தலைப்பு

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

சாயி லீலாம்ருதம்: சுவாமியை ஏமாற்ற முடியுமா?


பழம் பெரும் பக்தர், திரு.பால பட்டாபி செட்டியார் கூறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி... 

சுவாமியின் பழம்பெரும் பக்தர்களில் குறிப்பிடத்தகுந்தவர், உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த, காலம் சென்ற திரு .பட்டாபி செட்டியார் அவர்கள். ஒரு சமயம் பட்டாபியும் அவரது மைத்துனர் குப்தாவும்  1946 களில் புட்டபர்த்தி சென்று, ஒரு வாரம் தங்கி இருந்தனர். ஒருநாள் சுவாமி, பட்டாபியிடம், "பாத மந்திரம் கேட்டிற்கு வர்ணம் பூசவேண்டும். நீ புக்க பட்டணம் சென்று சில்வர் பெயிண்ட் வாங்கி வா.", என்றார். பட்டாபியும், "சரி, சுவாமி!", எனக் கூறிவிட்டு, புக்க பட்டணம் சென்று, சில்வர் பெயிண்ட் வாங்கி வந்து, சுவாமியின் அறையில் வைத்துவிட்டு, பகவத்கீதை படித்துக் கொண்டிருந்தார்.

சுவாமியுடன் பால பட்டாபி - 1947

அறைக்குள் வந்த சுவாமி, "பட்டாபி! பெயின்ட் வாங்கி வந்து விட்டாய். நல்லது.", என்றார். மேலும், "நீ என்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?",எனக் கேட்டார். பட்டாபி, "சுவாமி! நான் பகவத் கீதை படித்துக் கொண்டு உள்ளேன்.", என்றார். சுவாமி பட்டாபியிடம், "பகவத் கீதையில் எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன உனக்கு தெரியுமா?", என்றார். "சுவாமி! 700 சுலோகங்கள் உள்ளன.", என்றார். "அதில் மூன்று மிக முக்கிய சுலோகங்கள் உள்ளன, பட்டாபி. அதைப்பற்றி நான் உனக்கு அப்புறம் விளக்கமாகக் கூறுகிறேன்."  என்று கூறிய சுவாமி, குப்தாவை பார்த்து, "குப்தா! நான்  சுப்பம்மா வீட்டிற்கு சென்று வருகிறேன். அதற்குள் நீ இந்த பெயிண்டை கேட்டிற்கு பூசி விடு. ", என்றார். குப்தாவும் பணிவுடன், "சரி, ஸ்வாமி!",என்றார்.

பாத மந்திரம் - 1946

சுவாமி புறப்பட்டுச் சென்றதும், குப்தா படுத்து உறங்கிவிட்டார்.  
அதைப்பார்த்த பட்டாபி, தானே பெயிண்ட்டை பூசி விடலாம் என நினைத்து, பெயிண்ட்டை கேட்டருகே எடுத்து சென்றார். அப்போதுதான் பட்டாபி க்கு பெயிண்ட் வாங்கிவந்த தான், பிரஷ் வாங்கி வரவில்லை என்பது தெரிந்தது. தன்னைத்தானே நொந்து கொண்டார். அப்போது ஒருவர் பட்டாபியிடம் வந்து, ஒரு  பிரஷ்ஷை தந்து, "சுவாமி இதை உன்னிடம் தரச் சொன்னார்.", என கூறிவிட்டு சென்றார். அதை வைத்து முக்கால்வாசி வர்ணம் பூசும் வேலையை பட்டாபி முடித்துவிட்டார். அப்போது சுவாமி வந்துவிட்டார். சுவாமி வந்துவிட்டார் என பக்தர்களின் கூறும்  குரல் கேட்டது.

சடாரென எழுந்த குப்தா, பட்டாபியிடம் வந்து, டக்கென பட்டாபியின் கையிலிருந்த பெயிண்ட் மற்றும் பிரஷ்ஷை வாங்கி, தான் பெயிண்ட் அடிப்பது போல பாவலா செய்யலானார். உள்ளே வந்த சுவாமி, "குப்தா, பெயிண்ட் அடித்து விட்டாயா?" எனக்கேட்டார். "அடித்துவிட்டேன், சுவாமி!", என்றார் குப்தா. "நீ தானடித்தாயா, குப்தா?" என்றார் சுவாமி. "ஆம், சுவாமி!", என்றார். "குப்தா, இந்த பிரஷ்ஷிலா அடித்தாய்? ", என்றார் சுவாமி. "ஆம்.", என்ற குப்தா, கையில் இருந்த பிரஷ்ஷை பார்த்து திடுக்கிட்டு முழித்தார். ஏனென்றால் அவர் கையில் இருந்த பிரஷ், ஈச்சங் குச்சியாக மாறி இருந்தது. சுவாமி,"குப்தா, நீ என்ன குள்ள நரியா? உலகத்தில் நடக்கும் அனைத்தும் நான் அறிவேன்.", என்றார். குப்தா சுவாமியின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

🌻  புராணங்கள், சுவாமியை, 'ஆயிரம் சீர்ஷ புருஷர்! ' என்று வர்ணிக்கின்றன. அதாவது, பகவான் ஆயிரக்கணக்கான தனது கண்களால் நம்மையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார், என்பது இதன் பொருளாகும். நமது பகவான், ஸ்ரீ சத்ய சாயி, நம்மை எப்பொழுதும், கனிவுடனும், வெகுமதியுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார். 🌻

ஜெய் சாய்ராம்!

ஆதாரம்: Nectarine Leelas of Bhagawan Sri Sathya Sai Baba - R. Balapattabi 
தொகுத்தளித்தவர்: S. Ramesh, Ex-Convenor, Sai Samithi, Salem.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக