தலைப்பு

புதன், 1 ஜூலை, 2020

ஸ்ரீ சத்ய சாய்பாபா குறித்து அமெரிக்கன் சிஐஏ(CIA) சேகரித்த இரகசிய ஆவணங்கள்!


அமெரிக்கன் சிஐஏ(சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி) கடந்த 70 வருடங்களாக அவர்கள் சேகரித்த சில ஆவணங்களை சமீபத்தில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதில் நம் அன்பு தெய்வம் சாயி பகவானைப் பற்றியும் 16 பக்கங்கள் கொண்ட ஆவணத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதைத்தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கப் போகிறீர்கள்.

விளக்கமுடியாத பரம்பொருளை விளக்க இயலுமா அகண்ட ஆழியை குடத்தில் அடக்கிட இயலுமா. ஆதியாம் மெய்ப் பொருளின் ஜோதியை அளவிட முடியுமா.இப்படி சிலர் முயன்று தமது அறிவின் குறைகளை வெளிக்காட்டினார்களே தவிர, ஆண்டவனாம் பாபாவின் அருமை பெருமைகளை அளந்திட இயலவில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் காலத்திலும் இந்த அவதூறு பேசும் வம்பர்கள் இருந்ததுண்டு. பகவான் ஏன் இவர்களை வழிக்கு கொண்டு வரவில்லை என்ற கேள்வி எழலாம். ஏனெனில் இவ்வுலகம் மாயையினால் சூழப்பட்டது. இதில் இருமைத் தத்துவம்.(. நல்லது..கெட்டது... ஆஸ்தீகம்..நாஸ்தீகம்..) தவிர்க்க இயலாதது. பகவான் இதை வெல்ல நமக்கு பகுத்தறிவை அளித்துள்ளார். அதைக் கொண்டு நாம் உய்த்து உணர்ந்து நல் வழி நடக்கவேண்டும்.

இந்த பின்புலத்தில் இன்று நாம் பார்க்கப் போவது CIA என்கிற அமெரிக்க மத்திய உளவு நிறுவனத்தின் ஒரு செய்தி சேகரிப்பு பற்றி. அதுவும் நமது சுவாமி பாபா பற்றிய செய்தி சேகரிப்பு கோப்பு.

இச்செய்திகள் சாதாரண மனித கண்ணோட்டத்தோடு தொகுக்கப்பட்டவை. உலகியலில் ஊறி ஆன்மீகத்தை அறியாத சாதாரண உளவு பார்க்கும் நபர்களின் கண்ணோட்டத்தில் உள்ளவை. ஆகவே இவற்றை ஒரு செய்திமாக மட்டும் பார்த்துவிட்டு , நம் போன்ற சாயி பக்தர்கள் அறிந்த பகவானின் கல்யாண குணங்களை முடிவுரையில் காணலாம். 

CIA நிறுவனம் உலகின் அனைத்து நாடுகளின் அரசியல் , ராணுவம், தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கைகளையும் உளவறிந்து, இரகசிய கோப்புகளில் பதிவிட்டு வைத்துள்ளது நமக்கு தெரிந்ததே. இந்நிறுவனம் அந்நாட்டு ஜனாதிபதி அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த வகையில் இந்தியா பற்றியும் அந்நிறுவனம் 1940 முதல் உளவறிந்து தகவல்களை சேகரித்துள்ளது. சமீபத்தில் இத்தகவல்கள் பல இரகசிய குறியீட்டிலிருந்து விலக்களிக்கப்பட்டு வெளியில் அனுமதிக்கப்பட்டன.  அதில்1990 களில்தொகுக்கப்படட16 பக்கங்கள் கொண்ட ஒரு பகுதி பகவான் பாபா பற்றியது. அந்த CIA report செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தலைப்பு...


கலாச்சாரத்தின் போக்குபற்றி ஒரு ஆராய்ச்சி.. 
அற்புதங்கள் ஆற்றுவதாகக் கூறப்படும் சாயிபாபா ஒரு புதிய மதத்தை நிர்மாணிப்பாரா? 

1990 ல் சேகரிக்கபபட்ட இந்த செய்தி தொகுப்பானது மேலும் கூறுவதாவது. சத்ய சாயிபாபா என்கிற ஆன்மீகக் குரு Afro மாதிரியான தலைமுடி தோற்றத்துடன் விளங்குகிறார். அவர் பற்பல அற்புதங்களை நிகழ்த்துவதாகக் கூறப்படுகிறது. உருமாறும் திறன், பிறர் மனதை அறியும் திறன் மற்றும் ஆபரணங்கள் , உணவு வகைகள், உயிருள்ள ஜீவன்களை கை அசைவில் சிரிஷ்டிக்கும் வல்லமை பெற்றிருக்கிறார். மேலும் அவர் புகைப்படத்திருந்து விபூதி மற்றும் அமிர்தம் வர்ஷிக்கின்றன. இந்த அற்புதங்கள் விஞ்ஞான முறைப்படி சோதிக்கப்படவில்லை என்றாலும் இவற்றில் சில மேலைநாட்டு உளவியல் நிபுணர்கள் முன்பு  நிகழ்த்தப்பட்டவை ஆகும். விஞ்ஞானம் இவற்றை நிராகரித்தாலும் பாரம்பரிய  இந்துக்கள் இவற்றை ஏற்றுக் கொள்கின்றனர். இவர் தம்மை கல்கி அவதாரமாக கூறுகிறார். இது ஏசுவின் மறுபிறப்பு அல்லது முஸ்லீம் மெஹதி என்பதற்கு ஈடானதாகும். இவரது கட்டுக் கோப்பான நிறுவனம் , அரசியல் பின்புலம் ,நிதிவளம் , மற்றும் ஏராளமான பின் தொடர்வோர் காரணமாக இவர் ஒர் புதிய மதத்தை உருவாக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த செய்தியில் அவருக்கு  எதிரான அவதூறுகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மேலும் பாபா வின் பக்தர்களாக இருந்த பல பிரபல தேசத் தலைவர்கள் பற்றியும்.. எவ்வாறு அன்றைய பாரதப் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் இந்த அவதூறுகளை  அரசு சார்பாக மறுத்து  செய்தி ஒன்றை வெளியிட்டதையும்.. மற்றொரு பிரதமர்  திரு.P. V.நரசிம்மராவ் பாபாவிவின் பிறந்த நாள் விழாவில் பிரதான விருந்தாளியாக பங்கேற்றதையும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பாபா தனது அவதாரத்தின் நோக்கமாக இந்தியா இழந்துவிட்ட சனாதன தர்மத்தை மீட்டு நிலைநிறுத்தவே தான் வந்துள்ளதாகக் கூறுகிறார். தன் அவதாரம் இவ்வுலகின் பொற்காலமென்றும் கூறுகிறார். CIA செய்தி மேலும் கூறுவதாவது... பாபாவின் பக்தர்கள் அவர் பற்றி கூறும் அற்புதங்கள்.... நினைத்த இடத்தில் தோன்றுதல்...தோற்றத்தை மாற்றிக் கொள்ளல்...ஜோதியாக உருமாறும் திறன்....அடுத்தவர் வாழ்வில் நிகழ்ந்தவற்றைக் கூறும் அற்புத சக்தி...உயிரற்ற மற்றும் உயிருள்ளவற்றை நொடியில் படைக்கும் சக்தி....நோய்களை குணமாக்கும் வல்லமை...இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை...அனைத்து மொழிகளும் அறிந்த வியாபகம்.. கை அசைவில் விபூதி சிர்ஷ்டிக்கும் அற்புதம்..தொலை தூரத்தில் உள்ளவர்களையும் அங்கு நடப்பவற்றையும் அறியும் திறன்.. மேலும் பாபாவின் உபதேசங்களாக அந்த அறிக்கை கூறுவதாவது.. அனைத்து மதங்களின் சாரமும் ஒன்றே. அவரவர் தங்கள் மதத்தில் இருந்து கொண்டே நல் வழியை பின்பற்ற வேண்டும். மேலும் சத்ய சாயி கல்வி நிறுவன அறக்கட்டளைகள் மிக நேர்மையாக நடக்கிறது எனவும்.. அவர்களின் பண பரிவர்த்தனையில் மிக வெளிப்படைத்தன்மை இருப்பதாகவும்.. எந்தவித சட்டவிரோத செயல்களிலும் அவர்கள் ஈடுபடவில்லை எனவும் அந்த அமெரிக்க ஆய்வறிக்கை உறுதி செய்கிறது.

ஆதாரம்: 

CULTURAL TRENDS STUDY: INDIA'S SAI BABA MOVEMENT - CIAபாபா ஒரு மந்திரவாதியா.. 

தன் தந்திர சக்தியால் அரைமணி நேரம் மட்டும் மக்களை கட்டிப்போட்டு , பணம் பறிக்கும் சாதாரண மந்திரவாதியல்ல..  பாபா. புட்டபர்த்தியில் இருந்து கொண்டே அகில உலகத்திலும் அற்புதங்கள் நிகழ்த்தும் தெய்வீக மந்திரவாதி. பாபாவின் இந்த தெய்வீக சக்தியை தமது வீட்டில் இருந்தபடியே மக்கள் உணர்கின்றனர்.இதனினும் பாபா நிகழ்த்தும் மிகப் பெரிய அற்புதம்...மக்களின் மனதை மாற்றி ( Transforming the mind) அவர்களை நல்வழிப் படுத்துதல் ஆகும். உண்மையில் ஒவ்வொரு சாயி பக்தனின் வாழ்க்கை இதற்கான சாட்சி ஆகும்.


ஒவ்வொரு சாயி பக்தனும் தன் வாழ்வை ஸ்வாமி எவ்வாறு நல்வழிப் படுத்தினார் என்ற செய்தியை மனம் உருகக் கூறுவதே மற்றும் ஒரு சாட்சி. பாபா  அவர்களின் பிரம்மாண்ட சேவை பணிகளான..குடிநீர் திட்டம்..இலவச கல்வி..அதிநவீன இலவச மருத்துவ மனை இவைகளைவிட பாபாவின் அளப்பரிய அன்புக்கு வேறு சான்று வேண்டுமா? பாபாவின் முழு வீச்சை ..அவரது பரிமாணத்தை நாம் புரிந்து கொண்டோமா. இல்லை. இது பற்றி பாபாவே கூறுவதாவது. "என்னை முழுவதுமாக யாராலும் புரிந்து கொள்ள முடியாது. எந்த விஞ்ஞானத்தினாலும் என்னை அளவிட இயலாது. "   பாபாவை , அவரது சக்தியை சோதிக்க நம்மால் இயலாது. ஆனால் பரிபூரண சரணாகதி மூலம் அவரின் அருளைப் பெறலாம். பணிவோம் பாபாவை. ஓம் ஸ்ரீ சாய்ராம்.


தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம் சாய்ராம், நங்கநல்லூர் 


🌻 இறைவன் ஸ்ரீ சத்யசாயி இயல்பானவர். அந்த இயல்பே அவருக்கான அதிசயம். அவர் வெளிப்படையானவர். அந்த வெளிப்பாடே அவருக்கான ரகசியம். மனிதர்கள் புலன்களில் சிக்கி இருப்பவர்கள். இறைவன் ஸ்ரீ சத்ய சாயியோ பிரபஞ்சமாய் விரிந்திருப்பவர்.
அவர் இறைவனா? என சோதிக்க ஆரம்பித்தால் குறுகிய மனித அறிவு தோல்வியின் சுவற்றில் முட்டிக் கொள்ளும்.
நாம் மனிதரா? என நம்மையே நாம் சோதிக்க ஆரம்பித்தால் மலர்ச்சி நிச்சயம் சாயி சங்கல்பத்தில் நிகழும்! 🌻

ஸ்ரீ சத்ய சாய்பாபா குறித்து CIA வெளியிட்ட ரகசிய ஆவணத்தை படிக்க கீழே இருக்கும் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக