தலைப்பு

புதன், 19 ஆகஸ்ட், 2020

எளிய பக்தர் உணர்ந்து கொண்ட ஒரே சாயி!


ஏழ்மையான ஒரு எளிய வடநாட்டு பக்தருக்கு வேறு வடிவத்தில் தோன்றி தானே ஷிர்டி சாயி என உணர்த்திய இறைவன் சத்யசாயியின் லீலா மகிமைப் பதிவு இதோ.. 

இறைவன் சத்யசாயி பல பக்தர்களுக்கு பல்வேறு நிலைகளில் தாமே ஷிர்டி சாயி என்பதை உணர்த்தி இருக்கிறார்.
இறைவன் ஷிர்டி சாயியை நேரில் தரிசித்து வழிபட்டு வந்த நேரடி பக்தர்கள் முதன்முறை இறைவன் சத்யசாயியை தரிசிக்கையில் இருவரும் ஒருவரா என அவர்களுக்கு எழுந்த அடிப்படை சந்தேகத்தை நிவர்த்தி செய்து.. மேலும் அவர்களுக்கு ஷிர்டி சாயியோடு நிகழ்ந்த பிரத்யேக பேச்சுவார்த்தையை நினைவுப்படுத்தி .. சுட்டிக் காட்டி தெளிவு தந்திருக்கிறார்.
சில அனுபவங்கள் அவர்களுக்கும் ஷிர்டி சாயிக்கு மட்டுமே தெரிந்திருந்த மிக மிக தனிப்பட்ட அறிவுரைகள் .. இவை எல்லாம் சகஜமாக அவர்களின் நினைவுக்கு கொண்டு வந்து... நானே நீங்கள் வழிபடும் ஷிர்டி சாயி என்றிருக்கிறார்.
அவர்கள் சந்தேகப் பிராணிகளோ.. அகந்தை மிக்கவர்களோ அல்லர்.
உணர்ந்த பின் இறைவன் சத்ய சாயியின் காலடியில் உருகிப் போயினர்.

பொதுவாக இறை அடியார்கள் எழுதிய பாடல்கள் அவர்களின் இறை அனுபவ வெளிப்பாடே.. அவை இறை மகிமைக்கான அத்தாட்சிகள்.
அதை படிப்பதாலோ .. பயில்வதாலோ அதனை... அந்த அனுபவத்தை அறிந்து கொள்ளலாம் .. நம்பலாம்.. கொண்டாடலாம் ... ஓதலாம் .. வழிபட்டு வரலாம் ... ஆனால் நமக்கே அந்த அனுபவம் நேர வேண்டுமானால் நாமும் அந்த இறை அடியாளர்களைப் போல் திடமான பக்தியும் .. நெஞ்சில் நேர்மையும்.. பேரன்பும்... ஆத்ம சாதனையும் புரிந்தால் அதே அனுபவம் நமக்கும் நிகழும்‌. இல்லையேல் வெறும் நம்பிக்கையாகவே தங்கிவிடும்.
நம்பிக்கைகள் எல்லாம்  அனுபவம் தர வேண்டிய அவசியமில்லை. ஆனால் எல்லா அனுபவமும் நம்பிக்கையை நிச்சயம் ஆழப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
காரணம் கயிறை பாம்பாகவும்.. பாம்பை கயிறாகவும் கொள்ளும் நம்பிக்கை .. நம்பிக்கையே அல்ல மயக்கம்.
அதை தீண்டிய பிறகு கிடைக்கும் அனுபவமே அதை உறுதிபடுத்தும்.

அனுபவம் பெறாத வரை ஒருவர் கொண்ட நம்பிக்கை ஈ.சி.ஜி போல் ஏறியும் இறங்கியும் பென்டுலமாய் அசைந்து அசைந்து அல்லல் படும்.

அவனுக்கே சாயி அனுபவம் வந்துவிட்டது.. எனக்கு ஏன் வரவில்லை.. அவனோடு எல்லாம் சுவாமி உறவாடுகிறார் என்னோடு ஏன் இல்லை என்ற முள் வினாவுக்கான விடை தவறான நபர்களிடம் .. தவறான கருத்திடம் கொள்ளும் நம்பிக்கையே .. கயிறு -- பாம்பின் கதை போலத்தான்.

வெற்றுக் காகிதத்தில் தான் இறைவன் சத்ய சாயி ஏதாவது எழுத முன்வருவார்.
ஏற்கனவே கிறுக்கப்பட்டு கசங்கிப்போன காகிதத்தில் கடவுள் கருணையே கூர்ந்து எழுதுவதற்கு அங்கு எங்கே இருக்கிறது இடம்?

அதைப்போல அந்த காலத்தில் புட்டபர்த்தி சென்று விட்டு அவரே ஷிர்டி சாயி என உரைத்ததை எண்ணிக் கொண்டு தன் இருப்பிடமான புதுடெல்லி வந்த ஒரு எளிய ஏழை பக்தர் உண்மையில் இவர் ஷிர்டி சாயி தானா? எனும் சந்தேகத்தை எவ்வாறு இறைவன் சத்ய சாயி போக்கினார் என்பதன் அனுபவத்தை ஸ்ரீ கஸ்தூரியிடம் அவரே சொல்லி இருப்பதில் இப்போது பயணிப்போம்.

அந்த எளிய பக்தர். சங்கீதம் சொல்லிக் கொடுத்து.. வயலின் பாடம் நடத்தி வருபவர். அந்த சந்தேகத்தோடு சைக்கிளை அழுத்திக் கொண்டு சாலை ஓரத்தில் பயணிக்கிறார்.
அவர் ஷிர்டி சாயியை பல காலமாக பூஜை செய்து வந்தவர்.. புட்டபர்த்தி சென்று வந்த பிறகு இறைவன் சத்ய சாயி ரூபத்தில் கவரப்பட்டு சுவாமியை வழிபட ஆரம்பிக்கிறார். இவர் தான் அவர் என்று பலர் சொல்கிறார்களே.. உண்மையா ? எனும் சந்தேகம் அவரின் மனதை மிதிக்க...
அவரோ மிதிவண்டியை மிதித்து சென்று கொண்டிருக்கிறார்...


அப்போது ஒரு வயதான பெரியவர் அவரைத் தொடர்ந்து வேறொரு சைக்கிளில் விரைகிறார்.
அவரின் சைக்கிள் சக்கரம் சுதர்ஷன சக்கரமாய் சுற்றுகிறது..
இன்றைய வேலை எல்லாம் முடிந்துவிட்டதா? எனும் கேள்வி காற்றைக் கிழிக்க .. அது அந்த எளிய பக்தரின் காதில் நுழைந்தது..
திரும்பிப் பார்க்கிறார் கனமான மனிதர் அவர்.. முகத்தில் இளநகையும் ... அன்பும் .. வெளிச்சமும் பளிச்சிட்டது ..
கச்சேரிக்கு சென்று வருவதால் ஏதேனும் ஒரு கச்சேரியில் தன்னை அவர் பார்த்திருக்கலாம் என அவருக்கு தோன்றியது..

முடிந்துவிட்டது.. வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன்...
என பதில் உரைக்கிறார். அந்த புதிய எளிய சத்யசாயி பக்தர்.
"அப்படியா சரி என்னோடு அந்த கட்டடத்தின் பக்கம் வருகிறீர்களா? உங்களை அதிக நேரம் காக்க வைக்க மாட்டேன்" என்கிறார் அந்த சைக்கிள் பெரியவர்.
இவரும் சரி ஏதாவது கச்சேரி புக் செய்யத்தான் வந்திருக்கிறார் என எண்ணிக் கொண்டார்.
இருவரும் அந்த கட்டிடத்தில் வந்து இறங்கினர்.
அதில் ஓர் இடிந்த சமாதி இருந்தது. அதன் ஓரத்தில் சைக்கிளை சாற்றுகின்றனர்.
நிழலடியில் அவரை தன்னோடு அமரச் சொல்கிறார் அந்த சைக்கிள் பெரியவர்.
அமர்ந்தபிறகு அவரின் மனதை மிதித்த தர்ம சங்கடங்களை எல்லாம் ஒன்று விடாமல் பெரியவர் கூற வாயடைத்துப் போகிறார் இந்த வயலின் பக்தர்.
"பாபா ஊழ்வலியால் உனக்கு கிடைத்த பகவானே .. ஏன் சந்தேகப்படுகிறாய்.. அவரே தான் ஷிர்டி பாபா .." எனக் கூறியபடி
தன் சிவந்த உள்ளங்கைகளை நீட்டுகிறார்..
அதில் ஷிர்டி சாயி உருவமும் இன்னொரு கையில் சத்யசாயி உருவமும் கலராய் விரிந்திருக்கிறது.


அன்றிலிருந்து.. அந்த அனுபவத்திலிருந்து... அவரின் அன்றாட தியானத்தில் கூட அந்த அற்புதக் காட்சியே கண்முன் தோன்றி அவரின் ஆத்ம சாதனையை வலுப்படுத்தி வந்திருக்கிறது.

(ஆதாரம் - சத்யம் சிவம் சுந்தரம் - பாகம் 1 .. ஸ்ரீ கஸ்தூரி)

அனுபவமே பூரணமாய் சந்தேகத்தைப் போக்கவில்லது..
அதற்கான பாதையை எழுத்துப் பதிவோ .. காணொளிப் பதிவோ உதவலாம் ‌..
இறைவன் சத்யசாயியை உணரத் துடிப்பவர்க்கு ஒரு சாயி பஜன் பாடலோ.. அதில் ஏதேனும் ஒரு பக்தி வரி கூட போதுமானது.

ஆன்மீகம் என்பது பதவிகள் கடந்தது.. பெருமைகள் கடந்தது ...
இதயம் பரிபக்குவம் அடைய அது பேதங்களைக் கடக்கிறது.. மனதை ஆன்மாவில் ஒடுக்கி ஜோதிமிகு பிறவா பெரு வாழ்வை அடைகிறது..

சத்தியம் வளரும்

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக