தலைப்பு

புதன், 8 ஜூலை, 2020

Crazy மாது வழிபடும் Graceஸி கடவுள்!


பிரபல மேடை நாடக நடிகர் கிரேஸி கிரியேஷன்ஸ் மாது பாலாஜி அவர்களின் சத்ய சாயி அனுபவங்கள்.. 

தூர்தர்ஷன் தொலைக்காட்சி தூரத்து சிரிப்பை அருகே அழைத்து வந்தது...
அப்படி அழைத்து வந்தவர்கள் இருவர் ..
ஒருவர் கிரேஸி மோகன்.
இன்னொருவர் அவர் தம்பி மாது பாலாஜி.

மாது வந்திருக்கேன் என்று அவர் ஒவ்வொரு நாடகத்திலும் என் எதிர்நீச்சல் போடும் வாழ்க்கைக்கு ஒரு பேரா ஷூட் கொடுத்து லேசாக்கிப் பறக்க வைத்தார்.

சிரிப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் சேவை‌.
சிரிக்க வைப்பது சமுதாயத்திற்கே நாம் செய்யும் சேவை.
இதை மிகச் சரியாய் அண்ணன் தம்பி கூட்டணி செய்தது.
இதில் சீனு மோகன் அவர்களையும் இந்த நேரத்தில் மறக்கவே இயலாது.
லாரல் ஹார்டி போல்.. டாம் அண்ட் ஜெர்ரி போல்.. மாது -- சீனு கூட்டணி காலத்தால் பிரிக்க முடியாத அவர்கள் ஒரு ஹாசிய காவியம்.


ஜோசியக்காரன் தான் பயமுறுத்துவான்.
ஹாசியக்காரன் எப்போதும் மனதின் கனத்தை மல்லிகையாய் மாற்றி மாதவ சாயி காலடியில் மலரச் செய்வான்.

மாது பாலாஜி அவர்களை முதன்முதலில் அடியேன் பார்த்தது சுந்தரத்தில்...
அதில் நீ.....ண்ட நட்பு ...
ஒரு தொலைபேசி நேர்காணலில் இறைவன் சத்ய சாயி அனுபவம் கேட்கச் செய்தது...

அவருக்கு பெயரிலேயே மரியாதைக்குரிய ஜி இருப்பதால் பாலாஜிஜி என்று அழைக்க அவசியமில்லாமல் சாய்ராம் என்று அழைத்து கேட்க ஆரம்பித்தேன்...

இவருக்கான இறைவன் சத்ய சாயி பக்தி  கிரேஸி மோகன் அண்ணாவே துவக்கி வைத்தது..
இவரின் கலை வாழ்க்கைக்கும்..
கடவுள் வாழ்க்கைக்கும் மோகனே மூஷிக வாகனர் சுழி இட்டிருக்கிறார்.
அந்த சாக்லெட் கிருஷ்ணாவே சத்ய சாயி கிருஷ்ணரைப் பற்றி அறிமுகப்படுத்தியது.


யானை போன்ற வாழ்க்கைப் பாரங்களை மேய்க்கும் பாகன் என் கிரேஸி மோகன். இப்படியே அவரை இதயத்தில் போற்றுகிறேன்.

கிரேஸி அண்ணா அசாத்திய படிப்பாளி.
வேர்க்கடலைப் பொட்டலத்தைக் கூட விட்டு வைக்க மாட்டார்.

அப்படி அவர் படித்து தனது தம்பிக்கு வியந்து போய் சொன்ன நூல் ரா.கணபதி அவர்களின் "ஸ்வாமி" என்ற புத்தகம்.
அடியேனுக்கும் அதுவே ஸ்ரீசாயி மகா காவியம் எழுத உதவிய மூல வால்மீகி நூல்.
என்னையும் கணபதியே ரா என அருகில் அழைத்து கம்பராக்கினார்.

அந்த நூலின் விசேஷம் 1008 பக்கம்.
ஆசிரியரின் ஆசிரியப் பிரதியே (personal copy) என் கைகளில் வந்து சேர்ந்தது சாயி சங்கல்பமே.

அண்ணன் கிழித்த கோட்டை மட்டுமல்ல.. ரோட்டையும் தாண்டாத இலக்குவன் மாது பாலாஜி அவர்கள்.

அன்று முதல் இறைவன் சத்யசாயியை வேண்டுகிறார்...
சுந்தரமே அவரின் வீடாகிவிடுகிறது.
அவர் வீடு கூட அவருக்கு அதன்பிறகு அவுட் அவுஸ் தான்.

எண்பதுகளின் வாக்கில் உயிருக்கே அச்சுறுத்தும் படியான ஒரு பிரச்சனை அவரின் தொண்டையை நெறிக்கிறது.
பிறர் என்றால் நண்பரிடம் புலம்பித் தள்ளி விடுவார்கள்.

மாது பாலாஜியோ வீட்டிற்கே ஓடுகிறார்.
ஆம்! சுந்தரம் வந்திறங்கி..
ஆஜானுபாகு அரவிந்த லோச்சனனாய் சத்ய சாயி கிருஷ்ணர் ரோஜாமலரை கைப்பிடித்து புன்னகைக்கும் அந்த விஸ்வரூபத்திடம் முறையிடுகிறார்.


"சுவாமி...! மூன்று நாட்களில் நீ இந்தப் பிரச்சனையை சரி செய்துவிட வேண்டும்..
இது எனக்கும் .. உனக்கும் மட்டுமே தெரிந்ததாகவே இருக்கட்டும் ..நான் யாரிடமும் வெளியே சொல்லமாட்டேன்" என உருகி வேண்டுகிறார்.

மனைவிக்கும் தெரிவிக்க முடியா சில விஷயங்களை மாதவ சாயியிடமே மனம் திறந்து பேச முடியும்.
சத்தியமாய் தாய்க்கும் அறிவிக்க முடியாத ரகசியங்களைக் கூட சத்தியமான சத்யசாயி தாயிடம் தான் தெரிவிக்க முடியும்.

இறைவன் சத்ய சாயிக்கு தெரியாத ரகசியம் என்ன இருக்கிறது இந்த ஈரேழு உலகில்?
அவர் தான் ரகசியமே தவிற அவர் அறியாத ரகசியம் ஏதும் இல்லை...

ரகசியத்திடமே ரகசியம் சொல்லி.. பாரத்தை அவர் தலை மேல் போட்டுவிட்டு அன்றிரவே பெங்களூர் செல்கிறார் மாது பாலாஜி.

சொல்லி வைத்தாற் போல அந்த உயிரை அச்சுறுத்தும் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் விலகியது.

என் முந்திரி மனசோ .. என்ன பிரச்சனையாக இருக்கும்.. ஆரோக்கியப் பிரச்சனையா.. அல்லது அவர் பணியாற்றும் வங்கியில் ஏதேனும் பிரச்சனையா.. என பழைய துணியை ஊறப்போட்டு அலசுகையில்..
"உனக்கென்ன அதைப் பற்றி அது அவருக்கும் சுவாமிக்குமானது... மூக்கை நுழைக்காதே " என்றது மனசாட்சி.

அந்த அனுபவத்திலிருந்து ராமரைப் போல்... சிவனைப் போல் இறைவன் சத்ய சாயியையும் உணர ஆரம்பித்து ஆராதிக்க ஆரம்பித்தார் மாது அண்ணா.


சுவாமி சுந்தரம் வரும் தெய்வீக சமயத்தில் எல்லாம் அவரை தரிசனம் செய்து.. நகர சங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டு...
பால்கனியில் அந்த பால் வடியும் தெய்வக் கனியை கண்களால் உண்டு இதயத்தால் அருளைப் பருகியிருக்கிறார் பாலாஜி.

தனது மகனுக்குப் பெயரிடும் போது சாயி ராகவேந்த்ரா என்றே பெயர் சூட்டி சுவாமிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

இவர்களின் கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகம் ஆரம்பிக்கையில்..  ஒவ்வொருமுறையும் "சாயி ராம்" என்றே ஆரம்பிக்கிறார்கள்.
எண்பதுகளின் பழக்கம் இன்று வரை தொடர்கிறது. தொடர வைக்கிறது.

இதை கேஸட்'டில் முதன்முறை கேட்ட சிறுவயதில் என் உடல் புல்லரித்தது ஆஹா சுவாமி பெயர் வருகிறதென ...
அதை சொன்னவர் யார் எனக் கேட்ட போது..
கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவில் ஒருவர் என்றும். அவர் வக்கீல். தீவிர சுவாமி பக்தர். பெயர் சுப்ரமண்யம் என்றார்.

மகனை பஜனைக்கு அழைத்து போனது இப்போது பேரனையும் அழைத்துப் போவதில் தொடர்ந்து வந்து...
"பாபா உன்ன பாத்துட்டே இருக்கார்" என்று பக்தியாகவும் ஊட்டி வருகிறார் தன் பேரக் குழந்தைகளுக்கு.

கிரேஸி அண்ணாவுக்கு மாது ஜாக்கிரதை நாடகம் எழுதுகையில் உடலில் அக்கி வந்து சுந்தரம் சென்று சுவாமியை தரிசித்துவிட்டு (சுவாமி வந்திருந்த சமயம்) நீயே எழுதனும் சுவாமி என்ற பிரார்த்தனையோடு ஒரு டிவைன் ஃப்லோவில் எழுதி முடித்த அனுபவ நினைவையும் பகிர்ந்தார்.

நடிகர் நாகேஷ் போல் டைமிங்'கில் அசத்துபவர் மாது பாலாஜி.
ஆனால் பக்கத்துவீட்டு மாமா பேசுவதைப் போலவே எந்தவித பந்தாவும் இல்லாமல் பேசுவது பக்குவத்திற்கு ஓர் எக்ஸாம்பிள் தான் அவர்.

தோற்றத்தில் அண்ணாவைப் போலவே காட்சி அளிக்கும் மாது அண்ணா .. தாத்தாவாகிவிட்டாலும் இன்னமும் ரசிகர்கள்  தா தா எனக் கேட்க நாடகமாக தந்து கொண்டே இருக்கிறார்.

இன்னும் அது காந்தமாய் ஈர்த்து மோகன சிரிப்பலைகள் பரப்பி இறைவன் சத்ய சாயி கையில் இருக்கும் Ballலாய் சிக்ஸர் அடித்துக் கொண்டே இருக்கட்டும் என் இனிய நண்பர் மாது Ballலாஜி.

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக