தலைப்பு

சனி, 8 ஆகஸ்ட், 2020

ஸ்ரீ சத்யசாயி யுக பதிவுகளில் 'பகவான்' ஸ்ரீ சத்ய சாயியை ஏன் நீங்கள் 'இறைவன்' ஸ்ரீ சத்ய சாயி என அழைக்க வேண்டும்? இரண்டும் ஒன்றுதானே!

பகவான் என்றால் God ஆங்கிலத்தில்.. Lord என்றும் அழைப்பர்.

ஆனால் ஆங்கிலேயர் தங்கள் அழுக்கு அரசாட்சியின் மடமையால் தங்களை தாங்களே Lord என பட்டம்  வைத்து அழைத்துக் கொண்டனர்... 

ஆக Lord Krishna என்பதற்கு பதில் God Krishna என்று தற்காலத்தில் அழைப்பதே பொருத்தமாக இருக்கும்...‌அதுவே நாம் இறைவன் கிருஷ்ணருக்கு அளிக்கிற மரியாதையும் பேரன்பும்...!

பகவான் என்கிற வடமொழி சொல்லுக்கு பொருள் யாதெனில் "சுயதிருப்தியாளர்" என்பதே... அதாவது ஏற்கனவே திருப்தியோடு இருப்பவர்... "நிறைவானவர்" என்று பொருள்! பகவான் என்ற வார்த்தை வேதத்தில் இல்லை.. ஆரம்ப கால உபநிடத்திலும் இல்லை.. 

பக் என்ற வார்த்தை மட்டும் முண்டக உபநிடத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் அது கடவுளை குறிப்பதற்காக அல்ல... 

பிற்காலத்தில் பகவத் கீதையிலிருந்து .. குறிப்பாக பாகவதம் என்ற சொல்லின் மறைபொருளே பகவான் என்ற வேர் சொல் தான்.. பிறகு பாலி இலக்கியத்தில் புத்தரை குறிப்பிட பகவான் புத்தா என அழைத்தனர் .‌.

தமிழில் இறைவன், கடவுள் என்பவை அக நோக்கு வழிபாடு உடையவர்கள் குறிப்பிடுவது.

வழிபாட்டில் அக நோக்கு புறநோக்கை விட உயர்வானது.. அதிக ஆற்றலுடையது!

வெளிப்படையாக பூஜை .. மற்றும் இதர சடங்குகள் செய்வது புறநோக்கு.

தியானம் .. யோகம்.. அஜபம் ... இவை அகநோக்கு வழிபாடு..

புறநோக்கு ஆரம்ப நிலை

அக நோக்கு இறுதி நிலை.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் அகநோக்கு வழிபாட்டிற்கே இறுதியில் ஆன்ம சாதனையாக பயணித்தார்.

சுவாமி என்கிற வடமொழிச் சொல் இறைவனை குறிக்கும்... தமிழில் 'சாமி' என அழைப்பர்... ஆர் என்பது மரியாதை விகுதியாகையால் சாமி + ஆர் = சாமியார் (மாமன் + ஆர் = மாமனார் போல்) என்றானது... ஆனால் இந்த காலகட்டத்தில் சாமியார் என்கிற பெயர் மலிவாகி வீரியம் இழந்துவிட்டது!

பாபா தன் முகப்பு அட்டையிலும் பகவான் என்றே குறிப்பிட்டார்... அது 1940 கள்.. இப்போதைய காலகட்டம் வேறு! அப்போது பகவான் ரமணர், பகவான் யோகி ராம்சுரத்குமார் என்ற பெயர்கள் பெரிய அளவில் புகழடையவில்லை... பகவான் புத்தா என்ற பெயர் கூட மறைக்கப்பட்டது! அது டிஜிட்டல் ஊடக காலகட்டமும் இல்லை... ஏன் அப்போது பலரும், இப்போது சிலரும் ஸ்ரீ ஷிர்டி பாபாவையே பல மகான்களில் அவரும் ஒரு மகான் என நினைக்கிறார்கள்... 

இரண்டு பாபாவையும் நேரில் கூட தரிசிக்காத சிலர் ஷிர்டி பாபா தான் பாபா.. பர்த்தி பாபா பாபா இல்லை எனும் அறியாமையிலிருந்து இப்போது தான் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள்!

ஷிர்டி பாபா மாட்டு வண்டியில் பயணித்தார்... பர்த்தி பாபா காரில் பயணித்தார்.. நாளை பிரேம பாபா விமானத்தில் பயணிப்பார்... இதுவே கால மாற்றம்!

குறிப்பாக பாரத பண்பாடு எல்லா சாதுக்கள், சன்யாசிகள், ஆன்ம சாதகர்கள் எல்லோரையும் 'பகவான்' என்றே அழைக்கும்! காரணம் அவதாரம் எப்போதாவது தான் நிகழ்கிறது.. ஒரு மகானின் அக மலர்ச்சி அப்படி அல்ல...வடதேச இமாலய கிராமங்களுக்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும் அங்கே தெருவுக்கு தெரு பகவான்கள் இருப்பார்கள்... அகோரிகளை கூட பகவான் என்றே மக்கள் அழைக்கிறார்கள்... இது தகவல் தொழில்நுட்ப காலம்! யார் யார்? எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என யூடியூபிலேயே வந்துவிடுகிறது... அந்த காலகட்டம் போல் இல்லை! பகவான் ரமணர் சமாதி ஆனதே ஒருநாள் தாமதமாய் தான் தமிழ்நாடு கடந்து செய்தி பரவியது.. இப்போது Flash News'ல் வந்துவிடுகிறது... அப்படி சமாதி ஆன ரமணரும் பகவான்... தன்னோடு தான் ரமணர் ஐக்கியமானார் என பகிர்ந்த பாபாவும் பகவான் என்றால் எப்படி? 

ஸ்ரீ ஷிர்டி பாபாவை முதன்முதலில் அவதார புருஷர், இறைவன் என உலகிற்கு சொன்னதே பர்த்தி பாபா தான்! அதுவரை வெளி உலகம் அறியவில்லை... ஒரு சிலரே அறிந்தனர்.

 ஸ்ரீ கிருஷ்ணர் இறைவன் என ஒரு சில கிராமங்களே அறிந்திருந்தன என பர்த்தி பாபாவே விளக்கி இருக்கிறார்! 

எப்படி ஷிர்டி பாபா இறைவனே என பர்த்தி பாபா கோவில் அமைத்து வழிபாடுகளை நிகழ்த்த ஆணையிட்டாரோ... அப்படியே பிரேம பாபாவும் பர்த்தி பாபாவுக்கு புரிவார்! இதுவே அவதார மரபு... ஷிர்டி பாபா தனக்கல்ல கிருஷ்ணருக்கே கோவில் கட்டு என்றார்.. அதில் தான் இப்போது அவர் சமாதி இருக்கிறது! அது போலவே...! இதுவே அவதார மரபு...! பர்த்தி பாபா தன்னை சுவாமி என்றே பெரும்பாலும் அழைத்துக் கொண்டார்! "சுவாமிக்கு சால சந்தோஷம்!" என்பார்! 


இறை என்ற வேர்ச்சொல்லிலிருந்து இறைவன் என்ற வார்த்தை உதித்தது.

நீர் இறைப்பது ஓர் உதாரணம்.

இறைக்க இறைக்க நீர் கேணியில் சுரப்பது போல்.. 

உள்ளே இறைக்க இறைக்க இறைவன் சுரக்கிறான் என்ற அக நோக்கிலேயே 

குறிப்பிடப்படுகிறது.

உள்ளர்த்தம் இருப்பதால் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி என அழைக்கிறோம்.

திருக்குறளிலும் 1157 வது குறளில் இறை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உள்ளே இறை எனபது பொருள்.

பகவான் என்பது நிறைவானவர் எனும் ஒரு பொருள் மட்டுமே! ஆனால் இறைவன் என்பது நமக்குள்ளே அகப்பயணத்திற்கான பெயராக அமையும் தூயத்தமிழ் அது!


கடந்து உள்ளே பார் என்பதே கடவுள் என்ற சொல்லின் பொருள்.

கடவுள் ஸ்ரீ சத்ய சாயி என்பதும் மிக மிகப் பொருத்தமே!


ஓம் ஸ்ரீ சாயி அந்தர்யாமினே நமஹ 

என்பது கடவுள் தன்மையே...


பகவான் ஸ்ரீ சத்யசாயி என்றழைப்பதும் சரியே! ஆனால் மகான்களுக்கும் பகவான் என்ற அடைமொழியை அவரவர் பக்தர்கள் பயன்படுத்துவதால் ...

ஸ்ரீசத்ய சாயியையும் பகவான் என்று அழைப்பதில் .. இவரும் மகான் என்று சில பக்தர்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

மகான்கள் நதிகள்...

இறைவன் கடல்!

மகான்களால் கர்மாவினை மாற்றி அமைக்க முடியாது.. ஆனால் இறைவனால் இயலும்...! 

மகான்கள் கருவிகளே... இறைவனே அதை தாங்குகிற கை என்பதை உணர வேண்டும்! 


எந்த மகான்களும் தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டதே இல்லை...!

சொல்லமாட்டார்கள்.

அவர்கள் சத்தியத்தின் பாதையில் பயணிப்பவர்கள்.

ஸ்ரீகிருஷ்ணர்...ஸ்ரீஷிர்டிசாயி ..ஸ்ரீ சத்ய சாயியே தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டனர். காரணம் அவர்கள் இறைவனே..! இதனை மிக தீர்க்கமாய் ஸ்ரீ பிரேம சாயி இந்த உலகத்திற்கு வெட்டவெளிச்சமாக்குவார்! 

தவம் செய்து மகான்களாவதும்..

இறைவனே அவதாரம் எடுப்பதும் வேறு வேறு... இரண்டுமே ஒன்றல்ல... என்பதை நாம் உணர வேண்டும்! 

மகான்களையும் தற்காலத்தில் பகவான் என்று அழைத்து வருவதால் 

சற்று மாறுதலாக .. மிக அர்த்தமுள்ளதாக இறைவன் ஸ்ரீ சத்ய சாயி என அழைக்கிறோம்... காரணம் ஸ்ரீ சத்ய சாயி யுகம் முழுக்க முழுக்க உலகத்தமிழ் சாயி பக்தர்களுக்கானது! யுகத்தின் குறிக்கோள் பாபாவின் சத்தியத்தை கடைசி தமிழர் வரை எடுத்துச் செல்வதே!  புற சடங்கு வழிபாடு அல்ல குண மாற்றமே பாபா நம்மிடம் மிக முக்கியமாக விரும்புகிறார் என்பதை கொண்டு சேர்க்கவே!

 இறைவன் ஸ்ரீ சத்யசாயி என்பவர் மகானோ என்ற ஒருசில பக்தர்களின் குழப்பத்திலிருந்து மீட்க வேண்டும் என்ற ஒரு பணிவான நோக்கமும் தான்.. 

 வேறெதற்காகவுமல்ல... 🙏 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக