தலைப்பு

திங்கள், 6 ஜூலை, 2020

தன் முந்தைய அவதாரத்தின் பக்தையைப் பற்றி விவரிக்கிறார் சத்ய சாயி!


ஷிர்டி சாயி காலத்து பக்தையான ஒருவர் வாழ்வில் நடந்து.. யாரும் அறியாத பேரதிசய அனுபவம் ஒன்றை விவரிக்கிறார் ஷிர்டி சாயியின் அவதாரமான சத்ய சாயி.. 

இறைவன் ஷிர்டி சாயி வாழ்க்கையில் நிகழ்ந்து பக்தர்கள் பேராச்சர்யப்பட்டு அனுபவித்த சம்பவத் தொகுப்பே ஷிர்டி சாயி சத்சரித்திரம்.
ஆனால் அது அவரின் முழு வாழ்க்கைப் பதிவா என்றால் இல்லை.
பார்த்தவற்றையும் இறைவன் ஷிர்டி சாயி பகிர்ந்தவற்றையும் தொகுத்ததே அந்த நூல். முழுமை அல்ல.

ஒரு பக்தர்க்கு சொன்ன ஒன்றை .. இறைவன் இன்னொரு பக்தர்க்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஒவ்வொருவரின் கர்மா ஒவ்வொரு வகையானது.

அவரின் வாழ்வில் நிகழ்ந்தவற்றை அவரன்றி .. அவர் சொன்னாலன்றி பிறருக்கு தெரிய வாய்ப்பே இல்லை.

இறைவன் ஷிர்டி சாயி வாழ்வில் நிகழ்ந்த பல அரிய சம்பவங்களை அவ்வப்போது  பகிர்ந்து கொண்ட ஒரே இறைவன் சத்ய சாயி மட்டுமே!

அவரின் அவதார வாழ்க்கை அவருக்கு தெரிந்ததை விட வேறெவருக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிடும்.?

அப்படி இறைவன் சத்ய சாயி தன் முந்தைய அவதாரமான ஷிர்டி சாயியிடம் நேரடி பக்தி பூண்ட ஒரு தூய பக்தையின் வாழ்வில் நடந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு எளிய பாமர பக்தை. அவள் வசித்து வந்த ஊரின் பெயர் பஹல்காம்.

பாமரத் தன்மையில் சந்தேகம் இருக்காது‌.
பிறரைக் கவர விரும்பாத எளிமை இருக்கும்..
பாமரத் தன்மையில் தான் சரி .. பிறர் தவறு என்ற நிலைப்பாடு இருக்காது..
தன்னை நிரூபிக்க முயலாத நிர்மல பக்தி இருக்கும்.

அந்த அற்புத பக்தை தனது சமையல்கட்டில் மூன்று தாமிர பாத்திரங்கள் வைத்திருந்தாள்.
மூன்றின் உள்ளும் மூன்று கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீரை வைத்து நிரப்புகிறாள்.
மூன்றுக்கும் "கங்கா.. யமுனா.. சரஸ்வதி"
எனப் பெயர் வைத்து அந்த பாத்திரத்து நீரை தொட்டு வணங்குகிறாள்.
வழிபோக்கர்கள் அவ்வூரில் கடந்து சென்றால் அந்த நீரைக் கொடுத்து தாக சாந்தி அளிக்கிறாள்.


கிணற்றிலிருந்து நீரை எடுத்து கங்கா எனப் பெயர் வைத்தால் கங்கை ஆகிவிடுமோ என சில அதிமேதாவிகள் நினைக்கலாம்.
எப்படி இறைவனை விட இறைவன் நாமம் உயர்ந்ததோ..
அதைப் போல் இறைவனை இழுத்து வரக் கூடிய பக்தி மிகவும் உன்னதமானது.

உலகத்தை சந்தேகப்படும் அதே பழக்கம் ஆன்மீகத்திலும் மனிதர்க்கு தொற்றுகிறது.
ஆன்மீகம் என்பதன் சாரமே விருப்பு வெறுப்பற்ற பரிபூரண சரணாகதி தான்.

ஆன்மீகத்தை சந்தேகப்படுவது என்பது வடிகட்டின முட்டாள்தனமே தவிர வேறொன்றுமில்லை.

ஆன்மீகத்தில் போலிகள் இல்லையா எனக் கேட்கலாம்.
நமக்கு ஆன்மீக தாகம் உண்மையாக இருக்குமானால்.. உண்மையான குரு கிடைப்பார். அந்த குருவே இறைவன் சத்ய சாயியிடம் வழிகாட்டுவார்.

மற்ற குருக்கள் நம்மை சடங்குகளில் சிக்க வைத்து.. பேதம் கற்பித்து .. வெறுப்பை சுமக்க வைத்து.. ஜாதிக் கொடி ஏற்றி.. மொழிப் பற்று கொடுத்து இருக்கும் கொஞ்ச ஞானத்தையும் குடித்துக் கொப்பளித்துவிடுவார்.
நம் கர்மத் தகுதியும்.. ஆன்மீக வேட்கையும் பொருத்தே ஆன்மீக முன்னேற்றம் எல்லாம்.

வெறும் பகட்டும்.. உள்ளொன்று புறமொன்று என்ற பிதட்டலும் இருக்கும்வரை ஆன்மீக ஆனந்தத்தை அடைவது சாத்தியமே இல்லை.

ஒரு நாள் இந்த பக்தை யின் கணவர் காசிக்கு செல்ல தயாராகிற போது.. அவரின் கையில் மோதிரம் அணிவிக்கிறார் அவரின் தாய்.

இவரும் செல்கிறார்.
கங்கையில் குளிக்கிறார்.
குளிக்கையில் அவரின் தாய் அணிவித்த மோதிரம் கங்கையோடு சென்றுவிடுகிறது.


கங்கையின் கைகளில் கைமாறிய மோதிரத்தைத் தொலைத்த வருத்தத்தில் வீடு திரும்புகிறார்.

அதற்கு தாயோ ...கங்கை விரும்பியதால் எடுத்துக் கொண்டு விட்டால் கவலை வேண்டாம் என்கிறாள்.

இல்லை.. இல்லவே இல்லை.. ஒரு போதும் ஏழைகளின் உடைமைகளை அபகரிக்கவே மாட்டாள் கங்கை என..
சமையற்கட்டுக்கு விரைகிறாள் அந்த ஷிர்டி சாயி பக்தை.

கங்கா என தான் அழைக்கும் அந்த தாமிரப் பாத்திரத்தில் (குடத்தில்) கங்கையை நினைத்து கையை விடுகிறாள்.
மோதிரம் கிடைக்கிறது.

உடனே அதை எடுத்துவந்து கணவரின் கைகளில் தருகிறாள்..

பிறகு.. கணவருடனும் .. மாமியாருடனும் துவாரகா மாயிக்கு வந்துவிடுகிறாள்.

(ஆதாரம்: ஸ்ரீ ஷிர்டி சாயியும்.. சத்யசாயியும் ஒருவரே.. பக்கம் : 50. ஆசிரியர்: ஆர். சரோஜினி)

எனச் சொல்லிவிட்டு.. இறைவன் சத்ய சாயி முக்கியமான ஒன்றை உணர்த்துகிறார்

"நம்பிக்கை.. விசுவாசம் (நன்றியுணர்வு) தான் முக்கியமானது. அதை எதன் மேல் வைக்கிறோமோ அந்த உருவமும் .. பெயரும் ஒரு பொருட்டல்ல.. ஏனெனில் எல்லாப் பெயர்களும் என்னுடையதே!
*எல்லா உருவங்களும் என்னுடையதே!"

விசுவாச இதயத்தில் தான் இறைவன் சத்ய சாயி இருப்பின் வாசம் அடிக்கும்...அந்த இதயமே ஆன்மீக முன்னேற்றம் அடையும்..
தனக்காக .. தன் குடும்பதற்காக என குறுகிய மனம் ஆன்மீக ஞானம் அடையாது.

சுயநலம் ஒரு போதும் உள்ளத்தில் உறைந்திருக்கும் சொர்க்கத்தை எட்டிக் கூட பார்க்க இயலாது.

மேலும் இறைவன் சத்யசாயி இவ்வாறு தனது பிரகடனத்தை அறிவிக்கிறார்...


"நான் ஷிர்டி சாய்பாபாவாக இருந்தேன்.. அந்த ஷீரடி உருவம் பிரம்மத்தில் ஒன்றியபின் எட்டு வருடங்கள் கழித்து மறுபடியும் தோன்றுவேன் என்று அப்போதே சங்கல்பம் செய்திருக்கிறேன். எனக்கு நானே விதித்துக் கொண்ட காரியம் முடிந்தபின்னர் "மறுமுறையும் அவதரிப்பேன்""
என்கிறார் இறைவன் சத்ய சாயி.

பிரம்மத்தில் ஒன்றியபின் என்கிறார்.. அந்த அருவ இருப்பான பிரம்மமும் அவரே.. உருவம் எடுத்து வருவதும் அவரே..
மறுமுறை அவதரிப்பேன் என்பதில் தெளிவுபடுத்தி இருக்கிறார்..

பிரேம சாயியும் சத்ய சாயியே என்பதை...

சத்யசாயியை புறக்கணித்து ஷிர்டி சாயியை வணங்குவதும் ..
பிரேம சாயியை புறக்கணித்து சத்ய சாயியை வணங்குவதும் ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்கவே அளிக்காது.

ஆன்மீகம் என்பதே பேதமற்றிருத்தல்‌.
பிரபஞ்சமாயிருத்தல்.
அதுவே அத்வைத நிலை.

இதை உணர்ந்து கொள்ள..
பக்தியுடன் கூடிய சரணாகதி இதயங்கள் அனைவரும் ஒன்றுகலந்து பிரேம சாயி பாதார விந்தங்களில் கலப்பர்.

இனி வரப்போகும் பிரேம சாயி அவதாரப் பிரகடனத்திற்குப் பிறகு தான்
யார் இறைவன் சத்ய சாயியின் சத்திய வார்த்தையில் பிடிமானமுள்ள... சரணாகதி அடைந்த  உண்மையான பக்தர்கள் என்பதற்கான சுயப் பரிசோதனை அரங்கேற்றப்படும்.

வெண்மையே ஒரே நிறம்.. அதிலிருந்தே மூன்று நிறங்கள்..
அந்த மூன்றே  அடிப்படையானது
சிகப்பு .. நீலம் .. பச்சை..
அதுபோல்...
சத்தியம் ஒன்றே! அதன் வெளிப்பாடு மூன்று சாயியாக மலர்ந்திருக்கிறது.

சத்தியம் வளரும்...

பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக