தலைப்பு

வெள்ளி, 31 ஜூலை, 2020

திட்டியவரை பாதம் விழவைத்து பக்தராக்கிய பரம்பொருள் சாயி!

🇲🇾 Dato J. Jagadeesan - Former Deputy Director General of Industrial Development Authority, Malaysia.

மலேசிய தொழில் துறை தலைவர் நாத்திகர் ஜெகதீசனை, ஆத்திகர் ஜெகதீசன் ஆக்கி, அருள்செய்த ஜெகத்ரட்சகன், ஸ்ரீ சத்ய சாயி என்பதன் அற்புதம் சொரியும் ஆச்சர்யப் பதிவு...

இறைவன் சத்ய சாயி இப்பிரபஞ்சத்திற்கே பொதுவானவர். அவருக்கு வந்தனை செய்பவரும் ஒன்றுதான். நிந்தனை செய்பவரும் ஒன்றுதான். கடவுள் சத்யசாயிக்கு எல்லா ஜீவராசிகளுமே குழந்தைகள் தான். அதில் ஒரு நாத்திக குழந்தைக்கு பக்தி வரவழைத்த பெரும் மகிமையை காண்போம்...

திரு.ஜெகதீசன் அவர்கள் மலேசிய அரசின் இண்டுஸ்டிரியல் டெவலப்மென்ட்  அத்தாரிட்டி துறையில் டெப்டி டைரக்டர் ஜெனரல் ஆக பணியாற்றி வந்தார். அவர் தீவிர நாத்திகராக இருந்தார்.

அவர் தெய்வங்களைப் பற்றியும்..  நமது சுவாமியைப் பற்றியும் பேசும் போது மிகவும் அலட்சியமாகவும் அருவருக்கத் தக்க வகையிலும் பேசக்கூடியவர். ஒரு நாள் அவரது மாமியார் வீட்டிற்கு வந்திருந்த போது, அவரது பெட்டியில் சுவாமியின் பிரேம் போட்ட ஒரு படத்தை பார்த்தார்.

அவ்வளவுதான். அவர்  மாமியாரை மிகவும் கோபமாக கடிந்து கொண்டதோடு அல்லாமல், சுவாமியை மிகவும் மோசமாக ஆக்ரோஷத்துடன் திட்ட ஆரம்பித்தார். சுவாமியின் படத்தை டேபிள் மேல் வைத்து இவர் எதிரே சேரில் அமர்ந்துகொண்டு,

" நீ என்ன கடவுளா? யாரை ஏமாற்றுகிறாய்? நீ கடவுள் என்றால் உன் சக்தியை என்னிடம் காட்டு பார்க்கலாம்! என்னை ஏமாற்ற முடியாது" , என்று கூச்சலிட்டார்.

அது எப்படி இருந்தது என்றால், சத்ய யுகத்தில் ஹிரண்ய கசிபு பிரகலாதனிடம், "நாராயணன்! நாராயணன்! என்கிறாயே, யார் அந்த நாராயணன்? எங்கிருக்கிறான்?", என்று கர்ஜித்தான்.
அதற்கு பிரகலாதன்,


"நாராயணன் எங்கும் இருப்பான். தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்! தந்தையே!", என்றான். அதைக்கேட்ட ஹிரண்யகசிபு, "இந்தத் தூணில் இருப்பானா?", என்று கேட்க, "இதிலும் இருக்கிறான் தந்தையே!", எனக் கூற,

அவன் ஆக்ரோஷத்துடன் எட்டி உதைத்து, கதாயுதத்தால் அந்தத் தூணை உடைத்தான்.
ஹிரண்ய கசிபு பிரகலாதனிடம் கர்ஜித்தது போல ஜெகதீசன் சுவாமியின் போட்டோவை பார்த்து கர்ஜித்து கொண்டிருந்தார்.

அங்கு தூணிலிருந்து நாராயணன் நரசிம்மமாக வந்தார். இங்கு சுவாமி போட்டோவில் இருந்து  விபூதியாக வர ஆரம்பித்தார். ஆம்! சுவாமியின் போட்டோவில் இருந்து விபூதி வர ஆரம்பித்தது.


அதை பார்த்து ஜெகதீசன் திடுக்கிட்டார். அவர் ஒரு டவலை எடுத்து சுவாமியின் போட்டோவின் மேலிருந்த விபூதியை முழுவதுமாக துடைத்துவிட்டு போட்டோவை டேபிலில் வைத்தார். மீண்டும் சிறிது நேரத்தில் விபூதி வர ஆரம்பித்தது.

ஜெகதீசன் உடனடியாக ஒரு கார்பெண்டர் ஐ வரவழைத்தார். சுவாமியின் போட்டோவில் இருந்த  பிரேம் ஆணிகளை கழற்றச் சொன்னார். படத்தில் இருந்த ஆணிகள், கண்ணாடி, பிரேம் அட்டை தனித் தனியாக பிரிக்கப்பட்டது.

மீண்டும் அவைகளை இணைக்க சொன்னார். போட்டோ மீண்டும் ரெடியானது. போட்டோவில் இருந்து மீண்டும் விபூதி வர ஆரம்பித்தது! அதைப் பார்த்த கார்பென்டர் ஆசாரி ஓட்டம் பிடித்தார். ஜெகதீஸனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் மனசோர்வு அடைந்தார்.

சில மாதங்களுக்குப் பின், அவர் துறைசார்ந்த மாநாடு ஒன்று இந்தியாவில், பெங்களூரில் நடைபெற்றது. அதற்காக ஜெகதீசன் வந்திருந்தார். அப்போது சுவாமியும் பெங்களூரு ஒயிட்பீல்டுக்கு வந்து இருந்தார்.

சுவாமி பெங்களூர் ஒயிட்பீல்டில் இருப்பது தற்செயலாக ஜெகதீஸனுக்கு தெரியவந்தது.
அன்றைய தினம் ஜெகதீசன் மாலையில் ஓய்வாக இருந்ததால், ஒயிட்பீல்டு சென்று சுவாமியை பார்க்கலாம் என்று ஒரு எண்ணம் தோன்றவே புறப்பட்டு சென்றார்.

அங்கு அவர் தரிசன லைனில் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அப்போது மெதுவாக நடந்து வந்த சுவாமி அவர் அருகே வந்ததும், மலேசியா ஜெகதீசன்! , என்றார். சுவாமி தனது ஊரையும் தனது பெயரையும் குறிப்பிட்டது குறித்து ஜெகதீசன் அதிர்ச்சி அடைந்தார்.

சுவாமி அவரை நேர்காணல் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் சுவாமி அவரிடம், "பங்காரு! என்னுடைய விபூதி எப்படி இருந்தது?", என கேட்டார். மேலும் சுவாமி, "நீ என்னை ரொம்ப திட்டுகிறாய். காது கூசுகிறது", எனக்கூறினார்.


ஜெகதீசன் சுவாமியின் காலில் விழுந்து கண்ணீருடன் சுவாமியின் காலைப் பற்றிக்கொண்டு, "சுவாமி! என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மன்னித்துவிடுங்கள்!",என்று பலமுறை கூறினார்.

தனது கண்ணீரால் சுவாமியின் பாதத்தையும் தனது பாவங்களையும் ஒருசேர ஜெகதீசன் கழுவினார். சுவாமி கருணையுடன் அவரை அணைத்து, "பங்காரு! கவலைப்படாதே. குற்ற உணர்வு கொள்ளாதே. நீ என்னுடையவன்! என்னுடையவன்! ", என்று பலமுறை கூறி, அவருக்கு ஆசி கூறி அவரை அனுப்பி வைத்தார்.

ஜெகதீசன் சுவாமியின் தீவிர பக்தர் ஆகி சுவாமியின் அன்பையும் வழிகாட்டுதலையும் எப்போதும் பெறும் பாக்கியசாலி ஆனார். சுவாமியின் தெய்வீகப் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு, மலேசியா சத்திய சாய் அமைப்பின் தலைவராக பல்லாண்டு சுவாமி சேவைகளைச் செய்தார்.


மேலும் ஆசிய நாட்டுத் தலைவராகவும் பொறுப்பு வகித்து சுவாமியின் கொள்கைகளையும் சேவைகளையும் உலகெங்கும் பரப்பினார்.

"அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன் 
 அருள் நினைந்து அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே." 

என்பார் ஆழ்வார். 

அதாவது, இடையூறு செய்யும் குழந்தையை தாய் தூரப்போ என்றாலும், அது தூரம் சென்று, அம்மா! அம்மா! என அம்மாவை நினைத்து அழுவது போல, நாராயணா! நீ என்னை புறக்கணித்தாலும், அந்த குழந்தையை போல, உன்னையே நினைத்து நிற்கிறேன்.அருள் செய்!" என்கிறார் ஆழ்வார்.

இங்கோ,
 தன்னை இகழ்ந்தும், பழித்தும் அவதூறு செய்த சேயை, வாரி அணைத்து, உச்சி முகந்து, மார்போடு அணைத்து அருள் புரிந்த அன்னையாய், ஆயிரம் அன்னையாய் விளங்குகிறார் நம் சாயி நாராயணன்!

 ஜெய் சாய்ராம்!

ஆதாரம்: Sri Sathya Sai Satcharitra- Tapovanam
நன்றி: S. Ramesh, Ex-Convenor, Salem Samithi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக