தலைப்பு

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

கறையையும் பொருட்படுத்தாமல் வெல்டர்களுக்கு பாபா காட்டிய பரிவு!


உழைப்பினால் வரும் வெளிக் கறையை இறைவி சத்ய சாயி மாதா தன்னுடைய கவசமாக அணிந்து கொள்கிறாள். உலகினால் வரும் உள் கறையையும் அவளின் கருணையே  சுத்தப்படுத்தி நம்மை புனிதமாய்ப் பூரிக்கச் செய்கிறது வெல்டர்களுக்கு( Welders) கிடைத்த பகவானின் அனுக்ரஹம். 

1971ல் தசரா திருவிழாவிற்குச் சில நாட்கள் முன்பாக இந்த நிகழ்வு நடந்தது. பிரசாந்தி மந்திர், பஜன் ஹால், பாபாவின் இருப்பிடம் ஆகியவற்றின் மேல் தங்களின் மேல் கோபுரம் அமைக்கும் பொருட்டு, தொழிலாளிகள் இரும்பு குழாய்களை வெல்டிங் (welding) (உலோக குழாய்களை தீயில் காட்டி அடித்து இணைத்தல் ) செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவ்வேலையை மேற்பார்வை பார்க்க ரமணாராவும், ப்ரஃபுல் படேலும் பொறுப்பளிக்கப்பட்டிருந்தனர்.


மதியம் தொடங்கிய வேலை மாலை இருட்டுவதற்குள் முடியாது போல் இருந்தது. எனவே தொழிலாளிகள் மாலை வரை செய்துவிட்டு, சென்று மீண்டும் மறுநாள் காலை வந்து மறுநாள் மாலைக்குள் வேலையை முடித்துக் கொடுப்பதாகக்கூறி, அதற்கு மேற்பார்வையாளர்களும் ஒப்புதல் அளிக்கவே எல்லோரும் கிளம்பினர் ஆனால் திடீரென அங்கு வந்த பாபா பொழுது விடிவதற்குள் வேலை முடித்தாக வேண்டும் என்று கூறிவிட்டார்!! தொழிலாளிகள் அமைதியாக மீண்டும் வேலையைத் துவங்கினர். ரமணா ராவ் அவர்களிடம், “மறுநாள் தான் வேலை முடியும் என்றீர்கள்!  எப்படி இன்று இரவுக்குள் முடிப்பீர்கள்?” என வினவ, “ஸ்வாமியே வந்து சொல்லிவிட்டதால் முடிந்து விடும்!” என்று கூறி வேலையை தொடங்கினர்.

மேற்பார்வையாளர்கள் நேரத்திற்குப் போய் சாப்பிட்டு வந்தனர். ஆனால் இவர்களோ வேலையே கதி என்று எதற்கும் எழுந்து செல்லாமல் வேலையைச் செய்தனர்.

இரவு 8.30க்கு ஸ்டீல் ராடுகள் (steel rods ) வெல்டிங் செய்யப்பட்டுத் தயாராகிவிட்டன. கோபுரத்தைப் பொருத்த வேண்டியது ஒன்று தான் மீதி! 8.45க்கு படியில் யாரோ ஏறி வரும் சப்தம் கேட்டது, கதவு திறந்தது.

சாஷாத் பாபாவே வந்து நின்று கொண்டிருந்தார்! தொழிலாளிகளின் மன உறுதியுடனான வேலையைப் பாராட்டி மகிழ்ந்தார். “நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்”. “ஐயோ பாவம்” என்று கருணையைப் பொழிந்தார்.

ரமணராவ், படேல் அகியோரைப் பார்த்து “நீங்கள் சாப்பிட்டாச்சா?  எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று ஒரு மாதிரியாக இடித்துரைப்பது போல் – அது பாபாவால் மட்டுமே முடியும் – அது போல சொன்னார்!, “இந்த கள்ளமற்ற திறனாளிகள் வெறும் வயிற்றோடு கிடக்கிறார்களே” என்றார்.

பாபா பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வேத பாடசாலையில் இருந்து 3 மாணவர்கள் ப்ளாஸ்டிக் வாளியில் தண்ணீர், டவல் – துண்டு, ஒரு தாம்பாளம், வாழை இலைகள், இரு டிபன் கேரியர்கள் மற்றும் கப்புகள்! ஸாயி அம்மாவின் பரபரப்பான உபசாரம் – பசியுடன் இருக்கும் தொழிலாளிகளுக்கு!.


வேலை செய்தவர்களை கைகளை அலம்பிக் கொள்ளச் செய்து தட்டுக்களைக் கொடுத்து, உணவும் இனிப்பும் தன் கைகளாலேயே பரிமாறினார். மனம் நெகிழ்ந்த அவர்கள் ஸ்வாமியின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டனர். (நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்து பாதம் பற்றினர்).
   
போதும், போதும் பங்காரு, பங்காரு என்று கூறியவாறு அவர்களது முதுகைத்தட்டி ஏழுந்திருக்கச் சொன்னார். மகிழ்ச்சி அவர்களது அன்பை எல்லையில்லா கருணை தெய்வம் ஏற்றுக்கொண்டது. ஸ்வாமியின் உடைகள், வேலையாட்களின் கரங்கள் பட்டு கறைபடிந்துவிட்டன!. அவர்கள் முதுகை தட்டிய  போது ஸ்வாமியின் மேல் சட்டையின் கைகளும் அழுக்காகிவிட்டன(Greese)! - (Grease) மணக்கும் பரிசுத்தமான தோற்றத்திற்குப் பெயர் போன ஸாயியின் உடைகள் அழுக்காயின!.
   
இப்படி ஒரு நிலையில் ஸ்வாமியைப் பார்த்திராத ரமணா ராவ் பதட்டத்துடன் “மரக்காலு ஸ்வாமி” என்று கத்திவிட்டார். “மரக்காலு” என்றால் “கறை” என்று பொருள்!.
   
ஸ்வாமி சிரித்தவாறு, “மரக்காலு இல்லை!” “மரகதலு” (Emarald) என்றார். அன்பு என்ற ஒன்று கறையைக் கூட அழகாக்கி விட்டது!
   
நமது அன்பான ஸ்வாமி உயர்வு, தாழ்வு, ஏழை, பணக்காரன், இருப்பவன்-இல்லாதவன் என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை! இதயத்தின் மொழி ஒன்றே அவர் அறிந்தது! தொழிலாளிகள் பெருமிதத்தில் தலை நிமிர, மேற்பார்வையாளர்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டனர்.

ஆதாரம்: *Love is my form* – by B.V. Ramana Rao. P 31-33
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻பக்தர்களின் பசி பொறுக்காத இறைவி சத்ய சாயி அன்னையே சத்தியமான நம் ஒரே அன்னை.. பிரபஞ்சத்திற்குமே இவளே அன்னை.. அத்தகைய அன்னையைப் பெற்ற பிள்ளைகள் ஏன் வீண் உலகாயத விஷயம் குறித்து சஞ்சலமோ .. பயமோ.. கவலையோ படவேண்டும்? 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக