தலைப்பு

புதன், 12 ஆகஸ்ட், 2020

இந்தோ -- பாக். போரில் வெற்றியை தந்த இறைவன் சத்ய சாயி!


Aban Naidu, former Major General in the Indian Army, who set a record by leading the Republic Day parade four times in a row(1976 - 79)

1965ல்  நடந்த indo-pak யுத்தத்தில் இந்தியா பெரும்பான்மையான இடங்களை வென்றது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அந்த யுத்தத்தில் சத்ய சாய்பாபாவின்  வழிகாட்டுதலால் மட்டுமே ஜெயித்தோம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம் இதுகுறித்து அந்த யுத்தத்தில் தலைமை பங்காற்றிய மேஜர் ஜெனரல் அபான் நாயுடு அவர்களின் 'திக்திக்' சத்ய சாயி அனுபவங்களை நாமும் படித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்... 

எந்தக் கணமும் நம்மை காப்பாற்றுவது கடவுள் சத்யசாயியே .. எந்த கனமுமின்றி நம்மை கரை சேர்ப்பதும் அவரே.. மனித உயிரை ஒவ்வொரு நொடியும் துரத்தும் காலனையும் காலடியில் சுருட்டி நமக்கு புனர் வாழ்வு அளிப்பது அவர் மட்டுமே என்பதை மெய் சிலிர்க்க இவர் உணர்த்துவதை இப்போது காண்போம்...

"நான், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களை கவர்னர் ராமகிருஷ்ண ராவ் அவர்களுடைய இல்லத்தில் முதல் முறையாக சந்தித்தேன். அப்போது நான் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் ஆக பணியாற்றி வந்தேன். அங்கிருந்த அனைவரிடமும் இனிமையாகப் பேசி ஆசி வழங்கிய பகவான், என் மனைவிக்கு விபூதி  சிருஷ்டி செய்து கொடுத்தார் . நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.  பின்னர் ஒருமுறை எனது நண்பர் லெப்டினன்ட் கர்னல் சேஷ மணி இல்லத்திற்கு சுவாமி வந்திருந்தபோது நாங்கள் இரண்டாம் முறையாக பகவானை சந்தித்தோம். சுவாமி எங்களை பங்காரு என அழைத்து ஆசி கூறினார். புட்டப்பர்த்தி வருமாறு அழைப்பு விடுத்தார்.

21 நவம்பர் 1946 |  துணைவியார் ஜெயா ருக்மணியுடன் மேஜர் ஜெனரல் அபான் நாயுடு

இந்நிலையில் எனது இரண்டாவது மகனுக்கு விஷ ஜுரம் கண்டது. மருத்துவர்கள் மிகவும் கடுமையாக போராடியும் அவரை குணப்படுத்த இயலவில்லை. பயந்து போன என் மனைவி பகவான் சிருஷ்டி செய்து வழங்கிய விபூதியை நெற்றியிலும் வாயிலும் இட்டு, "சுவாமி! எனது மகனை காப்பாற்றி என்னிடம் கொடுங்கள்."  என அழுதாள். திடீரென என் மகன் சாய்பாபா ஜன்னல் வழியாக அவனிடம் வந்ததாக கூறினான், நாங்கள் ஆறுதல் அடைந்தோம். அதன்பின் அதிசயக்கத்தக்க முறையில் என் மகன் விரைவாக குணம் அடைந்தான்.

நாங்கள் பகவானுக்கு  நேரில் சென்று நன்றி தெரிவிக்க எண்ணி, புட்டபர்த்தி புறப்பட்டோம். புட்டபர்த்தி  அருகில் வேறு பாதையில் சென்று விட்டோம். பாதை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது ஒரு இடை சிறுவன் வந்து சரியான பாதையை காட்டினான். அவன் கூறிய வழியில் பயணப்பட்டு நாங்கள்  புட்டபர்த்தி அடைந்தோம். சுவாமி அங்கே புன்னகையுடன் எங்களை வரவேற்றார். பாதை தெரியாமல் தடுமாறியபோது, நான் அனுப்பிய இடைச் சிறுவன் உங்களுக்கு பாதை காண்பித்தான் அல்லவா?",என்று கூறினார். நாங்கள் ஆச்சரியத்தில் திகைத்து நின்றோம். 

மறுநாள் பேட்டி அறையில் சுவாமி, "நீ உன் மகனுக்கு விபூதி பூசி அவனை காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்தபோது நான் ஜன்னல் வழியாக வந்து அவனை காப்பாற்றினேன்.", என்றார். நாங்கள் அவருக்கு நன்றி கூறினோம். என் மனைவி, "சுவாமி! போர் ஏற்படும் போல் தெரிகிறது. ராணுவத்தில் பணியாற்றும் இவர் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் எனது மாங்கல்யத்தை காத்தருள வேண்டும்.", என அழுதாள். சுவாமி தாயத்து ஒன்றை வரவழைத்து என்னைக் கட்டிக் கொள்ளச் சொன்னார். "நான் அவனுடன் இருக்கிறேன். அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. நான் காப்பாற்றுவேன்.", என்று உறுதி அளித்தார்.


நாங்கள் சுவாமியை பிரிய மனமில்லாமல் புட்டபர்த்தியில் இருந்து புறப்பட்டோம். பகவான் அருளால் நான் இரட்டை பதவி உயர்வு பெற்று பிரிகேடியர் ஆனேன். 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் மூண்டது. எனது தலைமையில், 4 பட்டாலியன் வீரர்களுடன்,வெடிமருந்து மற்றும் தளவாடங்களுடன், சியால்கோட் எனும் இடத்தில் முன்னேறி, பாகிஸ்தான் நிலைகளை கைப்பற்ற வேண்டும் என்பது, எனக்கு இடப்பட்ட உத்தரவு.  மன உறுதியுடனும் வீரத்துடனும் போராடி நாங்கள் கைப்பற்ற வேண்டிய இடங்கள் தவிர மேலும் பல முக்கிய இடங்களை, நான்கு நாட்கள் மூன்று இரவுகள் தூக்கமின்றி போராடி கைப்பற்றினோம்.

மதியம் நான்கு மணி, எங்கும் நிசப்தமாக இருந்தது. அப்போது திடீரென வானில் பாகிஸ்தான் விமானங்கள் வந்து சரமாரியாக எங்கள் பகுதியில் குண்டு வீசினர். அருகிலிருந்த இராணுவ வெடிமருந்துக் கிடங்கு குப்பென்று வெடித்தது. நாங்கள் அனைவரும் பதுங்குகுழியில் பாய்ந்து விட்டோம். என்னை சுற்றிலும் ஒரே கரிய புகை மண்டலம். நல்லவேளை உயிர்சேதம் ஏதும் இல்லை. எனது உதவி அதிகாரி, என்னை wirelessல் அழைத்தார். "எதிரிப்படை டாங்கிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், படை வீரர்களின் மன உறுதி குறைந்து போயுள்ளது என்றும், உடனடியாக நாம் பின் வாங்குவதே பெரும் உயிர் சேதத்தை தடுக்கும். நாம் பின் வாங்கி விடலாம்.",என தெரிவித்தார்


இரவு பகலாக கஷ்டப்பட்டு போராடி கைப்பற்றிய இடங்களை பயந்துகொண்டு இழப்பதா? எதிரிகளால் இருட்டில் நாம் பதுங்கி இருக்கும் இடங்களை பார்க்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் டாங்கி களில் நைட் விஷன் கிடையாது. எனவே எந்த சூழ்நிலையிலும் பின்வாங்கக் கூடாது. என  கட்டளையிட்டேன். மீண்டும் அரை மணி நேரத்தில் நேரில் சந்திப்பதாக நான் தெரிவித்தேன். பல நாட்களாக ஓய்வு எடுக்காததால் உடல் சோர்ந்து தளர்ந்து இருந்தது. ஓய்வுக்குப்பின் சிந்திக்கலாம் என நினைத்து ஒரு பத்து நிமிடம் கண்களை மூடினேன்.

திடீரென என் அருகே யாரோ நிற்பது போன்ற உணர்வு. திடுக்கிட்டு எழுந்தேன். பதுங்குகுழி எங்கும் ஒளி. பகவான் பாபா ஆரஞ்சு வண்ண அங்கியில் தகதகத்து சூரியனாக என் எதிரில் நின்றார். ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனேன். கருணை ததும்பும் கண்களுடன் என்னைப் பார்த்து, "பங்காரு! பயந்து விட்டாயா ?", என்றார். நான் இது கனவோ என்று நினைத்தேன். நிஜமாகவே என் முன்னே நின்று கொண்டிருக்கிறார்.


அவர் என்னிடம், "பேனாவையும் காகிதத்தையும் எடுத்துக்கொள். நான் சொல்லும் கட்டளைகளை எழுது.", என்று பணித்தார். நிஜமாகவே பாபா போர் முனைக்கு வந்து இருக்கிறார்! எப்பேர்ப்பட்ட பாக்கியம்! உடலெங்கும் புத்துணர்ச்சி!  எழுந்து அவர் சொன்ன செய்திகளை மடமடவென்று எழுதினேன். "இதை உன் படை  வீரர்களிடம் சொல்லி செயல்படுத்து. வெற்றி உங்களுக்கே. நான் உன்னுடன் இருக்கிறேன்.", என்று ஆசீர்வதித்து மறைந்துவிட்டார். 

பங்கர் முழுவதும் காந்த அதிர்வுகள். என்னுடன் பகவான் இருக்கும்போது என்ன பயம்? உடனடியாக என் கீழ் பணிபுரியும் அதிகாரிகளை அழைத்து, பகவான் சொன்ன ஐந்து விஷயங்களையும் ஒரு வார்த்தை கூட மாறாமல் சொன்னேன். படைவீரர்களின் மனநிலை மாறியது. பகவான் கட்டளைப்படி போரிட்டு வெற்றிகளை குவித்தோம்.


​ பக்தனை கண் இமைபோல் காக்கும் பாபா, இறைவன் அன்றி வேறு யாராக இருக்க முடியும்? போர் முடிந்தது. என் இறைவனை காண புட்டப்பர்த்தி ஓடோடி நாங்கள் குடும்பத்துடன் வந்தோம். தரிசனத்தின்போது பேட்டி அறைக்கு எங்களை அழைத்த பாபா, என் மனைவியிடம், போர்முனையில் நடந்த அனைத்து விபரங்களையும் ஒரு வரி கூட விடாமல் நான் சொல்லாமலே விவரித்தார். வெடிமருந்து கிடங்கு வெடித்தபோது, குண்டுமாரி பொழிந்த போது, என் இதயம் லப் டப் என்று துடித்ததை கூறினார். பங்ககரில் தான் எனக்கு 5 கட்டளைகள் வழங்கி வழிகாட்டியதை கூறினார். "மனித உருவில் நடமாடும் இந்த தெய்வம், தன் மீது நம்பிக்கை வைக்கும் யாரையும் கைவிடுவதில்லை. இப்படி பகவானுடன் ஆன என்னுடைய இனிய அனுபவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எனக்கு 82 வயது. என் குழந்தைகள், சாயி அருளால் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பகவான் பாபா தான் எங்கள் வாழ்வின் உயிர்நாடி. ஜெய் சாய் ராம்! ஜெய் ஹிந்த்!",என்று கூறி முடித்தார் அபான் நாயுடு.

Note: The interview above was recorded in 2006. He attained Swami's lotus feet in 2015.

ஆதாரம்: இறைவனுடன் இனிய அனுபவங்கள்.
தொகுத்தளித்தவர்: S. Ramesh, Ex-Convenor, Sai Samithi, Salem.

🌻 பாரதப் போரில் பாண்டவர்களைக் காப்பாற்றிய அதே கடவுள் தான் இந்தோ -- பாக். போரில் இந்திய ராணுவ வீரர்களைக் காப்பாற்றியது.
பாண்டவர்கள் எனும் தர்மவான்களுக்காக துவாபர யுக நிலத்தை மீட்டுத் தந்ததும் ... இந்திய இராணுவ வீரர்கள் எனும் கர்மவான்களுக்காக கலியுக நிலத்தை மீட்டுத் தந்ததும் இதே சாட்சாத் சத்ய சாயி கிருஷ்ணரே!
🌻
       
ஜெய் சாய் ராம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக