தலைப்பு

சனி, 8 ஆகஸ்ட், 2020

சத்ய சாயி சிவத்திடம் சரணம் அடைந்த சுகி சிவம்!


இறைவன் சத்யசாயியும் இறைவன் ஷிர்டி சாயியும் ஒன்றென உணரும் தருணம் அதுவே உயிர்கள் மனித வடிவெடுப்பதற்கான முழுமுதற் காரணம்... அதை உணர்ந்து பிரபல சொற்பொழிவாளர் 'சொல்வேந்தர்' சுகி சிவம் அவர்கள் இலங்கையில் ஆற்றிய அனுபவ உரையோடு அந்த பரம்பொருள் ஒன்றிணைவில் அவரின் இதயமும் மலர்ந்திருப்பது இறைவன் சத்ய சாயி சங்கல்பமே!

சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் பிரபலமான பட்டிமன்ற ஆன்மீகப் பேச்சாளர். இந்தியா மட்டுமல்ல உலகமெங்கும் சென்று பல தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடத்தியிருக்கிறார். இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் செய்து, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். பகவானின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டமும், கொழும்பு ஸ்ரீ சத்ய சாயிபாபா மத்திய நிலையத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவும் சேர்ந்து ஒரு பெருவிழாவாக 2015ம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்தோம். இந்த விழாவில் திரு. சுகிசிவம் அவர்கள் பிரதான பேச்சாளராக அழைப்பதாக, சாயி நிலையத்து தலைவர் என்ற முறையில் முடிவெடுத்து அழைத்தும் விட்டேன். ஏதோ பகவான் என் உள்மனதில் இட்ட கட்டளையாக நினைத்து எடுத்த முடிவு.

 2015ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை மூன்று நாட்கள் தொடர் சொற்பொழிவு. பேச்சு தலைப்பு "பகவத்கீதை". இலங்கைப் பத்திரிகைகளில் பிரச்சாரமும், செய்தியும் வந்துவிட்டது. அவரது பேச்சுக்கான ஏற்பாடும் நடந்தாகிவிட்டது. அத்தோடு எனக்கு சோதனையும் ஆரம்பித்துவிட்டது.


விழாவுக்கு முதல் நாள், விழா ஏற்பாட்டாளர்கள் பல சாயி அன்பர்கள், என்னிடம் தொடர்பு கொண்டு,இவரது சொற்பொழிவை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்கள். அத்துடன் எனது சாயி நிலைய செயற்குழு அங்கத்தவர்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அவர்கள் கூறிய காரணம், திரு. சுகிசிவம் அவர்கள் சிறந்த சொற்பொழிவாளர் தான். இந்து மதம் சம்பந்தப்பட்டவர் தான். ஆனால் நமது சுவாமிக்கு எதிரானவர். நமது சுவாமியைப் பற்றி தவறாக பல கூட்டங்களில் பேசியுமிருக்கிறார். இப்படி இவர் நமது நிலையத்தில் பேசினால் என்னாவது? என்றார்கள். எனக்கோ பதட்டம் ஏற்பட்டு விட்டது.

திரு. சுகிசிவம் அவர்கள் பகவத் கீதை பற்றி சிறப்பாக பேசக்கூடியவர். பல இடங்களில் பேசியிருக்கிறார். இந்த தலைப்பில் இவரது ஒலிப்பேழை தட்டுக்கள் பிரபலமாகியும் உள்ளது. ஆனால் இவர் சாயிபாபாவை பற்றிய தலைப்பில், எங்கும் பேசியது கிடையாது. இவர் பகவானுக்கு எதிரானவரா? சாயிபாபாவை பற்றி அறிந்தவரா? எப்படி தெரிந்து கொள்வது? யாரிடம் விசாரிப்பது? ஏதாவது இடருமுரடாக கருத்து தெரிவித்து விட்டால் என்ன செய்வது? ஒரே மனக்குழப்பம். முடிவெடுக்க நேரமும் காலமும் போதாது. இனி என்ன செய்ய முடியும்? என் கண்களை மூடிக்கொண்டு, பாபாவிடம் இந்த பிரச்சனையை விட்டு விட்டேன். உடனே அப்போது ஒரு தெளிவு பிறந்தது. அதுதான் சாயி அருள்!

 உடனே ஒரு பக்கபலமாக எனது பொருளாளர் திரு. தவக்குமார் அவர்களை அழைத்துக்கொண்டு, திரு. சுகி சிவம் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு புறப்பட்டேன். பொருளாளர் திரு. தவக்குமார் அவர்களின் உறவினர் வீட்டில் தான் அவர் தங்கியிருந்தார்.

திரு. சுகிசிவம் அவர்களிடம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரது சொற்பொழிவுக்காக சாயி பக்தர்கள் ஆவலாக இருப்பதாகவும், இலங்கைக்கு பல தடவைகள் தாங்கள் வந்திருந்தாலும், ஒரு சாயி ஸ்தாபனத்தில் தங்களது உரை நடைபெறுவது இதுதான் முதல் முறையாகும் என்றும், எங்களது குரு, தெய்வம் அனைத்தும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா தான், அவர் கிருஷ்ணனின் அவதாரம், எனவே கிருஷ்ணனின் பகவத் கீதையை தாங்கள் எங்களது ஸ்தாபனத்தில் நிகழ்த்துவது எங்களுக்கு பெரும் பாக்கியம், அதுவும் உங்களது பேச்சு மிகவும் விசேடமானது என்று.. தாஜா பண்ணிவிட்டு, "ஐயா! உங்களது பேச்சில் எங்களது மனதை புண்படுத்தாது இருந்தால் மிகவும் நல்லது. இங்கு வந்து இப்படி கூறுவதற்கு எங்களை மன்னிக்க வேண்டும்" என்று ஒரு தைரியத்தில் கூறி விட்டு வந்து விட்டோம்.

கொழும்பு ஸ்ரீ சத்ய சாயிபாபா மத்திய நிலையத்தின் தலைவர் எஸ்.என். உதய நாயகன் அவர்களுடன் சுகிசிவம். 

மறுநாள் மாலை விழா. திரு. சுகிசிவம் அவர்கள் மேடைக்கு வந்து அமர்ந்துகொண்டார். சாயி பஜனை நடந்துகொண்டிருந்தது. இவர் கைதட்டி பஜனையை ரசித்து விட்டு, தனது பேச்சை ஆரம்பிப்பதற்கு முன், தனது கண்களை மூடிக்கொண்டு, பகவானின் திருவுருவத்தை வணங்கி, பகவானின் பாதத்தை நமஸ்கரித்தார். எனக்கோ உடம்பு புல்லரித்து விட்டது. தனது சொற்பொழிவு ஆரம்பத்தில், "இங்கு பேசுவதில் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். பகவான் ஸ்ரீ சத்ய சாயி நாதரின் ஸ்தாபனங்களில், ஒழுக்கத்தை கண்டு வியந்திருக்கிறேன். இதனை வேறு எங்கும் காண முடியாது. இப்போதுகூட இங்கு என்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் போத்தலை கொடுத்தார்கள். ஆனால் அதன் மூடியையும் சுற்றியுள்ள பேப்பரையும் தூக்கிபோடாது, எனது சட்டைப் பையில் போட்டுக் கொண்டேன். சுத்தமான இடம். ஒழுக்கமான கட்டுப்பாடு. பெங்களூரிலுள்ள சாயிபாபாவின் ஆஸ்பத்திரிக்கு ஒரு தடவை போன போது, அங்குள்ள சுத்தம் சுகாதாரத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன். தரமான சேவையும், இலவசமாக வைத்தியமுறையையும் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன். இங்கு நடைபெற்ற சாயி பஜனை உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியமானது. பாபா இதனை எவ்வளவு அழகாக வர்ணித்தும் இருக்கிறார். இங்கு நான் சொற்பொழிவாற்றும் பகவத் கீதையைப் பற்றி, பலரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீ சத்ய சாயி நாதர், மிக எளிய நடையில் "கீதா வாஹினி" என்ற நூலை வடித்திருக்கிறார். அதுபோல் சில சிறுகதைகளை உதாரணமாக கொண்டு "கீதா பேருரை" என்ற ஒரு நூலும் எழுதியுள்ளார். அனைவரும் இதனை கண்டிப்பாக படிக்க வேண்டும். தனது கல்லூரி மாணவர்களுக்கு பகவத் கீதையை விளக்கி, அதன் சாரத்தை கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தது தோன்று போதித்திருக்கிறார்.  நான் கூட இவற்றைப் படித்து, அதன் அடிப்படையில் இங்கு உரையாற்றவுள்ளேன்" என்றார்.


சாயி பக்தர்கள் அனைவரும் கரகோஷம் செய்து அவரது சொற்பொழிவுக்கு உத்வேகத்தை கொடுத்தார்கள். எனக்கு பலத்த சங்கடத்தை கொடுத்த "அந்த" சாயி பக்தர்கள் மன்னிப்பு கேட்கும் தோரணையில் என்னை பார்த்தார்கள். நான் பகவானை பார்த்தேன். படத்தில் பாபா புன்னகைப்பது போல தோன்றியது. அது தான் பகவானின் திருவிளையாடல்.

மூன்று நாட்கள் சொற்பொழிவு நடைபெற்ற பின், இறுதி நாள் நிகழ்வில் திரு. சுகிசிவம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, எனக்கு நடந்த இந்த சோதனையை அவருக்கும், அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். அதுமட்டுமல்ல அதற்குப்பின் பகவான் இன்னுமொரு காரியத்தையும் செய்து காட்டினார். அதைத் தொடர்ந்து திரு. சுகிசிவம் அவர்கள் சீரடி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு தலைப்பாக எடுத்து பல இடங்களில் சொற்பொழிவாற்ற தொடங்கினார், சத்ய சாயிபாபாவும் சீரடி சாயிபாபாவும் ஒருவரே என்ற கருத்தையும் தெரிவித்ததோடு. 2018ம் ஆண்டு விஜயதசமி நன்னாள் சீரடி சாயிபாபாவின் மகா சமாதி நூறாவது கொண்டாட்டம் காரணமாக, அவரது அந்த முதலாவது சொற்பொழிவை, சென்னை மயிலாப்பூரிலுள்ள சீரடி ஆலயத்தில் நடத்திவிட்டு,மறுநாள் கொழும்பு சாயி நிலையத்தில் நடைபெற்ற, சீரடி சாயிபாபாவின் மகாசமாதி நூறாவது விழாவில் மீண்டும் கலந்து கொண்டு "சீரடி சாயிபாபா" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.


பகவானும், 'இரண்டு சாயியும் ஒன்றே'! என்று அவருக்கு உணர்த்துவதற்காக, இவரை மீண்டும் மீண்டும் வரவழைத்து தனது இரண்டு சன்னிதானத்திலும் அடுத்து அடுத்து சொற்பொழிவாற்ற வைத்தார்.

ஆக்கம்: எஸ்.என். உதய நாயகன் ஸ்ரீலங்கா சத்யசாயி மத்திய நிலையம் கொழும்பு | சீரடி சாயி மந்திர் ஸ்ரீலங்கா.

🌻 வசைபாடுபவர்களும் ஒருநாள் சத்ய சாயி திருநாமம் சொல்லி இசை பாடுவார்கள் ... கட்டற்ற காட்டாற்று வெள்ளமும் ஒருநாள் இறைவன் சத்ய சாயியின் கருணை கமண்டலத்தில் கட்டுப்படவே செய்யும்.. அதற்கான மிக நல்ல ஆன்மீக உதாரணம் ஏராளம். ஞானம் என்பது உரைப்பதல்ல உணர்வதே.. சத்ய சாயி என்னும் அந்தப் பூரண மெய்யுணர்வில் மெய் மறந்து அனைவரும் பூரித்துப் போவோமாக! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக