தலைப்பு

சனி, 29 ஆகஸ்ட், 2020

சுந்தரம்மா என்ற பக்தைக்கு சத்ய சாயி பாபா எழுதிய கடிதம்!


பால் நினந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து, பர்த்தீசன் அந்தக் காலத்தில் தம் பக்தர்களுக்கு எழுதிய கடிதங்கள் சொற் காவியங்கள் எனலாம். வாய்மை என்ற எழுதுகோலில் , ப்ரேமை என்ற மையிட்டு, வெண்மை என்ற மனத் தாளில்  தூய்மை என்ற சொற்களைத் தூவி, பக்தர்களின் நன்மை என்கிற பரிவோடு எழுதப்பட்டவை அவை பக்தர்களுக்கு மட்டுமல்ல , இந்த  உலகத்தில் உள்ள அத்துணை மாந்தர்களுக்கும் நல் வழிகாட்டும் ஒப்பற்ற அறநூலாக அவற்றைக் கருதலாம். 

பழம் பெரும் பக்தையான சுந்தரம்மா பகவானின் ஆத்மார்த்த பக்தை ஆவார். 1943 ம் ஆண்டு பாபாவிடம்  வந்த அவர், ஸ்வாமியின் அன்பையும் கருணையையும் பல வழிகளில் அடையப் பெற்றார். அவருக்கு பாபா எழுதிய இந்தக் கடிதம் ஆயிரம் அன்னையரின் அன்பை நமக்கு வெளிப்படுத்துகிறது.இதனை அனுதினமும் பாராயணம் செய்வது போல் படித்து வந்தால் , உங்கள் மனத்தில் நம்பிக்கையும் பக்தியும் வேறூன்றி தழைக்கும்.

பகவான் பாபா அந்த கடிதத்தில் எழுதியிருப்பது:சுந்தரம்மா! உனக்கு எனது பரிபூர்ண ஆசிகள். உன் சாஷ்டாங்க நமஸ்காரத்தை ஸ்விகரிக்கிறேன். சாயிராம் உன்னைக் காப்பாற்றும் போது , நீ ஏன் மனத்துயரோடு இருக்க வேண்டும்? சத்யசாயி உன் இதயத்தில் இருக்கும் போது அதில் எவ்வாறு தீய சக்திகள் நுழைய முடியும்? பத்ரா( வேட்டை) சாயியாக நான் இருக்கும் போது உன் உள்ளத்தில் துர்சக்திகள் நுழைய இயலுமா? சாயி தன் பக்தர்களை எப்போதும் கைவிடுவதில்லை. ஒருபோதும் அத்தகைய செயல் நிகழ்வதில்லை. பக்தர்களின் இதயமே சாயியின் இருப்பிடம். அவர்களின் ஆனந்தமே எனது ஆகாரம். பக்தர்களின்  சந்தோஷமே எனது நிம்மதி. பக்தர்களின் நலனைக் காத்து , நிம்மதி அளிப்பதே எனது லட்சியம். எனது இந்த பிரகடனம் கோயில்மணி போல எப்போதும் ஒலித்துக் கொண்டு இருக்கட்டும். ஸ்வாமி தம் பக்தர்களை விட்டு ஒருபோதும் விலகி இருக்க மாட்டார். 

பக்தர்கள் பால் என்றால் நான் அதன் வெண்மை ஆவேன். பாலிலிருந்து அதன் வெண்மையை யாராலும் பிரிக்க முடியாதல்லவா? இதுவே பாபாவுக்கும் பக்தர்களுக்கும் இடையிலான பிரிக்க இயலாத பந்தம். 

நீ உன் மனப்பிரமைகளையும் பயத்தையும் விட்டுவிடு. நான் ஒருவரையும் தண்டிக்க அவதாரம் எடுக்கவில்லை. நான் இங்கு வந்தருப்பது தவறு செய்பவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவே. நீ தண்டனை என்று நினைப்பது உன்னை நேர்வழிப்படுத்த நான் கொடுக்கும் பாதுகாப்பே. 

சாயியின் நாமத்தை நினைத்தாலே கவலைகள் பறந்துவிடும். ரத்தினக் கற்கள் போன்று ஜொலிக்கும் சாயி நாமம் , தீய சக்திகளை விரட்டி அடிக்கும். உன் அருகில் கூட அவை நெருங்காது. ஸ்வாமியும் அவற்றை நெருங்க விடமாட்டேன். உன் மனப் பிராந்தியால் பிறக்கும் அவ்வாறான தீய சிந்தனைகள் இனி வேண்டாம். 

ஆனந்த ஸ்வரூபிமான  இந்த பால சாயியை சதா ஸ்மரித்துக் கொண்டிரு. அவர் உன்னருகேதான் இருக்கிறார் என்ற சிந்தனை ஒன்றே போதும்.உன் அனைத்து சந்தோஷமும்  நலமும்  இந்த ஒரு எண்ணத்தில்தான் அடங்கி இருக்கிறது. இங்கு உன் தந்தையும்  சகோதரியும் நலமாக உள்ளனர்.இனி கலங்காமல் மகிழ்வோடு இரு. குழந்தைகளுக்கு எனது ஆசிகள்.    
- பாபா.

🌻 பாபாவின் கண் அசைவே ஒரு காவியம். புன்னகையே பூபாளம். "பங்காரு"என்ற பாசச் சொல்லே பாப விமோசனம். சதா சர்வ காலமும் பக்த ரட்சணம் செய்யும் பரமாத்மா பாபாவின் பொன்னடி பணிவோம். ஏற்றம் பெறுவோம். 🙏 

ஆதாரம்: Sri Sathya Sai Madhura Smrithi by C. Sucharitha
மொழிமாற்றம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக