடங்கவில்லை ... கோபம் தணியவில்லை.. ஆசை ஒடுங்கவில்லை.. அகந்தை அழியவில்லை என்றால் பஜனையில் தவறல்ல..
சரியான விழிப்புணர்வு .. சரியான அர்ப்பணிப்பு உணர்வு பஜனை எனும் அந்த சத்விஷயத்தில் இல்லை என்று பொருள்.
அந்த விழிப்புணர்வை .. அந்த அர்ப்பணிப்பு உணர்வை தியானத்தால் மட்டுமே அடைய முடியும்..
ஆகவே தான் நவவித கோட்பாடுகளில் இறைவன் சத்ய சாயி முதலில் பஜனையை குறிப்பிடாமல்.. தியானத்தை குறிப்பிட்டார்..
"அன்றாடம் தியானம் ஜபம் " என ‌..
 உலகாயத கோரிக்கையோடு கூடிய எந்த ஆன்மீக சாதனையுமே அதன் இலக்கை அடையாது..


மகான் தியாகராஜ சுவாமிகளும் ஆத்ம சாதனையின் அதிர்வலைகளோடு தான் மனமுருகப் பாடினார்.. அதுவே அழியாப் பாடல்களாக கர்நாடக சங்கீதத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கிறது..
காரணம் அவர் பல கோடி ராம நாம ஜபம் புரிந்து அந்த தியான அதிர்வலைகளில் திளைத்திருந்தார்..
ஜபமும் நம்மை தியானத்தை நோக்கியே நகர்த்தும்...
பஜனையும் நம்மை அப்படியே நகர்த்தும்..
அப்படி நகர்த்தவில்லை எனில் நாம் சரிவர அதனை செய்யவில்லை என அர்த்தம்..
மனோ நாசம் அதாவது மனம் அழிந்து போக வேண்டும்..
அப்போதே ஆன்மா பிரகாசிக்கும்...
தினமும் காயத்ரி மந்திர ஜபம் செய்கிறேன் ஆனால் மனம் ஒடுங்கவில்லை எனில் அதன் மந்திர பிரயோகங்களை சரியாக உச்சரிக்க வில்லை என அர்த்தம்.

ஆன்மீக வழியில் நடப்பவர்கள் அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நலம்.


தியானம் மிகவும் சக்தி வாய்ந்தது...
தேன் தித்திக்கும் என்பதை பருகிய பிறகே புரிந்து கொள்ள முடியும்...  அல்லது பருகிப் பார்த்தவர்கள் சொல்வதை வைத்து அதைப் பருக வேண்டும் என ஆர்வம் எழலாம்..
தியானமோ தேன் கூட அல்ல.. அமிர்தமே!
அனுபவிப்பவர்களைக் கேட்டு பார்க்க வேண்டும்...

ஆக.. தியானம் மிகவும் அவசியம்.
இறைவன் சத்ய சாயியின் தியான வாஹினி அதற்கு கீதையாக பாதை அமைக்கும்..
இதர ஆன்மீக செயல்கள் எல்லாம் தியானத்திற்கே திருப்புகின்றன..
தியானமே அவைகளுக்கான இலக்கு.
ஏதாவதொரு பிறவியில் தியானத்தின் காலடியில் விழுந்தே ஆக வேண்டும்..
ஏன் அதற்காக கால தாமதம் செய்ய வேண்டும்?
இந்த நொடியே தியானத்தை நோக்கி நெருங்க ஆரம்பிப்போம்!

தீய குணங்கள் எல்லாம் தியான ஜோதியிலே நன்கு எரிந்து சாந்த குணங்களாக பிரகாசிக்கும்...


ஒரே நேரத்தில் ஆன்லைனில் வீட்டில் இருந்தபடி அவரவர் தியானம் செய்யலாம்..
அந்த தியானம் இன்னும் ஆழமாகும்...
சிலர் அப்படி செய்தும் வருகிறார்கள்.
அனைவரும் இதனை கடைப்பிடிக்கலாம்..
சுவாமி கூறிய முதல் அறநெறி கோட்பாட்டை கடைபிடிக்க முடியாமல் மற்றவற்றை முயற்சி செய்வது .. முதல் வகுப்பில் தேர்ச்சி பெறாமல்.. இரண்டாம் வகுப்பில் சென்று பாடம் புரியாமல் முழித்துக் கொண்டிருப்பதைப் போல்தான்...

ஆன்லைன் தியானத்தோடு கூட அது ஆன்மா லைன் ஆகிவிடுகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக