உருவ வடிவத்தில் ... அடிப்படையாய்ப் பேசும் மொழிகளில்.. வேறுபாடு இருப்பினும் எப்படி இரு சாயியின் சங்கல்பமும் ஒன்றே என்பதை விவரிக்கும் பதிவு இது..
"சீரடி மண்ணில் கால் வைப்பவர்களின் கால்களைப் பிடித்து தலையை அழுத்தும் துயரம் அந்த நொடியே விட்டு ஓடுகிறது...
துவாரகா மாயியில் கால் வைத்த மாத்திரத்திலேயே இனம் புரியா இன்பம் இதயத்தில் வந்து குடியேறுகிறது ..."
இவை இறைவன் ஷிர்டி சாயி சொன்ன சத்ய வார்த்தைகள் ..
சத்சரிதமே ஆதாரமாய் அதற்கு திகழ்கிறது.
ஆனால் இறைவன் ஷிர்டி சாயி அனுமதி இல்லாமல் அது சாத்தியமா?
இல்லை சாத்தியமே இல்லை. அவரின் திருச்சங்கல்பம் இல்லாமல் அவரின் வாசலில் நுழைய வாய்ப்பே இல்லை..
இதுவும் அவர் கூறிய வாய்மொழி தான்.
இதையே தான் இறைவன் சத்ய சாயியும்
"நீ ஆயிரம் குதிரைகள் பூட்டிய ரதங்களில் வந்தாலும் .. என் அனுமதி இல்லாமல் உன்னால் புட்டபர்த்தியில் நுழைய முடியாது" என்கிறார்.
இருவர் சொல்வதும்.. செய்வதும் ஒன்றே.
இறைவன் ராமனும்.. இறைவன் கிருஷ்ணரும் ஒரே அவதாரத் தன்மையானவர்களே.
சரணாகதி அடைந்த தன் பக்தன் சுக்ரீவனுக்காக வாலியை மறைந்திருந்து வதம் செய்தார் ராமர்.
சரணாகதி அடைந்த அர்ஜுனனுக்காக.. கட்டை விரலால் தேரின் கால்களை அழுத்தி கழுத்திற்கு வந்த அம்பை கிரீடத்திற்கு மாற்றி விட்டார் கிருஷ்ணர்.
சரணாகதி அடைந்த பிரகலாதனுக்காக நரசிம்மர் தூணுக்குள்ளிருந்து வெளிப்பட்டார்.
சரணாகதி அடைந்த பக்தனுக்காக ஷிர்டி சாயி தீரா கர்ம நோய்களை தான் ஏற்று தீர்த்தார்.. குழந்தையை தீயிலிருந்துக் காப்பாற்றி தன் கரங்களில் தீப்புண் ஏற்றார்.
சரணாகதி அடைந்த பக்தனுக்காக சத்ய சாயி உயிர்களைக் காப்பாற்றுகிறார்..
கர்மாக்களை மாற்றி அமைக்கிறார்.. ஆயுளை நீட்டிக்கிறார்..
பெயர் அழைத்த மாத்திரத்திலேயே விபத்துகளில் இருந்து உயிர்களைக் காப்பாற்றுகிறார்.
இன்றளவும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன..
அந்த அனுபவங்கள் சுமக்கும் இதயங்களும்.. புத்தகங்களும் ஏராளம்..
இன்னொரு அவதாரமான பிரேம சாயி தன்னை பிரகடனப்படுத்தும் வைபவம் நிகழ இருக்கின்றன..
உற்று கவனித்தால் எல்லா அவதாரங்களும் ஒன்றையே செய்திருக்கின்றன..
அது தான் உயிர்களைக் கரை ஏற்றுதல்..
பிறவித் தளைகளை அறுப்பதே அவதாரங்களின் வேர் நோக்கம் எல்லாம்.
எல்லா அவதாரங்களும் எவருக்கு எல்லாம் அதை செய்திருக்கின்றன என்பதையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்..
சரணாகதி அடைந்தவர்களுக்கே அதைச் செய்திருக்கின்றன..
ஆனால் இரு சாயி அவதாரங்களோ சரணாகதி அடைய வைக்க வேண்டியே அவைகளை நிகழ்த்துகின்றன..
முந்தைய அவதாரங்களில் வதம் இருந்தன.. அது யுகம் சார்ந்த நெறிமுறை..
கலியுகத்தில் அக மாற்றமே இரு சாயியும் மேற்கொள்கிறவை...
ஆக சரணாகதியே முக்கியம்.
சந்தேகம் என்னும் கொசு நம் சரணாகதி எனும் விழிப்புநிலை உறக்கத்தை கலைத்துக் கொண்டிருக்கின்றன...
பக்தியின் உச்சநிலை சரணாகதியே.
இறைவன் பாதத்தில் அனைத்தையும் ஒப்படைத்தலே சரணாகதி.
அவதாரங்களுக்குள் வடிவங்களிலும் .. பெயர்களிலும் மட்டுமே வேறுபாடு !
தண்ணீர் என்றும்.. பானி என்றும்..வெள்ளம் என்றும்.. நீலு என்றும்..
எல்லாமே ஒன்றையே குறிக்கின்ற பெயர்கள்.
தாகமும் ஒன்று தான்
தண்ணீரும் ஒன்று தான்..
பெயர்களில் மட்டுமே வித்தியாசம்.
பக்தியும் ஒன்று தான்.
இறைவனும் ஒன்று தான்.
அவதார வடிவங்களில் மட்டுமே வித்தியாசம்.
காசியில் நிதானமாக ஓடுகிறது.
ஹரித்வாரில் வேகமாக ஓடுகிறது.
காசியில் இளம் சூடாக ஓடுகிறது.
ஹரித்வாரில் குளிர்ச்சியாக ஓடுகிறது.
ஆனால் இரண்டில் ஓடுவதும் ஒரே கங்கையே.
அது போல்
இறைவன் ஷிர்டிசாயிக்கும் ..
இறைவன் சத்யசாயிக்கும்...
அவரவர் நிகழ்ச்சி நிரலில் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கவே செய்தன..
ஆனால் ஆழமான தாத்பர்யம் எல்லாம் ஒன்றே..
அவர்கள் மேற்கொள்ளும் சங்கல்பமும் ஒன்றே..
இரு சாயியின் அடிப்படை சுபாவம் ஒன்றே.
ஷிர்டி இறைவன் சிவ அம்சம் என்பதால் உக்ரம் அதிகம்.
புட்டபர்த்தி இறைவன் சிவசக்தி அம்சம் என்பதால் உக்ரத்தோடு கூடிய சாந்தமும் அதிகம்.
ஷிர்டி இறைவன் நீராவி என்றால்
சத்ய சாயி இறைவன் பனிக்கட்டி.
ஒரே தண்ணீரின் வெவ்வேறு சுபாவங்களே இவை இரண்டும்.
இரு சாயியின் சங்கல்பம் எல்லாம் உயிர்களை பிறப்பிலிருந்து மீட்பதே.
பிறவிகள் வெறும் மாயையே..
தெய்வத்துவமே நிரந்தரம் என்பதை உணர வைப்பதே..
இனிப்பு கசக்குமா..?
ஆனால் கசக்கும்..
காய்ச்சல் உள்ளவருக்கு இனிப்பு கசக்கும்.
காய்ச்சலால் இனிப்பு கசக்கிறதே தவிர அந்த இனிப்பின் தன்மையால் இனிப்பு கசப்பதில்லை.
அது போல் இரு சாயியும் ஒன்றல்ல.. ஷிர்டி சாயி தான் உயர்வானவர் .. சத்ய சாயி அல்ல என்பது தெளிவில்லாத..
எந்த வித அனுபவமும் இல்லாத வெறும் நோய் கண்ட எண்ணமே தவிர இரு சாயியும் ஒரே சாயி எனும் பரம சத்தியம் எப்போதும் ஒன்றே.
காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்தால் அதன் பிறகு எப்படி சர்க்கரையின் இனிப்பு நாவில் தித்திக்குமோ..
அதுபோல் சந்தேகங்களுக்கு சிகிச்சை அளித்தால் இரு சாயியும் ஒன்றே எனப் புரியும்.
"எனக்கு அனுபவம் இல்லை.. ஆகையால் அனுபவம் கொடு சுவாமி...உன்னை உணர முடியாமல் செய்யும் என் கர்மாக்களை கரைத்து விடு..என் மாயையை விலக்கு.. என் இருள் சூழ்ந்த இதயத்தை ஒளி பெறச் செய் சுவாமி" என திறந்த உள்ளத்தில் இறைவன் சத்யசாயியையும்.. ஷிர்டிசாயியையும் அணுகினால்.. இரு சாயியும் ஒன்றே என உணரமுடியும்.
வடிவங்களில் சிக்கி வரப்போகிற அவதாரத்தின் அமுதம் அள்ளிக் குடிக்கத் தவறாமல் மாயையை விட்டு ஞானத்தை நோக்கி நகர வேண்டிய காலக்கட்டம் இது.
திறந்தால் மட்டுமே சூரிய ஒளி வீட்டிற்குள் வருகிறது.
திறந்தால் மட்டுமே இதயத்தில் சத்தியம் உணரப்படுகிறது!
சத்தியம் வளரும்
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக