தலைப்பு

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

வாழ்க்கையில் நிறைய சோதனை வருகிறதே? ஏன் சத்ய சாயி இப்படி சோதிக்கிறார்?


கேள்வி: வாழ்க்கையில் நிறைய சோதனை வருகிறதே? ஏன் சத்ய சாயி இப்படி சோதிக்கிறார்? தாங்க முடியவில்லை..
அவரை வழிபடாமல் இருந்தால் சோதனை வராதோ எனத் தோன்றுகிறதே...

பதில்: உங்களின் மன வருத்தம் புரிகிறது.
சற்று நிதானமாக ஆழ்ந்து யோசித்தால் சோதனையே பக்தியை இன்னும் பலப்படுத்துவது புரியும்.

உங்களின் மகனோ.. மகளோ சோதனைத் தேர்வுக்கு தயாராகவில்லை எனில் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பீர்களா இல்லையா?
நான் பரீட்சைக்கே போக மாட்டேன் என அவர்கள் சொன்னால்..
உங்களில் எத்தனைப் பெற்றோர்கள் "சரிடா கன்னுகுட்டி.. அம்மா மடியிலேயே படுத்துக் கோ.. பரீட்சைக்கும் போக வேண்டாம்..
பாஸ் ஆக வேண்டாம்..
வேலைக்கும் போக வேண்டாம்" எனச் சொல்வீர்கள்?
சிலர் கோபப்பட்டு திட்டுவீர்கள்..
சிலர் பரீட்சைக்கு அடித்து விரட்டுவீர்களா இல்லையா?
உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நியாயம்..
உங்களுக்கு ஒரு நியாயமா?

இறைவன் சத்ய சாயி நம் அம்மா என்பதை நாம் அவ்வப்போது மறந்துவிடுகிறோம்.
சாதாரண இந்த உலகாயத கல்விக்கே இத்தனை சோதனைத் தேர்வுகள் என்றால். ‌ஆன்மீகக் கல்விக்கு??


பிரகலாதனுக்கு சுவாமி வைக்காத சோதனைகளா நமக்கு அவர் வைத்து விட்டார்?
ஆழ்ந்து யோசியுங்கள்‌..

முன் ஜென்ம கர்மாக்களின் படியே அவரவர் வாழ்க்கை..
அதில் இன்பம் துன்பம் மாறி மாறி வருகிறது..
இதையும் ஆழ்ந்து பார்த்தால்..
இன்பம் துன்பம் என நாமே பெயரை வைத்துக் கொள்கிறோம்..
அவை வெறும் சம்பவங்களே!
இங்கே உலகமும்.. மனிதனின் வாழ்க்கையும் சுவாமி சங்கல்பப்படியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது..

அந்த திருச்சங்கல்பத்தில் நம் கர்மாவும் அதன் பங்கை ஆற்ற இறைவன் சத்ய சாயியே அனுமதிக்கிறார்.

உங்கள் வீட்டில் ஒரு வேலையாளை சேர்க்க வேண்டுமானால் கூட அவன் நல்லவனா இல்லை திருடனா என சோதிப்பீர்கள்.

ஒரு ஆணி அடித்து சுவாமி படம் மாட்ட வேண்டும் என்றாலும் கூட அதை அடித்துவிட்டு ஆட்டிப் பார்ப்போமா இல்லையா?
அது உறுதியாக இல்லை என்றால் சுவாமி படம் கீழே விழுந்து கண்ணாடி உடையுமே என்ற யோசனை வருமா? வராதா?

சாதாரண ஆணிக்கே இந்த சோதனை என்றால்..
நாம் இறைவன் சத்ய சாயி பக்தர்கள்..
நமக்கு வருகின்ற சோதனைகளும் நம்மை பக்தியில் மேலும் உறுதி செய்யத்தான்...

சோதனை என்ற பெயரில் இறைவன் சத்ய சாயி நிகழ்த்துவதெல்லாம் நம்மை நாமே ஆன்மீக வாழ்வில் சுய பரிசோதனை செய்து கொள்ளத் தான்...

சோதனையை சோதனையாகவே பார்க்க வேண்டியதில்லை ..
சோதனைகள் சில தடங்கலாக வரலாம்..
சோதனை சில உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த உபாதையாக வரலாம்...அவ்வளவே ..


ஆன்மீகத்தின் மிக அடிப்படை அம்சமே "ஏற்றுக் கொள்ளுவது" தான்

அதற்கு உதாரணம் எத்தனையோ மகான்களின் வாழ்க்கை.
எல்லா மகான்களும்.. ஒரு காலத்தில் பக்தர்களாக இருந்து மகானானவர்கள் என்பதை உணர வேண்டும்.

"சரி இதுவும் சுவாமி சங்கல்பம்" என ஏற்றுக் கொள்ள ... ஏற்றுக் கொள்ள ..
நாம் சந்திக்கும் சோதனைகளை அணுகும் முறை மாறிவிடும்..
அதை உணரும் முறை வேறானதாகிவிடும்.

மனமே எல்லாவிதமான சம்பவங்களிலும் குறுக்கே நின்று அதை சுலபமாகச் செல்லவிடாமல் தடுத்துக் கொண்டு மறியல் செய்கிறது..
எண்ணங்களின் போக்குவரத்து நெரிசலில் இதயம் எப்படி இறைவனைத் தேடி காலநேரத்தோடு செல்ல முடியும்?

ஒரு உண்மையை மனசாட்சி தொட்டு கேட்டுப் பாருங்கள்...
இங்கே பலர் ஷிர்டி சாயியை ஆரம்பத்தில் வழிபட்டு பிறகு இரு சாயியும் ஒருவரே என உணர்ந்து இறைவன் சத்ய சாயி பக்தரானவர்கள்‌.
சிலர் நேரடியாக சத்யசாயி
பக்தரானவர்கள்..
பக்தி வருவதற்கான இடைப்பட்ட காலத்தில் நீங்கள் சத்ய சாயியை சோதித்துப் பார்த்தீர்களா? இல்லையா?

இந்த முட்டு வலி தீர்ந்து போனால்..
நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன்..
என் மகன் +2 தேர்ச்சி மட்டும் அடைந்து விட்டால் நான் உன்னை வழிபட ஆரம்பிக்கிறேன் என...
உங்களின் உருளைக் கிழங்கு வாயுப்பிடிப்புக்கும்..
ஒரு மக்கு பிளாஸ்திரியையும் பந்தயமாக வைத்து இறைவனுக்கே சோதனை வைத்ததுண்டா? இல்லையா?

நீங்கள் அவர் மேல் வைத்த எல்லாவிதமான சோதனையிலும் வெற்றிப் பெற்று அவர் தன்னை இறைவன் என உங்களுக்கு உணர்த்திய பின்னரே அவர் பக்தர்களாக நீங்கள் மாறினீர்களா ? இல்லையா?


நீங்கள் இறைவனை சோதித்துப் பார்க்கலாம்‌..
இறைவன் உங்களை சோதித்துப் பார்க்கக் கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயம் ?

தராசு தட்டைக் கையில் ஏந்தி நிற்கும் நீதி தேவதையே இன்னொரு கையால் அய்யோ இது என்ன கலிகாலம் என வாயில் அடித்துக் கொள்வாளா? மாட்டாளா?

இறைவன் சத்ய சாயி திருவுருவப் படத்தின் திருவுளச் சீட்டு போட்டு உத்தரவு கேட்பது என்பது அவரின் சங்கல்பமே !
ஆனால் சில அதி சிறந்த அதிசயப் பிறவிகள் தங்களுக்கு சாதகமாக பதில் வரவேண்டும் என ஒரு முறை சீட்டு போட்டுப் பார்க்க வேண்டியதை ..
விழும் அந்த சீட்டுக்கே முதுகு வலிக்கும் வரை போட்டுக் கொண்டே போவர்.
இது சரியா?
இது இறைவனுக்கே அளிக்கப்படும் சோதனை இல்லையா?

உலகளாவிய இறைவன் சத்ய சாயி பக்தர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம்  ஏதேனும் ஒரு சாயி அனுபவமாவது நிச்சயம் நிகழ்ந்திருக்கும்...
அவர்களும் ஏதோ ஒரு சிறு சோதனையாவது நிகழ்த்தி.. இறைவன் அதை சாதித்து பின் தானே இறைவன் என உணர்த்தி இருப்பார்..

ஒருமுறை சத்யசாயி தான் இறைவன் என உணர்த்தி விட்டால் அதில் நிலை பெற்று.. அதில் வலுப்பெற்று .. அவர் மேல் கொண்ட பக்தியில் ஆழம் காண வேண்டுமே தவிர
மீண்டும் மீண்டும் அவரையே சந்தேகப்படுவது.. அவரையே சோதித்துப் பார்ப்பது..
எவ்வளவு அறிவீனம்..
இதில் இன்னும் தீய கர்மா குறையவில்லை என அர்த்தமாகிறதே!

கர்ம மூட்டைக் குறைப்பற்கே இந்த மனித வாழ்வே தவிர மேலும் மூட்டைகளைக் கூட்டுவதற்கு அல்ல..

இறைவன் சத்ய சாயி எந்தவிதமான சேவை அளித்தாலும்.. நாம் அதை உடனே செய்திட வேண்டும்...
அதை புறம் தள்ளவோ... தள்ளிப் போடவோ கூடவே கூடாது..

 மகன் சாகக் கிடக்கிறான் என்றால்..
"சுவாமி அவனை உடனே காப்பாற்று" என வேண்டுவீர்களா இல்லை
"சுவாமி இது செப்டம்பர்.. உன் பிறந்த நாள் பரிசாக அவனை நவம்பரில் காப்பாற்றினால் போதும் சுவாமி... அவசரமில்லை..." என வேண்டிக் கொள்வீர்களா?


வேண்டுதல் மட்டும் உடனே நிறைவேற வேண்டும்.. ஆனால் சுவாமி சேவையை மட்டும் தள்ளிப்போடுவது தர்மமா? தார்மீகமா?

சுவாமி யார் மூலமும் நம்மை தொடர்பு கொள்ளலாம்.. விழிப்போடிருக்க வேண்டும்..
சுவாமி வழங்கும் செய்திகள் Sathya Sai Speaks சிற்கு முரணாக இருந்தால்‌..
இது சுவாமி இல்லை யாரோ ஏமாற்றுப் பேர்வழி என உணர வேண்டும்..

காரணம் நம் சுவாமி கோவில் கோவிலாக அலை.. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தெய்வத்தை பூஜை செய்து அவர்களை வேரோடு பெயர்த்து எடு .. ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு மந்திரம் சொல்.. இப்படி எதுவும் சொன்னதே இல்லை..

காரணம் எல்லா தெய்வங்களும் அவருள்ளே தான் சங்கமம்..
தனியாக நாம் அவர்களை வழிபட வேண்டிய அவசியமே இல்லை.

எத்தனையோ மகிமைகளையும் .. லீலைகளையும்.. பேரன்பையும் சிலருக்கு விடாத மழை போல் கொட்டிய நம் சுவாமியை விட்டு அவரின்  சமாதி நாடகத்திற்குப் பிறகு அவர்கள் சுவாமியைப் பிரிந்து சென்றிருப்பது.. மனக் கசப்பு அடைந்திருப்பது.. இதில் சிலர் புத்தகப் பதிவுகளும் செய்திருக்கிறார்கள்.. அதைக் கேள்விப்படுவதும் .. இப்படி நிகழ்வது அவரவர் கர்ம வினையே தவிர வேறொன்றுமில்லை !

இந்த சமாதி நாடகம் கூட இறைவன் சத்ய சாயி நமக்கு வைத்த சோதனை தானே அன்றி வேறொன்றுமில்லை..
அவருக்கு என்ன ஒரே ஒரு உடம்பு மட்டுமா?

அவரின் அடுத்த அவதார விஜயத்திலும் சோதனைகள் தொடரும்..
அவரவர் பக்தி அவரவர்களிடமே பரிசோதிக்க விடப்படும்..

இந்தக் கிருமி ஆண்டே இறைவன் சத்ய சாயி உலகத்திற்கே விடுத்த சோதனை தான்..

பக்தியே உண்மையான எதிர்ப்பு சக்தி..
அதன் முன் சோதனைகள் மண்டியிட வேண்டுமே அன்றி..
சோதனைகளின் முன் பக்தி மண்டி இடவே கூடாது!

காற்றோ .. புயலோ.. சிறு புல் தான் அசையும்.. மரங்கள் பிளக்கும் ...
சிகரங்களுக்கு அதனால் என்ன இப்போது..?


பக்திச் சிகரங்களாக இறைவன் சத்ய சாயி பக்தர்கள் அனைவரும் திகழ வேண்டும்..
திகழ்வோம்!
நம் இறைவன் நம்மோடு இருக்க..
நமக்குள் இருக்க.. நம்மை இயக்க...
நம்மால் நிச்சயம் முடியும்!

சாயி ராம் 🙏

 பக்தியுடன்
வைரபாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக