தலைப்பு

வியாழன், 23 ஜூலை, 2020

சர்வாந்தர்யாமியான இரு சாயி!


ஷிர்டி சாயியும்‌... சத்ய சாயியும் ஒரே இடத்தில் இருந்து கொண்டே எப்படி பல இடங்களுக்கு விஜயம் செய்தார்கள் என்பதன் அற்புதங்களை விவரிக்கும் பதிவு இதோ.. 

செஞ்சோலி மகாராஜா அரண்மனையில் இறைவன் ஷிர்டி சாயி தங்கி இருக்கிறார்.
அங்கே தங்கியபடி மாலை நடை பயிற்சியும் ராஜோவோடு பாபா மேற்கொண்டிருக்கிறார்.
இவை எல்லாம் பூத உடலில் அவர் ஷிர்டியில் இருந்த போது நிகழ்ந்த அற்புதங்கள்.
அப்படி தங்கி இருந்தபோது அவர் பயன்படுத்திய டாங்கா வண்டியே இப்போது புட்டபர்த்தி சைதன்ய ஜோதி மியூசியத்தில் இருக்கிறது..

ஒரே இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் சென்று வருவது.
ஒரே இடத்தில் அமர்ந்தபடியே அனைத்தையும் அறிந்திருப்பது.. இதுவே இறைவனின் கல்யாண குணங்கள்.

இப்படித் தான் இறைவன் கிருஷ்ணராக இருக்கையில் பாண்டவர்களின் வனவாசத்தின் போது எப்போதெல்லாம் அவர்களுக்கு இன்னலோ அப்போதெல்லாம் அவர்கள் முன் விஜயமாகிவிடுவார்.

அதே நேரத்தில் அவர் எங்கே இருந்தாரோ அங்கேயும் இருந்து கொண்டிருந்தார்.

இறைவன் கிருஷ்ணர் பிறகு ஷிர்டி சாயியாக அதற்குப் பிறகு சத்ய சாயியாக அவதரித்த பிறகும் இந்தப் பேரற்புதம் தொடர்ந்தன‌...
பிரேம சாயி அவதார பிரகடனத்தின் பிறகும் இது தொடரவே செய்யும்.


சென்னைக்கு விஜயம் செய்த அதே நாள் இறைவன் சத்ய சாயி பெங்களூரில் ஒரு பக்தர் வீட்டில் தேநீர் அருந்தியதும் இறைவன் ஷிர்டி சாயி செய்த அதே அற்புதங்கள் தான்.

ஆக இறைவனை அளவிட முயற்சிப்பது என்பது மனித அறிவுக்கு எட்டாத ஒரு அமானுஷ்யம்.
புலன்களில் சிக்கிக் கொண்டிருக்கும் மனித அறிவு இறைவனின் பேராற்றலை ஆராய முயற்சிப்பது என்பது கூரை ஏறிக் கூவும் சேவல்களின் ஆகாய ஆராய்ச்சியைப் போலவே கனவாக முடிந்து விடக் கூடியது.

இதே அற்புதம் பலவாக இன்றும் நடந்து கொண்டே இருக்கிறது.

இறைவன் சத்ய சாயி இன்று உடலோடு இல்லை என்பதே ஒரு கற்பனை . அவருக்கு ஒரே ஒரு உடல் மட்டுமே என்பதும் ஒரு பகல் கனவு.
அவர் அண்ட சராசரத்தை ஆளும் இறைவன்.
அவரை மானிட உடம்பிற்குள் அடக்க நினைப்பதே மனிதனின் பயனில்லா அறியாமை மட்டுமே..
இன்றும் இறைவன் சத்ய சாயி உடலோடே இயங்குகிறார்.
பலபேருக்கு பல நிலைகளில் காட்சி அளித்து வழி காட்டுகிறார்.

ஒருமுறை ஹோஸ்பேட்'டில் இறைவன் சத்யசாயியின் பால்ய காலத்து பக்தர்களின் வீடு இருந்தது.அந்தக் குடும்பத்தின் மூத்த சகோதரி பள்ளிக் கூட ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாள்.
அவளுடைய சகோதரர்கள் இறைவனின் புக்கப்பட்டிணத்து பள்ளித் தோழர்களாக இருந்தனர்.
சுதாமாவை (குசேலர்) போல இவர்களும் கொடுத்து வைத்தனர்‌.
1941 ஆம் ஆண்டில் இறைவன் ஒரு மாட்டு வண்டியில் தன் வீட்டிற்கு முன் இறங்குவதை அவர்கள் பார்த்தனர்.

தான் சாட்சாத் சாயிபாபாவே என இறைவன் அறிவித்த அடுத்த வருடம் அது.

திரேதா யுகத்தில் ராமனாக
துவாபரத்தில் கிருஷ்ணராக பெயர் சூட்டிக் கொண்ட இறைவன்
கலியுகத்தில் தனக்கு அவர் தேர்ந்தெடுத்த பெயர் தான் "சாயிபாபா"


அப்போது தன் நிறத்தைப் பெயராகக் கொண்டவர்... இப்போது தன் தன்மையைப் பெயராகச் சூட்டிக் கொண்டார்.
இதை எல்லாம் சிந்தித்திருந்தாலே உடல் புல்லரிக்கும்‌.
கிருஷ்ணர் என்றால் கருப்பு என்று பொருள்.
சாயிபாபா என்றால் அன்னையும் தந்தையும் என்று பொருள்.
ச+ ஆயி -- தெய்வீக அன்னை
பாபா -- தந்தை

இறைவனது ஒவ்வொரு அசைவுமே பெரும் அர்த்தத்தை உள்ளடக்கக் கூடியது.

இறைவன் சத்ய சாயி அந்த வீட்டு வாசலில் இறங்கியதைக் கண்ட பள்ளித் தோழர்கள் ஆனந்தம் அடைந்தனர்.
இரவு முழுதும் இவர்கள் இறைவனோடு பேசிக் கொண்டிருந்தனர்.

தோழர்கள் இருவருக்கும் இடையில் இறைவன் படுத்துக் கொண்டு பேசிக் கொண்டே மூவரும் தூக்கம் கொண்டனர்.


எத்தனைக் கொடுப்பினை அந்தத் தோழர்களுக்கு...

அதிகாலை எழுந்ததும் அந்த வீட்டு பெரியம்மாள் இறைவனுக்கு எண்ணெய் ஸ்நானமும்.. அதிகாலை சிற்றுண்டியும் தயாரிக்கத் திட்டமிட்டு எழுந்து பார்த்தால் இறைவன் அங்கே இல்லை..
போர்வை கலைந்திருந்தது..
தலையணை இருந்தது..
தெய்வம் இல்லை..
வீட்டினர் மிகவும் வருந்தினர்..
பிறகு விசாரித்ததில் இறைவன் சத்ய சாயி அந்த நள்ளிரவு எங்குமே செல்லவில்லை என்றும் புட்டபர்த்தியிலேயே தங்கி இருந்தார் எனவும் புட்டபர்த்தி வாசிகள் மற்றும் பக்தர்கள் உறுதிப்படுத்தினர்.

(ஆதாரம் : சத்தியம் சிவம் சுந்தரம் -- பாகம் 1. ஆசிரியர் : ஸ்ரீ கஸ்தூரி)

இரு சாயியின் லீலையும் ஒன்றே...
காரணம் இருவரும் ஒருவரே!
தெரிந்த அற்புதங்களே எழுத்திற்கு அப்பாற்பட்டவை எனும்போது..
அச்சில் பதியாத அவரவர் அகத்தில் பதிந்திருக்கும் அற்புதங்கள் ஏராளமானவை...

வாசிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்... நமக்கே அவை எல்லாம் அற்புதங்கள்.
இறைவனுக்கோ அவை  வெறும் சுபாவங்கள்.
அவருக்கு யாவும் சர்வ சாதாரணமே!

இறைவனின் அற்புதங்களை நாம் கொண்டாடுவதோடு அவரின் சத்ய வார்த்தைகளை நமது வாழ்க்கையாக ஏற்பதே நாம் அவரின் பக்தர்கள் என்பதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள்.

எப்போது மனம் ஆராய்ச்சியிலிருந்து வெளிவந்து இறைவன் சாயியை இதயம் அனுபவிக்க ஆரம்பிக்கிறதோ அப்போது அக வாசல் திறக்கிறது..
அதுவே அடுத்த அவதாரமான பிரேம சாயியை வரவேற்க ஆத்ம சாதனை எனும் வாசல் தோரணத்தைக் கட்டி அன்பெனும் பூரண கும்பத்தை எடுத்து தியான விழிப்போடு காத்திருக்கிறது..

இனி வரும் அவதாரத்தை தவறவிடாதீர்கள்.
மூன்று சாயியும் ஒருவரே ...

தெய்வத்தை தவறவிட்டால் வாழ்க்கையையே தவறவிட்டதற்கு சமம்.
சுவாசத்தை தவறவிட்டுவிட்டு வீசுவது தென்றலா.. வாடையா.. மாருதமா எனக் காற்றை ஆராய்ச்சி செய்வதால் என்ன பயன்?

சாயி என்பதே நிரந்தர சத்தியம்.
சத்தியம் ஒன்று தான்.
சத்தியம் போலவே மூன்று  சாயியும் ஒன்று தான்..

சத்தியம் தொடரும்

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக